Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

2016 தேர்தலில், தே.மு.தி.க-விலிருந்து அ.தி.மு.க-வுக்குக் கட்சி தாவி, சீட் பெற்று, போட்டியிட்டு வென்ற மாஃபா பாண்டியராஜனுக்கும் அமைச்சர் பதவி கிடைத்தது. தொகுதியில் அமைச்சரின் செயல்பாடுகள் எப்படி?

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

2016 தேர்தலில், தே.மு.தி.க-விலிருந்து அ.தி.மு.க-வுக்குக் கட்சி தாவி, சீட் பெற்று, போட்டியிட்டு வென்ற மாஃபா பாண்டியராஜனுக்கும் அமைச்சர் பதவி கிடைத்தது. தொகுதியில் அமைச்சரின் செயல்பாடுகள் எப்படி?

Published:Updated:
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

மத்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்தின் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தமிழகக் காவல்துறையின் ஆயுதப்படை போலீஸ் பிரிவின் அணிகள் ஆகியவை ஆவடியில் இருப்பதால், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கை இந்தத் தொகுதியில் அதிகம். 2011-ல் உருவான இத்தொகுதியின் முதல் எம்.எல்.ஏ-வான அப்துல் ரஹீமுக்கும் அமைச்சர் பதவி கிடைத்தது. 2016 தேர்தலில், தே.மு.தி.க-விலிருந்து அ.தி.மு.க-வுக்குக் கட்சி தாவி, சீட் பெற்று, போட்டியிட்டு வென்ற மாஃபா பாண்டியராஜனுக்கும் அமைச்சர் பதவி கிடைத்தது. தொகுதியில் அமைச்சரின் செயல்பாடுகள் எப்படி?

என்ன செய்தார் அமைச்சர்? - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்-  தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் - ஆவடி

சொன்னாரே? - சா.மு.நாசர், தி.மு.க

`ஆவடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பாதாளச் சாக்கடைத் திட்டம், குடிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவேன்’ என்றார். 2006-2011 ஆண்டிலேயே தி.மு.க ஆட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கும், குடிநீர்க் குழாய் இணைப்புத் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பெரும்பாலான பணிகள் முடிந்தன. ஆனாலும், அ.தி.மு.க ஆட்சியில் இதுவரை இந்த இரண்டு திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. பருத்திப்பட்டு பசுமைப் பூங்கா திட்டமும் தி.மு.க-வின் திட்டம்தான். தொகுதிக்குள் குடிநீர்ப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. போதிய சாலை வசதிகள் இல்லை. கொரோனா காலகட்டத்தில் அமைச்சர் பாண்டியராஜன் மக்களைச் சந்திக்கவில்லை.

செய்தேனே! - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

230 கோடி ரூபாயில் பட்டாபிராமில் டைடல் பார்க் கொண்டுவந்திருக்கிறேன். 34 கோடி ரூபாயில் பருத்திப்பட்டு ஏரியில் பசுமைப்பூங்கா அமைத்திருக்கிறேன். சேக்காடு, கோவில்பதாகை என 27 ஏரிகள், கோயில் குளங்களைத் தூர்வாரியிருக்கிறேன். 507 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தாசில்தார் அலுவலகம், எம்.எல்.ஏ அலுவலகம், கருவூலம் என்று அரசு அலுவலகங்களைக் கட்டிக் கொடுத்திருக்கிறேன். ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறேன். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி, மாணவர்களுக்கு இலவச உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன். தொகுதிக்குள் ஒன்பது பாலப்பணிகள் நடந்துவருகின்றன. குடிநீர் இணைப்புத் திட்டமும் பாதாளச் சாக்கடைத் திட்டமும் விரைவில் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன. நான் சார்ந்திருக்கும் தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறையிலும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறேன். குறிப்பாக, கீழடி அகழாய்வு, ஆதிச்சநல்லூரில் ஆய்வு, உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நாற்பது கோடிக்கு மேல் நிதி திரட்டி தமிழுக்கு இருக்கை, மத்திய தொல்லியல்துறை பட்டப் படிப்புக்கான தகுதிப்பட்டியலில் தமிழ் மொழி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 3 கோடி மதிப்பில் தொல் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் எனப் பல பணிகளைச் செய்திருக்கிறேன்.

மாஃபா பாண்டியராஜன் - சா.மு.நாசர்
மாஃபா பாண்டியராஜன் - சா.மு.நாசர்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் கடந்த தேர்தலில் நிலவிய கோஷ்டிப் பூசல், தற்போதும் நீடிப்பதைப் பார்க்க முடிகிறது. பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்திருப்பதால், தொகுதியில் கணிசமாக உள்ள சிறுபான்மையினர் வாக்குகள் தள்ளாட்டத்தில் இருக்கின்றன. அ.ம.மு.க பிரிக்கும் வாக்குகளும் மாஃபா-வுக்கு மைனஸ். அ.தி.மு.க சார்பில் போட்டியிட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். தி.மு.க-வில் ஆவடி சா.மு.நாசர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். தற்போதைய சூழலில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கட்டமைப்புரீதியாகச் சமபலத்தில் இருப்பதால், தொகுதியில் கடும் போட்டிக்கான சூழலே நிலவுகிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திருப்பரங்குன்றம்

சொன்னாரே? - முனியாண்டி, அ.தி.மு.க

தொகுதியிலுள்ள ஓர் அடிப்படைப் பிரச்னையைக்கூடத் தீர்க்க எம்.எல்.ஏ முயலவில்லை. அவ்வளவு ஏன்... தொகுதிப் பக்கமே அவர் இஷ்டத்துக்கு எப்போதாவதுதான் வருகிறார். சொல்வதற்கு ஒன்றுமில்லை!

செய்தேனே! - டாக்டர் சரவணன், எம்.எல்.ஏ., தி.மு.க

திருப்பரங்குன்றம் கோயிலில் பயன்பாட்டுக்கு வராமலிருந்த தங்கத்தேரை பக்தர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தேன். அவனியாபுரம் நல்லதங்காள் ஊருணியைத் தூர்வாரி, கழிவுநீர் கலக்காமல் செய்தேன். தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க ஆர்ப்பாட்டம் நடத்தியும் அரசு கவனிக்காததால், சொந்த லாரி மூலம் தொகுதிக்குத் தண்ணீர் சப்ளை செய்தேன். பனையூர் கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கரைகள் உயர்த்தப்பட்டுள்ளன. நிலையூர், விளாச்சேரிப் பகுதிகளில் `குடிமராமத்து’ என்ற பெயரில் நடந்த மணல் திருட்டைத் தடுத்து நிறுத்தியிருக்கிறேன். சொந்தச் செலவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தனித்திறன் பயிற்சி, மருத்துவப் பரிசோதனை முகாம்கள் தொடர்ந்து நடத்திவருகிறேன்.

முனியாண்டி - டாக்டர் சரவணன்
முனியாண்டி - டாக்டர் சரவணன்

கள நிலவரம்: திருப்பரங்குன்றம் தொகுதியில் தீர்க்கப்படாத அடிப்படைப் பிரச்னைகள் அதிகம் இருக்கின்றன. நீண்டகாலமாக அ.தி.மு.க வசமிருந்த இந்தத் தொகுதியை, 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க கைப்பற்றியது. தி.மு.க-வில் மீண்டும் டாக்டர் சரவணன் சீட் கேட்கிறார். எஸ்ஸார் கோபி, மணிமாறன், கோ.தளபதி ஆகியோரும் முயல்கிறார்கள். அ.தி.மு.க-வில் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றத்தைக் குறிவைத்து வேலை செய்துவருகிறார். கடந்தமுறை வெற்றி வாய்ப்பை இழந்த முனியாண்டி, சாலைமுத்து, மறைந்த சீனிவேலுவின் குடும்பத்தினர், முத்துராமலிங்கம் உள்ளிட்டோரும் சீட் எதிர்பார்க்கிறார்கள். அ.ம.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரன் சீட்டுக்காக முயல்கிறார். தி.மு.க-வில் நடக்கும் கோஷ்டிப் பூசலால், இன்றைய சூழலில் அ.தி.மு.க-வுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - மதுரை மத்தி

சொன்னாரே? - ஜெயபால், அ.ம.மு.க., (2016-ல் அ.தி.மு.க வேட்பாளர்)

`தொகுதிக்குள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவருவேன்’ என்றவர், எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. ஒரு வி.ஐ.பிபோல பந்தாவாக வலம்வருவதால், மக்களுக்கும் எம்.எல்.ஏ-வுக்கும் நிறையவே இடைவெளி இருக்கிறது. தொகுதியில் பல அடிப்படை வசதிகள் முழுமையாகச் செய்து தரப்படவில்லை. பழகுவதற்கு நல்லவர்தான், அதனால் தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

செய்தேனே! - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ., தி.மு.க

தொகுதியின் 25 இடங்களில் பெட்டிவைத்து மனு வாங்கி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, அவற்றில் 60 சதவிகித மனுக்களுக்குத் தீர்வுகண்டிருக்கிறேன். மூன்று ஆர்.ஓ பிளான்ட், 39 போர்வெல், 15 பேவர் பிளாக் சாலைகள், 47 தார்ச் சாலைகள், 11 அங்கன்வாடிகள், மூன்று பள்ளிக் கட்டடங்கள், நான்கு நியாயவிலைக் கடைகள், இரண்டு சமுதாயக்கூடங்கள், நான்கு பேருந்து நிழற்குடைகள், பூங்காவுக்குச் சுற்றுச்சுவர், சலவை செய்யும் கட்டடம், கழிப்பறைக் கட்டடம் முதலியவற்றை என் எம்.எல்.ஏ நிதியிலிருந்து அமைத்துக் கொடுத்துள்ளேன். இன்னும் பல பணிகளை என் சொந்தச் செலவில் செய்துள்ளேன்.

ஜெயபால் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
ஜெயபால் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

கள நிலவரம்: தி.மு.க-வில் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். கோ.தளபதி, ஜெயராம், அன்புநிதி ஆகியோரும் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் அமைச்சர் செல்லூர் ராஜூ இங்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரம்மர் சுரேஷ், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.காலனி லட்சுமி ஆகியோரும் சீட்டுக்கு முயல்கிறார்கள். அ.ம.மு.க-வில் ஜெயபால், டேவிட் அண்ணாத்துரை, தே.மு.தி.க-வில் மாநகரச் செயலாளர் சிவமுத்துகுமார், பா.ஜ.க-வில் ஹரிஹரன், சசிராமன் எனப் பலரும் முட்டி மோதுகிறார்கள். இன்றைய சூழலில், தொகுதி தி.மு.க-வுக்குச் சாதகமாகவே உள்ளது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பட்டுக்கோட்டை

சொன்னாரே? - மகேந்திரன், காங்கிரஸ்

கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு, பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது. அதைச் செயல்படுத்துவேன் என்றவர், அதற்காக எந்த முயற்சியும் செய்யவில்லை. கஜா புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு முழுமையாக நடைபெறாததால், நிவாரணப் பணமும் முழுமையாகக் கிடைக்கவில்லை. பைபாஸ் சாலை பாதியில் நிற்கிறது. அகல ரயில்பாதை, பணிகள் முடிந்தும் சும்மா கிடக்கிறது. எதையும் எம்.எல்.ஏ கண்டுகொள்ளவே இல்லை.

செய்தேனே! - சி.வி.சேகர், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 183 கோடி மதிப்பில் நிவாரணம் பெற்றுத் தந்திருக்கிறேன். ஒரு மாதத்திலேயே 45,000 புதிய மின் கம்பங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுத்தேன். திருமேனி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரையில் தலா 2 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் அமைத்திருக்கிறேன். குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் 280 வீடுகள்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. ரயில் விடுவது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கோட்ட மேலாளர் உறுதியளித்திருக்கிறார்.

மகேந்திரன், சி.வி.சேகர்
மகேந்திரன், சி.வி.சேகர்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சி.வி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ பி.எம்.ராமச்சந்திரன், கல்யாண ஓடை செந்தில் ஆகியோர் சீட் கேட்கின்றனர். அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா சார்பில் போட்டியிட என்.ஆர்.ரெங்கராஜன் முயல்கிறார். தி.மு.க-வில் பார்த்திபன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் அண்ணாத்துரை, ஏனாதி பாலசுப்ரமணியன், தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் களமிறங்க பட்டுக்கோட்டை ராஜேந்திரன், மகேந்திரன் ஆகியோர் முயல்கிறார்கள். ம.தி.மு.க-வில் ஜெயபாரதி விசுவநாதனுக்காக வைகோ இந்தத் தொகுதியைக் கேட்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மூன்று முறை கூட்டணிக் கட்சிக்குத் தொகுதியை ஒதுக்கியதால், இம்முறை தி.மு.க-வே போட்டியிட விரும்புகிறது. தற்போதைய நிலவரப்படி தொகுதி தி.மு.க-வுக்குச் சாதகமாகவே உள்ளது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பேராவூரணி

சொன்னாரே? - அசோக்குமார், தி.மு.க

`பேராவூரணியில் நீதிமன்றமும் தொழிற்சாலைகளும் கொண்டுவருவேன், திருச்சிற்றம்பலத்தைத் தலைமையிடமாகக்கொண்டு தாலுகா கொண்டுவருவேன்...’ என்று அவர் சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தொகுதியில் போதுமான சாலை வசதியில்லை. குடிநீர்த் தட்டுப்பாடு பெரிய அளவில் உள்ளது. மீனவர்களுக்குப் புயல் நிவாரணம் கிடைக்க முயற்சி எடுக்கவில்லை.

செய்தேனே! - கோவிந்தராசு, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

ஒருங்கிணைந்த முழுமை பெற்ற நீதிமன்றம் அறிவிக்கப்பட்டு, வேளாண்மைத்துறை அலுவலகத்தின் ஒரு பகுதியில் விரைவில் செயல்படவிருக்கிறது. முழுமையாகச் சாலை வசதிகள் செய்துகொடுத்திருக்கிறேன். வேளாண் சார்ந்த பகுதி என்பதால், 25 கோடி ரூபாய் மதிப்பில் நவீன அரிசி ஆலை தொடங்க இடத் தேர்வு நடைபெற்றுவருகிறது. 35 கோடி ரூபாய் மதிப்பில் காட்டாறு, பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 70 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள், உயர்மட்டப் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ நிதியிலிருந்து 12 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அங்கன்வாடிக் கட்டடம், அரசுப் பள்ளிகளுக்கு வகுப்பறைகள், பேருந்து நிழற்குடைகள் அமைத்துக் கொடுத்திருக்கிறேன்.

அசோக்குமார் - கோவிந்தராசு
அசோக்குமார் - கோவிந்தராசு

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ கோவிந்தராசு தன் மகன் கோ.வி.இளங்கோவுக்கு சீட் கேட்கிறார். திருஞானசம்பந்தம், துரைமாணிக்கம், குழ.செல்லையா மகன் அருள்நம்பி ஆகியோரும் ரேஸில் உள்ளார்கள். கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வும் இத்தொகுதியைக் கேட்கிறது. தி.மு.க-வில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் அசோக்குமார், பழஞ்சூர் செல்வம், தெற்கு ஒன்றியக் கழகப் பொறுப்பாளர் அன்பழகன் ஆகியோர் ரேஸில் உள்ளார்கள். தற்போதைய நிலவரப்படி, தொகுதி அ.தி.மு.க-வுக்குச் சாதகமாகவே உள்ளது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பவானிசாகர்

சொன்னாரே? - சத்யா, தி.மு.க

`சாயக்கழிவுகள், காகிதத் தொழிற்சாலைகளின் கழிவுகள் பவானி ஆற்றில் கலப்பதைத் தடுப்பேன்’ என்றார், ஆனால் செய்யவில்லை. தொகுதியின் பல பகுதிகளுக்குக் குடிநீர் தினசரி கிடைப்பதில்லை. சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனையாக இருந்தும் போதிய வசதியில்லாமல் இருக்கிறது. வனக்கிராமங்களில் யானைகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை. தொகுதி மக்களின் வேலைவாய்ப்பு, விவசாய மேம்பாட்டுக்கான எந்தத் திட்டமும் கொண்டுவரப்படவில்லை. தொகுதிவாசிகள் யாரும் எம்.எல்.ஏ-வைச் சந்திக்கவே முடியவில்லை. ஐந்து வருடங்களில் பொருளாதாரரீதியாக அவர் வளர்ந்த அளவுக்குத் தொகுதி வளரவில்லை.

கிட்டத்தட்ட 15 நாள்களாக அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான ஈஸ்வரனை நேரில் சந்திக்கவும் போனில் பேசவும் முயன்றோம். எல்லா வகையிலும் நம்மிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டார். ‘தொகுதியில் தான் செய்த பணிகள் இவை’ என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லையா என்ன? வாக்களித்த மக்களைச் சந்திக்கவும், தொகுதி பற்றிப் பேசவும் இவ்வளவு தயக்கம் காட்டுவதிலிருந்து அவரது பணிகளைப் புரிந்துகொள்ள வேண்டியதுதான்.

சத்யா - ஈஸ்வரன்
சத்யா - ஈஸ்வரன்

கள நிலவரம்: எம்.எல்.ஏ ஈஸ்வரனின் செயல்பாடுகள் தொகுதியில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

அ.தி.மு.க-வினரே அவர்மீது கடுமையான அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க சார்பில் போட்டியிட சிட்டிங் எம்.எல்.ஏ ஈஸ்வரன், சத்தியமங்கலம் நகர மாணவரணித் தலைவர் ஆடிட்டர் சிவக்குமார், மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சீட் கேட்கிறார்கள். தி.மு.க-வில் உக்கரம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ராம் கருணாநிதி சீட் கேட்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான பி.எல்.சுந்தரம் சீட்டுக்காக முயல்கிறார். ஈஸ்வரனின் செயல்படாததன்மை, அ.தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப் பூசல் உள்ளிட்டவையால், தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பெருந்துறை

சொன்னாரே? - கே.பி.சாமி, தி.மு.க

`சிப்காட் தொழிற்பேட்டை மாசு ஏற்படுத்துவதைத் தடுப்பேன், வேளாண் குளிர்பதனக் கிடங்கு அமைப்பேன்’ என்றார். இதுவரை அதைச் செய்யவில்லை. நசியனூர் முதல் செங்கப்பள்ளி வரை ஐந்து இடங்களில், தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் மக்கள் பலரும் சாலை விபத்தில் பாதிக்கப்படுகிறார்கள். `அங்கே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலங்கள் அமைக்கப்படும்’ என்றார். அந்த வாக்குறுதி காற்றோடு போனது. விசைத்தறி தொழிலின் முன்னேற்றத்துக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசுக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. தொகுதி முழுக்க தலைவிரித்தாடும் குடிநீர்ப் பிரச்னையையும் எம்.எல்.ஏ கண்டுகொள்ளவில்லை.

தொகுதியில் செய்த பணிகள், பிரச்னைகள் குறித்து விளக்கமறிய அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான தோப்பு வெங்கடாசலத்தைக் கடந்த 20 நாள்களாகத் தொடர்புகொள்ள முயன்றோம். இதழ் அச்சுக்குச் செல்லும் வரை எம்.எல்.ஏ-விடமிருந்து எந்த பதிலும் இல்லை. தான் என்ன செய்தோம் என்பதையே சொல்ல முடியாத அளவுக்கு அவருக்கு என்ன தயக்கம் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

 கே.பி.சாமி - தோப்பு வெங்கடாசலம்
கே.பி.சாமி - தோப்பு வெங்கடாசலம்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம், புறநகர் மாவட்ட மாணவரணி முன்னாள் செயலாளர் ஜெயக்குமார், பெருந்துறை தொகுதி முன்னாள் செயலாளர் திங்களூர் கந்தசாமி ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். தி.மு.க-வில் ஒன்றியச் செயலாளர் கே.பி.சாமி சீட் கேட்கிறார். கூட்டணியில் காங்கிரஸில் தெற்கு மாவட்டச் செயலாளர் மக்கள் ராஜனும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநிலப் பொருளாளர் கே.கே.சி.பாலுவும் சீட்டுக்காக முயல்கிறார்கள். தி.மு.க-வில் பெருந்துறையைக் கூட்டணிக்கு ஒதுக்கவே அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். அந்தவகையில் பார்த்தால், போட்டி கடுமையாக இருக்கும்!