மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் கே.சி.வீரமணி

கே.சி.வீரமணி
பிரீமியம் ஸ்டோரி
News
கே.சி.வீரமணி

வணிகவரி மற்றும் பதிவுத்துறையை கவனிக்கும் கே.சி.வீரமணி, தொகுதிக்குச் செய்தது என்ன?

என்ன செய்தார் அமைச்சர்? - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி - ஜோலார்பேட்டை

மறுசீரமைப்பில் தொகுதி உருவாக்கப்பட்டு 2011-ல்தான் முதன்முறையாகச் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தது ஜோலார்பேட்டை. தொகுதியின் முதல் எம்.எல்.ஏ என்ற பெருமைக்குச் சொந்தக்காரராக மகுடம் சூட்டப்பட்டார் அ.தி.மு.க-வின் கே.சி.வீரமணி. இரண்டாவது முறையாகவும் தொகுதியை அவர் தக்கவைத்துக்கொண்டார். வணிகவரி மற்றும் பதிவுத்துறையை கவனிக்கும் கே.சி.வீரமணி, தொகுதிக்குச் செய்தது என்ன?

சொன்னாரே! - கவிதா தண்டபாணி, தி.மு.க

வி.ஐ.பி தொகுதி என்று சொல்லிக்கொள்வதற்கு அமைச்சரும் ஆளுங்கட்சியினரும் வெட்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க சிப்காட் கொண்டுவருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், பட்டதாரிப் பிள்ளைகள் வேலை தேடி வெளியூர் செல்லும் நிலைதான் இன்றும் இருக்கிறது. பீடித் தொழில் இங்கு பிரதானமாக இருப்பதால், புற்றுநோய் மருத்துவமனை கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால், இல்லை. ரயில் நிலையத்திலிருந்து பல பகுதிகளுக்குப் பேருந்து வசதியில்லை. தொகுதியின் தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காய்கறிகளைச் சேமித்துவைக்க கிடங்கு அமைக்கவில்லை. அவ்வளவு ஏன், காய்கறிச் சந்தைகூட கிடையாது. ஏராளமான விபத்துகள் நடந்தும் சாலைகள் முறையாகச் சீரமைக்கப்படவில்லை.

செய்தேனே! - அமைச்சர் கே.சி.வீரமணி

எனது தொகுதிக்குள், ஏராளமான படிக்கிற பிள்ளைகளுக்குப் பலவிதமான உதவிகளைச் செய்துவருகிறேன். தொகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் ஆடிட்டோரியம் கட்டிக்கொடுத்திருக்கிறேன். அனைத்து வீடுகளுக்கும் காவிரிக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன். தொகுதிக்குப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறேன்.

கே.சி.வீரமணி - கவிதா தண்டபாணி
கே.சி.வீரமணி - கவிதா தண்டபாணி

கள நிலவரம்: அ.தி.மு.க சார்பில் வீரமணியே மூன்றாவது முறையாகக் களம் காணப்போகிறார் என்கிறார்கள். கூட்டணியில் பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் சீட் எதிர்பார்க்கிறார். தி.மு.க-வில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி, நாட்றம்பள்ளி ஒன்றியச் செயலாளர் சூரியகுமார், முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் முத்தமிழ்ச்செல்வி, மாவட்டப் பிரதிநிதி பெரியார்தாசன் (இவர் வீரமணியின் அக்காள் மகன்) ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். கூட்டணியில் காங்கிரஸ் நிர்வாகியான ஏலகிரி செல்வம் சீட் எதிர்பார்க்கிறார். இந்தத் தொகுதியில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது வன்னியர் சமூக வாக்குகள்தான். அமைச்சர் வீரமணியும் அதே சமூகம் என்பது அவருக்குக் கூடுதல் பலம். ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், சொந்தச் சமூக வாக்குகள் காரணமாக தொகுதியில் வீரமணி செல்வாக்குடன் உள்ளார். மீண்டும் அவரே களமிறங்கும்பட்சத்தில் இரட்டை இலை மூன்றாவது முறையாகவும் மலர வாய்ப்பிருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அரவக்குறிச்சி

சொன்னாரே? - செந்தில்நாதன், பா.ஜ.க (2019 இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளர்)

தமிழகத்தின் மொத்த முருங்கை உற்பத்தியில், 60 சதவிகிதம் அரவக்குறிச்சி பகுதியில்தான் நடக்கிறது. ஆனால் சேமித்துவைக்க, விற்பனை செய்ய, ஏற்றுமதி செய்ய என எதற்கும் முறையான கட்டமைப்பு இல்லை. புதிய கல்வி நிறுவனங்கள், காவிரிக் கரையோர மக்களுக்கு மறுவாழ்வு, ரெங்கமலையில் சுற்றுலாத்தலம் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. `சொந்தமாக இடமில்லாத 25,000 மக்களுக்கு, தலா மூன்று சென்ட் இடத்தைச் சொந்தச் செலவில் தருவேன்’ என்று சொன்னதையும் வசதியாக மறந்துவிட்டார்.

செய்தேனே! - செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ., தி.மு.க

குறைந்த வருடமே நான் எம்.எல்.ஏ-வாக இந்தத் தொகுதியில் இருந்திருக்கிறேன். அதுவும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக. எனது தொகுதி நிதியில் 80 சதவிகிதத்தை, தொகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கவே பயன்படுத்தியிருக்கிறேன். கொரோனா காலத்தில், மருத்துவமனைகளுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக்கொள்ள, தொகுதி மேம்பாட்டு நிதியைக் கொடுத்தேன். அதை ஆளுங்கட்சியினர் வாங்கவிடாமல் தடுத்துவிட்டார்கள். ஆறு மாதங்களாகச் சொந்தப் பணத்தில் வீடு வீடாக நிவாரணம் கொடுத்திருக்கிறேன். மூன்று சென்ட் நிலம் கண்டிப்பாகக் கொடுக்கவிருக்கிறேன். முதற்கட்டமாக, ஸ்டாலின் பிறந்தநாள் அன்று 1,500 நபர்களுக்கு வழங்கவிருக்கிறேன்.

செந்தில்நாதன் - செந்தில் பாலாஜி
செந்தில்நாதன் - செந்தில் பாலாஜி

கள நிலவரம்: செந்தில் பாலாஜி பழையபடியே கரூர் தொகுதிக்குச் செல்கிறார். தி.மு.க-வில் ம.சின்னசாமி, முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியின் மகன் சிவராமன், பரணி கே.மணி சீட் கேட்கிறார்கள். கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக யூனுஷ் சீட் எதிர்பார்க்கிறார். அ.தி.மு.க-வில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கமலக்கண்ணன், கலையரசன் சீட் கேட்கிறார்கள். கூட்டணியில், பா.ஜ.க-வில் அண்ணாமலை, சிவசாமி, செந்தில்நாதன் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். கட்டமைப்பில் இரண்டு கூட்டணிகளும் சமமாக இருப்பதால், கள நிலவரம் கடும் போட்டியாக மாறியிருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - குளித்தலை

சொன்னாரே? - சந்திரசேகரன், அ.தி.மு.க

`பேருந்து நிலையம் அமைப்பேன், தோகைமலை பகுதிக்கு அரசு கலைக்கல்லூரி கொண்டுவருவேன், பஞ்சப்பட்டி ஏரியில் காவிரி மூலம் நீர் நிரப்புவேன், தோகைமலை ஒன்றியத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கொண்டுவருவேன்’ என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசியவர், எதையுமே நிறைவேற்றவில்லை. சின்னப்பனையூர் பகுதியின் துணைமின் நிலையப் பணி பாதியில் நிற்கிறது.

செய்தேனே! - ராமர், எம்.எல்.ஏ., தி.மு.க

குளித்தலையின் 24 வார்டுகளிலும் குடிநீர் வசதி செய்திருக்கிறேன். 20 ஊராட்சிகளில் போர்வெல் அமைத்திருக்கிறேன். தொகுதி முழுக்க 200 கி.மீ தூரத்துக்கு, தரமான சாலைகள் அமைத்திருக்கிறேன். கொசூரில் உடற்பயிற்சிக் கூடம், தோகைமலையில் மழைநீரைத் தேக்கிவைக்க தடுப்பணை கட்டிக் கொடுத்திருக்கிறேன். பஞ்சப்பட்டி ஏரியில் தண்ணீர் நிரப்புவது குறித்து, சட்டமன்றத்தில் பேசினேன். ஆய்வுப் பணிக்காக அரசு நிதி ஒதுக்கியும், போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அந்தத் திட்டத்தைத் தடுத்துவைத்திருக்கிறார். தோகைமலையில் பத்திரப்பதிவு அலுவலகம் கேட்டும், குளித்தலை பேருந்து நிலையப் பிரச்னை குறித்தும் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன்.

சந்திரசேகரன் - ராமர்
சந்திரசேகரன் - ராமர்

கள நிலவரம்: ‘பழகுவதற்கு எளியவர்’ என்ற தகுதி மட்டும் ராமருக்கு இருக்கிறது. மற்றபடி, தொகுதி மக்களிடம் பெரிய வரவேற்பில்லை. அதனால் இம்முறை அவருக்கு சீட் கிடைப்பது கஷ்டம் என்கிறார்கள். தி.மு.க-வில் பல்லவி ராஜா, கரூர் நகரச் செயலாளர் மாணிக்கம், தொழிலதிபர் காந்திராஜன் சீட் எதிர்பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வில் ஒன்றியச் செயலாளர்கள் கருணாகரன், சந்திரசேகரன், இளங்குமரன், மாவட்ட சேர்மன் கண்ணதாசன், குளித்தலை விஜயவிநாயகம் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். கூட்டணியில் பா.ஜ.க-வின் மீனா வினோத்குமார் சீட் எதிர்பார்க்கிறார். இன்றைய நிலவரப்படி, குளித்தலை தொகுதியில் தி.மு.க கட்டமைப்புரீதியாக வலுப்பெற்றிருப்பதால், உதயசூரியன் உதிக்கும் வாய்ப்புகள் தென்படுகின்றன!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - உசிலம்பட்டி

சொன்னாரே? - இளமகிழன், தி.மு.க

`செல்லம்பட்டி யூனியனில் சென்ட் ஃபேக்டரி, பெண்கள் கல்லூரி கொண்டுவருவேன்’ என்றார். எதையும் செய்யவில்லை. உசிலம்பட்டியில் இயங்க வேண்டிய பொதுப்பணித்துறை, கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் அலுவலகங்கள் திருமங்கலத்தில் இயங்கிவருகின்றன. அதை மாற்றவில்லை. டேராப்பாறை அணைத்திட்டம், திருமங்கலம் பிரதான கால்வாயில் நிரந்தரமாகத் தண்ணீர், சேடபட்டியில் சிப்காட், உசிலம்பட்டியில் தொழிற்சாலைகள், புறவழிச்சாலை எனக் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை.

செய்தேனே! - பா.நீதிபதி, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

`செல்லம்பட்டி பகுதியில் சென்ட் ஃபேக்டரி, உசிலம்பட்டி, சேடபட்டி பகுதியில் தொழிற்சாலைகள் வேண்டும்’ என்று மானியக் கோரிக்கையில் பேசினேன்; கேள்வி எழுப்பினேன். பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். அதை எனது வாக்குறுதி என்று தவறாகக் கூறுகிறார்கள். தொகுதியில் சாலைகள், புதிய குடிநீர் வசதிகள், சமுதாயக்கூடம், பொதுமேடை, புதிய பள்ளிக் கட்டடங்கள், உசிலம்பட்டிக்குக் குடிநீர் திட்டம் கொண்டுவந்திருக்கிறேன். உசிலம்பட்டி சுற்றுச்சாலைத் திட்டத்துக்கும் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 58-ம் கால்வாய் திட்டம் நிறைவடைந்து மூன்று முறை தண்ணீர் விடப்பட்டிருக்கிறது.

இளமகிழன்,  பா.நீதிபதி
இளமகிழன், பா.நீதிபதி

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பா.நீதிபதி, நகரச் செயலாளர் ராஜா, துரை தனராஜ் சீட் எதிர்பார்க்கின்றனர். கூட்டணியிலுள்ள பா.ஜ.க சார்பில் முத்துராமன் சீட்டுக்கு முயல்கிறார். தி.மு.க-வில் இளமகிழன், சோலை ரவி ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணியிலிருக்கும் பார்வர்டு பிளாக் கட்சி சார்பாகப் போட்டியிட பி.வி.கதிரவன் காய்நகர்த்துகிறார். அ.ம.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரன் நிறுத்தப்படலாம் என்கிறார்கள். இன்றைய சூழலில் தொகுதி, தி.மு.க கூட்டணிக்குச் சாதகமாகவே உள்ளது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - காரைக்குடி

சொன்னாரே? - பரிமளம், நாம் தமிழர் கட்சி

`அரசுக் கல்லூரிகளைக் கொண்டுவருவேன்’ என்றார். ஆனால், இல்லை. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக எல்லாப் பகுதிகளிலும் தோண்டிப் போட்டிருப்பதால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைப் பிரச்னைகளைக்கூட எம்.எல்.ஏ சரிசெய்யவில்லை. பொதுமக்களை அவர் சந்திப்பதே இல்லை. தொகுதி அலுவலகத்துக்குக்கூட அவர் வருவதே இல்லை.

செய்தேனே! - கே.ஆர்.இராமசாமி, எம்.எல்.ஏ., காங்கிரஸ்

காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதி என்பதால் காரைக்குடிக்கு, தமிழக அரசு எந்தத் திட்டமும் கொடுக்கவில்லை. எல்லாத் தகுதியும் இருந்தும் காரைக்குடியை மாநகராட்சியாக மாற்றவில்லை. பெண்களுக்கான கலைக் கல்லூரி கேட்டேன். அதையும் செய்து கொடுக்கவில்லை. குடிநீர்ப் பிரச்னை இருந்த இடங்களில் சரிசெய்துவிட்டேன். பாதாளச் சாக்கடைத் திட்டம் முறையாக நடக்கவில்லை. அதற்காக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தவிருக்கிறேன்.

பரிமளம் - கே.ஆர்.இராமசாமி
பரிமளம் - கே.ஆர்.இராமசாமி

கள நிலவரம்: காரைக்குடியில் முக்குலத்தோர், பட்டியலின வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றன. அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் சீட் எதிர்பார்க்கிறார். கூட்டணியில் பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா சீட் கேட்டிருக்கிறார். தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் தென்னவன், முத்து துரை, ஜோஸ் ரூசோ சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சிட்டிங் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி, ஒய்.பழனிசாமி, வேலுசாமி உள்ளிட்டோர் முட்டி மோதுகிறார்கள். இன்றைய சூழலில், இரு கூட்டணிகளுமே சம பலத்தில் இருப்பதால், காரைக்குடியில் இழுபறி நிலைதான்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - சீர்காழி

சொன்னாரே? - கிள்ளை ரவீந்திரன், தி.மு.க

`தொழில்நுட்பக் கல்லூரி கொண்டுவருவேன்; திருவாலி ஏரி, கொடியம்பாளையம் தீவு கிராமத்தைச் சுற்றுலாத் தலமாக மாற்றுவேன்’ என்றார். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கோயில்கள் நிறைந்திருக்கும் இப்பகுதியில் சாலைகள் மோசமான நிலையில் இருக்கின்றன. கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் பம்ப்பிங் ஸ்டேஷன் அருகே தொடர்ந்து மணற்கொள்ளை நடப்பதால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதை எம்.எல்.ஏ தடுக்கவேயில்லை.

செய்தேனே! - பாரதி, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

சீர்காழி அருகேயுள்ள புத்தூரில் அரசுக் கல்லூரி கொண்டுவந்திருக்கிறேன். மாதிரவேளூர், ஆலங்குடிப் பகுதிகளில் தடுப்பணைப் பணிகள் நடைபெறுகின்றன. புதுப்பட்டினம் அருகே தர்காஸ் பகுதியில் நிலத்தடி நீர் பாதுகாக்கும் திட்டமும் முடிந்திருக்கிறது. தென்னாம்பட்டினம் அருகே ஆற்றில் கதவணைத் திட்டம் தொடங்கப்படவிருக்கிறது. சீர்காழி அரசு மருத்துவமனைக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறேன். சீர்காழியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் உருவாக்கும் பணிகள் நடந்துவருகின்றன.

கிள்ளை ரவீந்திரன் - பாரதி
கிள்ளை ரவீந்திரன் - பாரதி

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பாரதி, வழக்கறிஞர் நெடுஞ்செழியன், காளி.கலைவாணன், மாவட்டத் துணைச் செயலாளர் நாடி.செல்லையன், முன்னாள் எம்.எல்.ஏ சக்தி ஆகியோர் சீட் கேட்கிறார்கள். தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், கிள்ளை ரவீந்திரன், மாசிலா.நெடுஞ்செழியன் ஆகியோர் முட்டி மோதுகிறார்கள். எம்.எல்.ஏ-வுக்கு தொகுதியில் நல்ல பெயர் இல்லாததால், ஆளுங்கட்சிமீது தொகுதி முழுவதும் வெறுப்பலை வீசுகிறது. இது தி.மு.க-வுக்குச் சாதகமாக மாறியிருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பூம்புகார்

சொன்னாரே? - ஷாஜகான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

`பூம்புகார் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்துவேன்; தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை கடல் அரிப்பைத் தடுப்பேன்’ என்றார். ஆனால், செய்யவில்லை. தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகத்துக்காகப் போடப்பட்ட சாலை இந்த மழையில் பாதி கரைந்துபோய்விட்டது. தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இன்னமும் கடலோர கிராமங்களில் மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கித்தான் குடிக்கிறார்கள்.

செய்தேனே! - பவுன்ராஜ், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

சுற்றுலா வாரியம் மூலம் நிதி ஒதுக்கி, பூம்புகாரில் கடல் அரிப்பைத் தடுக்கும் பணி நடக்கிறது. டேனிஷ் கோட்டை தொல்பொருள்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், அதைப் பாதுகாக்க ஆய்வுசெய்திருக்கிறார்கள். தொகுதியில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் கொண்டுவந்திருக்கிறேன். பத்து உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், ஒன்பது நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரமுயர்த்தியிருக்கிறோம். 34 பாலங்கள், தேரழுந்தூரில் அரசுக் கலைக் கல்லூரி கொண்டுவந்திருக்கிறேன். கொரோனா காலத்தில் என் சொந்தப் பணத்திலிருந்து அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஐந்து கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் கொடுத்திருக்கிறேன்.

ஷாஜகான் - பவுன்ராஜ்
ஷாஜகான் - பவுன்ராஜ்

கள நிலவரம்: தி.மு.க-வில் மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன், மாவட்ட மகளிரணி முன்னாள் தலைவி கலைச்செல்வி ஜெயராமன் சீட் எதிர்பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பவுன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விஜயபாலன், ரங்கநாதன் ஆகியோர் முட்டி மோதுகிறார்கள். கட்டமைப்புரீதியாக வலுவாக இருப்பதால், பூம்புகாரில் தி.மு.க-வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்!