மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி

அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி

கட்சிக்காரர்கள் வீட்டு நல்லது கெட்டதுகளுக்கும் தவறாமல் சென்றுவிடுகிறார். ஆனால், பத்திரிகையாளர்கள் என்றால் மட்டும் காத தூரம் ஓடிவிடுகிறார்.

என்ன செய்தார் அமைச்சர்? - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி - சங்கரன்கோவில்

அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத எஃகு கோட்டையான சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில், கடந்த 1991-ம் ஆண்டு தொடங்கி நடந்த தேர்தல்களில் (இடைத்தேர்தல் உட்பட) தொடர்ச்சியாக ஆறு முறை அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைத்த ராஜலட்சுமிக்கு அமைச்சர் பதவியும் தேடிவந்தது. மூத்த நிர்வாகிகளைக் கண்டால் ‘அண்ணே...’ என்று பாசத்தோடு பழகுபவர், கட்சிக்காரர்கள் வீட்டு நல்லது கெட்டதுகளுக்கும் தவறாமல் சென்றுவிடுகிறார். ஆனால், பத்திரிகையாளர்கள் என்றால் மட்டும் காத தூரம் ஓடிவிடுகிறார். கடந்த ஐந்து வருடங்களில் அமைச்சர் ராஜலட்சுமி செய்ததும், செய்யத் தவறியதும் என்னென்ன?

சொன்னாரே! - அன்புமணி கணேசன், தி.மு.க

`போக்குவரத்து நெரிசலைக் குறைப்பேன், நெசவாளர்களின் பிரச்னைகளைக் களைவேன்’ என்றவர், அதைச் செய்யவில்லை. தொகுதியில் 5,000-க்கும் அதிகமான விசைத்தறிகள் இருக்கின்றன. நூல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு ஆகியவற்றால் விசைத்தறித் தொழில் நலிவடைந்துவரும் நிலையில், அதை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய பேருந்து நிலையத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவில்லை. ரயில்வே மேம்பாலம் அமைக்கவோ, புதிய ரயில்களைக் கொண்டுவரவோ மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கவில்லை. அமைச்சரால் இந்தத் தொகுதிக்கு எந்த நன்மையுமில்லை.

செய்தேனே! - வி.எம்.ராஜலட்சுமி, அமைச்சர், அ.தி.மு.க

குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க தாமிரபரணி நதியிலிருந்து கூட்டுக்குடிநீர்த் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறேன். நெல்லை-ராஜபாளையம் சாலையை அகலப்படுத்தி, போக்குவரத்து வசதி கிடைக்க வழிசெய்திருக்கிறேன். சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையப் பணி விரைவில் தொடங்கப்படும். திருவேங்கடத்தில் புதிய தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. தொகுதியிலுள்ள வன்னிகோனேந்தல் பகுதியில் எலுமிச்சை ஆராய்ச்சி மையம், சின்னக்கோயிலான்குளம் கிராமத்தில் ஆட்டின ஆராய்ச்சி மையம் கொண்டுவர முயன்றுவருகிறேன். பள்ளிகளுக்குக் கூடுதல் கட்டடங்கள், அம்மா மினி கிளினிக் கொண்டுவந்தது எனப் பல பணிகளைச் செய்திருக்கிறேன்.

வி.எம்.ராஜலட்சுமி, அன்புமணி கணேசன்
வி.எம்.ராஜலட்சுமி, அன்புமணி கணேசன்

கள நிலவரம்: பட்டியல் சமூகத்தினர், முக்குலத்தோர், யாதவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் வசிக்கும் இந்தத் தொகுதியில் அ.தி.மு.க வலுவாக இருக்கிறது. அ.ம.மு.க-வுக்கும் இந்தத் தொகுதியில் கணிசமான வாக்குகள் இருக்கின்றன.

அ.தி.மு.க சார்பாக மீண்டும் போட்டியிடும் முனைப்பில் அமைச்சர் ராஜலட்சுமி இருக்கிறார். மகளிரணி இணைச் செயலாளரான சுவர்ணா, முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி ஆகியோரும் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். தி.மு.க-வில் அன்புமணி கணேசன், தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் துரை, முன்னாள் அமைச்சர் தங்கவேலு, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெயகுமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஸ்ரீகுமார் ஆகியோர் சீட் எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.க வாக்குகளை அ.ம.மு.க கணிசமாகப் பிரிக்க வாய்ப்பிருப்பதால், தொகுதி தி.மு.க-வுக்குச் சாதகமாகவே இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திருப்பூர் வடக்கு

சொன்னாரே? - மு.பெ.சாமிநாதன், தி.மு.க

`அரசு பொறியியல் கல்லூரி, அரசு மருத்துவமனை கொண்டுவருவேன்’ என்றார், ஆனால் செய்யவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகமுள்ள இத்தொகுதியில், அரசு சார்பில் குடியிருப்புகள், விடுதி வசதிகள் இல்லை. அடிக்கல் நாட்டப்பட்டு பல வருடங்களாகியும் இ.எஸ்.ஐ மருத்துவமனை கொண்டுவரப்படவில்லை. சாலைகள் மோசமாக உள்ளன. பல மேம்பாலங்கள் திட்டமாக அறிவிக்கப்பட்டதோடு சரி. குடிநீர்ப் பிரச்னைகள் முழுமையாகத் தீர்க்கப்பட எம்.எல்.ஏ முயலவில்லை.

செய்தேனே! - விஜயகுமார், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

திருப்பூர் 4-வது கூட்டுக்குடிநீர்த் திட்டம் கொண்டுவந்திருக்கிறோம். இதனால், இந்த மாநகராட்சி முழுமைக்குமே அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தண்ணீர்ப் பிரச்னையே இருக்காது. 10 ஊராட்சிகளுக்கு அன்னூர் - அவிநாசி கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் நடந்துவருகின்றன. மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்திருக்கிறோம். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 2,100 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக்கொடுத்திருக்கிறோம். ஏழு அரசுப் பள்ளிகள் தரமுயர்த்தப்பட்டிருக்கின்றன. கோர்ட்டில் வழக்கு நிலுவையிலிருப்பதால், இ.எஸ்.ஐ மருத்துவமனை கொண்டுவருவது தாமதமாகிறது. பின்னலாடை வாரியம் கொண்டுவருவதற்கும் கோரிக்கைவைத்திருக்கிறேன்.

மு.பெ.சாமிநாதன், விஜயகுமார்
மு.பெ.சாமிநாதன், விஜயகுமார்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ விஜயகுமார், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ சிவசாமி ஆகியோர் சீட்டுக்காகக் காய்நகர்த்துகின்றனர். தி.மு.க-வில் வடக்கு மாநகரப் பொறுப்பாளர் தினேஷ்குமார், மத்திய மாவட்டப் பொறுப்பாளர் செல்வராஜ் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். தி.மு.க கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொகுதியை எதிர்பார்க்கிறது. தற்போதைய நிலவரப்படி, இரு கட்சிகளிலும் கடுமையான கோஷ்டிப்பூசல் நிலவுகிறது. எனவே, தொகுதியில் இழுபறியான சூழலே நிலவுகிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பல்லடம்

சொன்னாரே? - கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க

`விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன், குடிநீர்ப் பிரச்னையைத் தீர்ப்பேன்’ என்றார். ஆனால், விசைத்தறித் தொழிலாளர்களின் கூலி நிர்ணயப் பிரச்னைகூட சரிசெய்யப்படவில்லை. தொகுதிக்குள் 15 நாள்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் கிடைக்கிறது. பல்லடம் அரசு மருத்துவமனையில் நவீன கருவிகளோ வசதிகளோ இல்லை. மங்கலம் நால்ரோட்டில் மேம்பாலம், பல்லடத்தில் மின்மயானக் கோரிக்கை என்று எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

செய்தேனே! - நடராஜன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

கோழியின மற்றும் தீவன ஆராய்ச்சி நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குப் புதிய கட்டடம், மாவட்டக் கல்வி அலுவலகம், மின்சார வாரியக் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம், அரசு கலைக் கல்லூரி, 1,200 அடுக்குமாடி குடியிருப்புகள், மங்கலம் பகுதி சாலை விரிவாக்கம் எனப் பல திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறேன். 155 குக்கிராமங்களுக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து ரூ.100 கோடியில் கூட்டுக்குடிநீர்த் திட்ட வேலைகள் நடந்துவருகின்றன. இரண்டு துணை மின் நிலையங்கள், மூன்று புதிய கால்நடைக் கிளை நிலையங்கள் கொண்டுவந்திருக்கிறோம்.

கிருஷ்ணமூர்த்தி,  நடராஜன்
கிருஷ்ணமூர்த்தி, நடராஜன்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ நடராஜன், முன்னாள் கோவை மேயர் செ.ம.வேலுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பெயர்கள் அடிபடுகின்றன. தி.மு.க-வில் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம் ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். இரு கட்சிகளிலும் கடுமையான கோஷ்டிப்பூசல் நிலவுகிறது. விமர்சனங்களைத் தாண்டி, தொகுதிக்கென சில திட்டங்களைக் கொண்டுவந்ததில் எம்.எல்.ஏ நடராஜன் மீது தொகுதிக்குள் பாசிட்டிவான பார்வை இருக்கிறது. தற்போதைய சூழலில், தொகுதியில் அ.தி.மு.க-வின் கையே ஓங்கியிருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அறந்தாங்கி

சொன்னாரே? - ராமச்சந்திரன், காங்கிரஸ்

குடிநீர் விநியோகம், சாலைவசதி, பாதாளச் சாக்கடைப் பிரச்னை எனத் தொகுதி முழுவதுமே அடிப்படை வசதிகளே செய்யப்படவில்லை. நகர்ப் பகுதியிலுள்ள பல குளங்கள் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கின்றன. மணமேல்குடி, மீமிசல், ஏம்பலில் இன்னும் பேருந்து நிலையம் கொண்டுவரவில்லை. அறந்தாங்கி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படாமல் இருக்கிறது. ‘அடிப்படை வசதிகளைச் செய்து முடிப்பேன்’ என்ற வாக்குறுதியைக்கூட நிறைவேற்றவில்லை.

செய்தேனே! - இரத்தினசபாபதி, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

கட்டுமாவடி உள்ளிட்ட நான்கு இடங்களில் மீன்பிடி இறங்குதளங்குகளைக் கொண்டுவந்திருக்கிறேன். 20 நகரும் அங்காடிகள், மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டிருக்கின்றன. அம்பலவானேந்தலில் ஆரம்பச் சுகாதார நிலையம், அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு ஸ்கேன் உள்ளிட்ட நவீன கருவிகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இரண்டு பள்ளிகளைத் தரமுயர்த்திக் கொடுத்திருக்கிறேன். தாலுகா அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றுக்குப் புதுக் கட்டடம் கட்டித் தந்திருக்கிறேன். 80 சதவிகிதக் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்திருக்கிறேன்.

ராமச்சந்திரன், இரத்தினசபாபதி
ராமச்சந்திரன், இரத்தினசபாபதி

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ இரத்தினசபாபதி, முன்னாள் எம்.எல்.ஏ ராஜநாயகம், நகரச் செயலாளர் ஆதிமோகன், ஒன்றியச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் சீட்டுக்காக மோதுகிறார்கள்.

தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகம், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் பரணி கார்த்திகேயன் ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். கூட்டணியிலுள்ள காங்கிரஸ் சார்பில் களமிறங்க திருச்சி எம்.பி திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் சீட் எதிர்பார்க்கிறார். அ.ம.மு.க சார்பில் போட்டியிட மாநில அமைப்புச் செயலாளர் சிவசண்முகம் சீட் கேட்கிறார். தொகுதிக்குள் பெரிதாக வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறது. அ.ம.மு.க பிரிக்கும் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்கு மைனஸ். தற்போதைய சூழலில் தொகுதிக்குள் தி.மு.க-வின் கையே ஓங்கியிருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - ஆலங்குடி

சொன்னாரே? - ஞான.கலைச்செல்வன், அ.தி.மு.க

ஆலங்குடிக்கு அரசு கலைக் கல்லூரி, கீரமங்கலத்தை மையமாகவைத்து ஊராட்சி ஒன்றியம் கொண்டுவருவதாகக் கூறியிருந்தார். எதையுமே செய்யவில்லை. ஆலங்குடி, கீரமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பூ, காய்கறி விவசாயம் அதிகம் நடக்கிறது. விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் குளிர்பதனக் கிடங்கு கொண்டுவருவதாகக் கூறியிருந்தார். அதுவும் வரவில்லை. தொகுதி முழுவதும் குடிநீர்ப் பிரச்னை நிலவுகிறது.

செய்தேனே! - சிவ.வீ.மெய்யநாதன், எம்.எல்.ஏ., தி.மு.க

வல்லவாரியில் துணை மின்நிலையம், கோவிலூரில் உதவிப் பொறியாளர் அலுவலகம், கீரமங்கலத்தில் கூடுதல் துணை மின்நிலையம் கொண்டுவந்தோம். ஏழு அரசுப் பள்ளிகளுக்குப் புதிய கட்டடங்களைக் கட்டித் தந்திருக்கிறோம். தொகுதிக்குள் குடிநீர்ப் பிரச்னை தீர்ந்திருக்கிறது. சமுதாயக் கூடங்கள், புதிய ஊராட்சி ஒன்றியம், அரசு கலைக் கல்லூரி, குளிர்பதனக் கிடங்கு, புதிய தொழிற்சாலைகள் கொண்டுவர சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்பதால், அரசு எங்கள் குரலை கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை.

ஞான.கலைச்செல்வன், சிவ.வீ.மெய்யநாதன்
ஞான.கலைச்செல்வன், சிவ.வீ.மெய்யநாதன்

கள நிலவரம்: தொகுதிக்குள் மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சிவ.வீ.மெய்யநாதன், டாக்டர் சதீஸ், ஒன்றியச் செயலாளர் ஞான.இளங்கோவன் ஆகியோர் சீட் எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.க-வில் ஞான.கலைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாச்சலத்தின் மகன் வீரபாண்டி, குழ.சண்முகநாதன் ஆகியோர் சீட்டுக்காக முட்டி மோதுகின்றனர். கட்சியின் கட்டமைப்பு வலுவாக இருப்பதால், இன்றைய சூழலில் தொகுதி தி.மு.க-வுக்குச் சாதகமாக இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - மதுராந்தகம்

சொன்னாரே? - வெற்றிச்செல்வன், நாம் தமிழர் கட்சி

`மதுராந்தகத்தில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கொண்டுவருவேன்’ என்றார். ஆனால் கொண்டுவரவில்லை. தொகுதிக்குள் குடிநீர்ப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. தேர்தலையொட்டி புதிதாகச் சாலைகள் போட்டு, பேருந்து விட்டிருக்கிறார்கள். கடந்த ஐந்து வருடங்களாக என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. கிராமசபைக் கூட்டம் போட்டு, மனுக்கள் வாங்குவதோடு தன் பணி முடிந்துவிடுவதாக நினைத்துக்கொண்டிருக்கும் எம்.எல்.ஏ., பெயரளவில்தான் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

செய்தேனே! - க.புகழேந்தி, எம்.எல்.ஏ., தி.மு.க

200 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் இருக்கும் மதுராந்தகம் ஏரியைத் தூர்வாருவதற்கு 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெற்றிருக்கிறேன். இது என்னுடைய வாழ்நாள் சாதனை. இதனால், 3,000 ஏக்கர் நிலம் முப்போகம் சாகுபடியாகும்; வெள்ள அபாயங்கள் தடுக்கப்படும். பாலாற்றில் ஈசூர் - வள்ளிபுரம் தடுப்பணை கட்டப்பட்டிருக்கிறது. எம்.எல்.ஏ நிதியைக் கொண்டு தொகுதியின் அடிப்படைப் பிரச்னைகள் அனைத்தையும் சரிசெய்திருக்கிறேன்.

வெற்றிச்செல்வன், க.புகழேந்தி
வெற்றிச்செல்வன், க.புகழேந்தி

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் மாநில மகளிரணி இணைச் செயலாளர் கணிதா சம்பத், மாவட்ட மகளிரணிச் செயலாளர் மரகதம் குமாரவேல், முன்னாள் சேர்மன் பிரமிளா விவேகானந்தன் ஆகியோர் சீட் எதிர்பார்க்கின்றனர். தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி சீட் கேட்கிறார். செய்யூர் தொகுதி வி.சி.க-வுக்கு ஒதுக்கப்படும்பட்சத்தில், இந்தத் தொகுதியை ஆர்.டி அரசு எதிர்பார்க்கிறார். மதுராந்தகத்தில் 2016 சட்டமன்றத் தேர்தலின்போது பா.ம.க 16,000 வாக்குகளும், தே.மு.தி.க 11,700 வாக்குகளும் பெற்றுள்ளன. இக்கட்சிகள் அ.தி.மு.க கூட்டணியில் இருப்பது அ.தி.மு.க-வுக்கு பலம். எம்.எல்.ஏ மீது அதிருப்தி ஏதுமில்லாதது, கட்டமைப்பு வலுவாக இருப்பது தி.மு.க-வுக்கு பலம். இன்றைய சூழலில், போட்டி கடுமையாக இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - செய்யூர்

சொன்னாரே? - முனுசாமி, அ.தி.மு.க

`செய்யூரில் அரசுக் கல்லூரி கொண்டுவருவேன்’, `சூனாம்பேடு, செய்யூர், புதுப்பட்டினம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளைப் பேரூராட்சி ஆக்குவேன்’ என்றார். `தேங்காய் நார் தொழிற்சாலை, ஐ.டி.ஐ., தொழிற்சாலைகள் கொண்டுவருவேன்’ என்றார். ஆனால், ஒன்றையுமே செய்யவில்லை.

செய்தேனே! - ஆர்.டி.அரசு, எம்.எல்.ஏ., தி.மு.க

வாயலூர் தடுப்பணை, செய்யூர் நீதிமன்றம், பள்ளிக்குப் புதிய கட்டடங்கள் எனப் பல பணிகளைச் செய்திருக்கிறேன். செய்யூர் மருத்துவனையைத் தரமுயர்த்தியிருக்கிறேன். ஆலம்பரை கோட்டை புனரமைக்கப்பட்டுள்ளது. ஈ.சி.ஆரில் விபத்து அடிக்கடி நடைபெறுவதால், கடப்பாக்கம் சுகாதார நிலையத்துக்கு அவசர விபத்து சிகிச்சைப் பிரிவு வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். அரசுக் கல்லூரிக்காக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடமும் குறு, சிறு தொழிற்சாலைகளுக்காக அமைச்சர் பெஞ்சமினிடமும் நேரில் கோரிக்கை விடுத்தேன். ஆனால், நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்பதால், அரசு பாராமுகம் காட்டுகிறது.

முனுசாமி, ஆர்.டி.அரசு
முனுசாமி, ஆர்.டி.அரசு

அ.தி.மு.க-வில் மாவட்ட அவைத்தலைவர் தனபால், முன்னாள் எம்.எல்.ஏ செய்யூர் ராஜூ, சித்தாமூர் ஒன்றியச் செயலாளர் பிரவீன்குமார் ஆகியோர் சீட் எதிர்பார்க்கின்றனர். தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு, மாவட்டத் துணைச் செயலாளர் வெளிக்காடு ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் புதுப்பட்டு மோகன் ஆகியோர் முட்டி மோதுகின்றனர். கூட்டணியிலுள்ள வி.சி.க சார்பில் களமிறங்க பனையூர் பாபு, எழில் கரோலின் ஆகியோர் சீட் கேட்கின்றனர். 2016 தேர்தலில் தனித்தே 17,000 வாக்குகளைப் பெற்ற பா.ம.க., தற்போது கூட்டணியில் இருப்பது அ.தி.மு.க-வுக்கு பலம். இன்றைய சூழலில், இரட்டை இலை ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன!