மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி கடந்த பத்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்துவருகிறார். அமைச்சராகவும், எம்.எல்.ஏ-வாகவும் அவரது செயல்பாடுகள் எப்படி?

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர்

ராஜேந்திர பாலாஜி, பால்வளத்துறை அமைச்சர் - சிவகாசி

பட்டாசு உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது ’குட்டி ஜப்பான்’ என்றழைக்கப்படும் சிவகாசி. அச்சுத்தொழில், தீப்பெட்டித் தொழிலும் கணிசமான அளவில் நடந்துவருகின்றன. சிவகாசி தொகுதியின் எம்.எல்.ஏ-வான ராஜேந்திர பாலாஜி கடந்த பத்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்துவருகிறார். அமைச்சராகவும், எம்.எல்.ஏ-வாகவும் அவரது செயல்பாடுகள் எப்படி?

சொன்னாரே! - ஸ்ரீராஜா சொக்கர், காங்கிரஸ்

சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையிலும், திருத்தங்கல் - சிவகாசி சாலையிலும் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி அடைக்கப்படுவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு பாலம் அமைப்பதாக வாக்குறுதி கொடுத்த ராஜேந்திர பாலாஜி, அதை நிறைவேற்றவில்லை. இ.எஸ்.ஐ நிதிப் பங்களிப்பு பெருமளவில் உள்ள சிவகாசி இ.எஸ்.ஐ மருத்துவமனையின் தரத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டாசுக்கான ஜி.எஸ்.டி-யை 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைக்க, பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கைவைத்திருந்தாலும், தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில், மத்திய அரசிடம் வலியுறுத்தவில்லை. விருதுநகர் மாவட்டத்தின் நீராதாரமாக விளங்கும் ஆனைக்குட்டம் அணையில் பழுதான ஷட்டர் சீரமைக்கப்படவில்லை. சிவகாசியில் மட்டும் மொத்த தொழில் வர்த்தகம், ஆண்டுக்கு ரூ.5,000 கோடியை எட்டுகிறது. ஆனால், இன்றும் கட்டமைப்பு வளர்ச்சியில் பின்தங்கியே இருக்கிறது. இந்த 10 ஆண்டுகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அவர் எதையுமே தொகுதிக்குச் செய்யவில்லை.

ஸ்ரீராஜா சொக்கர் - ராஜேந்திர பாலாஜி
ஸ்ரீராஜா சொக்கர் - ராஜேந்திர பாலாஜி

செய்தேனே! - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அ.தி.மு.க

சிவகாசியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்திருக்கிறேன். தீ விபத்தில் பாதிக்கப்படும் பட்டாசுத் தொழிலாளர்கள், உடனடி சிகிச்சை பெற சிவகாசி அரசு மருத்துவமனையில் நவீன ஏ.சி வசதியுடன் தீக்காயச் சிகிச்சைப் பிரிவு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிக்குக் கூடுதலாக தாமிரபரணி சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கிறேன். தொகுதி முழுவதும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். சிவகாசி, திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் மற்றும் சிவகாசி சுற்றுவட்டச் சாலைத் திட்டம் குறித்து ஆய்வுப் பணிகள் முடிந்திருக்கின்றன. விருதுநகரில் ரூ.350 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டடம் கட்டப்பட்டுவருகிறது.

கள நிலவரம்: சிவகாசி தொகுதியை சென்டிமென்ட்டாகப் பார்க்கும் ராஜேந்திர பாலாஜி, அ.தி.மு.க சார்பில் போட்டியிட மீண்டும் சீட் கேட்கிறார். விருதுநகர் முன்னாள் எம்.பி ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ-க்களான பாலகங்காதரன், இன்பத்தமிழன் ஆகியோரும் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஸ்ரீராஜா சொக்கர், முன்னாள் மாவட்டத் தலைவர் கணேசன் ஆகியோரிடையே போட்டி எழுந்திருக்கிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தொகுதியில் ஓரளவுக்குத்தான் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். இவரது அடாவடிப் பேச்சால் கட்சிக்குள் நிர்வாகிகள் சிலர் அதிருப்தியிலிருப்பது இவருக்குப் பெரும் மைனஸ். இன்றைய சூழலில், ராஜேந்திர பாலாஜிக்கு சாதகமாகத் தொகுதி இல்லை. ஆனாலும் காங்கிரஸ் போட்டியிட்டால் தொகுதி தனக்குச் சாதகமாக மாற வாய்ப்பிருப்பதாக நம்புகிறார். ஒருவேளை தி.மு.க-வே நேரடியாகக் களமிறங்கினால், ராஜேந்திர பாலாஜியின் பாடு கஷ்டம்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - மாதவரம்

சொன்னாரே? - தட்சணாமூர்த்தி, அ.தி.மு.க

தொகுதியில் கலைக் கல்லூரி கொண்டுவருவதாக, வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு தருவதாகச் சொன்னார், எதையும் செய்யவில்லை. இங்கு அரிசி ஆலைகள் அதிகம் உள்ளதால், வெளிமாநிலங்களிலிருந்து வாகனப் போக்குவரத்து அதிகமாகியிருக்கிறது. அதற்கான பார்க்கிங் வசதிகள் செய்யப்படவில்லை. பூங்கா வேலைகள், மின்விளக்கு அமைப்பது, முதியோர் பென்ஷன், ஸ்கூட்டி வழங்குவது போன்ற வழக்கமான எம்.எல்.ஏ பணிகளைத் தவிர குறிப்பிடும்படியாக எதையும் அவர் செய்யவில்லை.

தட்சணாமூர்த்தி, - சுதர்சனம்
தட்சணாமூர்த்தி, - சுதர்சனம்

செய்தேனே! - சுதர்சனம், எம்.எல்.ஏ., தி.மு.க

எதிர்க்கட்சி உறுப்பினர் என்கிற வகையில், என்னால் முடிந்த அளவுக்கு மக்கள் பணி செய்திருக்கிறேன். தொகுதியில் நீதிமன்றத்தைக் கொண்டுவந்திருக்கிறேன். எனது சொந்தச் செலவில் இரண்டு ஊராட்சிகளில் குளங்களைச் சீரமைத்துக் கொடுத்திருக்கிறேன். செங்குன்றம் பேருந்து நிலையம் கட்டுவதற்கு 40 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு தர தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் உட்பட, பல திட்டங்களை நிறைவேற்ற இந்த ஆட்சியாளர்கள் விடவில்லை.

கள நிலவரம்: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக சுதர்சனம் அ.தி.மு.க அரசோடு முட்டிமோதி சில விஷயங்களைச் செய்திருந்தாலும், அவரது செயல்பாட்டின் மீது தொகுதியில் குறைகளும் விமர்சனமும் இருக்கின்றன. தி.மு.க சார்பில் போட்டியிட சுதர்சனம் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி காய்நகர்த்துகிறார். விமர்சனங்களைத் தாண்டியும் இன்றைய கள நிலவரப்படி தொகுதியில் உதயசூரியன் ஏறுமுகத்தில் இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பெரம்பூர்

சொன்னாரே? - ராஜேஷ், அ.தி.மு.க

தொகுதியில் ஏறத்தாழ ஒரு லட்சம் சிறுபான்மை மக்கள் இருக்கிறார்கள். தங்களுக்கென மயான பூமி வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்த ஆர்.டி.சேகர் அதைச் செய்யவில்லை. எங்களது முயற்சியால், இப்போது மயான பூமி அமைப்பதற்கான பணி தொடங்கவிருக்கிறது. அரசுப் பணிகளில் ஒப்பந்தம் எடுப்பதில் மட்டும்தான் அவர் கவனமிருப்பதாக தொகுதிக்குள் பேச்சு இருக்கிறது. தொகுதிக்காக அவர் ஏதும் உருப்படியாகச் செய்யவில்லை.

ராஜேஷ், - ஆர்.டி.சேகர்
ராஜேஷ், - ஆர்.டி.சேகர்

செய்தேனே! - ஆர்.டி.சேகர், எம்.எல்.ஏ., தி.மு.க

தொகுதிக்குள் பிரதானமாக இருந்த தண்ணீர்ப் பிரச்னையைச் சரி செய்திருக்கிறேன். இன்று தொகுதி முழுவதும் தண்ணீர்த் தட்டுப்பாடு சரிசெய்யப்பட்டிருக்கிறது. தொகுதிக்குள் புதிய ரேஷன் கடைகள், அங்கன்வாடிகள், உடற்பயிற்சிக்கூடம் அமைத்திருக்கிறேன். ஒரு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக என்னால் முடிந்த பணிகளைத் திறம்படச் செய்திருக்கிறேன்.

கள நிலவரம்: 2019 சட்டமன்ற இடைத்தேர்தலில் 68,000 வாக்குகளில், பெரம்பூரைத் தட்டிச் சென்றதால் தி.மு.க தெம்பாக இருக்கிறது. தி.மு.க சார்பில் போட்டியிட சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர், மாவட்ட துணைச் செயலாளர் தேவ ஜவஹர், டாக்டர்.கனிமொழி ஆகியோரும் சீட் எதிர்பார்க்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் ‘கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க’த்தின் தலைவர் இனிகோ இருதயராஜோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பெரம்பூரைக் குறிவைத்துள்ளனர். அ.தி.மு.க சார்பில் போட்டியிட ராஜேஷ், வி.எஸ்.பாபு ஆகியோர் சீட் எதிர்பார்க்கின்றனர். இன்றைய சூழலில், பெரம்பூரில் தி.மு.க வலுவாக இருப்பதால், தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - மேட்டுப்பாளையம்

சொன்னாரே? - சுரேந்திரன், தி.மு.க

`தொகுதியில் பாதாளச் சாக்கடை அமைக்கப்படும், கறிவேப்பிலைத் தொழிற்சாலை கொண்டு வருவேன், குடிநீர்ப் பிரச்னையைத் தீர்ப்பேன்’ என்றார். எதையும் நிறைவேற்றவில்லை. தொகுதியில் பவானி ஆறு ஓடினாலும், மேட்டுப்பாளையம் டவுனுக்குள் வாரத்துக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. `சிறுமுகைப் பகுதியிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் கொடுக்கப்படும், தொழிற்பூங்கா அமைக்கப்படும்’ என்றார். அந்த வாக்குறுதிகளும் காற்றோடு போய்விட்டன.

சுரேந்திரன், சின்ராஜ்
சுரேந்திரன், சின்ராஜ்

செய்தேனே! - சின்ராஜ், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

பாதாளச் சாக்கடைப் பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டன. பெள்ளாதி அருகே கறிவேப்பிலைத் தொழிற்சாலை அமைத்துவிட்டோம். 5 கோடி ரூபாயில் குளிர்ப்பதனக் கிடங்கு, குடோன் கட்டிவிட்டோம். தொகுதிக்குள் தண்ணீர்ப் பிரச்னை எங்குமில்லை. பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில், அனைத்து வீடுகளுக்கும் டார்ச் லைட் கொடுத்திருக்கிறோம். அனைத்து நெசவாளர்களுக்கும் காப்பீடு மற்றும் மானியம் வழங்கிவருகிறோம். அவர்கள் உற்பத்தி செய்யும் உடைகள் உடனடியாக சொசைட்டி மூலம் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

கள நிலவரம்: 15 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பதவியிலிருக்கும் சின்ராஜ், இந்த நீண்ட காலகட்டத்தைத் தொகுதியின் வளர்ச்சிக்காகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்கிற விமர்சனம் பரவலாக இருக்கிறது. அ.தி.மு.க-வில் சின்ராஜ், ஏ.கே.செல்வராஜ், ஞானசேகரன், ராஜ்குமார் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. தி.மு.க-வில் டி.ஆர்.சண்முகசுந்தரம், சுரேந்திரன், அருண்குமார், சி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் சீட் எதிர்பார்க்கின்றனர். கள நிலவரப்படி, இரு தரப்புக்கும் போட்டி கடுமையாக இருக்கும்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - வால்பாறை

சொன்னாரே? - பால்பாண்டி, தி.மு.க

`தோட்டத் தொழிலாளர்களுக்கு கேரளாவுக்கு இணையான கூலி உயர்வு தருவோம், ஊதியத்தில் பிடிக்கப்படும் தொழில்வரி ரத்து செய்யப்படும்’ என்றார், இப்போதுவரை செய்யவில்லை. இங்கு மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல் அதிகமிருக்கிறது. சுற்றுலா மேம்பாட்டுக்கும் எந்த முயற்சியும் இல்லை. தொகுதியிலிருந்து படிப்புக்கும் வேலை வாய்ப்புக்கும் வெளியேதான் செல்கின்றனர். சின்னச் சின்ன தேவைகள், பிரச்னைகளுக்குக்கூட கோவை, பொள்ளாச்சிக்குத்தான் தொகுதிவாசிகள் செல்ல வேண்டியிருக்கிறது.

பால்பாண்டி - கஸ்தூரி வாசு
பால்பாண்டி - கஸ்தூரி வாசு

செய்தேனே! - கஸ்தூரி வாசு, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக, முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளேன்; விரைவில் அவர்கள் பலன்பெறுவார்கள். தொழில்வரியை ரத்து செய்வது தொடர்பாக அமைச்சருக்குக் கடிதம் கொடுத்திருக்கிறேன். வால்பாறைக்குப் புதிதாக 13 பேருந்துகள் கொண்டுவந்துள்ளேன். குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டியுள்ளோம். வால்பாறை அரசு மருத்துவமனைக்கு எனது சொந்தச் செலவில் பல முக்கியப் பொருள்களை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அறுவை சிகிச்சைக்காக ஒரு எம்.டி டாக்டர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்.

கள நிலவரம்: எல்லோரிடமும் எளிமையாகப் பேசுவார் என்பதைத் தவிர, தொகுதிக்குள் கஸ்தூரி வாசுவுக்குச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நல்ல பெயர் இல்லை. தொகுதிக்குள் அவரின் கணவர் வாசு, அறிவிக்கப்படாத எம்.எல்.ஏ-வாகச் செயல்படுவதாகப் புகார் உள்ளது. அ.தி.மு.க-வில் கஸ்தூரி வாசு மீண்டும் போட்டியிட சீட் கேட்கிறார். அ.தி.மு.க கூட்டணியிலுள்ள த.மா.கா சார்பில் போட்டியிட கோவை தங்கம் காய்நகர்த்துகிறார். தி.மு.க-வில் பால்பாண்டி, திப்பம்பட்டி ஆறுசாமி, தளபதி இளங்கோ ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். தி.மு.க கூட்டணியிலுள்ள காங்கிரஸ் சார்பில் கருப்பையா, சி.பி.ஐ சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் ஆகியோரும் சீட் எதிர்பார்க்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, வால்பாறையில் தி.மு.க-வுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திருவெறும்பூர்

சொன்னாரே? - கலைச்செல்வன், அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டவர், தற்போது அ.ம.மு.க-வில் இருக்கிறார்.

தஞ்சாவூர் டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் ரோடு இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். அரியமங்கலத்திலுள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கில், திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலுள்ள மொத்த குப்பையும் (400 டன்) கொட்டப்படுவதால், மலைபோலத் தேங்கிக்கிடக்கிறது. அதற்கான உரிய நடவடிக்கை இல்லை. சாலை, குடிநீர்த் தட்டுப்பாடு, தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தொகுதியில் குறைவில்லை. சொன்னது எதையும் செய்யவில்லை!

கலைச்செல்வன் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
கலைச்செல்வன் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

செய்தேனே! - அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ., தி.மு.க

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர் இருவரின் வீட்டுக்கே சென்று, சர்வீஸ் சாலை பிரச்னை தொடர்பாகப் பேசினேன். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க அமைச்சர்களிடமும் பேசியிருக்கிறேன். ‘ஜனவரியில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கவிருக்கிறது. நீர்த்தேக்கத் தொட்டிகள், நகரும் ரேஷன் கடைகள், சாலை வசதிகள் என முழுமையாகவும் தரமாகவும் தொகுதிக்குள் பணி செய்திருக்கிறேன்.

கள நிலவரம்: இந்தமுறை அன்பில் மகேஷ், தொகுதி மாறும் மனநிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மகேஷின் சித்தப்பா பெரியசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், யூனியன் சேர்மன் கருணாநிதி, பொன்மலை பகுதிச் செயலாளர் தர்மராஜ், துவாக்குடி சேர்மன் காயம்பு, நவல்பட்டு விஜி எனப் பலர் தி.மு.க-வில் சீட்டுக்காக முட்டிமோதுகிறார்கள். அ.தி.மு.க-வில் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார், கழக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், ஒன்றியச் செயலாளர் ராவணன், கோவிந்தராஜன் ஆகியோர் காய்நகர்த்துகின்றனர். தொகுதிக்குள் அன்பில் மகேஷ் மீது பெரிய அதிருப்தி ஏதுமில்லை. அ.தி.மு.க-வுக்கு எதிரான மனநிலை தொகுதியில் அதிகமாக நிலவுகிறது. உதயசூரியன் மீண்டும் உதிக்கும் அறிகுறிகளே தென்படுகின்றன.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - லால்குடி

அ.தி.மு.க வேட்பாளர் விஜயமூர்த்தி, எம்.எல்.ஏ-வின் செயல்பாடுகள் குறித்துக் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று போனைத் துண்டித்துவிட்டார். மக்கள் பிரச்னையைப் பேச பயப்படுகிற இவர், தற்போது அ.ம.மு.க-வில் இருக்கிறார்.

சொன்னாரே? - சம்பத், நாம் தமிழர் கட்சி :

‘``லால்குடியின் மையப்பகுதியில் ரூ.20 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் முழுமையான பயன்பாட்டுக்கு வருவதற்கான சர்வீஸ் ரோடு, ரவுண்டானா உள்ளிட்ட பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. பாலம் கட்டியும் பயனில்லாமல் இருக்கிறது. அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், நர்ஸுகள், நவீன மருத்துவக் கருவிகள் இல்லை. முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மக்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள்.’’

சம்பத் - செளந்தரபாண்டியன்
சம்பத் - செளந்தரபாண்டியன்

செய்தேனே! - செளந்தரபாண்டியன், எம்.எல்.ஏ., தி.மு.க

நியாயவிலைக் கடை கட்டடங்கள், பயணிகள் பேருந்து நிழற்குடை, சாலை வசதி, குடிநீர்ப் பிரச்னை எனத் தொகுதியில் எம்.எல்.ஏ நிதியை முழுமையாகப் பயன்படுத்தியிருக்கிறேன். நான் எந்தத் திட்டத்தை முன்னெடுத்தாலும், மீண்டும் எம்.எல்.ஏ ஆகிவிடுவேன் என்கிற அச்சத்தால் ஆளுங்கட்சியினர் அனைத்துக்கும் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

கள நிலவரம்: தி.மு.க சார்பில் போட்டியிட மீண்டும் சீட் கேட்கிறார் செளந்தரபாண்டியன். மேலும், தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, அன்பில் மகேஷின் சித்தப்பா பெரியசாமி, துரை.கந்தசாமி எனப் பலரும் தொகுதியைக் குறிவைத்திருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் ஒன்றியச் செயலாளர்களான நடேசன், அசோகன், சிவக்குமார், பேரூராட்சிச் செயலாளர் பிச்சை பிள்ளை, வழக்கறிஞர் முத்தமிழ் வேந்தன், ராஜாராம் எனப் பலர் முயல்கிறார்கள். மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருக்கும் செளந்தரபாண்டியன் சொல்லிக்கொள்ளும்படியான நலத்திட்டங்களைச் செய்ய முயலவில்லை என்பது அவரின் மைனஸ். இன்றைய சூழலில், தொகுதிக்குள் தி.மு.க - அ.தி.மு.க சம பலத்துடன்தான் உள்ளன. வேட்பாளரைப் பொறுத்து ரிசல்ட் மாறலாம்!