Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் கே.சி.கருப்பணன்

அமைச்சர் கே.சி.கருப்பணன்
பிரீமியம் ஸ்டோரி
News
அமைச்சர் கே.சி.கருப்பணன்

ஆட்சியிலும் கட்சியிலும் பொறுப்புகளைக் கைவசம் வைத்திருக்கும் இத்தொகுதியின் எம்.எல்.ஏ-வான கருப்பணன், தொகுதி மக்களுக்குச் செய்தது என்ன?

என்ன செய்தார் அமைச்சர்? - சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்- பவானி

ஜமுக்காளத்துக்குப் புகழ்பெற்ற பவானியில் விவசாயம், நெசவு இரண்டும்தான் பிரதான தொழில்கள். சுற்றுச்சூழல்துறை அமைச்சர், ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் என்று ஆட்சியிலும் கட்சியிலும் பொறுப்புகளைக் கைவசம் வைத்திருக்கும் இத்தொகுதியின் எம்.எல்.ஏ-வான கருப்பணன், தொகுதி மக்களுக்குச் செய்தது என்ன?

சொன்னாரே? - சிவக்குமார், தி.மு.க

`தொகுதிக்கு அரசுக் கல்லூரி கொண்டுவருவேன்; ஜமுக்காளத் தொழிலின் வளர்ச்சிக்குத் திட்டங்கள் கொண்டுவருவேன்’ என்றவர், அவற்றை நிறைவேற்றவில்லை. அரசு ஒரு கிலோ நூலை ரூ.220-க்குக் கொடுத்தால், புரோக்கர்கள் மூலமாக அது ரூ.320-க்குத்தான் நெசவாளர்களுக்குக் கிடைக்கும் நிலை இருக்கிறது. பெரும்பாலான சாலைகள் மோசமாக இருக்கின்றன. பவானி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதியில்லாததால், ஈரோடு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. குடிநீர்ப் பிரச்னையும் கடுமையாக இருக்கிறது. பவானி வழியாகத்தான் ஈரோட்டுக்கு, ‘ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டம்’ செல்கிறது. அதிலிருந்து தண்ணீரை எடுத்தாவது தொகுதியின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்த்திருக்கலாம். சாயப் பிரச்னைக்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெயர் சொல்லக்கூடிய திட்டங்கள் எதையுமே கருப்பணன் கொண்டுவரவில்லை.

செய்தேனே! - அமைச்சர் கே.சி.கருப்பணன்

ரூ.20 கோடி மதிப்பீட்டில் மயிலம்பாடி மற்றும் பட்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். ரூ.25 கோடியில் ஓடைகளின் குறுக்கே சுமார் 60 சிறு சிறு பாலங்கள் மற்றும் தடுப்பணை கட்டியிருக்கிறோம். ஓடத்துறை மற்றும் காடையாம்பட்டி ஏரிகளைச் சீரமைத்து பூங்கா அமைத்திருக்கிறோம். சுமார் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கிராமச் சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. சித்தோடு - கோபி வரை ரூ.300 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. பவானி புறநகர் சாலைக்காக நிலமெடுத்து ரூ.38 கோடியில் வேலை நடந்துவருகிறது. கவுந்தப்பாடி-பவானி, பவானி-அத்தாணி, அம்மாபேட்டை-அந்தியூர் ஆகிய சாலைகளை மூன்றுவழிச் சாலையாக மாற்றியிருக்கிறோம். பவானி யூனியன் அலுவலகம், அம்மாபேட்டை, மயிலம்பாடி, கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளில் குடிசைமாற்று வாரியத்தின் மூலம் 1,420 வீடுகள் எனப் பல பணிகளைச் செய்திருக்கிறோம். இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், கவுந்தப்பாடி மற்றும் பூதப்பாடியில் சந்தை விரிவாக்கம், ஐந்து கால்நடை கிளை நிலையங்கள் என்று பல திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறேன்.

கே.சி.கருப்பணன் - சிவக்குமார்
கே.சி.கருப்பணன் - சிவக்குமார்

கள நிலவரம்: அ.தி.மு.க சார்பில் மீண்டும் அமைச்சர் கருப்பணனே சீட் கேட்கிறார். அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் தங்கவேலு, பவானி நகரச் செயலாளர் கிருஷ்ணராஜ் ஆகியோரும் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். தி.மு.க-வில் ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சேகர், பவானி நகரச் செயலாளர் நாகராஜ், கடந்த முறை போட்டியிட்ட குறிஞ்சி என்.சிவக்குமார் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கட்டமைப்புரீதியாக இரு கழகங்களும் சம பலத்துடன் இருப்பதால், தற்போதைய நிலவரப்படி தொகுதியில் கடுமையான போட்டி நிலவுகிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - செங்கல்பட்டு

சொன்னாரே? - கமலக்கண்ணன், அ.தி.மு.க

`தாம்பரம் இரும்புலியூரிலிருந்து மகேந்திரா சிட்டி வரை 19 கி.மீ-க்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்’ என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், அதைக்கூடச் சட்டமன்றத்தில்

எம்.எல்.ஏ எடுத்துப் பேசவில்லை. கூடுவாஞ்சேரி பகுதியில் விபத்து அதிக அளவில் நடப்பதால், நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை நிறைவேற்றுவதாகச் சொன்னவர், கண்டுகொள்ளவில்லை. கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு பேருந்து நிலையங்கள் இடநெருக்கடியால் திணறுகின்றன. இதைச் சரிசெய்வதற்கும் எம்.எல்.ஏ எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

செய்தேனே! - வரலட்சுமி மதுசூதனன், எம்.எல்.ஏ., தி.மு.க

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில், 43 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறேன். 20 சிமென்ட் சாலைகளை அமைத்திருக்கிறேன். செங்கல்பட்டு நகரில் சாலைகள், சிறுபாலங்கள், கால்வாய்களை அமைத்திருக்கிறேன். மறைமலைநகர் நகராட்சியில் நூலகக் கட்டடம், கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் குடிநீர்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்திருக்கிறேன். சிங்கபெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி, மகேந்திரா சிட்டி பகுதியில் மேம்பாலம் அமைக்க அரசிடம் வலியுறுத்தியிருக்கிறேன். செங்கல்பட்டு நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டுவருவதாக ஜெயலலிதா அறிவித்த திட்டத்தையே இப்போதைய ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டுவிட்டனர்.

கமலக்கண்ணன் - வரலட்சுமி மதுசூதனன்
கமலக்கண்ணன் - வரலட்சுமி மதுசூதனன்

கள நிலவரம்: தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன், மறைமலைநகர் நகரச் செயலாளர் சண்முகம், காட்டான்குளத்தூர் ஒன்றியச் செயலாளர்கள் எம்.கே.தண்டபாணி, ஆராமுதன், முன்னாள் கவுன்சிலர் ஜெ.குமரவேல் ஆகியோர் சீட் கேட்கின்றனர். அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் கமலக்கண்ணன், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ரத்தினமங்கலம் கஜேந்திரன் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். கட்டமைப்புரீதியாக தி.மு.க வலுவாக இருப்பதால், தொகுதியில் தி.மு.க-வுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திருப்போரூர்

சொன்னாரே? - எஸ்.ஆறுமுகம், அ.தி.மு.க

திருப்போரூர் தொகுதியின் அடிப்படைப் பிரச்னைகளைக்கூட எம்.எல்.ஏ இதயவர்மன் சரிசெய்யவில்லை. தடுப்பணைகள், சாலைகளை அகலப்படுத்துதல், பாதாளச் சாக்கடைத் திட்டம் என்று அவர் அளித்திருந்த வாக்குறுதிகளைக் கண்டுகொள்ளவே இல்லை. எம்.எல்.ஏ-வைத் தொகுதிக்குள் பார்க்கவே முடிவதில்லை.

செய்தேனே! - இதயவர்மன், எம்.எல்.ஏ., தி.மு.க

களத்தூரில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, திருப்போரூர் பள்ளிக்குக் கட்டங்கள், சுற்றுச்சுவர், திருக்கழுக்குன்றத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டிக்கொடுத்திருக்கிறேன். தொகுதிக்குட்பட்ட பகுதியில் பத்து பேருந்து நிறுத்தங்கள், கிராமங்களுக்கு விழா மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். தொகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 21 சாலைகளைச் சீரமைக்க வலியுறுத்தியிருக்கிறேன். 2019 இடைத்தேர்தலில் நான் வெற்றிபெற்ற பிறகு அத்திவரதர் தரிசனம், மாமல்லபுரத்துக்கு சீனப் பிரதமர் வருகை, கொரோனா ஆகிய பரபரப்பான சூழல்களால் மக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற அதிகாரிகளைச் சந்திக்க முடியவில்லை.

எஸ்.ஆறுமுகம் - இதயவர்மன்
எஸ்.ஆறுமுகம் - இதயவர்மன்

கள நிலவரம்: 2020 ஜூலையில் நிலத் தகராறு தொடர்பாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் எம்.எல்.ஏ இதயவர்மன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது அவருக்கு மைனஸ். தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ இதயவர்மன், தையூர் விஜயகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் விஸ்வநாதன், திருப்போரூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பையனூர் சேகர் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ தண்டரை மனோகரன், திருக்கழுக்குன்றம் ஒன்றியச் செயலாளர் ராகவன், மைத்ரேயன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. கட்டமைப்புரீதியாக தி.மு.க வலுவாக இருப்பதால், தொகுதியில் தி.மு.க-வுக்குச் சாதகமான சூழலே நிலவுகிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திருவாரூர்

சொன்னாரே? - வினோதினி, நாம் தமிழர் கட்சி

`பனகல் பூங்காவைப் புதுப்பிப்பேன்; புதிய பூங்காக்கள் அமைப்பேன்’ என்றவர், எதையும் கண்டுகொள்ளவில்லை. புதிய பேருந்து நிலையம் மோசமான நிலையில் இருக்கிறது. நாகை, திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை, கும்பகோணம் செல்லக்கூடிய பேருந்துகள் பழைய பேருந்து நிலையப் பகுதிக்கு வருவதில்லை. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரச் சீர்கேடு அதிக அளவில் இருக்கிறது. பாதாளச் சாக்கடைத் திட்டம் முறையாகச் செயல்படடுத்தப்படவில்லை.

செய்தேனே! - பூண்டி கலைவாணன், எம்.எல்.ஏ., தி.மு,க

புதூர் அரசு நடுநிலைப்பள்ளிக்குக் கட்டடம், கிராமப்புறப் பள்ளிகளுக்குக் கழிவறைகள், பல ஊர்களில் நியாயவிலைக் கடைக் கட்டடம் அமைத்திருக்கிறேன். மருதப்பட்டினம்-சீனிவாசபுரம் இணைப்புப் பாலம் கொண்டுவந்திருக்கிறேன். தஞ்சை - திருவாரூர் - நாகை தேசிய நெடுஞ்சாலைச் சீரமைப்பு, புதிய பேருந்து நிலையம் புதுப்பித்தல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சுகாதாரச் சீர்கேடு, பாதாளச் சாக்கடை, பனகல் பூங்கா மறுசீரமைப்பு ஆகியவற்றுக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்துவருவதோடு, போராட்டங்களும் நடத்தியிருக்கிறேன்.

வினோதினி, பூண்டி கலைவாணன்
வினோதினி, பூண்டி கலைவாணன்

கள நிலவரம்: மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் தொகுதி இது. இடைத்தேர்தலில் ஜெயித்த சிட்டிங் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன், வி.ஆர்.என்.பன்னீர்செல்வம் தியாகபாரி ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கருணாநிதி குடும்பத்திலிருந்து யாரேனும் இங்கு போட்டியிடக்கூடும் என்கிறார்கள். அ.தி.மு.க-வில் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், ஆர்.டி.மூர்த்தி சீட் கேட்கிறார்கள். கூட்டணியில் பா.ஜ.க-வின் கருப்பு முருகானந்தம் தொகுதியை எதிர்பார்க்கிறார். கட்டமைப்பு வலுவாக இருப்பதால், இன்றைய சூழலில் தொகுதி தி.மு.க கூட்டணிக்குச் சாதகமாக இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - மயிலாடுதுறை

சொன்னாரே? - குத்தாலம் அன்பழகன், தி.மு.க

`புதிய பேருந்து நிலையம், பைபாஸ் சாலை கொண்டுவருவேன்’ என்று வாக்குறுதி தந்தவர், அவற்றை நிறைவேற்றவில்லை. `நீண்டகாலமாக மூடப்பட்டிருக்கும் தலைஞாயிறு அரசுக் கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்றவர், அதற்கான முயற்சிகளைச் செய்யவில்லை. குத்தாலத்தில் அமைய வேண்டிய அரசுக் கலைக் கல்லூரியைக்கூட எம்.எல்.ஏ-வால் கேட்டுப் பெற முடியவில்லை. குப்பைகளை உரமாக்க நிதி ஒதுக்கினார்கள்; அதுவும் நடக்கவில்லை.

செய்தேனே! - ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

குமாரமங்கலம் - ஆதனூர் இடையே கொள்ளிடத்தில் தடுப்பணை, மணல்மேடு புதிய பேருந்து நிலையம், ஞானாம்பிகை கல்லூரிக்குக் கட்டடம், மணல்மேடு அரசுக் கல்லூரிக்குப் புதிய பாடப்பிரிவுகள் எனப் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்திருக்கிறேன். மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டும், பணிகளைச் செய்வதற்கு யாரும் முன்வரவில்லை. ரூ.57 கோடியில் பைபாஸ் சாலை அமைக்கப்படவிருக்கிறது. குப்பையை உரமாக்கும் டெண்டர் இறுதிசெய்யப்பட்டுவிட்டதால், குப்பைப் பிரச்னை விரைவில் தீரும். தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையைப் புதுப்பித்து மீண்டும் செயல்படவைக்க இந்தக் கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.

குத்தாலம் அன்பழகன் - ராதாகிருஷ்ணன்
குத்தாலம் அன்பழகன் - ராதாகிருஷ்ணன்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் ரெங்கநாதன், ஆசைமணி, மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். தி.மு.க-வில் குத்தாலம் அன்பழகன் மீண்டும் சீட் கேட்கிறார். அருட்செல்வன், ஜெகவீர பாண்டியன், மூவலூர் மூர்த்தி, ஆகியோரும் சீட் கேட்கிறார்கள். கட்டமைப்பு வலுவாக இருப்பதால், இன்றைய சூழலில் தொகுதி தி.மு.க-வுக்குச் சாதகமாகவே இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பரமக்குடி

சொன்னாரே? - சண்.சம்பத்குமார், தி.மு.க

ஜெயலலிதா அறிவித்திருந்த `பாதாளச் சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன்’ என்றார். அதற்கான சிறு முயற்சியைக்கூட எம்.எல்.ஏ எடுக்கவில்லை. இங்குள்ள வைகை ஆறு, உழவர் சந்தை, சூப்பர் மார்க்கெட் பகுதிகளில் சுகாதாரக் கேடு நிரம்பியிருக்கிறது. தொழில் வாய்ப்புகள் இல்லாததால், மக்கள் பிழைப்பு தேடி வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் நிலை அதிகரித்திருக்கிறது. இதைத் தடுக்கக்கூடிய திட்டம் எதுவும் தொகுதிக்குக் கொண்டுவரப்படவில்லை.

செய்தேனே! - சதன் பிரபாகர், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

பரமக்குடியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்துதல், கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. குடிநீருக்காக ஆழ்துளைக் கிணறும் அமைக்கப்படுகிறது. பூப்பந்தாட்ட மைதானம், 25 கிராமங்களில் பொது அரங்கங்கள், 12 இடங்களில் அம்மா மினி கிளினிக் என ஏராளமான பணிகளை நிறைவேற்றியுள்ளேன். கொரோனா காலத்தில் தொகுதி முழுவதும் எனது சொந்த நிதியில் காய்கறி விநியோகம் செய்துள்ளேன். பரமக்குடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம், அபிராமம், நயினார்கோவில் பகுதிகளில் பாலிடெக்னிக் கல்லூரி கொண்டுவர முதல்வரிடம் கோரியிருக்கிறேன்.

சண்.சம்பத்குமார் - சதன் பிரபாகர்
சண்.சம்பத்குமார் - சதன் பிரபாகர்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சதன் பிரபாகர், முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜ், மகளிரணி நிர்வாகி சாந்தி முருகேசன், தொழிற்சங்கப் பேரவையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணியிலுள்ள பா.ஜ.க-வும் தொகுதியைக் கேட்கிறது. தி.மு.க-வில் கடந்த முறை போட்டியிட்ட சண்.சம்பத்குமார், ராமநாதபுரம் மாவட்ட கவுன்சில் சேர்மன் திசைவீரன், மாவட்ட கவுன்சிலர் சேம்பர் முருகேசன், விருப்ப ஓய்வுபெற்ற சார்பதிவாளர் பாலு, சுப.தங்கவேலன் ஆதரவாளரான குமரகுரு ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் உள்ளனர். அ.ம.மு.க சார்பில் களமிறங்க டாக்டர் சுப்பையா ஆயத்தமாகிறார். அ.ம.மு.க கணிசமாக ஓட்டைப் பிரிக்கும் நிலையில் அ.தி.மு.க கரைசேர்வது கடினம்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - முதுகுளத்தூர்

சொன்னாரே? - கீர்த்திகா முனியசாமி, அ.தி.மு.க

நரிப்பையூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம், புதிய கல்வி-தொழில் நிறுவனங்கள் என்று அள்ளி வீசிய வாக்குறுதிகள் எதையும் எம்.எல்.ஏ நிறைவேற்றவில்லை. அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மயான வசதிகளைக்கூட அவர் செய்து தரவில்லை.

செய்தேனே! - எஸ்.பாண்டி, எம்.எல்.ஏ., காங்கிரஸ்

அரசு உதவிபெறும் பள்ளிகள், விடுதிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அடிப்படை வசதிகள், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி மருத்துவமனைகளுக்குக் கொசுவலை என்று பல உதவிகளைச் செய்திருக்கிறேன். பாசனத்துக்கு உதவும் வகையில் ரெகுநாத காவிரி கால்வாயில் 40 இடங்களில் தடுப்பணை கட்டவும், முதுகுளத்தூரை நகராட்சியாகத் தரம் உயர்த்தவும், நரிப்பையூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவும் முயற்சி மேற்கொண்டேன். ஆளும் அரசு முதுகுளத்தூரை எதிர்க்கட்சியின் தொகுதியாகப் பார்ப்பதால், தொடர்ந்து புறக்கணிக்கிறது.

கீர்த்திகா முனியசாமி - எஸ்.பாண்டி
கீர்த்திகா முனியசாமி - எஸ்.பாண்டி

கள நிலவரம்: அ.தி.மு.க சார்பில் போட்டியிட கீர்த்திகா முனியசாமி, முன்னாள் மா.செ சுந்தரபாண்டியன், கமுதி ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.காளிமுத்து, தர்மர் எனப் பலர் முட்டி மோதுகிறார்கள். பா.ஜ.க-வின் டாக்டர் ராம்குமார் சீட் எதிர்பார்க்கிறார். தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம், தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர் ராஜ கண்ணப்பன், முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல், பெருநாழி போஸ் ரேஸிலிருக்கிறார்கள். காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ பாண்டியன், அவரின் மகன் வரதராஜன், சோ.பா.ரெங்கநாதன் ஆகியோர் சீட்டுக்குக் காய்நகர்த்துகிறார்கள். அ.ம.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ முருகனும், முக்குலத்தோர் புலிப்படையில் கருணாஸும் தொகுதியைக் குறிவைத்திருக்கிறார்கள். அ.ம.மு.க பிரிக்கும் வாக்குகளால் அ.தி.மு.க சரிவைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. தி.மு.க கூட்டணிக்குச் சாதகமான நிலை தொகுதியில் நிலவுகிறது!