Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் சரோஜா

தொகுதிக்கு சரோஜா செய்ததும் செய்யத் தவறியதும் என்னென்ன?

பிரீமியம் ஸ்டோரி

என்ன செய்தார் அமைச்சர்? - சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் சரோஜா - ராசிபுரம்

ராசிபுரத்தில் விவசாயமும் நெசவுத் தொழிலுமே பிரதானமானவை. தனித் தொகுதியான ராசிபுரத்தை `அ.தி.மு.க-வின் கோட்டை’ என்றே சொல்லலாம். மருத்துவரான சரோஜா 1991-96 காலகட்டத்தில் சங்ககிரி எம்.எல்.ஏ-வாக இருந்தவர். அ.தி.மு.க-வின் மாநிலங்களவைத் தலைவர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாரியத் தலைவர், தமிழ்நாடு தகவல் ஆணையர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்த சரோஜா, இன்று சமூக நலத்துறை அமைச்சராக வலம்வருகிறார். தொகுதிக்கு சரோஜா செய்ததும் செய்யத் தவறியதும் என்னென்ன?

சொன்னாரே? - அருண் குமார், நாம் தமிழர்

`ராசிபுரம் தனிக் கூட்டுக்குடிநீர்த் திட்டம் கொண்டுவருவேன். பாதாளச் சாக்கடைப் பணிகளை முடித்து, சாலைகளைச் சீரமைத்து சிங்கப்பூராக மாற்றுவேன். ராசிபுரம் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவேன். பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வேன்’ என வாக்குறுதி தந்தவர், எதையும் செய்யவில்லை. மசக்காளிப்பட்டியில் உயர்மட்ட மேம்பாலம், தூய்மைப் பணியாளர்களுக்குப் புதிய இலவசக் குடியிருப்புகள், நெசவுத் துணிகளுக்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயம், இலவச மின்சாரம், நாமகிரிப்பேட்டை மார்க்கெட்டில் குளிர்பதனக் கிடங்கு, தக்காளி ஜூஸ் ஃபேக்டரி, போதமலைக்குச் சாலை வசதி என்று அவர் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.”

செய்தேனே! - சரோஜா, அமைச்சர், அ.தி.மு.க

``மேட்டூரிலிருந்து வரும் குடிநீர் பைப்லைன் சீரமைக்கப்பட்டு, ராசிபுரத்துக்கு ஒரு நாளைக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. ராசிபுரம் தனிக்குடிநீர்த் திட்டப் பணிகள் நடந்துவருகின்றன. பாதாளச் சாக்கடைத் திட்டம் ரூ.55 கோடியில் நிறைவுற்றிருக்கிறது. தொகுதி முழுவதும் எனது எம்.எல்.ஏ நிதியில் குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு, கழிவறை, நியாயவிலைக் கடை, அங்கன்வாடி, பள்ளி, கல்லூரிக் கட்டடங்கள், நிழற்கூடங்கள் என 212 நலத் திட்டப் பணிகள் செய்திருக்கிறோம். ராசிபுரம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தியிருக்கிறோம். போதமலைக்குச் சாலை அமைக்க 27 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ராசிபுரம் தூய்மைப் பணியாளர் காலனிவாசிகளுக்கு அணைப்பாளையத்தில் குடிசைமாற்று வாரியத்தின் மூலம் ரூ.16 கோடியில் 1,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக்கொடுத்திருக்கிறோம். ரூ.40 லட்சத்தில் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.”

 சரோஜா, அருண் குமார்
சரோஜா, அருண் குமார்

கள நிலவரம்: தேர்தல் நெருங்குவதால், தொகுதி முழுவதும் விசிட் அடித்துவரும் சரோஜா, மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவருகிறார். இதைத் தொடக்கத்திலிருந்தே செய்திருக்கலாம். இந்தத் திடீர் அக்கறையை மக்கள் ரசிக்கவில்லை. நாமக்கல் மாவட்டத்தில், ``அமைச்சர் தங்கமணி மாவட்டச் செயலாளராகவும், முதல்வரின் உறவினராகவும் இருப்பதால் அவரை மீறி சரோஜா தன்னிச்சையாகச் செயல்பட முடியவில்லை” என்கிறார்கள். அ.தி.மு.க சார்பில் போட்டியிட அமைச்சர் சரோஜா, அமைப்புச் செயலாளர் சேவல்ராஜ் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். பா.ஜ.க சார்பில் எல்.முருகன் களமிறங்குவார் என்கிறார்கள். தி.மு.க-வில் டாக்டர் மதிவேந்தன், முத்துசாமி, உதயநிதி, அக்கரைப்பட்டி பாலு எனப் பலரும் சீட் கேட்கிறார்கள். காங்கிரஸ் சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி ராணி ஆயத்தமாகிறார். இன்றைய சூழலில், கட்டமைப்புரீதியாக தி.மு.க வலுவாக இருப்பதால், தொகுதி தி.மு.க-வுக்குச் சாதகமாக இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - கந்தர்வக்கோட்டை

சொன்னாரே? - கே.அன்பரசன், தி.மு.க

முந்திரிக் கொள்முதல் நிலையம், சிப்காட் கொண்டுவருவதாகச் சொன்னவர், அவற்றைச் செய்யவில்லை. கீரனூர், குன்றாண்டார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர்ப் பிரச்னை மிக அதிகம். கறம்பக்குடியில் குடிநீர், சாலைகள் என எந்த அடிப்படை வசதியையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. ஊராட்சியாக இருக்கும் கந்தர்வக்கோட்டையைப் பேரூராட்சியாக மாற்ற வேண்டும், கறம்பக்குடிக்குக் கலைக் கல்லூரி வேண்டும் போன்ற கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.

செய்தேனே! - நார்த்தாமலை பா.ஆறுமுகம், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

முந்திரிக் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான கோரிக்கையைச் சட்டமன்றத்தில் எழுப்பினேன். அதற்கு, அரசு சார்பில் அமைக்க முடியாது, தனியார் முன்வந்தால் அனுமதியளிப்பதாக அமைச்சர் கூறியிருக்கிறார். கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கந்தர்வக்கோட்டையைப் பேரூராட்சியாக மாற்றவும் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். விவசாயிகள் நிலம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்ததால், சிப்காட் கொண்டுவர முடியவில்லை. 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வகுப்பறைகள், கந்தர்வக்கோட்டை அரசு கலைக் கல்லூரிக்குச் சுற்றுச்சுவர், மனமடை பாலம், வைத்தூர் பாலம் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றியிருக்கிறேன்.

கே.அன்பரசன் - நார்த்தாமலை பா.ஆறுமுகம்
கே.அன்பரசன் - நார்த்தாமலை பா.ஆறுமுகம்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ நார்த்தாமலை பா.ஆறுமுகம், முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், ஆசிரியர் மாரிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ ராஜூ சீட் கேட்கிறார்கள். தி.மு.க-வில் கடந்தமுறை போட்டியிட்ட டாக்டர் அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ கவிதைப்பித்தன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா காய்நகர்த்துகிறார்கள். தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் சார்பில் சின்னதுரை சீட் கேட்கிறார். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க சார்பில் புரட்சிக்கவிதாசன் சீட் எதிர்பார்க்கிறார். கட்டமைப்புரீதியாக தி.மு.க கூட்டணி வலுவாக இருப்பதால், சூரியன் சுடர்விட வாய்ப்பிருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திருமயம்

சொன்னாரே? - பி.கே.வைரமுத்து, அ.தி.மு.க

`சிப்காட், கலைக் கல்லூரி கொண்டுவருவேன்’ என்றார். `திருமயம், பொன்னமராவதி தாலுகாக்களை இலுப்பூர் கோட்டத்திலிருந்து பிரித்து, பழையபடி புதுக்கோட்டைக் கோட்டத்துக்குக் கொண்டுவருவேன்’ என்றார். எதையும் செய்யவில்லை. பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில், தொகுதி பெரிதாக எந்த வளர்ச்சியும் அடையவில்லை. ஒரு எம்.எல்.ஏ-வாகப் பெயருக்கு மட்டுமே அவர் இருக்கிறார்.

செய்தேனே! - எஸ்.ரகுபதி, தி.மு.க

நான்கு துணை மின் நிலையங்களைத் தரம் உயர்த்திக் கொடுத்திருக்கிறேன். குடிநீர், கிராமப்புறச் சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், மூன்று சமுதாயநலக் கூடங்கள் எனத் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்தியிருக்கிறேன். பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தினேன். முதலமைச்சர் அறிவித்தும்கூட இன்னும் அதை நிறைவேற்றவில்லை. திருமயத்துக்கு கலைக் கல்லூரி, பொறியியல் அல்லது வேளாண் கல்லூரி கொண்டுவரக் கோரியும் பலமுறை சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன்.

பி.கே.வைரமுத்து, எஸ்.ரகுபதி
பி.கே.வைரமுத்து, எஸ்.ரகுபதி

கள நிலவரம்: தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ ரகுபதி மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். திருமயம் தி.மு.க முன்னாள் ஒன்றியச் செயலாளர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ ஆலவயல் சுப்பையாவின் மகன் முரளி, பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் அடைக்கலமணி ஆகியோர் காய்நகர்த்துகிறார்கள். அ.தி.மு.க-வில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் பி.கே.வைரமுத்து, திருமயம் ஒன்றியச் செயலாளர் ராமு, பொன்னமராவதி முன்னாள் ஒன்றியச் செயலாளர் அழகு சுப்பையா ஆகியோர் சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க - தி.மு.க இரண்டும் சம பலத்துடன் இருப்பதால், தொகுதியில் கடும் போட்டி இருக்கும்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - விருதுநகர்

சொன்னாரே? - கலாநிதி, அ.தி.மு.க

`அரசுக் கல்லூரி, காய்கறிச் சந்தை கொண்டுவருவேன்’ என்றார். அதைச் செய்யவில்லை. ஆனைக்குட்டம் அணையில் கழிவுநீர் கலக்கிறது, ஷட்டரும் பழுதாகியிருக்கிறது. அவற்றையும் சரிசெய்யவில்லை. விருதுநகரை மாநகராட்சியாகத் தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் கண்டுகொள்ளவில்லை. மதுரைக்குச் செல்லும் பேருந்துகள் ஊருக்குள் வருவதில்லை. இதனால், புதிதாகக் கட்டப்பட்ட பேருந்து நிலையம் வீணாகக் கிடக்கிறது. பாதாளச் சாக்கடைத் திட்டம் முடங்கிவிட்டது. எதையுமே அவர் உருப்படியாகச் செய்யவில்லை.

செய்தேனே! - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், எம்.எல்.ஏ., தி.மு.க

ராமமூர்த்தி ரோடு ரயில்வே மேம்பாலம், அல்லம்பட்டியில் ரயில்வே கீழ்ப் பாலம் ஆகிய பணிகளை முடித்திருக்கிறேன். தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்குக் குடிநீர் வசதி செய்து கொடுத்திருக்கிறேன். விருதுநகரில் மருத்துவக் கல்லூரி அமைக்க சட்டமன்றத்தில் பேசினேன். அதற்குப் பலன் கிடைத்து, தற்போது கல்லூரிக்கான கட்டடப் பணிகள் நடந்துவருகின்றன. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் தொடர்பாக ஐந்து முறை கடிதம் எழுதியிருக்கிறேன். விருதுநகர் நகராட்சியில் புதிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டப் பணிகள் நடந்துவருகின்றன.

 கலாநிதி, ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்
கலாநிதி, ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்

கள நிலவரம்: தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சீனிவாசன், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க-வில் கடந்த முறை போட்டியிட்ட கலாநிதி, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் கோகுலம் தங்கராஜ், மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார் சீட் கேட்கிறார்கள். சிட்டிங்

எம்.எல்.ஏ மீது அதிருப்தி நிலவுவது அ.தி.மு.க-வுக்கு ப்ளஸ். கோஷ்டிப் பூசல் இல்லாததும், வாக்குவங்கி பலமாக இருப்பதும் தி.மு.க-வுக்கு ப்ளஸ். இரு கட்சிகளுமே சம பலத்தில் இருப்பதால், கடும் போட்டி இருக்கும்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அருப்புக்கோட்டை

சொன்னாரே? - வைகைச் செல்வன், அ.தி.மு.க

`குடிநீர்ப் பிரச்னையைத் தீர்ப்பேன், பாதாளச் சாக்கடைத் திட்டத்தைக் கொண்டுவருவேன்’ என்றவர், செய்யவில்லை. போக்குவரத்து நெரிசலால் தவிக்கும் அருப்புக்கோட்டை பஜாரில், மாற்றுப்பாதைக்கு ஏற்பாடு செய்யவில்லை. அருப்புக்கோட்டையில் ஜவுளிப்பூங்கா அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டாசுத் திரி தயாரிப்பிலுள்ள தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்து தரப்படவில்லை. மல்லிகைப்பூ சாகுபடி பரவலாக நடக்கிறது. ஆனால், நறுமணத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்கிற மக்களின் கோரிக்கை இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை.

செய்தேனே! - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், எம்.எல்.ஏ., தி.மு.க

குடிநீருக்காகத் தாமிரபரணியிலிருந்து 35 லட்சம் லிட்டர், திருப்புவனம் வைகை அணையிலிருந்து 23 லட்சம் லிட்டர் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதில், வைகைக் குடிநீர் நின்றுபோனதால், 230 கோடி ரூபாய் மதிப்பில் தாமிரபரணி புதிய குடிநீர்த் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீர்த்தேக்கத் தொட்டிகள், நியாயவிலைக் கடைகளுக்குக் கட்டடங்கள் கட்டிக்கொடுத்திருக்கிறேன். தனி கவனம் செலுத்தி, 850 முதியோருக்கு உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்திருக்கிறேன்.

வைகைச் செல்வன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்
வைகைச் செல்வன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்

கள நிலவரம்: தி.மு.க-வில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ விஜயகுமார், முன்னாள் நகராட்சித் தலைவர் சிவப்பிரகாசம் சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க-வில் வைகைச்செல்வன், அருப்புக்கோட்டை ஒன்றியச் செயலாளர் யோகா வாசுதேவன் காய்நகர்த்துகிறார்கள். தொகுதியில் சொல்லிக்கொள்ளும்படியான திட்டங்களை நிறைவேற்றாதது ராமச்சந்திரனுக்கு மைனஸ் என்றாலும், தொகுதிக்குள் பழைய செல்வாக்கை அப்படியே தக்கவைத்திருக்கிறார். கட்டமைப்புரீதியாகவும் தி.மு.க வலுவாக இருப்பதால், இன்றைய சூழலில் உதயசூரியனுக்கு வாய்ப்பு இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - ஆலந்தூர்

சொன்னாரே? - கார்த்திகேயன், நாம் தமிழர் கட்சி

தொகுதியின் பிரதான பிரச்னையே சுகாதாரச் சீர்கேடுதான். நீர்நிலைகள் புதர்மண்டிக் கிடக்கின்றன. கழிவுநீர் வடிகால்வாய் பிரச்னையும் சரிசெய்யப்படவில்லை. மடுவங்கரை ரயில்பாதை அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையும் கிடப்பிலிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை எம்.எல்.ஏ நிறைவேற்றவில்லை.

செய்தேனே! - தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ., தி.மு.க

மூவரசம்பட்டு குளம், நங்கநல்லூர் அர்த்தநாதீஸ்வரர் குளங்கள் சீரமைக்கப்பட்டிருக்கின்றன. ஆதம்பாக்கம் ஏரியைத் தூர்வார நிதி ஒதுக்கியிருக்கிறோம். தரைப்பாக்கம் - அனகாபுதூர் மேம்பாலம், கெருகம்பாக்கம் - கவுல்பஜார் மேம்பாலப் பணிகள் முடிந்துள்ளன. நிலமங்கை நகரில் 25 கோடி ரூபாயில், பம்ப்பிங் ஸ்டேஷன் அமைக்கும் பணி நடைபெறுகிறது. 156, 157 வார்டுகளுக்குப் பாதாளச் சாக்கடைத் திட்டம், மெட்ரோ வாட்டர் பணிகள் நடைபெறுகின்றன. வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்தோம். பத்தாண்டுகளாக வேண்டுமென்றே மீதமிருக்கும் 600 மீட்டர் பணியை முடிக்காமல் இழுத்தடிக்கின்றனர்.

கார்த்திகேயன், தா.மோ.அன்பரசன்
கார்த்திகேயன், தா.மோ.அன்பரசன்

கள நிலவரம்: தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ தா.மோ.அன்பரசன், பகுதிச் செயலாளர் சந்திரன் சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ வெங்கட்ராமன் காய்நகர்த்துகிறார்கள். கட்டமைப்புரீதியாக தி.மு.க வலுவாக இருக்கும் தொகுதிகளில் ஆலந்தூரும் ஒன்று. அ.தி.மு.க-வில் செல்வாக்கான வேட்பாளர்கள் தொகுதியில் இல்லாதது மைனஸ். இன்றைய சூழலில், தி.மு.க-வின் கையே ஓங்கியிருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - ஸ்ரீபெரும்புதூர்

சொன்னாரே? - கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ்

தொழிற்சாலைகள் நிறைந்த இந்தத் தொகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும், போக்குவரத்து நெருக்கடிக்கும் எந்தத் தீர்வையும் எம்.எல்.ஏ முன்னெடுக்கவில்லை. ஸ்ரீபெரும்புதூர் ஜங்ஷனில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. மணிமங்கலம் ஏரியை 10 கோடி ரூபாயில் செப்பனிட்டார்கள். ஆனால், சமீபத்தில் பெய்த மழையில் ஏரிக்கரை உடைந்துவிட்டது. `ஏரிகளை இணைத்து குடிநீர் ஆதாரத்துக்கு வழி செய்வேன்’ என்றார். அதையும் செய்யவில்லை.

செய்தேனே! - கே.பழனி, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் சாலையைச் சிறப்பாக அமைத்திருக்கிறேன். அந்தப் பகுதியில் புதிய பாலம் கொண்டுவந்திருக்கிறேன். குன்றத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீபெரும்புதூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், 90 பஞ்சாயத்துகளுக்கு ஊராட்சி ஒன்றியச் சாலைகள் அமைத்திருக்கிறேன். குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 3,000 வீடுகள், 1,800 பசுமை வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறேன்.

கு.செல்வப்பெருந்தகை, கே.பழனி
கு.செல்வப்பெருந்தகை, கே.பழனி

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பழனி, மாவட்ட ஆவின் சேர்மன் கவிசந்திரன் சீட் கேட்கின்றனர். தி.மு.க-வில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் சத்தியமூர்த்தி, எம்.பி தேர்தலில் போட்டியிட்ட காயத்ரி ஸ்ரீதர் சீட் கேட்கிறார்கள். தி.மு.க கூட்டணிக் கட்சியான காங்கிரஸில், மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜான்சி ராணியும் காய்நகர்த்துகிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணி சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற தொகுதி ஸ்ரீபெரும்புதூர். வாக்குவங்கி உட்பட கட்டமைப்புரீதியாக தி.மு.க வலுவாக இருப்பதால், தி.மு.க-வுக்கு வாய்ப்புகள் அதிகம்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர்  சரோஜா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு