Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பெஞ்சமின்

பெஞ்சமின்
பிரீமியம் ஸ்டோரி
பெஞ்சமின்

2015-ம் ஆண்டு வெள்ளம் சூழ்ந்தபோது, மதுரவாயலின் அனைத்துப் பகுதிகளும் தண்ணீரில் மிதந்தன. அந்த நிலை இப்போது மாறியிருக்கிறது

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பெஞ்சமின்

2015-ம் ஆண்டு வெள்ளம் சூழ்ந்தபோது, மதுரவாயலின் அனைத்துப் பகுதிகளும் தண்ணீரில் மிதந்தன. அந்த நிலை இப்போது மாறியிருக்கிறது

Published:Updated:
பெஞ்சமின்
பிரீமியம் ஸ்டோரி
பெஞ்சமின்

என்ன செய்தார் அமைச்சர்? - பெஞ்சமின் - ஊரகத் தொழில்துறை அமைச்சர் - மதுரவாயல் தொகுதி

சொன்னாரே? - பீம்ராவ், சி.பி.எம்

தொகுதிக்குள் குடிநீர், பாதாளச் சாக்கடை வசதிகளைச் செய்துதருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். சென்னை மாநகராட்சியோடு மதுரவாயல் தொகுதியிலிருக்கும் பகுதிகள் இணைந்து ஆண்டுகள் கடந்தாலும், அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. இந்தத் தொகுதி வழியாக அடையாறு ஆறு சென்றாலும், மழைநீர் வடிகால்வாய் சரிவரப் பராமரிக்கப்படாததால் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கும் சூழல் நிலவுகிறது. டி.எல்.எஃப் பகுதி, நொளம்பூர் பகுதி ஆகியவற்றில் ஜெயலலிதா அறிவித்த இரண்டு மேம்பாலங்கள் இன்னமும் கட்டப்படவில்லை. அயப்பாக்கம் பகுதியிலுள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீரால் மக்களுக்குத் தோல்நோய் பிரச்னை இருந்துவருகிறது. அதற்கு முழுமையான தீர்வுகாண வேண்டும். துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் தொடங்கி, தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் வரை கமிஷன் வாங்கவே அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

பீம்ராவ் - பெஞ்சமின்
பீம்ராவ் - பெஞ்சமின்

செய்தேனே! - அமைச்சர் பெஞ்சமின், அ.தி.மு.க

தொகுதி மக்களின் குடிநீர்த் தேவைகளை 100 சதவிகிதம் நிறைவேற்றும் பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன. இதற்காக, போரூர் நீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் 55 சதவிகிதம் நிறைவடைந்திருக்கின்றன. நேஷனல் ஹெல்த் மிஷன் திட்டத்தின் மூலம், போரூரில் 100 படுக்கை வசதிகள்கொண்ட மருத்துவமனையைத் திறந்திருக்கிறோம். போரூர் பகுதியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயரில் மேம்பாலம் கட்டியிருக்கிறோம். நொளம்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த அரசு அலுவலகக் கட்டட வளாகம் கட்டப்பட்டிருக்கிறது. குளங்களைச் சீரமைத்திருக்கிறோம். ஏரிகளிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்கிறோம். பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அயப்பாக்கத்தில் அம்மா திருமண மண்டபம் கட்டப்பட்டிருக்கிறது. அடையாளம்பட்டில் புதிதாக அரசு இன்ஜினீயரிங் கல்லூரி தொடங்கு வதற்கான வேலை நடந்துவருகிறது. குப்பைகளைச் சாம்பலாக்கும் திட்டப் பணிகள் நடந்துவருகின்றன. பாதாளச் சாக்கடை பணிகள் நிறைவடையாத பகுதிகளில், விரைந்து பணிகளை முடிக்கச் சொல்லியிருக்கிறேன். தேர்தல் வாக்குறுதியில் 95 சதவிகிதத்துக்கு மேல் நிறைவேற்றியிருக்கிறேன்.

கள நிலவரம்: 2015-ம் ஆண்டு வெள்ளம் சூழ்ந்தபோது, மதுரவாயலின் அனைத்துப் பகுதிகளும் தண்ணீரில் மிதந்தன. அந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. ஆனாலும் சில பகுதிகளில் குடிநீர், மருத்துவம், பாதாளச் சாக்கடை இணைப்பு, சாலை வசதிகள் இல்லாததைப் பார்க்க முடிகிறது. இந்தத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் மீண்டும் பெஞ்சமின் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க-வில் காரம்பாக்கம் கணபதி சீட் எதிர்பார்க்கிறார். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட நாசே ராஜேஷ் காய்நகர்த்துகிறார். முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வனும் காங்கிரஸில் சீட் எதிர்பார்க்கிறார். கொரோனா பேரிடர் காலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை மேம்படுத்துவதற்காக, எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு 7,043 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்றுத் தந்ததைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டால், தி.மு.க-வின் உள்ளடி வேலைகள் காரணமாகத் தொகுதி அ.தி.மு.க-வுக்குச் சாதமாகிவிடும். தி.மு.க நேரடியாகக் களமிறங்கும் நிலையில், பெஞ்சமினுக்குக் கல்தாதான்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - கிணத்துக்கடவு

சொன்னாரே? - பிரபாகரன், தி.மு.க

`புதிதாகக் குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றுவேன்’ என்றார். ஆனால், இல்லை. மதுக்கரை ஒன்றியம், கிணத்துக்கடவு பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. வெள்ளலூர் குப்பைக்கிடங்கால் நிலத்தடி நீர் பாதிப்போடு, பல்வேறு பிரச்னைகளை மக்கள் சந்திக்கின்றனர். அதிகாரிகள் மாற்றத்தில் எம்.எல்.ஏ-வின் தலையீடு அதிகமிருக்கிறது. டாஸ்மாக்கில் வசூல் செய்வதில் அவர் காட்டும் ஆர்வம், சொந்தக் கட்சியினர் மத்தியிலேயே அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

பிரபாகரன் - சண்முகம்
பிரபாகரன் - சண்முகம்

செய்தேனே! - எட்டிமடை சண்முகம், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

தொகுதிக்குள் எங்கேயும் தண்ணீர் பிரச்னை இல்லை. வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்னையைச் சரிசெய்ய தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். வெள்ளலூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கும் பணியும் முடிவடையும் தறுவாயில் இருக்கிறது. தொகுதிக்குள் 75 சதவிகித இடங்களில் தண்ணீர்த் தொட்டி அமைத்திருக்கிறோம். டாஸ்மாக்கில் வசூல் செய்வதாகச் சொல்வதும், அதிகாரிகள் விஷயத்தில் தலையிடுவதாகச் சொல்வதும் தவறான கருத்து.

கள நிலவரம்: தொகுதிக்குள் சண்முகத்துக்கு நல்ல பெயர் இல்லை. அமைச்சர் வேலுமணியுடன் அரசு நிகழ்ச்சிகளில் மட்டும் தலைகாட்டுபவர், மக்கள் பிரச்னைகளுக்கு ஆப்சென்ட் ஆகிவிடுவதாகக் குமுறுகிறார்கள் கட்சிக்காரர்கள். சண்முகம் மீதான அதிருப்தி தி.மு.க-வுக்கு ப்ளஸ் என்றாலும், உட்கட்சிப் பூசல் இங்கு அதிகம். அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சண்முகம், மதுக்கரை சண்முகராஜா ஆகியோர் சீட்டுக்காக முயல்கிறார்கள். தி.மு.க-வில் மருதமலை சேனாதிபதி, குறிச்சி பிரபாகரன், அக்‌ஷயா நாகராஜ், மதுக்கரை ராஜசேகரன் ஆகியோர் முட்டி மோதுகிறார்கள். உட்கட்சிப் பிரச்னைகளைச் சரிசெய்து கடுமையாக உழைத்தால் மட்டுமே தி.மு.க-வுக்கு வாய்ப்பிருக்கிறது.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பொள்ளாச்சி

சொன்னாரே? - தமிழ்மணி, தி.மு.க

`ஆனைமலை நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்துவோம்’ என்றார். கண்துடைப்புக்காக ஒரு கமிட்டியைப் போட்டதோடு சரி. பொள்ளாச்சி நகராட்சியில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்தார். இப்போது பத்து நாள்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருகிறது. பாதாளச் சாக்கடைப் பணிகள் நிறைவடையவில்லை. கொப்பரைக்கு அடிப்படை விலை ரூ.130-ஆக நிர்ணயிப்போம் என்று சொன்னதையும் நிறைவேற்றவில்லை.

தமிழ்மணி - பொள்ளாச்சி ஜெயராமன்
தமிழ்மணி - பொள்ளாச்சி ஜெயராமன்

செய்தேனே! - பொள்ளாச்சி ஜெயராமன், துணை சபாநாயகர், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

ஆனைமலை நல்லாறு திட்டம், இறுதி வடிவை எட்டவிருக்கிறது. பொள்ளாச்சி நகராட்சியில் பாதிப் பகுதியில் தினசரியும், சில பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாளும் குடிநீர் வருகிறது. விரைவில் அங்கு நான்காவது குடிநீர்த் திட்டமும் செயல்படுத்தப்படும். பாரதியார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, அரசு கலை அறிவியல் கல்லூரியாக மாற்றிப்பட்டிருக்கிறது. பொள்ளாச்சி – கோவைக்கு மிகச்சிறப்பாக கான்கிரீட் சாலை போட்டிருக்கிறோம். கொப்பரைத் தேங்காய்க்கு கடந்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்கு விலை அதிகரித்திருக்கிறோம்.

கள நிலவரம்: பொள்ளாச்சி பாலியல் வழக்கு சர்ச்சையால், இந்தமுறை பொள்ளாச்சி ஜெயராமன் இங்கு போட்டியிடுவது சந்தேகம் என்கிறார்கள். அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், கிருஷ்ணகுமார் ஆகியோர் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். தி.மு.க-வில் தமிழ்மணி, வரதராஜன், சபரி கார்த்திகேயன், கூட்டணியில் கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் நித்தியானந்தம் உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன. மிகக் கடுமையாக உழைத்தால் மட்டுமே அ.தி.மு.க-வுக்கு வாய்ப்பு அமையும். அதேசமயம், பொள்ளாச்சி பாலியல் வழக்கு தாக்கத்தை ஏற்படுத்தினால், தி.மு.க-வின் வெற்றி எளிதாகிவிடும்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திருச்சி மேற்கு

சொன்னாரே? - ஜோசப் ஜெரால்டு, தே.மு.தி.க

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது பத்து ஆண்டுகளாக நீடிக்கும் கோரிக்கை. அதையே வாக்குறுதியாகவும் கொடுத்த கே.என்.நேருவே, பேருந்து நிலையத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுவதோடு, அதை பஞ்சப்பூருக்குக் கொண்டு செல்வதற்காக, மத்திய சிறைச்சாலை அருகே அமைக்கும் திட்டத்துக்கு எதிராகத் தன் ஆதரவாளர்களைத் தூண்டிவிடுகிறார். தி.மு.க-வில் முக்கியப் பதவியில் இருந்தாலும் எம்.எல்.ஏ ஆபீஸ் பக்கம் இவர் தலைகாட்டியதே இல்லை.

ஜோசப் ஜெரால்டு - கே.என்.நேரு
ஜோசப் ஜெரால்டு - கே.என்.நேரு

செய்தேனே! - கே.என்.நேரு, எம்.எல்.ஏ., தி.மு.க

நியாயவிலைக் கடை கட்டடங்கள், சாலை வசதி, பயணிகள் பேருந்து நிழற்குடை, குடிநீர்ப் பிரச்னையைத் தீர்ப்பது என எம்.எல்.ஏ நிதியை முழுமையாகச் செலவுசெய்திருக்கிறேன். எதிர்க்கட்சி எம்,எல்.ஏ என்ற ஒரே காரணத்துக்காக ஆளுங்கட்சியினர் கொடுக்கும் குடைச்சலால், அதிகாரிகள் என்னுடைய திட்டங்களை நிறைவேற்றுவதில்லை. இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றதும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றை ஒரே வருடத்தில் நிறைவேற்றிக் கொடுப்பேன்.

கள நிலவரம்: இது நேருவின் தொகுதி என்பதால், அவரை எதிர்த்து தி.மு.க-வில் மற்றவர்கள் சீட் கேட்கவே தயங்குகிறார்கள். இருந்தாலும், முன்னாள் துணை மேயர் அன்பழகன், உறையூர் கண்ணன், காஜாமலை விஜி உள்ளிட்டோருக்குப் போட்டியிடும் எண்ணமிருக்கிறது. அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் நல்லுசாமி மகன் செந்தில்குமார், சிவானி கல்லூரி செல்வராஜ், அமைச்சர் வளர்மதி, பகுதிச் செயலாளர் பூபதி உள்ளிட்டோர் சீட் பெற முயல்கிறார்கள். தி.மு.க ஆட்சியிலிருந்தால் கண்டிப்பாகக் கொடுத்த வாக்குறுதிகளை நேரு நிறைவேற்றியிருப்பார் என்ற நம்பிக்கை மக்கள் மனதிலிருப்பது நேருவுக்கு ப்ளஸ். உதயசூரியன் மீண்டும் உதிக்கும் அறிகுறிகளே தென்படுகின்றன!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - மணப்பாறை

சொன்னாரே - அருணகிரி, நாம் தமிழர் கட்சி

மணப்பாறை அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதாகச் சொன்னார். ஆனால், இப்போதும் போதிய மருத்துவர்கள், நர்ஸ்கள், நவீன மருத்துவக் கருவிகள் இங்கு இல்லை. 40-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் இருந்தும், கல்லூரிக்குத் திருச்சிக்குத்தான் செல்ல வேண்டும். வையம்பட்டி அருகேயுள்ள பொன்னணியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகள் அனைத்தும் கரூர் மாவட்டத்திலும், அணை திருச்சி மாவட்டத்திலும் இருக்கிறது. இரண்டு மாவட்ட அதிகாரிகளின் போட்டியால் அணை சிதிலமடைந்து கேட்பாரற்றுக் கிடக்கிறது. அணையை முழுமையாகத் தூர்வாரியிருந்தால் இப்பகுதியின் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வுகண்டிருக்கலாம்.

அருணகிரி - சந்திரசேகர்
அருணகிரி - சந்திரசேகர்

செய்தேனே! - சந்திரசேகர், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

அரசு கலைக் கல்லூரி அமைப்பது சம்பந்தமாக முதல்வரிடம் பேசியிருக்கிறேன். வருகிற ஜனவரி மாதம் அதற்கான அறிவிப்பை அவர் வெளியிடவிருக்கிறார். தொகுதி முழுவதும் 85 சதவிகித சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. நியாயவிலைக் கடைகள், குடிநீர் வசதிகள் எனத் தொகுதி முழுவதும் சிறப்பாகச் செய்து கொடுத்திருக்கிறேன். 12 அம்மா மினி கிளினிக்குகள், ஆறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறேன்.

கள நிலவரம்: தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கே வாய்ப்பளிப்பதால், இம்முறை தி.மு.க-வுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அக்கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தி.மு.க-வில் பன்னப்பட்டி கோவிந்தராஜ், மணப்பாறை ராமசாமி, மும்பை நாகராஜ், வையம்பட்டி குணசீலன், வழக்கறிஞர் முரளி ஆகியோர் காய்நகர்த்துகிறார்கள். அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சந்திரசேகர், ராஜ்மோகன், வெங்கடாசலம், சின்னச்சாமி ஆகியோர் சீட்டுக்காக முயல்கிறார்கள். தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் மேலோங்கியிருக்கிறது. இன்றைய சூழலில் தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - நத்தம்

சொன்னாரே? - சிவசங்கரன், நாம் தமிழர் கட்சி

`அரசு கலைக் கல்லூரியும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் கொண்டு வருவேன்’ என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. குடிமராமத்துப் பணிகளில் நடந்த முறைகேடுகள் தட்டிக் கேட்கப்படவில்லை. அனுமதியில்லாமல் இயங்கும் குவாரிகளைக் கண்டுகொள்ளவில்லை. காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்திலிருந்து தனியாருக்குத் தண்ணீர் செல்வது, பேருந்து நிலைய வணிக வளாகங்கள் உள்வாடகைக்கு விடப்படுவது என அ.தி.மு.க-வினர் செய்யும் அராஜகங்கள் எதையும் எம்.எல்.ஏ தட்டிக் கேட்பதில்லை.

சிவசங்கரன் - ஆண்டி அம்பலம்
சிவசங்கரன் - ஆண்டி அம்பலம்

செய்தேனே! - ஆண்டி அம்பலம், எம்.எல்.ஏ., தி.மு.க

நான் சட்டமன்றத்தில் பேசிய எதையுமே இந்த ஆளும் அ.தி.மு.க அரசு செய்து கொடுக்கவில்லை. செந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட நல்லபிச்சம்பட்டி சாலை மற்றும் முளையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாலைகளுக்கான டெண்டர்கள் விடப்பட்டும்கூட அ.தி.மு.க அரசு செயல்படுத்த மறுக்கிறது. பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ரேஷன் கடைக் கட்டடம், திறந்தவெளி கலையரங்கம், சமுதாயக்கூடக் கட்டடங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். என் தொகுதியில் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று பலமுறை சட்டப்பேரவையில் பேசியும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

கள நிலவரம்: விவசாயத்தைப் பிரதானமாகக்கொண்ட தொகுதி நத்தம். அரசு மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்கிற நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், அதிருப்தியிலிருக்கிறார்கள் விவசாயிகள். அ.தி.மு.க-வில் நத்தம் விஸ்வநாதனின் பெயர் பலமாக அடிபடுகிறது. தேர்தல் வேலையையும் அவர் ஆரம்பித்துவிட்டார். தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ.ஆண்டி அம்பலம், மாநில செயற்குழு உறுப்பினர் சாணார்பட்டி விஜயன், ஒன்றியச் செயலாளர் ரத்தினகுமார் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். போட்டி கடுமையாக இருக்கிறது என்பதே இப்போதைய நிலவரம்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - வேடசந்தூர்

சொன்னாரே? - கவிதா பார்த்திபன், தி.மு.க

`வள்ளிமலைப் பகுதியில் சிப்காட் கொண்டு வருவேன்’ என்றார். மக்களின் போராட்டத்தால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் தண்ணீர் கொண்டுவரப்பட்டாலும், முறையாக விரிவுபடுத்தாததால் பல கிராமங்கள் தண்ணீர்ப் பஞ்சத்தால் சிரமத்தைச் சந்திக்கின்றன. காய்கறிச் சாகுபடி அதிகமுள்ள இந்தத் தொகுதியில், விவசாயிகளின் நலன்சார்ந்த எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

கவிதா பார்த்திபன் -பரமசிவம்
கவிதா பார்த்திபன் -பரமசிவம்

செய்தேனே! - பரமசிவம், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

சிப்காட் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், உடனே மாற்று இடம் தேர்வு செய்யும் பணியைத் தொடங்கியிருக்கிறோம். வேடசந்தூர் தாலுகாவைப் பிரித்து, குஜிலியம்பாறை தாலுகாவை உருவாக்கும் 33 ஆண்டுக்காலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முருங்கை பதப்படுத்தல், மதிப்புக்கூட்டல் செய்யும் மையத்தின் கட்டட வேலைகள் முடிந்து, திறப்பு விழாவுக்குத் தயாராக இருக்கிறது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்து 221 கிராமங்களுக்குக் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன். வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் உயர் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியிருக்கிறேன்.

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி, ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். தி.மு.க-வில் வேடசந்தூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கவிதா பார்த்திபன், மேற்கு மாவட்டச் செயலாளர் காந்திராஜன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சாமிநாதன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால், தி.மு.க-வின் ஒத்துழையாமையால், அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக அமையும். தொகுதி தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டால், அ.தி.மு.க - தி.மு.க-வுக்கு இடையே கடும் போட்டி இருக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பெஞ்சமின்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism