Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

வெல்லமண்டி நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
வெல்லமண்டி நடராஜன்

என் முயற்சியால்தான் காந்தி மார்க்கெட் தொடர்ந்து அந்த இடத்திலேயே செயல்படுகிறது. இந்த மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய ஒருபோதும் விட மாட்டேன். தொகுதி முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்றன.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

என் முயற்சியால்தான் காந்தி மார்க்கெட் தொடர்ந்து அந்த இடத்திலேயே செயல்படுகிறது. இந்த மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய ஒருபோதும் விட மாட்டேன். தொகுதி முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்றன.

Published:Updated:
வெல்லமண்டி நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
வெல்லமண்டி நடராஜன்

என்ன செய்தார் அமைச்சர்? - சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் - திருச்சி கிழக்கு

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், செயின்ட் ஜோசப் சர்ச், நத்தர்ஷா பள்ளிவாசல் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்கள் இத்தொகுதியில் அமைந்திருப்பதால் லட்சக்கணக்கானோர் நாள்தோறும் வந்துசெல்கிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல், குடிநீர்த் தட்டுப்பாடு, கழிவுநீர் மற்றும் குப்பைகளால் சுகாதாரமின்மை போன்ற அடிப்படைப் பிரச்னைகளும் ஏராளம் இருக்கின்றன. தொகுதியின் எம்.எல்.ஏ-வும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜனின் செயல்பாடு எப்படியிருக்கிறது?

சொன்னாரே? - ஜெரோம் ஆரோக்கியராஜ், காங்கிரஸ்

உய்யங்கொண்டான் கால்வாயிலும், காவிரியிலும் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து நிறுத்துவதாகச் சொன்னார், இதுவரை செய்யவில்லை. `மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு ரோப் கார் கொண்டுவர வேண்டும்’ என்ற மக்களின் கோரிக்கைக்கு ஒரு சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற வகையில்கூட நடவடிக்கை எடுக்கவில்லை. தொகுதியின் முக்கியப் பிரச்னைகளுள் ஒன்றான ‘காந்தி மார்க்கெட்’ விஷயத்தில் பெரிய அளவில் நாடகம் நடத்தினாரே தவிர, ஆக்கபூர்வமான நடவடிக்கை இல்லை. சத்திரம் பேருந்து நிலைய விரிவாக்கம், பாதாளச் சாக்கடை, சிங்காரத்தோப்பு பகுதியிலுள்ள யானைக்குளத்தில் வணிக வளாகம் என அடுக்கடுக்காகச் சொல்லப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அறிவிப்புடன் முடங்கிக்கிடக்கின்றன.

செய்தேனே! - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

என் முயற்சியால்தான் காந்தி மார்க்கெட் தொடர்ந்து அந்த இடத்திலேயே செயல்படுகிறது. இந்த மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய ஒருபோதும் விட மாட்டேன். தொகுதி முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. ரூ.1,700 கோடி மதிப்பிலான பாதாளச் சாக்கடைப் பணி நடந்துகொண்டிருக்கிறது. இப்பணி முடிந்தால் உய்யங்கொண்டான் ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலுமாகத் தடுக்கப்படும். மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரிக்கும் வேலையும் நடந்துகொண்டிருக்கிறது. மலைக்கோட்டைக்கு ரோப் கார் கொண்டுவருவது குறித்து முதல்வரிடம் பேசியிருக்கிறேன். நியாயவிலைக் கடைக் கட்டடங்கள், பேருந்து நிழற்குடை, சாலை வசதி, குடிநீர் வசதி என்று என் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகச் செலவு செய்திருக்கிறேன். எனது பொறுப்பிலுள்ள சுற்றுலாத்துறையில், அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்ததற்காக, கடந்த நான்கு வருடங்களாகத் தமிழகம் விருதுபெற்றுவருகிறது.

ஜெரோம் ஆரோக்கியராஜ் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
ஜெரோம் ஆரோக்கியராஜ் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

கள நிலவரம்: தி.மு.க-வில் திருவெறும்பூர் எம்.எல்.ஏ-வான அன்பில் மகேஷ் இந்தத் தொகுதியைக் குறிவைத்துக் காய்நகர்த்துகிறார். திருச்சி சிவா எம்.பி-யின் மகன் சூர்யா சிவா, அன்பில் பெரியசாமி, மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் மதிவாணன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் ஆகியோரும் ரேஸில் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் மீண்டும் வெல்லமண்டி நடராஜன் சீட் கேட்கிறார். கழக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், ஆவின் கார்த்திகேயன், மனோகரன், ஐயப்பன் என்று பலரும் சீட்டுக்காக முட்டி மோதுகிறார்கள். சொல்லிக்கொள்ளும்படியாகத் திட்டங்கள் எதையும் கொண்டு வராததால் வெல்லமண்டி நடராஜனுக்குத் தொகுதியில் நல்ல பெயர் இல்லை. சொந்தக் கட்சியிலும் அவருக்கு எதிராகக் கலகம் வெடிக்கிறது. இன்றைய சூழலில், தி.மு.க-வுக்குச் சாதகமாகவே தொகுதி இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - தாம்பரம்

சொன்னாரே? - சிட்லபாக்கம் ராஜேந்திரன், அ.தி.மு.க

தாம்பரத்தில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சண்முகம் சாலையை மறைத்தபடி, ஜி.எஸ்.டி ரோட்டிலிருந்து இறங்கும் பாலத்தைச் சரிசெய்வேன் என்றவர் செய்யவில்லை. தாம்பரம் பஸ் ஸ்டாண்டையும், ரயில்வே ஸ்டேஷனையும் இணைக்கும் நடைமேம்பாலப் பணிகள் முடியவில்லை. சிட்லபாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை ஆகிய பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் நகரவேயில்லை. வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தை செம்பாக்கத்தில் சொந்தக் கட்டடத்துக்கு மாற்றுவதையும் எம்.எல்.ஏ எதிர்க்கிறார்.

செய்தேனே! - எஸ்.ஆர்.ராஜா, எம்.எல்.ஏ., தி.மு.க

சண்முகம் சாலையில் குறுக்கிடும் பாலப் பிரச்னையை நாங்கள் ஆளுங்கட்சியாக வரும்போது நிச்சயமாகத் தீர்ப்போம். சிட்லபாக்கம் ஏரி சீரமைப்புப் பணி நடக்கிறது. பீர்க்கன்காரணை டு பெருங்களத்தூர் இணைப்புப் பால வேலை, மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் பாதியில் நிற்கிறது. தொகுதி முழுவதும் நெடுஞ்சாலைத்துறை பராமரிக்கும் சாலைகளை ஒட்டி மழைநீர்க் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனையும், பஸ் ஸ்டாண்டையும் இணைக்கும் பாலப் பணிகளை விரைவுபடுத்த பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளேன். பாதாளச் சாக்கடைத் திட்டத்தையும் நிறைவேற்றாமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறார்கள்.

சிட்லபாக்கம் ராஜேந்திரன் - எஸ்.ஆர்.ராஜா
சிட்லபாக்கம் ராஜேந்திரன் - எஸ்.ஆர்.ராஜா

கள நிலவரம்: தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா, ஆதிமாறன் சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க-வில் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் சின்னையா சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். கூட்டணியில் பா.ஜ.க-வின் செம்பாக்கம் வேதசுப்பிரமணியனும் சீட் கேட்கிறார். அ.ம.மு.க-வில் கரிகாலன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய சூழலில், தாம்பரம் தொகுதியில் தி.மு.க - அ.தி.மு.க இரண்டும் சம பலத்தில் இருப்பதால், இழுபறியான சூழலே நிலவுகிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பல்லாவரம்

சொன்னாரே? - சி.ஆர்.சரஸ்வதி, அ.ம.மு.க (2016-ல் அ.தி.மு.க வேட்பாளர்)

வெள்ள சமயங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிநிற்கும் நிலை உள்ளது. சாலை வசதியின்மையால், கொசுத்தொல்லையால் மக்கள் கஷ்டப்படுகின்றனர். இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க எம்.எல்.ஏ முயலவில்லை. செம்பரம்பாக்கத்திலிருந்து குழாய்களை அமைத்திருக்கிறார்கள், இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. பல்லாவரம் பெரிய ஏரியில் குப்பையை அள்ளுவதற்கான திட்டம் இன்னும் நிறைவேறவில்லை. உருப்படியான எந்தப் பணியையும் எம்.எல்.ஏ செய்யவில்லை.

செய்தேனே! - இ.கருணாநிதி, எம்.எல்.ஏ., தி.மு.க

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 70, 80 இடங்களில் ஆர்.ஓ பிளான்ட் போட்டிருக்கிறேன். குடிநீர்ப் பற்றாக்குறையுள்ள பம்மல், அனகாபுத்தூருக்கு தினமும் 25 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சங்கர்நகர் குவாரியிலிருந்து சப்ளை செய்யப்படுகிறது. பல்லாவரம் பெரிய ஏரியில் குப்பையை அள்ள நான் நிதி வாங்கிக் கொடுத்தும்கூட, சரிவர வேலை நடக்கவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து குடிநீர் கொண்டுவரும் திட்டத்தில் பம்மல், பல்லாவரம் பகுதிகளுக்கு வேலை முடிந்து சோதனை ஓட்ட நிலையிலிருக்கிறது. பாதாளச் சாக்கடைத் திட்டம் முடிந்துவிட்டது. ஆனால், சரியான பராமரிப்பு இல்லை.

சி.ஆர்.சரஸ்வதி - இ.கருணாநிதி
சி.ஆர்.சரஸ்வதி - இ.கருணாநிதி

கள நிலவரம்: தி.மு.க சார்பில் இ.கருணாநிதி போட்டியிட ஆயத்தமாகிறார். அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ தன்சிங் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார். அ.ம.மு.க-வில் சி.ஆர்.சரஸ்வதி, தாம்பரம் நாராயணன் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். கட்டமைப்பு வலுவாக இருப்பதால் இன்றைய சூழலில், தொகுதி தி.மு.க-வுக்குச் சாதகமாகவே இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - மடத்துக்குளம்

சொன்னாரே? - மனோகரன், அ.தி.மு.க

`உடுமலைக்கு மேற்கிலுள்ள 60 கிராமங்களுக்கு முறைப்படுத்தப்பட்ட தண்ணீர் கொண்டுவருவேன்; அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்துவேன்’ என்றார், நிறைவேற்றவில்லை. தொகுதியில் குடிமராமத்துப் பணிகள் பெரிதாக நடக்கவில்லை. சிட்கோ போன்ற தொழிற்பேட்டைகளையும் எம்.எல்.ஏ கொண்டுவரவில்லை. உடுமலை கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை பாக்கி, சர்க்கரை ஆலை ஊழியர்களின் சம்பள நிலுவை ஆகியவற்றைப் பெற்றுத்தரவும் முயலவில்லை. ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேறவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

செய்தேனே! - ஜெயராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ., தி.மு.க

18 மலைவாழ் மக்களின் கிராமங்களுக்குத் தெருவிளக்கு, சாலை வசதி, வீடுகளுக்கு சோலார் விளக்கு வசதி செய்து கொடுத்திருக்கிறேன். திருமூர்த்தி அணையிலிருந்து தொகுதியிலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல பணிகள் நடந்துவருகின்றன. தனியார் பங்களிப்புடன் பத்து மேல்நிலைக் குடிநீர்த்தொட்டிகள் கட்டிக் கொடுத்திருக்கிறேன். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை புனரமைப்பு, காய்கறிகளுக்கான குளிர்பதனக் கிடங்கு, தக்காளி சாஸ் தொழிற்சாலை ஆகியவற்றைச் சட்டமன்றத்தில் வலியுறுத்தியிருக்கிறேன்.

மனோகரன் - ஜெயராமகிருஷ்ணன்
மனோகரன் - ஜெயராமகிருஷ்ணன்

கள நிலவரம்: தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் மறுபடியும் சீட் கேட்கிறார். அ.தி.மு.க-வில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மகேந்திரன், மாநில எம்.ஜி.ஆர் மன்றத் துணைச் செயலாளர் மனோகரன் ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். அ.ம.மு.க-வில் முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலு சீட் கேட்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வில் ஏற்பட்ட கோஷ்டிப்பூசல் இப்போதுவரை சரிசெய்யப்படவில்லை. அ.ம.மு.க பிரிக்கும் வாக்குகளும் அ.தி.மு.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இன்றைய சூழலில், மடத்துக்குளத்தில் தி.மு.க-வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - காங்கேயம்

சொன்னாரே? - கோபி, காங்கிரஸ்

முருங்கை விவசாயம், நெசவுத்தொழில் மேம்பாட்டுக்காகத் திட்டங்கள் கொண்டுவருவதாகச் சொன்னவர், செய்யவில்லை. வெள்ளக்கோவில் அருகே 600 ஏக்கர் பரப்பளவிலுள்ள வட்டமலை அணை, கடந்த 30 ஆண்டுகளாக நீரின்றி வறண்டுகிடக்கிறது. இந்த அணைக்கு நீர் கொண்டுவருவதற்காக எந்த நடவடிக்கையையும் எம்.எல்.ஏ எடுக்கவில்லை. காங்கேயம் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

செய்தேனே! - தனியரசு, எம்.எல்.ஏ., தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை

ஊதியூர், முத்தூர் ஆகிய பகுதிகளில் மூன்று மேம்பாலங்கள் கொண்டுவந்திருக்கிறேன். சுமார் ரூ.100 கோடியில் தொகுதி முழுக்க சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. முகாசிபிடாரியூர், ஒட்டப்பாறை பகுதிகளுக்கான குடிநீர்த் திட்டப் பணிகள் நடந்துவருகின்றன. பி.ஏ.பி பாசன விவசாயிகளின் தண்ணீர்ப் பிரச்னைக்குக் குரல் கொடுத்திருக்கிறேன். வட்டமலை அணைக்குத் தண்ணீர் கொண்டுவருவதற்காகத் தொடர்ந்து கோரிக்கைவைத்திருக்கிறேன்.

கோபி - தனியரசு
கோபி - தனியரசு

கள நிலவரம்: தனியரசுவின் செயல்பாடுகள் தொகுதியில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இம்முறை அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன், வெங்கு மணிமாறன் சீட் கேட்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியும் இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருக்கிறதாம். கூட்டணியிலுள்ள த.மா.கா சார்பில் விடியல் சேகரும் சீட் எதிர்பார்க்கிறார். தி.மு.க-வில் மு.பெ.சாமிநாதன், கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். கூட்டணியில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபியும் சீட்டுக்காக முயல்கிறார். எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் பட்சத்தில் மட்டுமே நிலவரம் மாற வாய்ப்பு உண்டு. மற்றபடி, அ.தி.மு.க-வில் வலுவான வேட்பாளர்கள் இல்லாதது, சிட்டிங் எம்.எல்.ஏ மீதான அதிருப்தி ஆகியவற்றால் தி.மு.க-வின் கையே தொகுதியில் ஓங்கியிருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திருப்பத்தூர் (சிவகங்கை)

சொன்னாரே? - அசோகன், அ.தி.மு.க

`குடிநீர்ப் பிரச்னையைச் சரிசெய்வேன்’ என்றவர், செய்யவில்லை. பொது அரங்கம், பேருந்து நிலையங்களை மட்டும் அதிக அளவில் கட்டியிருக்கிறார். அதிலும் அவருடைய பெயரை ‘காப்பர்’ எழுத்தில் பொறித்துக்கொள்கிறார்; அதற்கே பெரிய தொகை செலவாகிவிடும். தொகுதியின் அடிப்படைத் தேவைகளைக்கூட பெரியகருப்பன் செய்துதரவில்லை. சொல்லிக்கொள்ளும்படி ஒரு பணியும் செய்யவில்லை.

செய்தேனே! - கே.ஆர்.பெரியகருப்பன், எம்.எல்.ஏ., தி.மு.க

பெரிய திட்டங்களைக் கொண்டுவரவில்லையென்றாலும், தொகுதிக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறேன். திருப்பத்தூர் தற்காலிகப் பேருந்து நிலையம் அருகே

ரூ.75 லட்சம் மதிப்புள்ள செம்மொழிப் பூங்கா கொண்டு வந்திருக்கிறேன். தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருப்பத்தூர் பகுதியின் குடிநீர், சாலை வசதிகளைச் சீர்செய்திருக்கிறேன். தி.மு.க ஆட்சிக்காலத்தில் சிங்கம்புணரியில் கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரத்தைத் திறக்கவிடாமல் அரசியல் செய்கிறார்கள். சிங்கம்புணரியில் கட்டப்பட்ட உழவர் சந்தையும் கிடப்பில் கிடக்கிறது.

அசோகன் - கே.ஆர்.பெரியகருப்பன்
அசோகன் - கே.ஆர்.பெரியகருப்பன்

கள நிலவரம்: தி.மு.க-வில் பெரியகருப்பன் மீண்டும் சீட் கேட்கிறார். அ.தி.மு.க-வில் கழகச் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ், ஆபத்தாரணபட்டி பிரபு, பொன்மணி பாஸ்கரன் ஆகியோர் சீட்டுக்கு முயல்கிறார்கள். மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனுக்கு காரைக்குடி கிடைக்கவில்லையென்றால், திருப்பத்தூரில் சீட் கேட்பார் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப்பூசலால், தொகுதியில் உதயசூரியன் உதிப்பதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - மானாமதுரை

சொன்னாரே? - கரு.காசிலிங்கம் என்கிற இலக்கியதாசன், தி.மு.க

`ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேல்நிலைப் பள்ளிகளுக்குக் கூடுதல் கட்டடங்கள் கட்டித்தருவேன்; இளையான்குடி பகுதியிலுள்ள ஊர்களுக்குக் குடிநீர் கிடைக்கச் செய்வேன்; மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் முதல் கன்னார் தெரு வரை தரைப்பாலம் அமைப்பேன்; திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைப்பேன்’ என்று அள்ளிவிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

செய்தேனே! - நாகராஜன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

2019 இடைத்தேர்தலில் நான் வெற்றிபெற்ற பிறகு, தொகுதியின் மூன்று யூனியன்களுக்கும் தேவையான கோரிக்கைகளைச் சட்டமன்றத்தில் எடுத்துவைத்துள்ளேன். வைகை ஆற்றிலுள்ள கருவேல மரங்களை ஜே.சி.பி மூலம் சுத்தம் செய்திருக்கிறோம். மூன்று பேரூராட்சிகளில் சோலார் விளக்குகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். மண்பாண்டத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று குறுமணல் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம். வைகை, குண்டாறு இணைவதால் மானாமதுரை தொகுதி முழுமையாகப் பயனடையவிருக்கிறது. கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க, பல முயற்சிகளை எடுத்துள்ளேன். திருப்புவனம் பேருந்து நிலையத்தின் அடிக்கல் நாட்டுவிழா விரைவில் நடைபெறவுள்ளது.

கரு.காசிலிங்கம் - நாகராஜன்
கரு.காசிலிங்கம் - நாகராஜன்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன், வழக்கறிஞர் அழகுமலை உள்ளிட்டோர் சீட்டுக்குக் காய்நகர்த்துகிறார்கள்.

தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கை மாறன், முன்னாள் அமைச்சர் செல்வராஜின் மகள் சித்திரை செல்வி, கரு.காசிலிங்கம் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு உள்ளது. தி.மு.க-வில் நடக்கும் உள்ளடி வேலைகளால் தொகுதி அ.தி.மு.க-வுக்குச் சாதகமாகவே இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism