Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
செல்லூர் ராஜூ

‘விஞ்ஞானி’ என்று பலரும் கிண்டலடித்தாலும் எதற்கும் அசராமல்... நெகட்டிவ் இமேஜையே பாசிட்டிவாக மாற்றிக்கொள்வதில் வல்லவரான அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மேற்கு தொகுதியில் இரு முறை வெற்றி பெற்றிருக்கிறார்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் செல்லூர் ராஜூ

‘விஞ்ஞானி’ என்று பலரும் கிண்டலடித்தாலும் எதற்கும் அசராமல்... நெகட்டிவ் இமேஜையே பாசிட்டிவாக மாற்றிக்கொள்வதில் வல்லவரான அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மேற்கு தொகுதியில் இரு முறை வெற்றி பெற்றிருக்கிறார்.

Published:Updated:
செல்லூர் ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
செல்லூர் ராஜூ
தேர்தல் பரபரப்பு பற்றிக்கொண்டது. அவரவர் தொகுதியில் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் தாங்கள் சொன்னதைச் செய்தார்களா? தொகுதியில் பலரிடமும் பேசி, தற்போதைய நிலவரத்தை இங்கே அளித்துள்ளோம்.

என்ன செய்தார் அமைச்சர்?

மதுரை மேற்கு

‘விஞ்ஞானி’ என்று பலரும் கிண்டலடித்தாலும் எதற்கும் அசராமல்... நெகட்டிவ் இமேஜையே பாசிட்டிவாக மாற்றிக்கொள்வதில் வல்லவரான அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மேற்கு தொகுதியில் இரு முறை வெற்றி பெற்றிருக்கிறார். சரி, தனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் அமைச்சர்?

2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் செல்லூர் ராஜூவை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் கோ.தளபதியிடம் பேசினோம். ``சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். மாடக்குளம் கண்மாயைத் தூர்வாரியிருந்தால், குடிநீர்ப் பிரச்னையைத் தீர்த்திருக்கலாம். குடிமராமத்துப் பணிகளையும் சரிவரச் செய்யவில்லை. தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், முல்லைப்பெரியாறிலிருந்து மதுரைக்குத் தண்ணீர் கொண்டுவருவதாக விழா நடத்துகிறார்கள். இவையெல்லாம் மக்களிடம் எடுபடாது. வருகிற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் தி.மு.க-வில் யார் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார்கள். அந்த அளவுக்கு அமைச்சர் மீது கடும் கோபத்திலிருக்கிறார்கள் மக்கள்” என்றார்.

கோ.தளபதி, 
 செல்லூர் ராஜூ
கோ.தளபதி, செல்லூர் ராஜூ

இது குறித்தெல்லாம் செல்லூர் ராஜூவிடம் விளக்கம் கேட்டோம். “போக்குவரத்து நெருக்கடியால் சிக்கித்தவித்த காளவாசலில் மேம்பாலம் கட்டியிருக்கிறேன். குரு தியேட்டர் அருகிலும் புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. மாடக்குளம் கண்மாய் நிறைந்திருக்கிறது. ஆனாலும், நிரந்தரமாகக் கண்மாயில் நீர் நிறைந்திருக்க வேண்டும் என்று கொடிமங்கலம் அருகே 17 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டுவருகிறது. 1,295 கோடி ரூபாயில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதிகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் பொய்யாக எதையாவது சொல்வார்கள். வருகிற தேர்தலில் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் முன்பைவிட அதிக வாக்குகளை அ.தி.மு.க பெறும்’’ என்றார்.

இந்தத் தொகுதியில் கம்யூனிஸ்ட்களுக்கு கணிசமான வாக்குகள் இருப்பதால், அது தி.மு.க கூட்டணிக்கு ப்ளஸ். தி.மு.க-வில் கோ.தளபதி, ஜெயராமன், இளமகிழன், டாக்டர் சரவணன், பொன்.சேதுராமலிங்கம் ஆகியோர் சீட் பெறுவதற்காக முட்டி மோதுகிறார்கள். காங்கிரஸில் கார்த்திகேயனும் காய்நகர்த்துகிறார்.

அ.தி.மு.க சார்பாக மீண்டும் செல்லூர் ராஜூ போட்டியிட வாய்ப்பு அதிகம். தே.மு.தி.க-வுடன் கூட்டணி தொடர்ந்தால் அந்தக் கட்சியின் மாநகரச் செயலாளர் சிவமுத்துகுமார் சீட் எதிர்பார்க்கிறார். அ.ம.மு.க-வில் மாவட்டச் செயலாளர் ஜெயபால், மாநிலச் செய்தித் தொடர்பாளர் வீர.வெற்றி பாண்டியன் ஆகியோரும் காய்நகர்த்துகிறார்கள்.

தொகுதியில் கடந்த பத்து வருடங்களாக அடிப்படைப் பிரச்னைகளே தீர்க்கப்படாததால், அ.தி.மு.க-வுக்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்ன செய்தார் எம்.எல்.ஏ?

ஒரத்தநாடு

சொன்னாரே? - டாக்டர் ராமநாதன், தே.மு.தி.க

திருவோணத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டுவருவதாக ராமச்சந்திரன் கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. வாய்க்கால்கள் தூர்வாராததால், பாசனத்துக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. சத்திரம் நிர்வாகத்துக்குச் சொந்தமான அரசு இடங்களைத் தனியாருக்கும், தன் ஆதரவாளர்களுக்கும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தாரைவார்க்கிறார். தொகுதியின் எம்.எல்.ஏ என்கிற முறையில் அதற்கு ராமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. `நெல்லின் ஈரப்பதத்தைப் போக்கும் உலர் ஆலை வேண்டும்’ என்ற விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக கஜா புயல் நேரத்தில் தொகுதிப் பக்கமே அவர் தலைகாட்டவில்லை.

டாக்டர் ராமநாதன், எம்.ராமச்சந்திரன்
டாக்டர் ராமநாதன், எம்.ராமச்சந்திரன்

செய்தேனே! - எம்.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., தி.மு.க

ஒரத்தநாடு புதூரில் 20 லட்சம் ரூபாய் செலவில் திருமண மண்டபம், பாப்பாநாடு திருமேனியம்மன் கோயில் குளம் புனரமைப்பு, கோனூர் நாட்டில் உணவுக்கூடம், 50 அரசுப் பள்ளிகளுக்கு சுத்திகரிப்பு குடிநீர், 30 பள்ளிகளுக்கு போர்வெல் அமைத்திருக்கிறேன். சாலைகளை மேம்படுத்தியிருக்கிறேன். தொகுதி வளர்ச்சிக்காகச் சட்டமன்றத்தில் 2,500 கேள்விகளை எழுப்பியிருக்கிறேன்.

கள நிலவரம்: தி.மு.க சார்பாக மீண்டும் போட்டியிட ராமச்சந்திரன் சீட் கேட்கும் நிலையில், சொந்தக் கட்சியினரே அவருக்கு எதிராகக் கலகம் செய்கிறார்கள். தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ மகேஷ் கிருஷ்ணசாமி, டாக்டர் அஞ்சுகம் பூபதி, பொன்னாப்பூர் ஆறுமுகம், மறைந்த மு.காந்தியின் மகன் கார்த்தி ஆகியோரும் முட்டி மோதுகிறார்கள். அ.தி.மு.க-வில் வைத்திலிங்கத்தின் மகன் பிரபு, ராஜமாணிக்கம் ரேஸில் இருக்கிறார்கள். அ.ம.மு.க-வின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சேகர் சீட் எதிர்பார்க்கிறார். தற்போது தி.மு.க-வுக்கு சாதகமாகவே ஒரத்தநாடு இருந்தாலும், கோஷ்டிப் பூசல்கள் வெற்றியை பாதிக்கச் செய்யலாம்.

தஞ்சாவூர்

சொன்னாரே? - காந்தி, அ.தி.மு.க

`ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடைகள் இடிக்கப்படுவதைத் தடுப்பேன்’ என்றார் நீலமேகம். ஆனால், செய்யவில்லை. பாதாளச் சாக்கடைத் திட்டம், சாலை வசதி, குடிநீர் பிரச்னை, போக்குவரத்து நெரிசல் என்று எந்தப் பிரச்னையையும் அவர் தீர்க்கவில்லை. எம்.எல்.ஏ-வை நம்பியிருக்காமல் அ.தி.மு.க-வினரான நாங்கள்தான் தஞ்சையின் தேவைகளைப் பூர்த்தி செய்துவருகிறோம்.

காந்தி - டி.கே.ஜி.நீலமேகம்
காந்தி - டி.கே.ஜி.நீலமேகம்

செய்தேனே! - டி.கே.ஜி.நீலமேகம், எம்.எல்.ஏ., தி.மு.க

ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக வீடுகள் இடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறேன். பழைய பேருந்து நிலையத்தில் கடைகளை இழந்தவர்களுக்கு டெண்டர் இல்லாமல் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறேன். ராஜகோரி சுடுகாட்டை ஸ்மார்ட் சிட்டி நிதியில் புனரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியிருக்கிறேன். ஐந்து புதிய ரேஷன் கடைகள், இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், அரசுப் பள்ளிகளுக்குக் கழிப்பறை, சுற்றுச்சுவர், அங்கன்வாடி கட்டடம், சாலை வசதி, குடிநீர் வசதி என்று தொகுதி நிதி முழுவதையும் செலவிட்டிருக்கிறேன்.

கள நிலவரம்: ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக கடைகள் இடிக்கப்பட்டபோது போராட்டத்தை முன்னெடுக்காதது நீலமேகத்துக்குச் சறுக்கலே. இங்கு தி.மு.க சார்பில் நீலமேகம், சண்.ராமநாதன், அஞ்சுகம் பூபதி, எஸ்.எஸ்.ராஜ்குமார் சீட் எதிர்பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வில் அறிவுடைநம்பி, காந்தி, திருஞானம் காய்நகர்த்துகின்றனர். இன்றுள்ள சூழலில் தொகுதியில் தி.மு.க-வுக்குச் சாதகமாகவே காற்று வீசுகிறது.

கோவை வடக்கு

சொன்னாரே? - மீனா லோகு, தி.மு.க

தொகுதி முழுவதும் சாலைகளை மேம்படுத்துவேன் என்றார். சங்கனூர் பள்ளத்தைத் தூர்வாரி, ரிங் ரோடு அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையைக்கூட எம்.எல்.ஏ அருண்குமார் கண்டுக்கொள்ளவில்லை.கணபதி டெக்ஸ்டூல் பாலம் முதல் அத்திப்பாளையம் பிரிவு வரை விரிவாக்கம் செய்தால் அங்கு போக்குவரத்து நெருக்கடியும், விபத்துகளும் குறையும். அதைச் செய்யவில்லை. நல்லாம்பாளையம், மணிகாரம்பாளையம், சத்தி சாலை, ராமகிருஷ்ணா மில்ஸ் அனைத்தையும் இணைத்து திட்ட சாலை கொண்டுவர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. அதையும் நிறைவேற்றவில்லை. பத்து நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது.

பி.ஆர்.ஜி.அருண்குமார், மீனா லோகு
பி.ஆர்.ஜி.அருண்குமார், மீனா லோகு

செய்தேனே! - பி.ஆர்.ஜி.அருண்குமார், எம்.எல்.ஏ, அ.தி.மு.க

அனைத்துப் பகுதிகளிலும் சாலைகள் போட்டிருக்கிறோம். திட்டசாலைப் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. டெக்ஸ்டூல் டு அத்திப்பாளையம் பிரிவு சாலை விரிவாக்கப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படவிருக்கிறது. கவுண்டம்பாளையம் - வடவள்ளி குடிநீர்த் திட்டத்தில் தண்ணீர் அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும். மருதமலையில் லிஃப்ட் அமைக்க விரைவில் டெண்டர் விடப்படும்.

கள நிலவரம்: சமீபத்தில், கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அருண்குமார், கவுண்டம்பாளையம் தொகுதியைக் குறிவைத்திருக்கிறாராம். இதனால், அ.தி.மு.க தரப்பில் ‘நமது அம்மா’ நாளிதழின் வெளியீட்டாளர் சந்திரசேகரின் பெயர் அடிபடுகிறது. தி.மு.க-வில் முன்னாள் கவுன்சிலர் மீனா லோகு, ஐடி விங் மாநில துணைச் செயலாளர் தமிழ்மறை, பகுதிச் செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் வேட்பாளர் தேர்வில் நேர்மையாகச் செயல்பட்டாலே தி.மு.க இங்கு வெற்றிபெறலாம்!

கோவை தெற்கு

சொன்னாரே? - மயூரா ஜெயக்குமார், காங்கிரஸ்

தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பேன் என்றார் எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன். இந்தத் தொகுதியில் ஜாப் ஆர்டரின் அடிப்படையில் பணி செய்யும் நகைப்பட்டறைத் தொழிலாளர்கள் ஜி.எஸ்.டி வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வரியை நீக்க துரும்பையும் கிள்ளிப்போடவில்லை அவர். கமிஷனுக்காக மட்டுமே கட்டப்பட்ட மேம்பாலங்கள் போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லை. காந்திபுரம் மேம்பாலத்தை ‘மரண பாலம்’ என்றே மக்கள் அழைக்கின்றனர்.

மயூரா ஜெயக்குமார்,  அம்மன் அர்ஜுனன்
மயூரா ஜெயக்குமார், அம்மன் அர்ஜுனன்

செய்தேனே! - அம்மன் அர்ஜுனன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

கொரோனா காலகட்டத்தில் 62,000 மக்களுக்குச் சொந்தச் செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். கல்லுக்குழிப் பகுதியில் சிமென்ட் சாலை அமைத்திருக்கிறேன். குடிசைப் பகுதியில் வசித்த மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, வெள்ளலூர், கோவைப்புதூர் பகுதிகளில் வீடு கட்டி கொடுத்திருக்கிறோம். சி.எம்.சி காலனியில் வசித்த துப்புரவுப் பணியாளர்களுக்கு அதே இடத்தில் வீடுகட்டிக் கொடுக்கவிருக்கிறோம். தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக 10.1 கிலோமீட்டர் தொலைவுக்கு பெரிய மேம்பாலம் அமைக்கவிருக்கிறோம். தொண்டாமுத்தூர் சாலையில் தங்க நகைப்பூங்கா கொண்டு வரவிருக்கிறோம்.

கள நிலவரம்: சிட்டிங் எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனுக்கு தொகுதியில் நற்பெயர் இல்லை. அவரே மீண்டும் சீட் எதிர்ப்பார்க்கிறார். பா.ஜ.க இங்கு போட்டியிடும் பட்சத்தில் வானதி சீனிவாசன் களமிறங்கலாம். தி.மு.க கூட்டணியில், காங்கிரஸில் மயூரா ஜெயக்குமார் முட்டி மோதுகிறார். தி.மு.க-வில் மகளிரணி மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், சிங்காநல்லூரின் தற்போதைய எம்.எல்.ஏ கார்த்திக், மாநில பொதுக்குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. வேட்பாளர் தேர்வில் கோட்டைவிடாமல் இருந்தாலே இங்கு தி.மு.க சாதித்துவிடும்.

பொன்னேரி (தனி)

சொன்னாரே? - டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், தி.மு.க

தொகுதி முழுவதும் தரமான சாலைகளை அமைப்பேன் என்றார். சொன்னதோடு சரி... பொன்னேரி பேருந்து நிலைய சாலையே குண்டும் குழியுமாக இருக்கிறது. 2016 தேர்தலுக்காகச் செலவழித்த பணத்தை மீண்டும் எடுப்பதற்கே தொகுதி எம்.எல்.ஏ பலராமனுக்கு நேரம் போதவில்லை. தொகுதிக்காக அவர் துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.

டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், பலராமன்
டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், பலராமன்

செய்தேனே! - பலராமன், பொன்னேரி எம்.எல்.ஏ., அ.தி.மு.க

பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரத்துக்காக 27 கோடி ரூபாயில் பணிகளை முடித்திருக்கிறோம். இதனால், 56 மீனவ கிராமங்கள் பலனடைந்திருக்கின்றன. பொன்னேரியில் 60 கோடி ரூபாயில் பாதாளச் சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. குமணஞ்சேரியிலிருந்து பொன்னேரிக்கு 13 கோடி ரூபாயில் மேம்பாலம், மீஞ்சூர் பஜார், தண்டியம்பாக்கம், எலியம்பேடு ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன.

கள நிலவரம்: பலராமனின் செயல்பாடுகள் ஓரளவுக்கு மக்களிடம் சென்றடைந்திருப்பது அவருக்கு ப்ளஸ். மீண்டும் அவரே தனித் தொகுதியான பொன்னேரியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க-வில் மீஞ்சூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ் ராஜ், சோழவரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் செல்வசேகரன் ஆகியோர் காய்நகர்த்துகிறார்கள். கூட்டணிக் கட்சிகள் பெரிய ஆர்வம் காட்டாததால், தி.மு.க - அ.தி.மு.க நேரடியாக இங்கு மோதுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இன்றுள்ள சூழலில் பலராமன் கடுமையாக உழைத்தால், தொகுதியை இரட்டை இலை தட்டிச் சென்றுவிடும்.

கும்மிடிப்பூண்டி

சொன்னாரே? - சி.ஹெச்.சேகர், தி.மு.க

தொகுதியின் சுற்றுச்சூழல் சீர்கேடு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பேன் என்றார். ஆனால், இன்றுவரை திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களின் மருத்துவ மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கும்மிடிப்பூண்டி சிப்காட் அருகே கொட்டுகிறார்கள். 2012-ல், நான் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ-வாக இருந்தபோது, போக்குவரத்து பணிமனையைக் கொண்டுவர அனுமதி வாங்கினேன். இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. பெரியபாளையம் பைபாஸ் சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் தொகுதி எம்.எல்.ஏ விஜயகுமார் எந்தத் தீர்வையும் முன்வைக்கவில்லை.

சி.ஹெச்.சேகர், கே.எஸ்.விஜயகுமார்
சி.ஹெச்.சேகர், கே.எஸ்.விஜயகுமார்

செய்தேனே! - கே.எஸ்.விஜயகுமார், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

கும்மிடிப்பூண்டி டவுன் சாலை 17 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஊத்துக்கோட்டையிலிருந்து திருவள்ளூருக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. `100 பேருந்துகள் இயங்கினால் மட்டுமே பணிமனை அமைக்கப்படும்’ என்று போக்குவரத்து அமைச்சர் கூறியிருக்கிறார். இருந்தாலும், அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன்.

கள நிலவரம்: தொகுதிக்குள் விஜயகுமாரின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அ.தி.மு.க-வில் விஜயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. தி.மு.க-வில் சி.ஹெச்.சேகர், டி.ஜெ.கோவிந்தராஜன், இ.ஏ.பி.சிவாஜி ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. பா.ம.க-வில் அம்பத்தூர் கே.என்.சேகர் காய்நகர்த்துகிறார். தி.மு.க-வினர் சரியான வேட்பாளரைக் களமிறக்கினால், உதயசூரியன் வெளிச்சம் பாய்ச்சலாம்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் செல்லூர் ராஜூ