Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - தங்கமணி

தங்கமணி
பிரீமியம் ஸ்டோரி
தங்கமணி

தமிழகத்திலேயே கிட்னி, கருமுட்டை, குழந்தை விற்பனை அதிக அளவில் நடைபெறும் தொகுதியாக குமாரபாளையம் உள்ளது. விசைத்தறி மற்றும் அதன் சார்புத் தொழில்களே இங்கு பிரதானம்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - தங்கமணி

தமிழகத்திலேயே கிட்னி, கருமுட்டை, குழந்தை விற்பனை அதிக அளவில் நடைபெறும் தொகுதியாக குமாரபாளையம் உள்ளது. விசைத்தறி மற்றும் அதன் சார்புத் தொழில்களே இங்கு பிரதானம்.

Published:Updated:
தங்கமணி
பிரீமியம் ஸ்டோரி
தங்கமணி

என்ன செய்தார் அமைச்சர்? - தங்கமணி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்

சொன்னாரே? - யுவராஜ், தி.மு.க

தொகுதியில் 80 சதவிகித மக்கள் விசைத்தறித் தொழிலையே நம்பி வாழ்கிறார்கள். பிரசாரத்தின்போது, ‘நான் வென்றால் ஒரே ஆண்டில் ‘சாயப்பட்டறை பொதுச் சுத்திகரிப்பு நிலையம்’ கொண்டு வருவேன். இல்லையென்றால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன்’ என்றார் தங்கமணி. ஆனால், இதுவரை பொதுச் சுத்திகரிப்பு நிலையம் கொண்டுவரவும் இல்லை; பதவியை ராஜினாமா செய்யவும் இல்லை. சாயப்பட்டறைகளுக்குத் தடை, ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு போன்ற வற்றால் விசைத்தறித் தொழில் முடங்கிவிட்டது. 2021 தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றதும் விசைத்தறித் தொழிலை மீட்டு, தொழிலாளி களுக்குப் புதுவாழ்வு அளிக்கப்படும்.

யுவராஜ்
யுவராஜ்

செய்தேனே! - தங்கமணி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்.

குமாரபாளையம், புது தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ளது.கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையம், டி.எஸ்.பி அலுவலகம் ஆகியவற்றுக்குப் புதிய கட்டடங்கள் கட்டப் பட்டுள்ளன. தமிழகத்திலேயே முதன்முறையாக மின்சாரத்துறையில் அண்டர்கிரவுண்ட் கேபிள் கனெக்‌ஷன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனங்கூர், பள்ளிப்பாளையம் மேம்பாலங்களையும் எஸ்.பி.பி காலனியில் ஒரு ரயில்வே மேம்பாலத்தையும் கட்டியிருக்கிறோம். ரூ.400 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ அலுவலகம் கொண்டுவந்தது, குடிசை மாற்று வாரியத்தில் 243 புதிய குடியிருப்புகள், தொகுதி முழுக்க தார்ச் சாலைகள், நிலமில்லாத ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசப் பட்டா வழங்கியது எனப் பணிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். சாயக்கழிவு பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. விசைத்தறி உரிமையாளர்கள் நிலம் கொடுக்காததாலும்,தி.மு.க-வினர் தொடர்ந்து தடை செய்ததாலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் ‘ராஜினாமா’ பற்றி எதுவும் நான் சொல்லவில்லை.

தங்கமணி
தங்கமணி

கள நிலவரம்: தமிழகத்திலேயே கிட்னி, கருமுட்டை, குழந்தை விற்பனை அதிக அளவில் நடைபெறும் தொகுதியாக குமாரபாளையம் உள்ளது. விசைத்தறி மற்றும் அதன் சார்புத் தொழில்களே இங்கு பிரதானம். கந்துவட்டிக் கொடுமையும், அதனால் உயிரிழக்கும் சம்பவங்களும் இங்கு அதிகம். இதைத் தடுப்பதற்கும், தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கும் அமைச்சர் தங்கமணி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சரின் உறவினர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் மட்டுமே சாயப்பட்டறைகளை நடத்த முடிகிறது. மேலும், கொரோனா பொதுமுடக்க காலத்தில், நிகழ்ந்த மின்சாரக் கட்டணக் குளறுபடியை துறை அமைச்சராக தங்கமணி சரியாகக் கையாளவில்லை.

இந்த முறையும் அ.தி.மு.க சார்பாக தங்கமணியே போட்டியிடுவார் என்கிறார்கள். பூத் கமிட்டிகள் மூலமாகப் பிரசாரத்தையும் அவர் தொடங்கிவிட்டார். தி.மு.க சார்பில் போட்டியிட ‘பல்ப்’ வெங்கடாசலம், யுவராஜ், கொக்கு பாலு, தண்டபாணி, வெப்படை செல்வராஜ், ரவி ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. டெண்டர் உள்ளிட்ட பல விஷயங்களில் எதிர்க்கட்சியினரையும் அரவணைத்துச் சென்றிருப்பதன் மூலம், குமாரபாளையம் தொகுதியில் தன்னை வீழ்த்துவது தி.மு.க-வுக்குச் சுலபமான காரியமல்ல என்கிற நிலையை ஏற்படுத்திவைத்திருக்கிறார் தங்கமணி.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திருத்தணி

சொன்னாரே? - பூபதி, தி.மு.க

திருத்தணிக்குப் புதிய பேருந்து நிலையம் கொண்டுவருவதாக நரசிம்மன் வாக்குறுதி அளித்திருந்தார். அந்தப் பணிகள் தொடக்கநிலையிலேயே தேங்கியிருக்கின்றன. அரசு மருத்துவமனையை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தொகுதிக்கு நிரந்தரமான வளர்ச்சித் திட்டம் எதையும் அவர் எடுத்து வரவில்லை.

பூபதி - பி.எம்.நரசிம்மன்
பூபதி - பி.எம்.நரசிம்மன்

செய்தேனே! - பி.எம்.நரசிம்மன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

திருத்தணி நகருக்குள் 115 கோடி ரூபாயில், குடிநீர்த் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் முடிவுறும் தறுவாயில் இருக்கின்றன. சென்னை புறவழிச்சாலைத் திட்டம் முடியும் நிலையில் இருக்கிறது. புதிதாக ஆர்.கே.பேட்டை வட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். பள்ளிப்பட்டில் நீதிமன்றக் கட்டடப் பணிகளுக்கு டெண்டர் விடப்போகிறோம். புதிய பேருந்து நிலையத்துக்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டாலும், ஒப்பந்தத்தை எடுக்க யாரும் வராததால், அந்தப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை.

கள நிலவரம்: தொகுதிக்குள் நரசிம்மன் மீது பெரிய அதிருப்தி இல்லை. ஆனால், அ.தி.மு.க-வுக்கு எதிரான மனநிலை தொகுதிக்குள் நிலவுவது அவருக்கு மைனஸ். அ.தி.மு.க-வில் நரசிம்மன், கோ.அரி ஆகியோரும், தி.மு.க-வில் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், மாவட்டச் செயலாளர் பூபதி, நகரச் செயலாளர் சந்திரன் ஆகியோரும் சீட் எதிர்பார்க்கிறார்கள். தொகுதிக்குள் தி.மு.க-வின் தேர்தல் பணிகள் தீவிரமாகியிருப்பதால், உதயசூரியன் உதிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திருவள்ளூர்

சொன்னாரே? - பாஸ்கரன், அ.தி.மு.க

`புதிய பேருந்து நிலையம், ஆடவர் மற்றும் மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டும் அமைக்கப்படும்’ என்றார். அதைச் செய்யவில்லை. திருவள்ளூர் நகராட்சியை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்படவில்லை. மாவட்ட பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் கொண்டுவரப்படவில்லை. ‘திருவள்ளூரை முன்மாதிரி நகரமாக்குவேன்’ என்றார். ஆனால், அடிப்படை வசதிகள்கூட இல்லாமல், நகரைக் குட்டிச்சுவர் ஆக்கியதுதான் மிச்சம்.

பாஸ்கரன் - வி.ஜி.ராஜேந்திரன்
பாஸ்கரன் - வி.ஜி.ராஜேந்திரன்

செய்தேனே! - வி.ஜி.ராஜேந்திரன், எம்.எல்.ஏ., தி.மு.க

புதிய பேருந்து நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஆரம்பித்திருக்கின்றன. பேரம்பாக்கத்தில் மேல்மட்ட மேம்பாலம் அமைத்துள்ளேன். திருவள்ளூரில் 18 தரைப்பாலங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றைச் சீர்செய்வதற்கான பணிகள் ஆரம்பித்திருக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் 100 முறைக்கு மேல் நேரடி ஆய்வுசெய்திருக்கிறேன். இதன் மூலமாக அவற்றின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. முழுநேர ஊழியர்களுடன் எனது எம்.எல்.ஏ அலுவலகம் செயல்பட்டுவருகிறது.

கள நிலவரம்: தொகுதிக்குள் ராஜேந்திரனின் செயல்பாடு வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மீண்டும் அவரே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க-வில் மருத்துவ அணியைச் சேர்ந்த குமரன், முன்னாள் எம்.எல்.ஏ சிவாஜி ஆகியோரும் சீட் எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, பாஸ்கரன் ஆகியோர் காய்நகர்த்துகிறார்கள். ஒருவேளை ரமணா போட்டியிட்டால், களம் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றுள்ள சூழலில் திருவள்ளூரில் இரண்டு கட்சிகளுக்குமே இழுபறி நிலைதான்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - ஆண்டிப்பட்டி

சொன்னாரே? - லோகிராஜன், அ.தி.மு.க

`தொகுதியில் சாக்கடை அடைப்பு, குடிநீர்த் தேவை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படும்’ என்றார். அதை சரிசெய்யக்கூட அவர் தொகுதிப் பக்கம் வந்ததில்லை. இந்தத் தொகுதியில் மருத்துவக் கல்லூரி, சேடபட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைக் கொண்டுவந்தது அ.தி.மு.க-தான். கடமலைக்குண்டு கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதும் நாங்கள்தான். எந்த அரசு விழாவுக்கும் எம்.எல்.ஏ வருவதில்லை.

லோகிராஜன் - மகாராஜன்
லோகிராஜன் - மகாராஜன்

செய்தேனே! - மகாராஜன், எம்.எல்.ஏ., தி.மு.க

14 இடங்களில் போர் போட்டு தண்ணீர்த் தொட்டி கட்டிக் கொடுத்திருக்கிறேன். பட்டியல் சமூக மக்களின் எட்டு சுடுகாடுகளுக்குக் கொட்டகை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். நான்கு கிராமங்களில் பெண்கள் கழிப்பறை, 13 கிராமங்களில் கழிவுநீர்க் கால்வாய் அமைத்துத் தந்திருக்கிறேன். டி.சுப்புலாபுரத்தில் 114 வருட பழைமையான பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் சாலையைச் சரிசெய்து, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி செய்து தந்திருக்கிறேன். தொகுதியிலுள்ள பல கிராமங்களில் கலையரங்கம், ரேஷன் கடைகளுக்குக் கட்டடம் கட்டித் தந்திருக்கிறேன்.

கள நிலவரம்: நெசவு, விவசாயம் ஆகியவைதான் ஆண்டிப்பட்டியில் பிரதானம். பிரமலைக் கள்ளர் சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளதால், தேர்தலின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் சக்தியாக உள்ளனர். தி.மு.க-வில் மகாராஜன், தங்க தமிழ்ச்செல்வனின் பெயர்கள் அடிபடுகின்றன. அ.தி.மு.க-வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப், லோகிராஜனின் பெயர்கள் பேசப்படுகின்றன. அ.ம.மு.க-வில் டி.டி.வி.தினகரன் போட்டியிடலாம் என்கிறார்கள். எம்.எல்.ஏ மகாராஜனுக்கு நல்ல பெயர் இருப்பதால், தி.மு.க-வுக்குச் சாதகமான சூழலே நிலவுகிறது.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - கம்பம்

சொன்னாரே? - கம்பம் ராமகிருஷ்ணன், தி.மு.க

கம்பம் நகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் கொண்டுவரப்படும் என்ற ஜக்கையன், அதை நிறைவேற்றவில்லை. திராட்சை ஆராய்ச்சி நிலையம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கப்பட்டும், திட்டம் கிடப்பில் கிடக்கிறது. அரசு ஒயின் தொழிற்சாலை அமைக்கப்படவில்லை. எரசக்கநாயக்கனூர் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தி.மு.க ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கியதும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்ததும்தான் ஜக்கையனின் சாதனை.

கம்பம் ராமகிருஷ்ணன் - ஜக்கையன்
கம்பம் ராமகிருஷ்ணன் - ஜக்கையன்

செய்தேனே! - ஜக்கையன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

ஜக்கையனைப் பலமுறை, பல்வேறு வகைகளில் தொடர்புகொள்ள முயன்றோம், பதிலே இல்லை. அவரது சார்பில் மகன் பாலமணிமார்பன் பேசினார். ‘‘கம்பம் பாதாளச் சாக்கடைத் திட்டம் புவியியல் அமைப்பின்படி கம்பம் நகருக்கு செட்டாகாது என்பதால், மாற்றுத் திட்டம் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோகிலாபுரத்திலிருந்து எரசைக்குத் தண்ணீர் கொண்டு செல்லக் கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது. சாக்கலூத்துமெட்டு சாலை அமைக்க, சட்டப்பேரவையில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கம்பத்தில் பழுதான சாலை என்று ஒரு சாலையைக்கூட கைகாட்டிக் கூறிவிட முடியாது.”

கள நிலவரம்: தி.மு.க சார்பில் போட்டியிட, கம்பம் ராமகிருஷ்ணனின் பெயர் பிரதானமாக அடிபடுகிறது. அ.தி.மு.க-வில் மீண்டும் ஜக்கையனே சீட் கேட்கிறார். தனக்கு இல்லையெனில், தன் மகனுக்குக் கொடுக்கும்படி எடப்பாடியிடம் அழுத்தம் கொடுத்திருக்கிறாராம். முன்னாள் மாவட்டச் செயலாளரான சிவக்குமார், கம்பம் ராமகிருஷ்ணனின் மருமகனான அருண்குமார் ஆகியோரும் அ.தி.மு.க-வில் சீட் எதிர்பார்க்கிறார்கள். அருண்குமார் மூலமாகத் தேர்தல் நேரத்தில் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு செக் வைக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிடுகிறாராம். தொகுதியில் பெரிய வளர்ச்சி இல்லையென்பதால், தி.மு.க-வுக்குச் சாதகமான சூழலே நிலவுகிறது.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அரியலூர்

சொன்னாரே? - சிவசங்கர், தி.மு.க

குடிநீர்ப் பிரச்னையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்தார். இன்றுவரை தொகுதியில் குடிநீர்ப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மருத்துவக் கல்லூரியைக் கொண்டுவந்ததைத்தான் மிகப்பெரிய சாதனையாகச் சொல்கிறார். ஆனால், தன் அக்கா மகன் பிரேமுக்குச் சொந்தமான இடத்தின் அருகே கல்லூரியைக் கொண்டுவந்து, தன் குடும்பத்தின் நில மதிப்பைக் கூட்டியதுதான் மிச்சம். இங்குள்ள சிமென்ட் ஆலைகளுக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து செல்வதால், விபத்தில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தீர்க்க எந்த மாற்றுவழியும் அவர் செய்யவில்லை. அதிகாரிகள், போலீஸாரைக் கையில் வைத்துக்கொண்டு கொள்ளிடம் மற்றும் மருதையாற்றில் மணல் திருடியதுதான் அவரின் ஐந்தாண்டுச் சாதனை.

சிவசங்கர் - தாமரை ராஜேந்திரன்
சிவசங்கர் - தாமரை ராஜேந்திரன்

செய்தேனே! - தாமரை ராஜேந்திரன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

அரியலூரில், உயர்மட்ட இரண்டு வழிப் பாலம், கல்லகம் கிராமத்தில் உயர்மட்டப் பாலம் கட்டியுள்ளோம். சுண்டக்குடியிலும் பொய்யூரிலும் தடுப்பணைகள் கட்டியுள்ளோம். மாவட்டத்தில் குறைந்தது 100 கி.மீ-க்கு புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாரணவாசியில் மாற்றுப்பாலம் திறக்கப் பட்டுள்ளது. அரியலூர் அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிக்காரர்கள் ஆயிரம் பேசுவார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

கள நிலவரம்: அரசு கொறடாவாக இருந்தும், கொரோனா பேரிடர் காலத்தில் தொகுதி மக்களை எட்டிக்கூடப் பார்க்காதது ராஜேந்திரன் மீது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க சார்பில் போட்டியிட ராஜேந்திரன், வழக்கறிஞர் சாந்தி ஆகியோர் காய்நகர்த்துகிறார்கள். தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் சிவசங்கர், நகரச் செயலாளர் முருகேசன், வழக்கறிஞர் கதிரவன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். ராஜேந்திரனின் கடந்த ஐந்து வருடச் செயல்பாட்டால், அ.தி.மு.க-வுக்கு எதிர்ப்பான மனநிலையே தொகுதி மக்களிடம் நிலவுகிறது.

ஜெயங்கொண்டம்

சொன்னாரே? - ஜி.ராஜேந்திரன், காங்கிரஸ்

‘சோழகங்கம் எனப்படும் பொன்னேரியைப் புனரமைத்து, மேம்படுத்தி சுற்றுலாத்தலம் ஆக்குவேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார். இதுவரை அதற்கான சிறு முயற்சியும் செய்யவில்லை. `முந்திரித் தொழிற்சாலை, ஜவுளிப்பூங்கா அமைத்துத் தருவேன்’ என்று அவர் கூறியது வெறும் பேச்சாகப் போய்விட்டது. மணல் கொள்ளையைத் தடுக்காமல், அதற்குத் துணைபோகிறார். எல்.எல்.ஏ-வைக் கடந்த இரண்டு வருடங்களாகவே தொகுதிக்குள் பார்க்க முடியவில்லை.

ஜி.ராஜேந்திரன் - ராமஜெயலிங்கம்
ஜி.ராஜேந்திரன் - ராமஜெயலிங்கம்

செய்தேனே! - ராமஜெயலிங்கம், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

எனது தேர்தல் வாக்குறுதிப்படி, ஆண்டிமடம் தனித் தாலுகாவாக மாற்றப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம், நீதிபதிகள் குடியிருப்பு ஆகிய கட்டடப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. இந்த ஆண்டு மட்டும் ரூ.14 கோடிக்குச் சாலைப்பணிகள் நடைபெறுகின்றன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. முந்திரி மற்றும் ஜவுளித் தொழிற்சாலை அமைப்பது குறித்து சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பிப் பேசியிருக்கிறேன். பொன்னேரியைத் சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

கள நிலவரம்: தி.மு.க-வில் க.சொ.கண்ணன், தனசேகர், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் போட்டியிட சீட் கேட்கின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.ராஜேந்திரன் காய்நகர்த்துகிறார். அ.தி.மு.க-வில் ராமஜெயலிங்கம், பூவாங்குளம் அண்ணாத்துரை, சிவசுப்ரமணியம் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். பா.ம.க-வின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் டி.எம்.டி.திருமாவளவன், வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவரான வைத்தி ஆகியோரிடையே சீட் வாங்கக் கடும் போட்டி நிலவுகிறது. கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்காமல், தங்கள் கட்சி வேட்பாளரை தி.மு.க நிறுத்தினால், தொகுதியைக் கைப்பற்றலாம். இல்லையென்றால், அ.தி.மு.க-வுக்குச் சாதகமாகவே இருக்கும்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - தங்கமணி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism