Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் வளர்மதி

அமைச்சர் வளர்மதி
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் வளர்மதி

ஸ்ரீரங்கத்தில் வென்ற ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ பதவி, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிபோனது. பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில், வழக்கறிஞரான எஸ்.வளர்மதிக்கு அ.தி.மு.க சார்பில் சீட் வழங்கப்பட்டது.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் வளர்மதி

ஸ்ரீரங்கத்தில் வென்ற ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ பதவி, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிபோனது. பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில், வழக்கறிஞரான எஸ்.வளர்மதிக்கு அ.தி.மு.க சார்பில் சீட் வழங்கப்பட்டது.

Published:Updated:
அமைச்சர் வளர்மதி
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் வளர்மதி

என்ன செய்தார் அமைச்சர் - பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி - ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கத்தில் வென்ற ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ பதவி, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிபோனது. பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில், வழக்கறிஞரான எஸ்.வளர்மதிக்கு அ.தி.மு.க சார்பில் சீட் வழங்கப்பட்டது. அந்த இடைத்தேர்தலில் வென்ற வளர்மதி, 2016 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று அமைச்சராகவும் பொறுப்பேற்றார். கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்மதியின் தொகுதி வளர்ச்சிப் பணிகள் எப்படியிருந்தன?

சொன்னாரே? - பழனியாண்டி, தி.மு.க

தொகுதிவாசிகளின் முக்கியக் கோரிக்கையே அடிமனைப் பிரச்னைதான். ரங்கநாதசுவாமி கோயில் இடங்களில், பல தலைமுறைகளாகக் குடியிருந்துவரும் ஸ்ரீரங்கம் மக்கள், பழங்காலத்து வீடுகளைப் புதுப்பிக்க மாநகராட்சி அனுமதி பெற முடியாமலும், அவசரத் தேவைகளுக்கு வீடுகளை விற்கவோ, அடமானம்வைக்கவோ முடியாமலும் பரிதவிக்கிறார்கள். இந்தப் பிரச்னையைக் களைவதாகச் சொன்னவர், கண்டுகொள்ளவே இல்லை. தொகுதியில் நிலத்தடி நீர் குறைந்துகொண்டே வருகிறது. காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தங்குதடையில்லாமல் மணல் கொள்ளை நடக்கிறது. கொள்ளையடிப்பதே அ.தி.மு.க-வினர் என்பதால், அமைச்சர் தட்டிக்கேட்பதில்லை. புறநகர்ப் பகுதியில் மழைநீர் வடிகால் வசதி, பாதாளச் சாக்கடை வசதி, குடிநீர் வசதி இல்லாத நிலை இன்றும் நீடிக்கிறது.

செய்தேனே! - வளர்மதி, அமைச்சர்

ஸ்ரீரங்கத்தில் ஆர்.டி.ஓ அலுவலகம், மணப்பாறையில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம், குற்றவியல் நீதித்துறை நடுவர் குடியிருப்புகள், ஜீயபுரத்தில் டி.எஸ்.பி அலுவலகம், ஆலம்பட்டி புதூரில் கால்நடை மருந்தகம், மருதாண்டாகுறிச்சியில் சார்பதிவாளர் அலுவலகம், தொகுதியில் 876 வீடுகள் உட்பட பல கட்டடப் பணிகளை முடித்திருக்கிறேன். திருவானைக்காவலிலிருந்து மாம்பழச்சாலை வரை மேம்பாலம், பூங்குடி - மணிகண்டம் சாலையில் புதிய பாலம், மணிகண்டத்தில் தொழிற்பயிற்சி நிலையம், விடுதிக் கட்டடம் ஆகியவற்றைக் கட்டிக்கொடுத்திருக்கிறேன். தொகுதி முழுவதும் தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், 12 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. 1,000 குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்கியிருக்கிறேன். முக்கொம்புவில் தடுப்பணை, போக்குவரத்துடன்கூடிய புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறேன். அடிமனைப் பிரச்னை தொடர்பாக, கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பழனியாண்டி - வளர்மதி
பழனியாண்டி - வளர்மதி

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் அமைச்சர் வளர்மதி மீண்டும் சீட் கேட்கிறார். இவருடன் வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி, ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்பிரமணியன், பூனாட்சி என்று பலரும் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். தி.மு.க-வில் பழனியாண்டி, இளைஞரணியைச் சேர்ந்த ஆனந்த், ஒன்றியச் செயலாளர்கள் கதிர்வேல், மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் யூனியன் சேர்மன் துரைராஜ் ஆகியோர் சீட் எதிர்பார்க்கின்றனர். அமைச்சர் வளர்மதி ஒரு சில திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவந்திருந்தாலும், சொந்தக் கட்சியினரே அவருக்கு எதிராக இருப்பது மைனஸ். அ.தி.மு.க-வுக்கு எதிரான மனநிலையே தொகுதியில் அதிகமாக நிலவுவதால், தொகுதியில் தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பிருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - எழும்பூர்

சொன்னாரே? - ம.வெங்கடேசன், பா.ஜ.க

எழும்பூரின் முதல் பூத்தான ‘திடீர்நகர்’ பகுதி மக்களுக்கு வீடு கட்டித் தருகிறேன் என்றார். அதற்காக, சட்டமன்றத்தில்கூட அவர் பேசவில்லை. `வட்டம்வாரியாக, பாதாளச் சாக்கடைத் திட்டம் கொண்டுவருவேன்’ என்றார். அதையும் நிறைவேற்றவில்லை. கட்டப் பஞ்சாயத்து செய்ததைத் தவிர அவர் வேறெந்தப் பணியையும் இதுவரை செய்யவில்லை.

செய்தேனே! - கே.எஸ்.ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ., தி.மு.க

வாக்குறுதி அளித்தபடி, சச்சிதானந்தம் தெருவில் ஏ.சி திருமண மண்டபம் கட்டிக் கொடுத்திருக்கிறேன். ஏ.பி.ரோட்டில் மூலிகைப் பூங்கா அமைத்து, 27 நட்சத்திரங்களுக்கு உரிய தல விருட்சங்களை அமைத்திருக்கிறோம். கே.பி.பார்க்கில் குடிநீர் வசதி, இரண்டு கால்பந்தாட்ட மைதானங்கள், பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ், சத்துணவுக்கூடம், அங்கன்வாடிகளைக் கொண்டுவந்திருக்கிறேன்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் வளர்மதி

கள நிலவரம்: கட்டமைப்புரீதியாக தி.மு.க வலுவாக இருக்கும் தொகுதிகளில் எழும்பூரும் ஒன்று. தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ ரவிச்சந்திரன், வழக்கறிஞர் இ.பரந்தாமன், பரிதி இளம் சுருதி ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வில் மகளிரணியைச் சேர்ந்த வேளாங்கண்ணி சீட் கேட்கிறார். ஆனால், கூட்டணிக் கட்சிக்கு இந்தத் தொகுதியைத் தள்ளிவிடும் ஐடியாவில் அ.தி.மு.க தலைமை இருப்பதால், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தே.மு.தி.க-வில் நல்லதம்பி, பிரபு ஆகியோர் சீட் கேட்டு காய்நகர்த்துகிறார்கள். எம்.எல்.ஏ மீது பெரிய அதிருப்தி இல்லையென்றாலும், கட்சி நிர்வாகிகளுடன் உரசல் இருப்பது ரவிச்சந்திரனுக்கு மைனஸ். அதேநேரத்தில், தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு பலமில்லாததால் தி.மு.க தெம்பாக இருக்கிறது. இன்றைய சூழலில், தி.மு.க-வுக்கு சாதகமாகவே இருக்கிறது தொகுதி!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - துறைமுகம்

சொன்னாரே? - கே.எஸ்.ஸ்ரீனிவாசன், அ.தி.மு.க

`சாலைகள், கழிவுநீர்க் கால்வாய்ப் பிரச்னைகளைச் சரிசெய்வேன்’ என்றார். ஆனால், மாநகராட்சியில் சில லாபிகளை வைத்துக்கொண்டு, அதன் மூலமாகப் பணம் பெற்று, தொகுதிக்குள் விழா நடத்திக்கொண்டதைத் தவிர அவர் ஏதும் செய்யவில்லை. மண்ணடி, பாரிஸ் கார்னர் பகுதிகளில் சாலையோரம் வசிப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நிரந்தர வீடு கட்டித் தருவதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை.

செய்தேனே: - பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., தி.மு.க

நான் எம்.எல்.ஏ-வாகப் பொறுப்பேற்ற பிறகு, சாலையோரவாசிகளுக்குக் கழிப்பிட வசதி செய்து தந்திருக்கிறேன். அங்கன்வாடிகள், சத்துணவுக்கூடங்கள், பூங்காக்கள், சாலைகளை மேம்படுத்தி சீரமைத்துக் கொடுத்திருக்கிறேன். சாலைகளே இல்லாத சத்யா நகர்ப் பகுதியில் சாலை, மின் விளக்கு வசதிகளைச் செய்துகொடுத்திருக்கிறேன். 1,500 பேருக்குக் கல்வி உதவித்தொகை, 500 கர்ப்பிணிகளுக்குப் பிரசவகால உதவிகள், மகளிருக்குக் கணினிப் பயிற்சி, தையல் பயிற்சி, அழகுக்கலை பயிற்சியளித்து அதற்குத் தேவையான உபகரணங்களும் தி.மு.க சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

கே.எஸ்.ஸ்ரீனிவாசன் - பி.கே.சேகர்பாபு
கே.எஸ்.ஸ்ரீனிவாசன் - பி.கே.சேகர்பாபு

கள நிலவரம்: துறைமுகம் தொகுதியில், கட்டமைப்புரீதியாக தி.மு.க தெம்பாக இருக்கிறது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக சேகர்பாபுவின் செயல்பாடு வரவேற்பையும் பெற்றுள்ளது. தி.மு.க-வில் சேகர்பாபு மீண்டும் சீட் கேட்கிறார். அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் பாலகங்கா, கே.எஸ்.ஸ்ரீனிவாசன் ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். பா.ஜ.க சார்பில் போட்டியிட அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் வினோஜ் பி.செல்வம் காய்நகர்த்துகிறார். இன்றைய சூழலில், துறைமுகத்தில் உதயசூரியனுக்கு சாதகமான சூழலே நிலவுகிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - கவுண்டம்பாளையம்

சொன்னாரே? - கிருஷ்ணன் (பையா கவுண்டர்), தி.மு.க

நீர்வழிப்பாதைகள், பள்ளவாரிப் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்குக் குடிசை மாற்று வாரியம் சார்பில் இடம் வாங்கித் தருவதாகச் சொன்னவர், செய்யவில்லை. மலைவாழ் மக்களுக்கு நடமாடும் ரேஷன் கடை, வீடுகளுக்குக் கழிப்பறை வசதி, மேம்பாலங்கள் என்று வாக்குறுதியை அள்ளி வீசினாரே தவிர, எதையும் முழுதாகச் செய்யவில்லை. தொகுதி முழுக்க, குடிநீர்ப் பிரச்னை நிலவுகிறது.

செய்தேனே! - ஆறுகுட்டி, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

தூமனூர், சேம்புக்கரை பழங்குடி மக்களின் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருள்கள் செல்லும்படி செய்திருக்கிறோம். மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்குச் செய்துகொடுத்துள்ளோம். அனைத்து இடங்களிலும் சாலை போட்டிருக்கிறோம். கொண்டனூர் பகுதியில் தடுப்பணை கட்டியுள்ளோம். தொகுதிக்குள் தண்ணீர் பிரச்னையே கிடையாது; நான்கு மேம்பாலங்கள் கட்டப்பட்டுவருகின்றன. கொரோனா காலகட்டத்திலும்கூட நான் மக்களை சந்தித்துப் பணிகளைத் தொய்வில்லாமல் செய்திருக்கிறேன்.”

கிருஷ்ணன் - ஆறுகுட்டி
கிருஷ்ணன் - ஆறுகுட்டி

கள நிலவரம்: பத்து ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருக்கும் ஆறுகுட்டிக்கு, மக்களிடம் பரவலாக நல்ல பெயர் இருக்கிறது. அதேநேரத்தில், செங்கல் சூளைகளுக்காக நடக்கும் கனிமவளச் சுரண்டல், மணல் கொள்ளை, டாஸ்மாக் பார் வசூல், குடும்ப ஆதிக்கம் போன்ற விவகாரங்களில் இவரின் பெயர் அடிவாங்கியுள்ளது. கவுண்டம்பாளையம் அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்தாலும், கொரோனா காலத்தில் தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்த களப்பணி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, மாவட்டச் செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் சீட் எதிர்பார்க்கிறார்கள். தி.மு.க-வில் கிருஷ்ணன் சீட் கேட்கிறார். போட்டி கடுமையாக இருந்தாலும், தி.மு.க வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - உதகமண்டலம்

சொன்னாரே? - வினோத், அ.தி.மு.க

`படுகர் இன மக்களைப் பழங்குடிப் பட்டியலில் சேர்ப்பேன்’ என்றார். அந்த வாக்குறுதி அப்படியே கிடக்கிறது. தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையைக்கூட அவரால் நிர்ணயம் செய்துதர முடியவில்லை. வாக்குறுதியளித்தபடி ஊட்டியில் மழைநீர் வடிகால்வாய்க் கட்டமைப்பை ஏற்படுத்தவில்லை. மூன்றாவது குடிநீர்த் திட்டத்திலும் எந்த முன்னேற்றமும் இல்லை. மெடிக்கல் காலேஜ் முதல் ஈழுவா, தீயா மக்களுக்கான சாதிச் சான்றிதழ் வழங்கியது வரை, தொகுதிக்குள் அ.தி.மு.க அரசுதான் பணிகளைச் செய்திருக்கிறது.

செய்தேனே! - கணேஷ், எம்.எல்.ஏ., காங்கிரஸ்

ஊட்டிக்கு மெடிக்கல் காலேஜ் கொண்டுவந்தேன். பேருந்து நிலையத்தைச் சீரமைத்துள்ளேன். ஈழுவா, தீயா மக்களுக்குச் சாதிச்சான்றிதழ் வாங்கிக் கொடுத்துள்ளேன். குதிரைப் பந்தய மைதானத்திலிருந்து 1.70 ஏக்கர் நிலத்தை பார்க்கிங் தளமாக மாற்ற ஏற்பாடு செய்துள்ளேன். ஊட்டி பகுதிகளில் சாலைகள் அமைத்துள்ளேன். பல கிராமங்களுக்குச் சமுதாயக்கூடங்களைக் கட்டிக் கொடுத்துள்ளேன்.

வினோத், கணேஷ்
வினோத், கணேஷ்

கள நிலவரம்: கொடுத்த வாக்குறுதிகளில் பலவற்றையும் நிறைவேற்றாததால், சிட்டிங் எம்.எல்.ஏ கணேஷ் மீது தொகுதிக்குள் அதிருப்தி இருக்கிறது. தி.மு.க சார்பில் போட்டியிட, முன்னாள் அமைச்சர் இளித்தொரை ராமச்சந்திரன், நகரச் செயலாளர் ஜார்ஜ் ஆகியோர் முட்டிமோதுகிறார்கள். அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் வினோத், முன்னாள் அமைச்சர் புத்திச்சந்திரன் இருவரும் சீட் கேட்கிறார்கள். இத்தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறார் கணேஷ். படுகர் அல்லாத மக்களிடம் கணேஷ் மீது அதிருப்தி இருப்பதால், ஊட்டியை விட்டுத்தர தி.மு.க தயாராக இல்லை. ஊட்டி தொகுதியைப் பொறுத்தவரை இரண்டு கட்சிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பெரியகுளம்

சொன்னாரே? - கதிர்காமு, அ.ம.மு.க

மாம்பழக்கூழ் தொழிற்சாலை, ஜெயமங்கலம் அருகே சிப்காட், வராகநதியின் மறுகரைக்குத் தடுப்புச்சுவர் மற்றும் தடுப்பணைகள், தேவதானப்பட்டியில் விபத்து சிகிச்சை மருத்துவமனை, வைகை அணையைத் தூர்வாருதல், உள்ளிட்ட பல எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாமல் கிடக்கின்றன. கொட்டக்குடி ஆற்றிலிருந்து லெட்சுமிபுரம் வழியாகக் கால்வாய் அமைத்து வராகநதிக்குத் தண்ணீர் கொண்டுவந்தால், பெரியகுளம் பகுதி விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

செய்தேனே! - சரவணக்குமார், எம்.எல்.ஏ., தி.மு.க

தடுப்பணைகள், சாலைகள், கழிப்பிட வசதி, தண்ணீர்த் தொட்டி என்று எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்தி, தொகுதி மக்களின் பிரச்னைகளை உடனே அறிந்து, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுத்துவருகிறேன். சாலை அமைக்க, குடிநீர் வசதி ஏற்படுத்த முயற்சி எடுக்கும்போது, பெரியகுளம் என்றாலே சம்பந்தப்பட்ட துறையில் நிதி இல்லை என்கிறார்கள்.

கதிர்காமு - சரவணக்குமார்
கதிர்காமு - சரவணக்குமார்

கள நிலவரம்: துணை முதல்வரின் சொந்த ஊர் என்றுதான் பெயர். நகராட்சிப் பகுதிகளில் சாலைகள், கழிவுநீர்க் கால்வாய்கள் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும்விதமாகத் தொழிற்சாலைகள் ஏதும் பெரியகுளம் தொகுதியில் இல்லை. லெட்சுமிபுரம் கிணறு பிரச்னையால் ஓ.பி.எஸ் மீது அதிருப்தியடைந்த நாயுடு சமுதாய மக்கள், அ.தி.மு.க-வுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சரவணக்குமாரும் ஜீவாவும் சீட் எதிர்பார்க்கிறார்கள்.

அ.தி.மு.க-வில் வழக்கறிஞர் தவமணி சீட் எதிர்பார்க்கிறார். அ.ம.மு.க-வில் கதிர்காமு போட்டியிடுவார் என்கிறார்கள். பன்னீர் மீதான அதிருப்தி, சிறுபான்மையினர் வாக்குகள், இடைத்தேர்தல் வெற்றி ஆகியவற்றால் தி.மு.க முகாம் தெம்பாக இருக்கிறது. இன்றைய சூழலில், தி.மு.க-வுக்குச் சாதகமான காற்றே பெரியகுளத்தில் வீசுகிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - மேலூர்

சொன்னாரே? - ரகுபதி, தி.மு.க

மேலூர் தொகுதி நீண்டகாலமாக முன்னேற்றம் காணாமல் அப்படியேதான் இருக்கிறது. விவசாயத்துக்காக முல்லைப்பெரியாறிலிருந்து நேரத்துக்குத் தண்ணீர் கொண்டுவருவதாகச் சொன்னார். `கொட்டாம்பட்டி வட்டாரத்தை மேம்படுத்த, திட்டங்கள் அமல்படுத்தப்படும்’ என்றார். எதையுமே கொண்டுவரவில்லை. மேலூர் நகரம் இன்னும் வளர்ந்த கிராமமாகவே இருக்கிறது.

செய்தேனே! - பெரியபுள்ளான் என்ற செல்வம், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

மேலூர் அருகே தொழிற்பேட்டையும், மேலூர் நகராட்சியில் பாதாளச் சாக்கடை வசதியும் கொண்டுவரத் திட்டங்கள் உள்ளன. கழிவுநீர்ச் சுத்திகரிப்புக்கு இடமில்லாததால், கால தாமதமாகிறது. முதியோர் உதவித்தொகை உட்பட பல நலத்திட்டங்கள் உடனுக்குடன் செய்யப்பட்டுவருகின்றன. தோட்ட விவசாய விளைபொருள்களை இருப்புவைக்க பதனீட்டுக் கிடங்கு கட்டப்பட்டிருக்கிறது.

 ரகுபதி - பெரியபுள்ளான் என்ற செல்வம்
ரகுபதி - பெரியபுள்ளான் என்ற செல்வம்

கள நிலவரம்: மீண்டும் இந்தத் தொகுதியில் பெரியபுள்ளான் போட்டியிடுவது சந்தேகம் என்கிறது அ.தி.மு.க வட்டாரம். அ.தி.மு.க-வில் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், தொழிலதிபர் பெரியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன் ஆகியோர் சீட்டுக்காக முட்டிமோதுகின்றனர். அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா-வின் பாரத் நாச்சியப்பன் சீட் எதிர்பார்க்கிறார். தி.மு.க-வில் ரகுபதி சீட் எதிர்பார்க்கிறார். அதேநேரம், மதுரை கிழக்கு எம்.எல்.ஏ மூர்த்தி மேலூர் தொகுதிக்கு ஜாகை மாறலாம் என்கிற பேச்சும் தி.மு.க-வில் நிலவுகிறது. இப்பகுதியில், அ.ம.மு.க-வுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது என்பதால், மறைந்த ஆர்.சாமியின் உறவினர்கள் யாருக்கேனும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிகிறது. அ.ம.மு.க பிரிக்கும் வாக்குகள், ஆளுங்கட்சி மீதான அதிருப்தி ஆகியவை தி.மு.க-வுக்குச் சாதகமான சூழலையே மேலூரில் ஏற்படுத்தியிருக்கின்றன!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் வளர்மதி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism