Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் நிலோபர் கபீல்

நிலோபர் கபீல்
பிரீமியம் ஸ்டோரி
நிலோபர் கபீல்

தொகுதிக்குள் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் கொண்டுவந்திருக்கிறேன். காவிரி தண்ணீரைத் தொகுதி முழுவதும் விரிவுபடுத்தியிருக்கிறேன். 12 அம்மா மினி கிளினிக்குகள் தொகுதிக்குள் வந்திருக்கின்றன.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் நிலோபர் கபீல்

தொகுதிக்குள் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் கொண்டுவந்திருக்கிறேன். காவிரி தண்ணீரைத் தொகுதி முழுவதும் விரிவுபடுத்தியிருக்கிறேன். 12 அம்மா மினி கிளினிக்குகள் தொகுதிக்குள் வந்திருக்கின்றன.

Published:Updated:
நிலோபர் கபீல்
பிரீமியம் ஸ்டோரி
நிலோபர் கபீல்

என்ன செய்தார் அமைச்சர்? - நிலோபர் கபீல், தொழிலாளர்கள் நலன், வேலைவாய்ப்பு, வஃக்ப் வாரியம்  - வாணியம்பாடி

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருக்கிறது வாணியம்பாடி. தொகுதி எம்.எல்.ஏ-வான நிலோபர் கபீல், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் தொகுதிக்குச் செய்தது என்ன?

சொன்னாரே! - சையத் பாரூக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

தொகுதியின் நீர்நிலைகளில் தோல் கழிவுகள் அதிகமும் கலந்துள்ளன. அதைச் சீர்ப்படுத்தித் தருவதாக வாக்குறுதியளித்தவர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விளைபொருள்களைச் சேமித்துவைக்க கிடங்கு, கோவிந்தாபுரம் பெரிய ஏரியின் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்ட மக்களின் கோரிக்கையைக் காதுகொடுத்துக் கேட்டதில்லை. நெக்னா மலையில் வசிக்கும் மக்கள், சாலை வசதி கேட்டு 72 ஆண்டுகளாகப் போராடிவருவதை நிறைவேற்றவில்லை. தொழில் வளர்ச்சியைப் பெருக்க சிப்காட் கொண்டுவரவில்லை. நியூ டவுன் பிரிட்ஜ் பணிகளைக் கிடப்பில் போட்டுவிட்டார். அரசுப் பள்ளிக்கூடம், முதியோர் பென்ஷன், வணிகர்களுக்கு விசாலமான கடைகள் என்று அவர் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வளையாம்பட்டுப் பகுதியில் தொடங்கப்பட்ட ரயில்வே மேம்பாலப் பணி முடங்கிக்கிடக்கிறது.

செய்தேனே! - அமைச்சர் நிலோபர் கபீல், அ.தி.மு.க

தொகுதிக்குள் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் கொண்டுவந்திருக்கிறேன். காவிரி தண்ணீரைத் தொகுதி முழுவதும் விரிவுபடுத்தியிருக்கிறேன். 12 அம்மா மினி கிளினிக்குகள் தொகுதிக்குள் வந்திருக்கின்றன. ஒவ்வொரு மினி கிளினிக்கிலும் தினமும் 200 நோயாளிகள் பயன்பெறுகிறார்கள். ஐ.டி.ஐ விரைவில் வரவிருக்கிறது. ஆண்டியப்பனூர் அணைப்பகுதியில் சுற்றுலா மையம் அமையவிருக்கிறது. நான், நகரசபைத் தலைவராக இருந்தவள். மக்களிடம் எளிமையாகப் பழகுபவள். இதனால், தொகுதிக்குள் நாய்கள் தொல்லை போன்ற சின்னப் பிரச்னைகளைக்கூட நகராட்சியில் முறையிடாமல் என்னிடம்தான் வந்து மக்கள் சொல்கிறார்கள். என் பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகிறேன்.

நிலோபர் கபீல் - சையத் பாரூக்
நிலோபர் கபீல் - சையத் பாரூக்

கள நிலவரம்: வாணியம்பாடி தொகுதியில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது வன்னியர், இஸ்லாமியர் சமூக வாக்குகள்தான். இந்தத் தொகுதியை சென்டிமென்ட்டாகப் பார்க்கும் அமைச்சர் நிலோபர், அ.தி.மு.க சார்பில் மீண்டும் போட்டியிட ‘சீட்’ கேட்கிறார். ஒன்றியச் செயலாளர்கள் கோவி.சம்பத்குமார், செந்தில்குமார், அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் ரமேஷ் ஆகியோரும் சீட்டுக்காகக் காய் நகர்த்துகிறார்கள். வாணியம்பாடியைக் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுத்தரும் முடிவில் தி.மு.க நிர்வாகிகள் இல்லை. தி.மு.க மாவட்டச் செயலாளர் செக்குமேடு தேவராஜி சீட் எதிர்பார்க்கிறார். அதேநேரத்தில், கூட்டணியிலுள்ள மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் வாணியம்பாடியைக் கேட்கின்றன. காங்கிரஸின் சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் அஸ்லம் பாஷா, மாவட்டத் தலைவர் பிரபு ஆகியோரும் தங்கள் பங்குக்குத் துண்டு விரித்துள்ளனர். தொகுதியில் அமைச்சர் நிலோபருக்கு எதிரான மனநிலையே மக்களிடம் காணப்படுகிறது. அ.தி.மு.க-வினரே அவர்மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். கூட்டணியிலுள்ள இஸ்லாமியக் கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க நேரடியாகக் களமிறங்கும் பட்சத்தில், உதயசூரியனுக்கு வெல்லும் வாய்ப்பு அதிகம்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - கூடலூர்

சொன்னாரே? - கலைச்செல்வன், அ.ம.மு.க., (2016 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்)

தோட்டத் தொழிலாளர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்துவதாகச் சொன்னவர், அதைச் செய்யவில்லை. யானை-மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க அறிவியல்பூர்வ நடவடிக்கை எதுவுமே எடுக்கவில்லை.செக்‌ஷன்- 17 நிலப்பிரச்னையைத் தீர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மொத்தத்தில் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை.

செய்தேனே! - திராவிடமணி, எம்.எல்.ஏ., தி.மு.க

பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகக் கூடலூரில் இயங்கிவந்த கல்லூரியை, அரசுக் கல்லூரியாக மாற்றியிருக்கிறேன். கூடலூர் அரசு மருத்துவமனைக்கு முதன்முறையாக ஐ.சி.யூ வசதியை ஏற்படுத்தியிருக்கிறேன். அம்மங்காவு பகுதிக்குப் புதிய சாலை, அரசு தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு, 500 பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கியது எனப் பல பணிகளைச் செய்திருக்கிறேன். செக்‌ஷன்-17 நிலப்பிரச்னைக்குச் சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறேன்.

கலைச்செல்வன் - திராவிடமணி
கலைச்செல்வன் - திராவிடமணி

கள நிலவரம்: `தொகுதிக்குள் செக்‌ஷன்-17 நிலத்தில் வாழ்ந்துவரும் பத்தாயிரம் குடும்பங்களுக்கு இன்றளவும் மின்சாரம் போய்ச்சேரவில்லை. தனியார் பெருந்தோட்டங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஆக்கிரமித்திருக்கும் அரசு நிலங்களை மீட்க ஆர்வம் காட்டவில்லை. பழங்குடிகள் நலன்மீது அக்கறை செலுத்தவில்லை’ என்பவை திராவிட மணி மீதான விமர்சனங்கள். அ.தி.மு.க-வில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் இவரின் தம்பியின் தலையீடு, தி.மு.க-வினரை முகம்சுளிக்கவைத்திருக்கிறது. தி.மு.க-வில் திராவிட மணி, காசிலிங்கம், மாங்கோடு ராஜா ஆகியோர் சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க-வில் பொன்.ஜெயசீலன், ராஜா தங்கவேலு ஆகியோர் சீட்டுக்காக முட்டிமோதுகின்றனர். கட்சிக் கட்டமைப்பு இங்கு வலுவாக இருப்பதால், தொகுதி

தி.மு.க-வுக்குச் சாதகமாகவே இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - குன்னூர்

சொன்னாரே? - முபாரக், தி.மு.க

அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு பெற்றுத் தருவதாகச் சொன்னவர், அதைச் செய்யவில்லை. குன்னூர், கோத்தகிரி பகுதிகளின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்காக ஒரு‌ முயற்சியும் எடுக்கவில்லை. எம்.எல்‌.ஏ ஆவதற்கு முன்பு இவருக்கு ஒரு‌ டீ தொழிற்சாலை இருந்தது. தற்போது இவர் பெயரில் இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன. மக்களின் மிக முக்கியப் பிரச்னையான தேயிலைக்கு உரிய விலை கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செய்தேனே! - சாந்தி ஏ.ராமு, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

எமரால்டு குடிநீர்த் திட்டம், குடிசை மாற்று வாரியம் மூலம் 500 குடும்பங்களுக்கு வீடுகள், கோத்தகிரியில் திறந்தவெளிப் பல்கலைக்கழகம், பல ஆண்டுகளாகச் சாலை வசதியே இல்லாத பகாசூரன் மலை, ஆனைப்பள்ளம்‌ ஆகிய பகுதிகளுக்குப் புதிய சாலை உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறேன். குன்னூர்- அளக்கறை கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு 15 லட்சம் மதிப்புள்ள எனது சொந்த நிலத்தை இலவசமாகக் கொடுத்திருக்கிறேன்.

முபாரக் - சாந்தி ஏ.ராமு
முபாரக் - சாந்தி ஏ.ராமு

கள நிலவரம்: ‘குன்னூர் தொகுதியிலுள்ள பல பகுதிகளில், மழைக்காலத்திலும் 15 நாள்களுக்கு ஒரு முறைகூட குடிநீர் கிடைப்பதில்லை. தேயிலைத் தொழில் சார்ந்திருப்பவர்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொகுதியில் கல்வி, மருத்துவம்‌ உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் எதுவுமே தரம் உயர்த்தப்படவில்லை’ ஆகிய விமர்சனங்கள் இருக்கின்றன. தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் முபாரக், இளித்தொரை ராமச்சந்திரன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க-வில் டிம்பர் சஜ்ஜீவன், சாந்தி ஏ.ராமு ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். கட்டமைப்புரீதியாக தி.மு.க - அ.தி.மு.க இரண்டுமே சம பலத்தில் இருப்பதால், தொகுதியில் கடும் போட்டி இருக்கும்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - துறையூர்

சொன்னாரே? - மைவிழி அன்பரசன், அ.தி.மு.க

துறையூரிலுள்ள பெரிய ஏரியைத் தூர்வாரி, பூங்கா அமைத்துத் தருவதாகச் சொன்னதைச் செய்யவில்லை. அரசுக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையையும் கண்டுகொள்ளவில்லை. நவீன புதிய பேருந்து நிலையம், அய்யாறு பாசனப் பகுதியில் மட்டுமே விளையும் சீரகச்சம்பா நெல்லுக்குப் புவிசார் குறியீடு, பெருமாள் மலையைச் சுற்றுலாத்துறை மூலம் மேம்படுத்துதல் பொன்ற எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

செய்தேனே! - ஸ்டாலின் குமார், எம்.எல்.ஏ., தி.மு.க

நியாயவிலைக் கடைக் கட்டடங்கள், பயணிகள் நிழற்குடை, சாலை வசதி ஆகியவற்றுக்காக எம்.எல்.ஏ நிதியை முழுமையாகப் பயன்படுத்தியிருக்கிறேன். அரசு கலைக் கல்லூரி, குடிநீர்ப் பிரச்னை தொடர்பாகச் சட்டமன்றத்தில் பலமுறை பேசியிருக்கிறேன். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்திவிட்டால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வான எனக்குத் தொகுதிக்குள் நல்லபெயர் வந்துவிடும் என்கிற ஒரே காரணத்துக்காக என்னுடைய திட்டங்களை வேண்டுமென்றே தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

மைவிழி அன்பரசன் - ஸ்டாலின் குமார்
மைவிழி அன்பரசன் - ஸ்டாலின் குமார்

கள நிலவரம்: தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ ஸ்டாலின் குமார், முன்னாள் எம்.எல்.ஏ ராணி ஆகியோர் சீட் கேட்கிறார்கள். தொகுதியைக் கூட்டணிக்கு விட்டுக்கொடுக்கும் மனநிலையில் தி.மு.க தலைமை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், தொகுதியைப் பிடிக்க சி.பி.எம்., வி.சி.க-வைச் சேர்ந்த பலரும் முயல்கிறார்கள். அ.தி.மு.க-வில், மைவிழி அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ இந்திரா காந்தி, பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன், பச்சப்பெருமாள்பட்டி மனோகரன் என்று ஒரு படையே சீட்டுக்காக முட்டிமோதுகிறது. ‘தொகுதியில் பல வருடங்களாக அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப்படாதது, தொகுதிக்குள் பெரிதாகத் தலைகாட்டாதது, கட்சி நிர்வாகிகளுக்கு மரியாதை கொடுக்காதது’ ஆகியவை ஸ்டாலின் குமார் மீதிருக்கும் மைனஸ். இரண்டு கட்சிகளுக்குமே தொகுதியில் ஆதரவு அலை இல்லை. வேட்பாளர்களைப் பொறுத்தே வெற்றி தோல்வி அமையும்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திருவிடைமருதூர்

சொன்னாரே? - மாதையன், பா.ம.க

தானியக் கிடங்கு, அரசு கலை அறிவியல் கல்லூரி, ஆடுதுறையில் விவசாயக் கல்லூரி, புதிய தடுப்பணை ஆகியவற்றைக் கொண்டுவருவதாகச் சொன்னவர், எதையும் நிறைவேற்றவில்லை. `கீழணை’ என்று சொல்லப்படும் அணைக்கரையைச் சீரமைக்கவும், சுற்றுலா தலமாக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சிக் கூட்டங்களைத் தவிர வேறெங்கும் அவர் பெரிதாகத் தலைகாட்டுவதில்லை.

செய்தேனே! - கோவி.செழியன், எம்.எல்.ஏ., தி.மு.க

பந்தநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்குப் புது பில்டிங், ஏழு சமுதாயக் கூடங்கள் உள்ளிட்டவற்றைக் கட்டிக்கொடுத்திருக்கிறேன். புதிய தடுப்பணை அமைப்பது தொடர்பாகச் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன், பலனில்லை. எம்.எல்.ஏ நிதியை ஒதுக்கி சாலைகள், பேருந்து நிழற்குடை, குடிநீர் வசதி, அரசுப் பள்ளிகளுக்குத் தளவாடப் பொருள்கள் எனப் பல பணிகளைச் செய்திருக்கிறேன். `ஆடுதுறையில் விவசாயக் கல்லூரி அமைக்க வேண்டும்’ என்று நான் சொன்னேன், ஆனால் கல்லூரியைத் திருச்சிக்குக் கொண்டு சென்றனர். நான் வைத்த எந்தக் கோரிக்கையையும் ஆளும் அரசு செய்து கொடுக்கவில்லை.

மாதையன்,  கோவி.செழியன்
மாதையன், கோவி.செழியன்

கள நிலவரம்: தி.மு.க-வில் இம்முறையும் கோவி.செழியன் சீட் எதிர்பார்க்கிறார். திருவிடைமருதூர் யூனியன் சேர்மனான சுபா திருநாவுக்கரசுவும் தி.மு.க-வில் காய்நகர்த்துகிறார். அ.தி.மு.க-வில் திருப்பனந்தாள் வடக்கு ஒன்றியச் செயலாளரான வீரமணி, டாக்டர் அருள், கோவி.மகாலிங்கம், இன்ஜினீயர் எழில்செல்வன் ஆகியோர் ரேஸில் உள்ளனர். வன்னியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால், அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வினரும் சீட்டுக்காகக் காய்நகர்த்திவருகிறார்கள். தற்போதைய தொகுதி நிலவரப்படி தி.மு.க-வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - மதுரை கிழக்கு

சொன்னாரே? - தக்கார் பாண்டி, அ.தி.மு.க

`தொகுதியிலுள்ள கண்மாய்களைத் தூர்வாருவேன்’ என்றவர், அதிலிருந்து மணலை எடுத்துக்கொண்டதுதான் மிச்சம். எதிர்க்கட்சி தொகுதியென்ற பாரபட்சமின்றி, மக்களுக்குத் தொடர்ந்து நலத்திட்டங்கள் கிடைக்கச் செய்கிறோம். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ கோரிக்கை வைத்தாலும் எங்கள் முதல்வர் செய்து கொடுப்பார். ஆனால், மக்களைப் பற்றிய சிந்தனை எம்.எல்.ஏ-வுக்கு இருந்தால்தானே... பணம் சம்பாதிப்பதிலும் ஆட்களைவைத்து ஒப்பந்தம் எடுப்பதிலும்தான் குறியாக இருக்கிறார்.

செய்தேனே! - பி.மூர்த்தி, எம்.எல்.ஏ., தி.மு.க

மாநகராட்சி எல்லைக்குள் என் தொகுதியில் 12 வார்டுகள் சேர்க்கப்பட்டன. ஆனால், அதற்கான அடிப்படை வசதிகள் எதையும் செய்து கொடுக்காமல் புறக்கணித்தார்கள். பகுதி மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்துப் பல போராட்டங்களை நடத்தியே அதற்குத் தீர்வு ஏற்படுத்தினேன். தொகுதியிலுள்ள கண்மாய்களைத் தூர்வாரி, மழைநீரைத் தேக்கும் வகையில் செய்தேன்; இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. எம்.எல்.ஏ நிதி மூலம், தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறேன்.

தக்கார் பாண்டி - பி.மூர்த்தி
தக்கார் பாண்டி - பி.மூர்த்தி

கள நிலவரம்: சிட்டிங் எம்.எல்.ஏ-வான பி.மூர்த்தியை, கட்சித் தலைமை மேலூர் தொகுதியில் களமிறக்கவிருப்பதாகத் தகவல் வருகிறது. ஆனால் அவரோ மதுரை கிழக்கிலேயே போட்டியிட விரும்புகிறார். தொகுதியில் யாதவர் வாக்குகள் கணிசமாக இருப்பதால் ராஜ கண்ணப்பனும் போட்டியிட விரும்புகிறார். முன்னாள் மேயர் குழந்தைவேலு, ஒன்றியச் செயலாளர் ரகுபதி ஆகியோரும் சீட்டுக்காக முயல்கிறார்கள். கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் மலேசியா பாண்டியனின் மகன் வரதராஜன் காய்நகர்த்துகிறார். அ.தி.மு.க-வில் வழக்கறிஞர் ரமேஷ், தக்கார்பாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முட்டிமோதுகிறார்கள். பா.ஜ.க-வில் புறநகர் மாவட்டச் செயலாளர் மகா சுசீந்திரன், சங்கர் பாண்டி ஆகியோர் துண்டுபோட்டிருக்கிறார்கள். களநிலவரப்படி தி.மு.க-வின் கை தொகுதிக்குள் ஓங்கியிருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - சோழவந்தான்

சொன்னாரே? - பாண்டியம்மாள், வி.சி.க

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை, பலருக்கும் வேலைவாய்ப்பளித்த பாண்டியராசபுரம் சர்க்கரை ஆலை இரண்டும் நீண்டகாலமாக மூடிக்கிடக்கின்றன. `இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பேன்’ என்றவர், செய்யவில்லை. இங்கு வாழையும் வெற்றிலையும் அதிகம் உற்பத்தியாகின்றன. அதேசமயம், உள்நாட்டில் குறைந்த விலையே கிடைக்கிறது. அதை லாபகரமாக மாற்றியமைக்க புதிய திட்டம் எதையும் கொண்டு வரவில்லை. ஜல்லிக்கட்டுக்குப் பிரபலமான அலங்காநல்லூரில், பேருந்து நிலையத்தை மேம்படுத்த முயற்சியெடுக்கவில்லை.

செய்தேனே! - கி.மாணிக்கம், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

வாடிப்பட்டிக்கு நீதிமன்றக் கட்டடம், தீயணைப்பு நிலையம், புதிய பேருந்து நிலையம், விவசாயப் பொருள்களை இருப்புவைக்க குடோன்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டுவந்தேன். சோழவந்தான் ரயில்வே கேட்டில் பாலம், சாத்தையாறு அணை மற்றும் குருவித்துறை சிற்றணை புனரமைப்பு ஆகிய பணிகளைச் செய்திருக்கிறேன். அலங்காநல்லூர் பேருந்து நிலையப் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் அரவை நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையையும், ஊழியர்களுக்குச் சம்பள நிலுவையையும் பெற்றுக் கொடுத்திருக்கிறேன். அந்த ஆலையை மீண்டும் இயங்கவைக்க முயன்றுவருகிறேன்.

பாண்டியம்மாள்,  கி.மாணிக்கம்,
பாண்டியம்மாள், கி.மாணிக்கம்,

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ மாணிக்கம் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ கருப்பையாவும் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார். தி.மு.க-வில் கடந்த முறை போட்டியிட்ட பவானி, கட்சியில் ஆக்டிவ்வாக இல்லை என்பதால் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் தமிழரசி ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணியிலுள்ள வி.சி.க-வும் சீட் எதிர்பார்க்கிறது. தி.மு.க-வில் வலுவான ஆட்கள் இல்லை என்பதால், கி.மாணிக்கத்தின் கை தற்போது ஓங்கியிருக்கிறது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் நிலோபர் கபீல்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism