Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - ஓ.எஸ்.மணியன்

ஓ.எஸ்.மணியன்.
பிரீமியம் ஸ்டோரி
ஓ.எஸ்.மணியன்.

‘கஜா’ புயல் பாதித்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், சுவர் ஏறிக் குதித்து தப்பியோடிய பெருமைக்குச் சொந்தக்காரர்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - ஓ.எஸ்.மணியன்

‘கஜா’ புயல் பாதித்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், சுவர் ஏறிக் குதித்து தப்பியோடிய பெருமைக்குச் சொந்தக்காரர்.

Published:Updated:
ஓ.எஸ்.மணியன்.
பிரீமியம் ஸ்டோரி
ஓ.எஸ்.மணியன்.

என்ன செய்தார் அமைச்சர்? - ஓ.எஸ்.மணியன் - கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்

வேதாரண்யம்

‘கஜா’ புயல் பாதித்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், சுவர் ஏறிக் குதித்து தப்பியோடிய பெருமைக்குச் சொந்தக்காரர், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன். கடந்த ஐந்து வருடங்களில் அமைச்சரின் செயல்பாடு வேதாரண்யம் தொகுதிக்குள் எப்படியிருக்கிறது?

ராஜேந்திரன், வேதரத்தினம்
ராஜேந்திரன், வேதரத்தினம்

சொன்னாரே? - ராஜேந்திரன், தி.மு.க

‘‘தலைஞாயிறு தனித் தாலுகாவாக உருவாக்கப் படும்னு வாக்குறுதி கொடுத்தார். இன்னிக்கு வரைக்கும் அதுக்கான எந்த முயற்சியும் எடுக்கலை. சொந்தமா 200 கோடி ரூபாய்ல பள்ளிக்கூடம் கட்டிக்கிட்டதைத் தவிர வேறெதையும் சாதிக்கலை. அமைச்சரோட வீட்டுக்கு எதிரே சமுதாயக்கூடம் ஒண்ணு இருந்துச்சு. அதை ஆக்கிரமிச்சு, தன் வீட்டு மாடுகளுக்கு வைக்கோல்போர் போட்டிருக்காரு’’.

2016 சட்டமன்றத் தேர்தலில் ஓ.எஸ்.மணியனை எதிர்த்து பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வேதரத்தினம், தற்போது தாய்க் கழகமான தி.மு.க-வில் மீண்டும் ஐக்கியமாகியிருக்கிறார். அவரிடம் பேசியபோது, ‘‘ஓட்டுக்குப் பணத்தை வாரி எறைச்சாரு. அப்படி எறைச்ச பணத்தையெல்லாம் தன்னோட பதவிக் காலத்துல பல மடங்கா சம்பாதிச்சிட்டாரு. குடிநீர், பாதாளச் சாக்கடை மாதிரியான அடிப்படை வசதிகளைக்கூட அவர் மேம்படுத்தலை. நெல் மூட்டைகளைச் சேமிச்சு வெக்குறதுக்காக, கோயில்பத்து கிராமத்துல ‘ஆசிய வளர்ச்சி வங்கி’ உதவியோட 13 செட்டுகள் கட்டினாங்க. கஜா புயல்ல அந்த செட்டுகளோட சுவர்கள் இடிஞ்சு விழுந்துருச்சு. கடைசி பில் தொகை பெறாத நிலையில, அதுக்கான பொறுப்பு அந்த ஒப்பந்ததாரர்தான். ஆனா, மேற்கொண்டு 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி புனரமைப்புப் பணிகளைச் செஞ்சுக்கிட்டு வர்றாங்க. இது சட்டப்படி தவறு. தொகுதியில செயல்படுத்தப்பட்ட தடுப்பணைகள் திட்டத்துலயும் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கு. மொத்தத்துல தொகுதி மக்களுக்கு அவர் எந்த நல்லதும் செய்யலைங்க’’ என்றார்.

இது குறித்து விளக்கமறியவும், தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசவும் ஓ.எஸ்.மணியனைப் பலமுறை தொடர்புகொண்டும் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். வாட்ஸ்அப் மற்றும் மெயிலில் தகவல் அனுப்பியும் கண்டுகொள்ளவில்லை. ‘நல்லதாய்ச் சொல்ல என்ன இருக்கிறது?’ என்று நினைத்தாரோ என்னவோ!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - ஓ.எஸ்.மணியன்

கள நிலவரம்:

தொகுதியில் தனக்கு எதிராகக் கடும் எதிர்ப்பலை இருப்பதால், இந்த முறை நாகப்பட்டினத்துக்கு ஜாகை மாற ஓ.எஸ்.மணியன் திட்டமிட்டிருக்கிறாராம். ஆனால், இவர் சசிகலா தரப்பு ஆள் என்பதால், மீண்டும் சீட் கொடுக்க தலைமை யோசிப்பதாகக் கூறப்படுகிறது. வேதாரண்யத்தைக் கூட்டணிக் கட்சியான மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு அளித்துவிட்டு, முன்னாள் அமைச்சர் ஜெயபாலுக்கு நாகப்பட்டினத்தை வழங்க அ.தி.மு.க தலைமை முடிவெடுத்திருக்கிறதாம். தி.மு.க-வில் வேதரத்தினம் சீட் எதிர்பார்க்கிறார். களத்தைப் பொறுத்தவரை, இன்றைய சூழலில் வேதாரண்யம் தொகுதி ஓ.எஸ்.மணியனுக்கு எதிராகவே நிற்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பூந்தமல்லி

சொன்னாரே? - டி.ஏ.ஏழுமலை, அ.ம.மு.க

தொகுதி முழுவதும் சிமென்ட் ரோடு போடுவதாகச் சொன்னார். ஆனால், தொகுதிக்குள் எம்.எல்.ஏ-வை எங்குமே பார்க்க முடியவில்லை. அடிப்படை வசதிகளைக்கூட அவர் மேம்படுத்தவில்லை. நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது சாலைகள் அமைப்பதற்கும், மருத்துவமனைகளை மேம்படுத்தவும் நிதி வாங்கிக் கொடுத்தேன். அதைக்கூட உரிய முறையில் பயன்படுத்தவில்லை.

டி.ஏ.ஏழுமலை - கிருஷ்ணசாமி
டி.ஏ.ஏழுமலை - கிருஷ்ணசாமி

செய்தேனே! - கிருஷ்ணசாமி, எம்.எல்.ஏ., தி.மு.க

என் முயற்சியால்தான் பூந்தமல்லிக்கு மெட்ரோ ரயில் திட்டம் வருகிறது. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவுறும் தறுவாயில் இருக்கின்றன. கல்யாண மண்டபம், அரசுப் பள்ளிக்கூடங்களைக் கட்டிக் கொடுத்திருக்கிறேன். கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்காக, சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ தொகுதி என்பதால், 2017-19-க்கான எம்.எல்.ஏ நிதியை முழுவதுமாக அளிக்கவில்லை. கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபாய் பணம் வர வேண்டும். இந்தத் தொகுதியில் தி.மு.க ஜெயித்ததால், காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களை விலக்கிவைத்திருக்கிறது அ.தி.மு.க அரசு.

கள நிலவரம்: 2019 இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதால், தி.மு.க தெம்பாக இருக்கிறது. தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி சீட் கேட்கிறார். அதே கட்சியைச் சேர்ந்த காயத்ரி ஸ்ரீதரனும் சீட் எதிர்பார்க்கிறார். அ.தி.மு.க-வில் மணிமாறன், வாத்தியார் சம்பத் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். அ.ம.மு.க-வில் ஏழுமலை போட்டியிடுவார் என்கிறார்கள். இன்றுள்ள சூழலில், தொகுதி தி.மு.க-வுக்குச் சாதகமாக இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அம்பத்தூர்

சொன்னாரே? - அசன் மவுலானா, காங்கிரஸ்

புதிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இருக்கும் தொழிற்சாலைகளும் அம்பத்தூரிலிருந்து கிளம்பியதுதான் மிச்சம். போதிய சாலை வசதிகள் இல்லை. இலவச டயாலிஸில் மையங்கள் கொண்டுவரப்படவில்லை. மக்கள் குறைகளை எம்.எல்.ஏ கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டும் தொகுதியில் இருக்கிறது. வேலைவாய்ப்பு இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

அசன் மவுலானா - அலெக்ஸாண்டர்
அசன் மவுலானா - அலெக்ஸாண்டர்

செய்தேனே! - அலெக்ஸாண்டர், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

அம்பத்தூர் தொகுதிக்குள் புதிய அரசு அலுவலகங்கள், புதிய நீதிமன்றம் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. தொகுதி முழுவதும் 360 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டிருக்கிறது. கொரட்டூர் கெனால் சாலையில் கால்வாய், 15 நீர்நிலைப் பகுதிகளில் பூங்காக்கள், எல்.இ.டி மின்விளக்குகளை அமைத்திருக்கிறேன். ஏழு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. நீண்டநாள் கோரிக்கையான கொரட்டூர் சுரங்கப்பாதை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தொகுதியே குப்பையில்லாத சுத்தமான இடமாக மாற்றப்பட்டிருக்கிறது.

கள நிலவரம்: அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கமாக இருப்பதால், இந்த முறையும் சீட்டைத் தட்டிச் சென்றுவிடும் வாய்ப்பு அலெக்ஸாண்டருக்குப் பிரகாசமாக இருக்கிறது. மறைந்த அம்பத்தூர் நகரச் செயலாளர் ரவியின் மனைவி சசிகலாவும் அ.தி.மு.க-வில் சீட் எதிர்பார்க்கிறார். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டதால் தி.மு.க-வினர் அதிருப்தியடைந்தனர். அதனால், இம்முறை தொகுதியை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் தி.மு.க தீர்மானமாக இருக்கிறது. தி.மு.க-வில் நகரச் செயலாளர் சாமுவேல், முன்னாள் கவுன்சிலர் ஆஸ்டின் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இன்றைய சூழலில், தி.மு.க., அ.தி.மு.க இரண்டும் சம பலத்துடன் தொகுதியில் இருக்கின்றன.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - சிங்காநல்லூர்

சொன்னாரே? - சிங்கை முத்து, அ.தி.மு.க

பி.எஸ்.ஜி மருத்துவமனை அருகேயிருக்கும் 300 குடிசைப்பகுதி மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அதை அவர் நிறைவேற்றாததால், அமைச்சரிடம் சொல்லி நாங்கள்தான் வெள்ளலூரில் அந்த மக்களுக்கு வீடு வழங்கியுள்ளோம். `எஸ்.ஐ.ஹெச்.எஸ் பாலம் கட்டி முடிக்கத் துரிதமான நடவடிக்கை எடுப்பேன்’ என்றார். ஆனால், அவரின் தூண்டுதலின் பேரில் வழக்கு தொடரப்பட்டதால், இன்றுவரை பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. சிங்காநல்லூர் ஹவுஸிங் யூனிட்டை நவீனமயப்படுத்துவதாகச் சொன்ன வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

சிங்கை முத்து - நா.கார்த்திக்
சிங்கை முத்து - நா.கார்த்திக்

செய்தேனே! - நா.கார்த்திக், எம்.எல்.ஏ., தி.மு.க

எஸ்.ஐ.ஹெச்.எஸ் பாலம் தொடர்பாக நான்கு சட்டசபை கூட்டத்தொடர்களில் பேசியிருக்கிறேன்; கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவந்திருக்கிறேன். நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்பு பாலம் கட்டியதால்தான், நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது. இது முழுவதும் அ.தி.மு.க அரசின் கவனக்குறைவு. சிங்காநல்லூர் ஹவுஸிங் யூனிட் மக்களின் பிரச்னைக்கும் சட்டசபையில் குரல் கொடுத்திருக்கிறேன். மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைக் குறித்து, அதிகாரிகளிடம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களைக் கொடுத்திருக்கிறேன்.

கள நிலவரம்: தி.மு.க-வில் மீண்டும் கார்த்திக்கே போட்டியிட வாய்ப்புள்ளது. அவர் தொகுதி மாறும்பட்சத்தில், முன்னாள் கவுன்சிலர் எஸ்.எம்.சாமிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். சி.பி.எம் சார்பில் முன்னாள் கவுன்சிலர் பத்மநாபனும் காய்நகர்த்துகிறார். அ.தி.மு.க-வில் அம்மன் அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராமன், சிங்கை ராமச்சந்திரன் பெயர்கள் அடிபடுகின்றன. பா.ஜ.க-வில் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலையின் பெயர் அடிபடுகிறது. கார்த்திக் மீதிருக்கும் அதிருப்தி, அ.தி.மு.க-வின் களப்பணி இவை இரண்டும் அ.தி.மு.க-வுக்கு ப்ளஸ். கம்யூனிஸ்ட்களுக்கு இருக்கும் செல்வாக்கு தி.மு.க-வுக்கு ப்ளஸ். வலுவான வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே சிங்காநல்லூரில் சூரியன் உதிக்கும்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - சூலூர்

சொன்னாரே? - பொங்கலூர் பழனிசாமி, தி.மு.க

`வதம்பசேரி சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பட்டா கொடுப்பேன்; தென்னை நல வாரியம் அமைப்பேன்’ என்றார். அப்படி ஏதும் செய்யவில்லை. மேற்குப் பகுதியில் விவசாயத்துக்குக் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. `அதைச் சரிசெய்வோம்’ என்றவர், அதையும் செய்யவில்லை.

எம்.எல்.ஏ-வின் ஆட்கள்தான் மணல் கடத்தல்களில் ஈடுபடுகிறார்கள். கமிஷனுக்காக மக்களுக்குத் தேவையில்லாத திட்டங்களை மட்டும் செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பொங்கலூர் பழனிசாமி - கந்தசாமி
பொங்கலூர் பழனிசாமி - கந்தசாமி

செய்தேனே! - கந்தசாமி, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

நொய்யல் ஆற்றில் சீரமைப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. வாய்க்கால்களை பலப்படுத்தி, அனைத்துக் குளங்களுக்கும் தண்ணீர் கொண்டுவர முயன்றுவருகிறோம். இதற்கு விவசாயிகள் மத்தியில் பாராட்டுகள் குவிகின்றன. தென்னை நல வாரியத்தை மத்திய அரசுடன் இணைந்துதான் செயல்படுத்த முடியும். ரூ.70-ஆக இருந்த தென்னை கொப்பரை விலையை, இப்போது ரூ.111-ஆக உயர்த்திக் கொடுத்ததிருக்கிறோம். 1,500 பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம். மீதமிருப்பவர்களுக்கு பட்டா கொடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

கள நிலவரம்: 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் கந்தசாமி வெற்றிபெற்ற பிறகுதான், அவரின் மகன் பிரபுராமுக்கு கோவை நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞர் பதவி கிடைத்தது. தொகுதிக்குள் பிரபுராமின் ஆதிக்கம் அதிகமிருப்பதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி அல்லது அமைச்சர் வேலுமணி இங்கு போட்டியிடலாம் என்கிறார்கள். முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, சிட்டிங் எம்.எல்.ஏ கந்தசாமி, முத்துக்கவுண்டனூர் கந்தவேல் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. தி.மு.க-வில் தளபதி முருகேசன், நித்யா மனோகர், சன் ராஜேந்திரன் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். பா.ஜ.க-வில் துணைத் தலைவர் பேராசரியர் கனகசபாபதி காய்நகர்த்துகிறார். இன்றுள்ள சூழலில் தொகுதி, அ.தி.மு.க-வுக்குச் சாதகமாகவே இருக்கிறது.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - ஆத்தூர் (திண்டுக்கல்)

சொன்னாரே? - நத்தம் விஸ்வநாதன், அ.தி.மு.க

‘ஆத்தூருக்கு அரசு கலைக் கல்லூரி கொண்டு வருவேன்’ என்று சொன்ன வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. சிறப்புத் திட்டங்கள் எதையும் அவர் கொண்டுவரவில்லை. ஆளும் அ.தி.மு.க அரசுதான், மக்கள்நலனைக் கருத்தில்கொண்டு தொகுதிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறது.

நத்தம் விஸ்வநாதன் - ஐ.பெரியசாமி
நத்தம் விஸ்வநாதன் - ஐ.பெரியசாமி

செய்தேனே! - ஐ.பெரியசாமி, எம்.எல்.ஏ., தி.மு.க

எம்.எல்.ஏ நிதியின் பெரும் பகுதியைக் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தப் பயன்படுத்தியிருக்கிறேன். ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 201 கிராமங்களுக்கு, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டுவந்திருக்கிறேன். அதற்கு பைப் போட என் சொந்தப் பணத்தைச் செலவு செய்தேன். மருதா நதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குத் தண்ணீர் கொண்டுவந்தேன். குடகனாறு மற்றும் கண்மாய்களைத் தூர்வாரினேன். குடகனாறு, மருதா நதி ஆறுகளின் குறுக்கே மேம்பாலங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறேன். ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில், அண்ணா பொறியியல் கல்லூரி கொண்டுவந்திருக்கிறேன். தொகுதி முழுக்கவே நிறைய வளர்ச்சிப் பணிகளைச் செய்திருக்கிறேன்.

கள நிலவரம்: தி.மு.க-வில் ஐ.பெரியசாமி மீண்டும் போட்டியிடுவார் என்கிறார்கள். அ.தி.மு.க-வில் மணலூர் சின்னசாமி, விஜய பாலமுருகன், பசும்பொன், மயில்வாகனன் ஆகியோர் காய்நகர்த்துகிறார்கள். இதில், சின்னசாமிக்கு அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இன்றைய சூழலில், ஐ.பெரியசாமிக்கு ஆத்தூர் தொகுதியிலுள்ள செல்வாக்கு குறையவில்லை. எனவே, தி.மு.க-வுக்குச் சாதகமான சூழலே நிலவுகிறது.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - நிலக்கோட்டை

சொன்னாரே? - வழக்கறிஞர் செளந்தரபாண்டியன், தி.மு.க

குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்தித் தருவதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தொகுதிப் பக்கம்கூட எம்.எல்.ஏ-வைப் பார்க்க முடிவதில்லை. தி.மு.க ஆட்சிக்காலத்தில் இங்கு பெண்கள் கல்லூரி கொண்டுவரப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியிலிருந்த இந்தப் பத்து ஆண்டுகளில் நிலக்கோட்டை தொகுதிக்கு எதுவுமே செய்ததில்லை.

வழக்கறிஞர் செளந்தரபாண்டியன் - தேன்மொழி
வழக்கறிஞர் செளந்தரபாண்டியன் - தேன்மொழி

செய்தேனே! - தேன்மொழி, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

2019 இடைத்தேர்தலில் ஜெயித்து, பதவியேற்ற இந்தக் குறுகியகாலத்திலேயே, அணைப்பட்டியில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டியிருக்கிறேன். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில், அதைச் சுற்றியுள்ள பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த முயற்சியெடுத்து பூர்வாங்கப் பணிகள் நடந்துவருகின்றன. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தொகுதிக்குட்பட்ட கிராமங்களை இணைக்கும் பணிகளும், சேவுகம்பட்டி பேரூராட்சியை வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் இணைக்கும் பணிகளும் வேகமாக நடந்துவருகின்றன. நிலக்கோட்டை மின் மயானம், நவீன பேருந்து நிலையம் தொடர்பான ஆயத்தப் பணிகள் நடந்துவருகின்றன.

கள நிலவரம்: தி.மு.க-வில் வழக்கறிஞர் செளந்தரபாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணியில் காங்கிரஸும் தொகுதியைக் குறிவைக்கிறது. அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ தேன்மொழி, முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன், எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணிச் செயலாளர் பொன்னுதுரை ஆகியோர் சீட் எதிர்பார்கிறார்கள். நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர் தேன்மொழி என்பதால், அவரை முன்னிலைப்படுத்துவது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தொகுதியில் பெரிய வளர்ச்சிப் பணிகள் ஏதும் நடைபெறாததால், தி.மு.க-வுக்குச் சாதகமான சூழலே நிலவுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism