Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஜெயலலிதாவுக்குக் கோயில் கட்டியவர், அவரது தொகுதிக்கு என்னென்ன செய்திருக்கிறார் - என்னென்ன செய்யவில்லை?

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஜெயலலிதாவுக்குக் கோயில் கட்டியவர், அவரது தொகுதிக்கு என்னென்ன செய்திருக்கிறார் - என்னென்ன செய்யவில்லை?

Published:Updated:
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

என்ன செய்தார் அமைச்சர்? - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் - ஆர்.பி.உதயகுமார் - திருமங்கலம்

‘திருமங்கலம் ஃபார்முலா’ மூலம் மு.க.அழகிரியால் நாடு முழுக்க பிரபலமான இந்தத் தொகுதி, தற்போது ‘தினந்தோறும் விழா’ அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தொகுதியாக மாறியிருக்கிறது. எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இன்றும் வளரும் கிராமமாகவே இருக்கும் திருமங்கலத்தில், 2016-ம் ஆண்டு சாத்தூர் தொகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து ஆர்.பி.உதயகுமார் போட்டியிட்டார். வெற்றிபெற்று அமைச்சரான நிலையில், தொகுதியில் அடிக்கடி பல்வேறு பிரமாண்ட நிகழ்ச்சிகளை நடத்தி, தன் பெயரை பரபரப்பிலேயே வைத்திருக்கிறார். ஜெயலலிதாவுக்குக் கோயில் கட்டியவர், அவரது தொகுதிக்கு என்னென்ன செய்திருக்கிறார் - என்னென்ன செய்யவில்லை?

சொன்னாரே? - ஆர்.ஜெயராம், காங்கிரஸ்

மோசமான நிலையிலிருக்கும் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டைப் புதுப்பிக்கவில்லை. கப்பலூர் டோல்கேட் வரிவசூலிப்பால் உள்ளூர் மக்கள் பாதிப்புக்குள்ளாகிவருகிறார்கள்; அதைக் கண்டுகொள்ளவில்லை. ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே கிராஸிங்கால், விருசங்குளம் வழியாக விமான நிலையம் செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கே மேம்பாலம் வேண்டுமென்ற கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் எந்தத் திட்டத்தையும் தொகுதிக்குக் கொண்டுவரவில்லை. தேவையில்லாத விழாக்களை நடத்தி பணம், பொருள்களைக் கொடுத்து மக்களை மோசமான நிலைக்குக் கொண்டுவந்துவிட்டார்.

செய்தேனே! - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கள்ளிக்குடி தனி தாலுகா, திருமங்கலம் புதிய வருவாய்க் கோட்டம் மற்றும் கல்வி மாவட்டம், கப்பலூரில் புதிய அரசு கலைக் கல்லூரி, அரசு அலுவலகங்களுக்குப் புதிய கட்டடங்கள் கொண்டுவந்துள்ளேன். திருமங்கலம் ரயில்வே மேம்பால வேலை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதியும், குடிநீர் வசதியும் செய்து கொடுத்துள்ளேன். தொழிற்பேட்டை அமைப்பதற்காக சிவரக்கோட்டை பகுதி விவசாய நிலங்களை தி.மு.க ஆட்சியில் கையகப்படுத்தினார்கள். அந்த அரசாணையை ரத்துசெய்து மக்களை நிம்மதியடையவைத்திருக்கிறோம். இளைஞர்களுக்கு சைக்கிள், கம்ப்யூட்டர் வழங்கியுள்ளேன். அனைத்து கிராமங்களிலும் மாலைநேர வகுப்புகள் நடத்தி, படித்த 1,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளேன்.

ஆர்.பி.உதயகுமார் - ஆர்.ஜெயராம்
ஆர்.பி.உதயகுமார் - ஆர்.ஜெயராம்

கள நிலவரம்: ஒவ்வொரு வீட்டுக்கும் பல வகையான பரிசுப் பொருள்களைக் கொடுத்திருப்பதால், அவை வாக்குகளாக மாறும் என்று ஆர்.பி.உதயகுமார் நம்புகிறார். அமைச்சரின் செல்வாக்கு மற்றும் அவர்மீதான அச்சத்தில் அ.தி.மு.க-வில் உதயகுமாரைத் தவிர வேறு எந்த முக்கியஸ்தரும் சீட் கேட்கவில்லை. தி.மு.க-வில் டாக்டர் சரவணன், ராமநாதபுரம் முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன், புறநகர் மாவட்டச் செயலாளர் மணிமாறன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்க கடந்தமுறை போட்டியிட்ட ஜெயராம் ஆயத்தமாகிறார். ஆர்.பி.உதயகுமாரின் செல்வாக்கு மற்றும் களப்பணிகள் காரணமாக, தொகுதியில் அ.தி.மு.க-வின் கையே ஓங்கியுள்ளது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - சேந்தமங்கலம்

சொன்னாரே? - பொன்னுச்சாமி, தி.மு.க

`கொல்லிமலை மிளகு விவசாயிகளின் நிலையான வருமானத்துக்கு விற்பனைக்கூடம் அமைப்பேன்’ என்றார். ஆனால், செய்யவில்லை. கொல்லிமலையில் கலைஞரால் திறக்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக, வல்வில் ஓரி சிலையை பராமரிக்காமல் சிதிலமடைய விட்டுவிட்டார்கள். கொல்லிமலை பூங்கா, வாசலூர் படகு இல்லம் ஆகியவையும் பராமரிப்பில்லாமல் கிடக்கின்றன. செம்மேட்டிலுள்ள அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாகத் தரம் உயர்த்தியிருந்தாலும், அதற்குரிய மருத்துவ வசதிகள், தேவையான மருத்துவர்கள், கட்டடங்கள் இல்லை.

செய்தேனே! - சந்திரசேகரன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

சேந்தமங்கலத்தில் புதிய தாலுகா அலுவலகக் கட்டடம் கட்டியிருக்கிறேன். நீதிமன்றம் கொண்டுவந்திருக்கிறேன். சேந்தமங்கலம் ரெட்டிப்பட்டி தொடங்கி பேளுக்குறிச்சி வரை புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி பேரூராட்சிகள் மற்றும் கிராமங்களுக்குக் கூட்டுக்குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் மேம்பாட்டு நிதியில் ஐந்து ரேஷன் கடைகளும், தொகுதி மேம்பாட்டு நிதியில் 15 ரேஷன் கடைகளும் மலைமேல் உள்ள கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 1,200 பேருக்கு பட்டா வாங்கிக் கொடுத்துள்ளேன். படகு இல்லத்துக்கு இரண்டு புதிய படகுகள் வாங்கப்பட்டுள்ளன.

பொன்னுச்சாமி, சந்திரசேகரன்
பொன்னுச்சாமி, சந்திரசேகரன்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சந்திரசேகரன், வாழவந்திநாடு சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வள்ளியம்மாள், முன்னாள் எம்.எல்.ஏ கலாவதி ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். பா.ஜ.க சார்பில் களமிறங்க, முன்னாள் எம்.எல்.ஏ சிவபிரகாசம் ரேஸிலிருக்கிறார். தி.மு.க-வில், நாமக்கல் கிழக்கு மாவட்டத் துணைச் செயலாளர் பொன்னுச்சாமி, விவசாய அணி துணை அமைப்பாளர் பாலசுந்தரம், கொல்லிமலை ஒன்றியச் செயலாளர் செந்தில் முருகன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் காளியப்பன் ஆகியோர் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். கட்டமைப்பு வலுவாக இருப்பதால் தொகுதியில் உதயசூரியன் பிரகாசிக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திருப்பூர் தெற்கு

சொன்னாரே? - செல்வராஜ், தி.மு.க

`போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவேன்’ என்றவர், செய்யவில்லை. திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் பாளையக்காடு பாலம் கட்டும் திட்டம் பத்தாண்டுகளாக நகரவே இல்லை. எம்.ஜி.ஆர் சிலையருகே சுரங்கப்பாலப் பணிகளும், மணியகாரன்பாளையம் - மண்ணரையை இணைக்கும் பாலப் பணிகளும் கிடப்பில் கிடக்கின்றன. திருப்பூரின் குடிநீர் வசதிக்கென பல கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், 15 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது.

செய்தேனே! - குணசேகரன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

திருப்பூருக்கு நான்காவது கூட்டுக்குடிநீர்த் திட்டம் கொண்டுவந்திருக்கிறோம். அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.250 கோடியில் திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் 28 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆர்.ஓ பிளான்ட் மூலமாக நாளொன்றுக்கு ஒரு குடும்பத்துக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாகக் கிடைக்கச் செய்திருக்கிறேன். ரூ.500 கோடி மதிப்பீட்டில், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடக்கின்றன. திருப்பூர் பழைய பேருந்து நிலையம், தினசரி சந்தை, மீன் சந்தை ஆகியவற்றை நவீனப்படுத்துகிறோம்.

செல்வராஜ் - குணசேகரன்
செல்வராஜ் - குணசேகரன்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில், சிட்டிங் எம்.எல்.ஏ குணசேகரன், டெக்ஸ்வெல் முத்து, ரவிக்குமார் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். தி.மு.க-வில் மத்திய மாவட்டப் பொறுப்பாளர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி சீட் கேட்கிறார்கள். கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொகுதியை எதிர்பார்க்கிறது. எம்.எல்.ஏ குணசேகரனின் செயல்பாடுகள் மீதான விமர்சனங்கள், தொகுதியில் பெரிய வளர்ச்சித் திட்டங்கள் இல்லாதது ஆகியவை அ.தி.மு.க-வுக்கு மைனஸ். தற்போதைய சூழலில் தி.மு.க கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமிருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - புதுக்கோட்டை

சொன்னாரே? - சொக்கலிங்கம், அ.தி.மு.க (2016 தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்)

`தொகுதி முழுக்கக் கடுமையான குடிநீர்ப் பிரச்னை நிலவுகிறது, அதைத் தீர்ப்பேன்’ என்றவர், எதையும் செய்யவில்லை. கிராமங்களுக்குப் பேருந்து வசதியும் ஏற்படுத்தித் தரவில்லை. அரசுப் பள்ளிகளில் இடநெருக்கடி இருப்பதால், கூடுதல் கட்டடங்கள் வேண்டும் என்ற கோரிக்கையையும் கண்டுகொள்ளவில்லை. `புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவருவேன்’ என்றவர், அதை மறந்தேவிட்டார். தொகுதிக்குள் முறையான அடிப்படை வசதிகளைக்கூட செய்துகொடுக்கவில்லை.

செய்தேனே! - பெரியண்ணன் அரசு, எம்.எல்.ஏ., தி.மு.க

ஊராட்சிகளுக்கு 15-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக்கிணறு அமைத்துக் கொடுத்திருக்கிறோம். எட்டுக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்குப் புதிய கட்டடங்கள், 15 ஊர்களில் கலையரங்கம், சோலார் விளக்குகள், பெரும்பாலான பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பத்துக்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை என்று பல பணிகளை நிறைவேற்றியிருக்கிறேன். `தொகுதிக்கு புதிய தொழிற்சாலை வேண்டும்’ என்ற கோரிக்கையைப் பலமுறை வலியுறுத்தியும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்பதால் அரசு கண்டுகொள்ளவில்லை.

சொக்கலிங்கம், பெரியண்ணன் அரசு
சொக்கலிங்கம், பெரியண்ணன் அரசு

கள நிலவரம்: தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு, மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் முத்துராஜா, வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், நகரச் செயலாளர் நைனா முகமது ஆகியோர் சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான், நகரச் செயலாளர் பாஸ்கர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகி கருப்பையா ஆகியோர் சீட் கேட்கிறார்கள். அ.ம.மு.க சார்பில் விடங்கர் மற்றும் வீரமணி ரேஸிலிருக்கிறார்கள். அ.ம.மு.க பிரிக்கும் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்கு மைனஸ். தி.மு.க-வின் கட்டமைப்பு அவ்வளவு வலுவாக இல்லை. எனவே, தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - சாத்தூர்

சொன்னாரே? - எஸ்.வி.சீனிவாசன், தி.மு.க

`சாத்தூர் பழைய பேருந்து நிலையத்தை நவீனப்படுத்துவதுடன், பைபாஸில் புதிய பேருந்து நிலையம் அமைப்போம்’ என்றார். ஆனால், செய்யவில்லை. வெம்பக்கோட்டை தாலுகாவில் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இருக்கின்றன. `வெம்பக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவீன தீக்காயச் சிகிச்சைப் பிரிவை அமைத்துத் தருவேன்’ என்றவர், அதைச் செய்யவில்லை. `வைப்பாற்றைத் தூர்வாரி, இருக்கன்குடி அணையில் மழைநீரைச் சேமிப்போம்’ என்றவர், அதையும் செய்யவில்லை. சாத்தூர் - தாயில்பட்டி சாலையில் சுரங்கப்பாலம், பள்ளிகளைத் தரம் உயர்த்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகளும் கண்டுகொள்ளப்படவில்லை.

செய்தேனே! - ராஜவர்மன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

இடைத்தேர்தலில் வென்று எம்.எல்.ஏ-வான பிறகு, குறுகியகாலத்தில் அடிப்படை வசதிகள் முதல் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறேன். மக்கள் சொல்லும் பிரச்னைகளை உடனே தீர்த்துவைக்கிறேன். நான் கொடுத்த வாக்குறுதிகளைத் தாண்டி, கூடுதலாகப் பல திட்டங்களைச் செயல்படுத்தவும் முதல்வரிடம் ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறேன்.

 எஸ்.வி.சீனிவாசன், ராஜவர்மன்
எஸ்.வி.சீனிவாசன், ராஜவர்மன்

கள நிலவரம்: தி.மு.க-வில் எஸ்.வி.சீனிவாசன், முன்னாள் மாவட்ட சேர்மன் கடற்கரைராஜ் ஆகியோர் சீட்டுக்காக முயல்கிறார்கள். அதி.மு.க-வில் எதிர்க்கோட்டை சுப்பிரமணியன், ராஜவர்மன், விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெம்பக்கோட்டை ரவிச்சந்திரன், சாத்தூர் ஒன்றியச் செயலாளர் சண்முகக்கனி ஆகியோர் சீட்டுக்கான ரேஸிலிருக்கிறார்கள். கூட்டணியில் பா.ஜ.க-வில் மாநிலப் பொதுச்செயலாளர் மோகன்ராஜு சீட் கேட்கிறார். அ.தி.மு.க-வுக்குள் கடுமையான கோஷ்டிப்பூசல் நிலவுவதால், தொகுதியில் தி.மு.க-வுக்குச் சாதகமான சூழலே நிலவுகிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - கீழ்வைத்தியனான்குப்பம்

.சொன்னாரே? - அமலு, தி.மு.க

`அரசு மகளிர் கலைக் கல்லூரி கொண்டுவருவேன்; அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்துவேன்’ என்றார். ஆனால் செய்யவில்லை. போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், வேலூர் அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும்தான் செல்ல வேண்டியிருக்கிறது. ஊராட்சியாக இருக்கும் கே.வி.குப்பத்தைப் பேரூராட்சியாகத் தரமுயர்த்துவதற்கான எந்த முயற்சியையும் செய்யவில்லை. அடிப்படை வசதிகளைக்கூட தொகுதிக்குள் செய்து தரவில்லை.

செய்தேனே! - லோகநாதன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

கே.வி.குப்பத்தைத் தலைமையிடமாகக்கொண்டு தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளைத் தரமுயர்த்தியுள்ளேன். குக்கிராமங்களுக்குக்கூட தரமான சாலை, குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளேன். மோடிக்குப்பம்-தனகொண்டபல்லி இடையே கொட்டாற்றில் பாலம், செஞ்சி ஆயக்குளம் பகுதியில் கானாற்று ஓடையின் குறுக்கே சிறு மேம்பாலம் கட்டிக்கொடுத்துள்ளேன். புதிய தாலுகாவாகியிருப்பதால் டி.எஸ்.பி அலுவலகம், தீயணைப்பு அலுவலகம் உள்ளிட்ட பல வசதிகளும் விரைவில் கிடைத்துவிடும். அரசு மகளிர் கலைக் கல்லூரி விரைவில் வந்துவிடும்

அமலு, லோகநாதன்
அமலு, லோகநாதன்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ லோகநாதன், மாவட்ட மாணவரணிச் செயலாளர் ரமேஷ்குமார், மாநகர மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயப்பிரகாசத்தின் மனைவி அமலநிருபா ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணியில் பா.ஜ.க மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார். தி.மு.க-வில் குடியாத்தம் வடக்கு ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் அமலு, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ராஜாகுப்பம் முருகானந்தம், கே.வி.குப்பம் ஒன்றியப் பொறுப்பாளர் சீத்தாராமன் ஆகியோர் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். கட்டமைப்பு வலுவாக இருப்பதாலும், பா.ம.க உடனிருப்பதாலும் இரட்டை இலை வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - ஆம்பூர்

சொன்னாரே? - ஜோதிராமலிங்க ராஜா, அ.தி.மு.க

`குடிநீர்ப் பிரச்னையைத் தீர்ப்பேன்’ என்றவர், அதைக் கண்டுகொள்ளவே இல்லை. ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலப் பணிகள் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கின்றன. இதனால், ரயில்வே இருப்புப் பாதைக்குக் கிழக்கில் அமைந்துள்ள ரெட்டித்தோப்பு, நியூ பெத்லகேம், கம்பிக்கொல்லை, நதிசிலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கடும் அவதியுறுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை.

செய்தேனே! - வில்வநாதன், எம்.எல்.ஏ., தி.மு.க

ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பல்வேறு இடங்களில் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்துள்ளேன். அரசு மருத்துவமனையை மேம்படுத்த 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலப் பணிகளைத் தொடங்க முயன்றுவருகிறேன். அங்கு, ரூ.10 லட்சம் மதிப்பில் இடம் வாங்கி தற்காலிகச் சாலை அமைத்து, 40 ஆண்டுக்காலப் பிரச்னையைத் தீர்த்துவைத்திருக்கிறேன். பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், பத்துக்கும் அதிகமான நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்திருக்கிறேன்.

ஜோதிராமலிங்க ராஜா - வில்வநாதன்
ஜோதிராமலிங்க ராஜா - வில்வநாதன்

கள நிலவரம்: 2019-ல் இடைத்தேர்தலைச் சந்தித்த ஆம்பூர் தொகுதியை தி.மு.க தட்டிச்சென்றது. தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ வில்வநாதன், ஒன்றியச் செயலாளர்கள் ஞானவேலன், சுரேஷ்குமார் ஆகியோர் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். அ.தி.மு.க-வில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜோதிராமலிங்க ராஜா, மாதனூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் இன்ஜினீயர் வெங்கடேசன், தொகுதி பொறுப்பாளரான வழக்கறிஞர் டில்லிபாபு ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணியிலுள்ள தே.மு.தி.க மாநிலத் துணைச் செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷுக்காகத் தொகுதியைக் கேட்கிறது. இரண்டு பிரதான கட்சிகளுக்குமே ஆம்பூரில் மவுசு குறைவாக இருப்பதால், தேர்தலில் கடும் போட்டி இருக்கும்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்