Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் எம்.சி.சம்பத்

அமைச்சர் எம்.சி.சம்பத்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் எம்.சி.சம்பத்

கடந்த பத்து வருடங்களில், கடலூர் தொகுதிக்கு அமைச்சர் செய்ததும் செய்யாததும் என்னென்ன?

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் எம்.சி.சம்பத்

கடந்த பத்து வருடங்களில், கடலூர் தொகுதிக்கு அமைச்சர் செய்ததும் செய்யாததும் என்னென்ன?

Published:Updated:
அமைச்சர் எம்.சி.சம்பத்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் எம்.சி.சம்பத்

என்ன செய்தார் அமைச்சர்? - தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் - கடலூர்

1986-ல் எம்.ஜி.ஆருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் இருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, அண்ணா கிராம ஒன்றிய சேர்மனாகத் தேர்வுசெய்யப்பட்டவர் தாமோதரன். அவருக்கு உதவியாக வந்தவர்தான் அவரது தம்பி சம்பத்... சென்னை மாநிலக் கல்லூரியில் பி.எஸ்.சி படிப்பை முடித்துவிட்டு, வேலையில்லா பட்டதாரியாகச் சுற்றியவர், காலி தகர டப்பாக்களை மொத்தமாக வாங்கி விற்பது, ரியல் எஸ்டேட், ஏரி மரங்களைக் குத்தகை முறையில் வெட்டியெடுக்கும் வேலைகளைச் செய்துவந்தார். தாமோதரன் எம்.எல்.ஏ-வாகி அமைச்சரானதும், மணல் குவாரியில் கால் பதித்து, தன்னை வளப்படுத்திக்கொண்டார் சம்பத். பிறகு மன்னார்குடி குடும்பத்தின் மனதில் இடம்பிடித்து, அண்ணா கிராமம் ஒன்றியச் செயலாளராகி, 2001-ல் நெல்லிக்குப்பம் தொகுதியில் எம்.எல்.ஏ ஆனார். உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பு தேடிவந்தது. ஆனால், ஜெயலலிதாவின் அதிரடி பாணியில் ஒன்பதே மாதங்களில் பதவி பறிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டார். மீண்டும் மன்னார்குடி குடும்பத்தின் கரிசனப் பார்வையால் 2011-ல் கடலூரில் வென்று, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர், 2016-லிருந்து தொழில்துறை அமைச்சர் என்று பதவிகளை வகித்துவருகிறார். கடந்த பத்து வருடங்களில், கடலூர் தொகுதிக்கு அமைச்சர் செய்ததும் செய்யாததும் என்னென்ன?

சொன்னாரே? - புகழேந்தி, தி.மு.க

கடலூரை மாநகராட்சியாக மாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. அரசு மருத்துவமனையின் நிலையை ஆய்வு செய்வதற்குக்கூட ஆளில்லை. போதுமான அளவுக்கு மருத்துவர்களோ, மருந்துகளோ, சிகிச்சைகளோ கிடைப்பதில்லை. மாவட்டம் முழுவதும் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன சாலைகள். கடலூரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான சில்வர் பீச்சை மேம்படுத்தவில்லை. மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் துறைமுகத்தைக்கூட மேம்படுத்தவில்லை. ஒருவருக்குக்கூட இலவச மனைப் பட்டா வழங்கப்படவில்லை. தொழில்துறை அமைச்சராக இருக்கும் இவர், எத்தனை தொழிற்சாலைகளைக் கடலூருக்குக் கொண்டுவந்திருக்கிறார்? கமிஷன், கரெப்ஷன், கலெக்‌ஷன் இந்த மூன்று ‘க’ தான் அமைச்சரின் தாரக மந்திரம். வேறொன்றும் தொகுதிக்குச் செய்யவில்லை.

செய்தேனே! - எம்.சி.சம்பத், அமைச்சர்

துறைமுக விரிவாக்கப் பணியைப் பொறுத்தவரை, தற்போது 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் கல் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடித் தளத்தை விரிவாக்கம் செய்திருக்கிறோம். தாழங்குடா பகுதியில் தடுப்பணை அமைத்திருக்கிறோம். புதிய பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. கடலூரில் டைடல் பார்க் அமைப்பதற்காக ஐந்து ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. செயல்படாமல் இருக்கும் நாகார்ஜுனா எண்ணெய் நிறுவனத்தை ‘ஹால்டியா பெட்ரோல்கெமிக்கல்’ நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவுபெற்றுவிட்டன. அது செயல் படுகையில், கடலூரில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும்.

எம்.சி.சம்பத், புகழேந்தி,
எம்.சி.சம்பத், புகழேந்தி,

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் மீண்டும் அமைச்சர் சம்பத் சீட் கேட்கிறார். அவருடன், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் சேவல் குமார், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் ஆகியோரும் சீட்டுக்காக முட்டிமோதுகிறார்கள். தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பன், மாவட்டப் பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன், ஏ.ஜி.ஆர்.சுந்தர் ஆகியோர் முயல்கிறார்கள். இன்றைய சூழலில், தி.மு.க-அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் கட்டமைப்பில் வலுவாக இருப்பதால், இழுபறியான சூழலே நிலவுகிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - வேலூர்

சொன்னாரே? - கலைமகள் இளங்கோவன், பா.ஜ.க

சி.எம்.சி மருத்துவமனைப் பகுதி, பழைய பேருந்து நிலையம் பகுதியில் சுரங்கப்பாதைகள் அமைப்பதாகச் சொன்னவர், அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆமை வேகத்தில் நடக்கும் பாதாளச் சாக்கடைப் பணிகள் முடிந்தபாடில்லை. மலைகளைப் பசுமையாக்குவதாகச் சொன்னவர், ஒரு விதைப்பந்தைக்கூட வீசவில்லை. மேல்மொணவூர் ஏரியைத் தூர்வாரவில்லை. மாநகரச் சாலைகளை விரிவுபடுத்தவில்லை. மொத்தத்தில், வேலூர் தொகுதி மக்களுக்கு இந்த எம்.எல்.ஏ சாபக்கேடு.

செய்தேனே! - கார்த்திகேயன், எம்.எல்.ஏ., தி.மு.க

தொகுதியில் நிலவிய குடிநீர்ப் பிரச்னையைத் தீர்த்திருக்கிறேன். வேலப்பாடி ஆனைகுளத்தம்மன் கோயில், ஓல்டு டவுன், கஸ்பா, சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளில் சமுதாயக்கூடம் கட்டிக் கொடுத்திருக்கிறேன். மக்கான், தோட்டப்பாளையம், காகிதப்பட்டறைப் பகுதிகளில் உடற்பயிற்சிக்கூடம் அமைத்திருக்கிறேன். பொதுமேடை, நூலகம், ரேஷன் கடைகள், விளையாட்டு மைதானம், பயணிகள் நிழற்கூடம் எனத் தொகுதிக்குள் மக்களின் கோரிக்கைகளை, தேவைகளை நிறைவேற்றியிருக்கிறேன்.

கலைமகள் இளங்கோவன், கார்த்திகேயன்
கலைமகள் இளங்கோவன், கார்த்திகேயன்

கள நிலவரம்: தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ கார்த்திகேயன், மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார், முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய் ஆகியோர் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். அ.தி.மு.க-வில் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, ஐடி விங் மண்டலச் செயலாளர் ஜனனி சதீஷ்குமார் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணியில் த.மா.கா-வின் மத்திய மாவட்டத் தலைவர் பி.எஸ்.பழனியும் சீட் கேட்கிறார். தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப்பூசலாலும், அ.தி.மு.க நிர்வாகிகளின் களப்பணிகளாலும் தொகுதியில் இரட்டை இலை மலர வாய்ப்பிருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அணைக்கட்டு

சொன்னாரே? - கே.எல்.இளவழகன், பா.ம.க

`மலைவாழ் மக்களின் முன்னேற்றத்துக்காகப் பல திட்டங்களைக் கொண்டுவருவேன். அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி கொண்டுவருவேன்’ என்றார். எதையும் செய்யவில்லை. பீஞ்சமந்தை உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்குச் சாலை வசதியில்லை. தேர்தல் நெருங்கிவிட்டதால், ஆங்காங்கே சாலை போடுகிறார். விவசாயிகளுக்குச் சேமிப்புக் கிடங்கு அமைத்துத் தரவில்லை. குடிநீர்ப் பிரச்னை தீரவில்லை. மேல் அரசம்பட்டு தடுப்பணைப் பணிகளைக் கண்டுகொள்ளவில்லை.

செய்தேனே! - ஏ.பி.நந்தகுமார், எம்.எல்.ஏ., தி.மு.க

நாகநதியின் குறுக்கே ரூ.3.5 கோடி செலவில் பாலம் கட்டிக்கொடுத்திருக்கிறேன். தொகுதி முழுவதும் பேருந்து நிழற்கூடம் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். குக்கிராமங்களிலும் தரமான சாலைவசதி செய்துகொடுத்திருக்கிறேன். குடிமராமத்துப் பணிகளை ஆளுங்கட்சி செய்து தராததால், என் சொந்தச் செலவில் கால்வாய்களைத் தூர்வாரி 13 ஏரிகளுக்குத் தண்ணீர் கொண்டுவந்திருக்கிறேன். ரூ.5.11 கோடி மதிப்பீட்டில் பீஞ்சமந்தை மலைக் கிராமத்துக்குச் சாலை அமையவிருக்கிறது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தபோதும், தொகுதிப் பிரச்னைகளை முழுமையாகக் களைந்திருக்கிறேன்.

கே.எல்.இளவழகன் - ஏ.பி.நந்தகுமார்
கே.எல்.இளவழகன் - ஏ.பி.நந்தகுமார்

கள நிலவரம்: தொகுதியில் வன்னியர் சமூக வாக்குவங்கியே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. தி.மு.க-வில் அணைக்கட்டு மேற்கு ஒன்றியச் செயலாளர் மு.பாபு, முன்னாள் எம்.எல்.ஏ கலையரசன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க-வில் வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர் வேலழகன் சீட் கேட்கிறார். கூட்டணியிலிருக்கும் பா.ம.க-வின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் கே.எல்.இளவழகன் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார். தி.மு.க-வின் கட்டமைப்பு வலுவிழந்திருப்பதும், பா.ம.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பலம் காரணமாகவும் தொகுதி அ.தி.மு.க கூட்டணிக்குச் சாதகமாகவே இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திருச்செங்கோடு

சொன்னாரே? - பார் இளங்கோவன், தி.மு.க

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரிங் ரோடு, தொழில்வளத்தைப் பெருக்க சிப்காட், நெசவுப் பூங்கா, கிராமங்களுக்குச் சாலை வசதி என வாக்குறுதி தந்தவர் எதையும் செய்யவில்லை. தொகுதிக்குட்பட்ட எல்லா ஊராட்சிகளிலும் குடிநீர்ப் பிரச்னை இருக்கிறது. ஆனால், குடிநீர்த் தேக்கத் தொட்டிகள் எங்கும் அமைக்கவில்லை. தொகுதிக்கு அரசு கலைக் கல்லூரி கொண்டுவரவும் முயலவில்லை.

செய்தேனே! - பொன்.சரஸ்வதி, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

கொக்கராயன் பேட்டையில் பாலம், அம்மா மினி கிளினிக், குடிசை மாற்று வாரியம் சார்பில் 800 வீடுகள், ஏமப்பள்ளியில் துணை மின் நிலையம் கொண்டுவந்திருக்கிறேன். பூலாம்பட்டியிலிருந்து திருச்செங்கோடு நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டம் கொண்டுவந்திருக்கிறேன். அர்த்தநாரீர்ஸ்வரர் கோயிலுக்கு ஏழு கி.மீ தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பல ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. திருச்செங்கோடு கூட்டப்பள்ளி பகுதியில் கால்நடை நோய் புலனாய்வுக் கட்டடப் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. ரிங் ரோடு, தி.மு.க தொடுத்த வழக்கால் நிற்கிறது.

பார் இளங்கோவன், பொன்.சரஸ்வதி
பார் இளங்கோவன், பொன்.சரஸ்வதி

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதி, திருச்செங்கோடு வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆர்.எம்.டி.சந்திரசேகர், திருச்செங்கோடு தொகுதிப் பொறுப்பாளர் சபரி தங்கவேல் உள்ளிட்டோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணியிலுள்ள த.மா.கா மேற்கு மாவட்டத் தலைவர் செல்வகுமாரும் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார். தி.மு.க-வில் பார் இளங்கோவன், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார், திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் தங்கவேல், மாவட்ட மாணவரணிச் செயலாளர் ஜிஜேந்திரன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணியிலிருக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனும் தொகுதியைக் குறிவைத்திருக்கிறார். தொகுதியில் எம்.எல்.ஏ மீதிருக்கும் அதிருப்தி காரணமாக, சூரியன் உதிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - கிருஷ்ணராயபுரம்

சொன்னாரே? - ரவிராஜா, தி.மு.க

`விவசாயிகள் பலனடையும் வகையில் வாழைக்கான குளிர்ப்பதனக் கிடங்கு, வெற்றிலை சம்பந்தப்பட்ட சந்தை கொண்டுவருவேன்’ என்றவர், செய்யவில்லை. விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளையும் கொண்டுவர முயலவில்லை. கடவூரில் நீதிமன்றம் கொண்டுவரவும், ஒன்றியப் பகுதிகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கவும் எந்த முயற்சியும் செய்யவில்லை. மணவாசி பகுதியில் தி.மு.க ஆட்சியில் சிப்காட் அமைக்க முயற்சி நடந்தது. ஆட்சி மாறியதும் அதைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

செய்தேனே! - கீதா, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

கடவூர் ஒன்றியத்தில் தரகம்பட்டியில் கலைக் கல்லூரி, சார்நிலை கருவூலம், சுருமான்பட்டியில் பாலம், சேவாப்பூர்-வளையப்பட்டி இணைப்புப் பாலம், செம்பியாநத்தம் ஊராட்சியில் இரண்டு பாலங்கள், அய்யம்பாளையத்தில் தடுப்பணை, திருக்காம்புலியூர் ஊராட்சியில் அம்மா பூங்கா, கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிப் பகுதிகளில் ஐந்து பாலங்கள் கொண்டுவந்திருக்கிறேன். தொகுதியிலுள்ள 90 சதவிகித ஊராட்சிகளுக்குக் குடிநீர் வசதியும் சாலை வசதியும் செய்யப்பட்டுள்ளன. பல ஊர்களில் பொதுமேடைகளும், நியாயவிலைக் கடைகளும் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ளன.

ரவிராஜா, கீதா
ரவிராஜா, கீதா

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ கீதா, முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ், எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்டச் செயலாளர் தானேஷ் என்கிற எம்.முத்துகுமார் ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ வழக்கறிஞர் காமராஜ், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ரவிராஜா, பூவை ரமேஷ் பாபு, ஜெகதாபி கார்த்திக், முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் திருமாநிலையூர் பிரபு உள்ளிட்டோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். இரு கட்சிகளும் சம பலத்தில் இருப்பதால், தொகுதியில் கடும்போட்டி இருக்கும்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - ராஜபாளையம்

சொன்னாரே? - ராமச்சந்திர ராஜா, பா.ஜ.க

`ராஜபாளையத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பைபாஸ் ரோடு, அய்யனார் அருவிப் பகுதியில் பூங்கா, ராஜபாளையம் நாய் இன விருத்திக்காகவும் பாதுகாப்புக்காகவும் தனி மருத்துவமனை அமைப்பேன்’ என்றார். எதையும் செய்யவில்லை. ராஜபாளையத்தில் அரசு கலைக் கல்லூரி கொண்டுவரவில்லை. பருத்தி கொள்முதல் நிலையம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் எம்.எல்.ஏ கண்டுகொள்ளவில்லை.

செய்தேனே! - தங்கபாண்டியன், எம்.எல்.ஏ., தி.மு.க

ரூ.200 கோடி மதிப்பிலான தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டம், ராஜபாளையம் நகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டம், பி.ஏ.சி.ஆர் சாலையில் ரயில்வே மேம்பாலம் ஆகிய திட்டங்களுக்கான பணிகள் நடந்துவருகின்றன. தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் தார்ச்சாலைகள், அங்கன்வாடி கட்டடங்கள், நியாயவிலைக் கடைகள், நிழற்குடைகள் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். எனது மாதச் சம்பளத்தைத் தொகுதி மக்களில் இயலாதவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவருகிறேன்.

ராமச்சந்திர ராஜா - தங்கபாண்டியன்
ராமச்சந்திர ராஜா - தங்கபாண்டியன்

கள நிலவரம்: தி.மு.க-வில் தங்கபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ராஜன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க-வில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ கோபால்சாமி, யூனியன் கவுன்சிலர் கிருஷ்ணராஜ், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ராஜ் பிரியன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் முருகேசன் பெயர்கள் அடிபடுகின்றன. பா.ஜ.க-வில் கடந்தமுறை போட்டியிட்ட ராமச்சந்திர ராஜா, ‘சுகந்தம்’ ராமகிருஷ்ணன், விருதுநகர் ராதாகிருஷ்ணன் சீட் கேட்கிறார்கள். உட்கட்சிப்பூசல் இல்லாததும், விமர்சனங்கள் இருந்தும்கூட தொகுதிக்குள் எம்.எல்.ஏ-வின் செல்வாக்கு குறையாததும் தி.மு.க-வுக்கு ப்ளஸ். தொகுதியில் தி.மு.க-வுக்குச் சாதகமான சூழலே நிலவுகிறது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - ஸ்ரீவில்லிபுத்தூர்

சொன்னாரே? - லிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான பார்க்கிங் வசதிகளும், கழிப்பிட வசதிகளும் செய்யப்படவில்லை. தேங்காய் கொள்முதல் நிலையம் கொண்டுவரவில்லை. 15 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் ‘வில்லிபுத்தூர் கூட்டுறவு நூற்பாலை’யை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

செய்தேனே! - சந்திரபிரபா, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

வத்திராயிருப்பைத் தனித் தாலுகாவாக அறிவித்ததுடன், புதிய தாலுகா அலுவலகமும் கட்டப்பட்டு வருகிறது. வத்திராயிருப்பில் போக்குவரத்து பணிமனைக் கட்டடம், புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டடம், புதிய காவல் நிலையக் கட்டடங்கள், ஏழு கால்நடை மருத்துவமனைக் கட்டடங்கள், 11 துணைச் சுகாதார நிலையக் கட்டடங்கள், 15 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், 13 அங்கன்வாடிக் கட்டடங்கள், 12 நியாயவிலைக் கடைகள் அமைத்திருக்கிறேன். 1,400 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெற்றுக் கொடுத்திருக்கிறேன். அனைத்து கிராமங்களுக்கும் தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

லிங்கம், சந்திரபிரபா
லிங்கம், சந்திரபிரபா

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சந்திரபிரபா, மாவட்ட ஊராட்சி சேர்மன் வசந்தியின் கணவர் மான்ராஜ், சுந்தரபாண்டியம் சிட்டிபாபு ஆகியோர் சீட் கேட்கிறார்கள். தி.மு.க-வில் தெற்கு மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.வி.கே.துரை, மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.பி.ஆர்.இளம்பரிதி ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணியிலுள்ள சி.பி.ஐ-க்குத் தொகுதி ஒதுக்கப்பட்டால், முன்னாள் எம்.பி லிங்கமே போட்டியிடுவார் என்கிறார்கள். தொகுதிக்குள் எம்.எல்.ஏ-வுக்கு நல்ல பெயர் இருந்தாலும், இம்முறை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்காமல் தி.மு.க-வே நேரடியாகக் களமிறங்கத் திட்டமிட்டிருப்பதால், கட்டமைப்பின் வலு காரணமாக தி.மு.க-வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் எம்.சி.சம்பத்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism