Published:Updated:

ரூ.49 கோடி கடன்! வேட்பு மனுவில் கமல்ஹாசன் குறிப்பிட்ட மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

`எங்களுக்கு வேறு தொழில் இருக்கிறது. அரசியல் எங்கள் தொழில் இல்லை. அரசியல் எங்கள் கடமை’ என வேட்பு மனுத் தாக்கல் செய்த கமல்ஹாசன் பேச்சு.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். முதன்முறையாக தேர்தலில் களம்காணும் அவர், நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது நடந்த சம்பவங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.

கமல்
கமல்

முன்னதாக, பா.ஜ.க சார்பில் அவரை எதிர்த்துப் போட்டியிடும், அந்தக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது அவர், ``ஸ்கிரீனில் வந்துவிட்டால் மட்டும் போதாது. ஏப்ரல் 6-க்குப் பிறகு கமல் புதிய படத்துக்கோ, அடுத்த `பிக் பாஸ்’ சீஸனுக்கோ தயாராகிடுவார்” என்று சாடியிருந்தார்.

கமல் வருவதற்கு முன்பே, வேட்புமனு தயாரிக்கும் பணிகளில் மய்ய நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர். தனி விமானம் மூலம் கோவை வந்த கமல், 2:15 மணி அளவில் கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியின் (மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம்) அலுவலகத்துக்கு வந்தார்.

கமல் வருகிறார் என்றதும், மாநகராட்சி ஊழியர்கள் அவரைப் பார்ப்பதற்கு அதிக ஆர்வம்காட்டினர். பணிகளுக்கு பிரேக்விட்டு, அனைவரும் தங்களது மொபைலுடன் கமலை போட்டோ எடுக்க காத்துக்கொண்டிருந்தனர்.

அ.தி.மு.க., தி.மு.க-வை அசைத்துப் பார்க்குமா கமல் கூட்டணி?

உள்ளே வந்த கமல் எல்லோருக்கும் சிரித்தபடியே வணக்கம்வைத்து தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்குள் சென்றார். அவருடன் இரண்டு பேர் மட்டும் வந்திருந்தனர். உட்கார்ந்தபடியே கமல்ஹாசன் வேட்புமனுவை, அதிகாரியிடம் வழங்கினார். அவ்வப்போது, அதிகாரி சில கேள்விகளை எழுப்பினார். கமலுடன் வந்திருந்தவர்கள் அதற்கு பதில் அளித்தனர்.

மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் தேர்தல் அலுவலர் அறைக்குச் செல்ல முயன்றார். ஆனால், ஏற்கெனவே இருவர் உள்ளே இருப்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அறையிலிருந்து ஒருவர் வெளியில் வர, மகேந்திரன் உள்ளே சென்றார்.

கமல் செய்தியாளர்களைச் சந்திக்கும் இடத்தில் கூட்டம் முண்டியடித்துக்கொண்டிருந்தது. போலீஸார் அங்கே வந்து, ஊடகங்களைத் தவிர, மய்யம் ஐடி விங் டீம் உள்ளிட்ட அனைவரையும் விரட்டினர். வேட்புமனுத் தாக்கல் செய்து வெளியில் வந்த கமலுடன் செல்ஃபி எடுக்க மாநகராட்சி ஊழியர்கள் பலர் முயன்றனர்.

கமல்
கமல்

ஆனால், கமல் யாருடனும் செல்ஃபி எடுக்கவில்லை. செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, `என் பின்னால் யாரும் நிக்க வேண்டாம்’ என்று உத்தரவுபோட்டுவிட்டுப் பேசத் தொடங்கினார்.

``நேர்மைதான் எங்கள் தேர்தல் வியூகம். எங்களிடம் இருக்கும் அந்த நேர்மை, அவர்களிடம் இருக்காது (பா.ஜ.க) என நினைக்கிறேன். 234 தொகுதிகளையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன். கோவையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். முக்கியமாக, இங்கே மதநல்லிணக்கம் இல்லாமல் செய்ய முயற்சிகள் நடந்துவருகின்றன. அதற்கு எதிரான குரலாக இருக்க நினைக்கிறேன். கோவையின் புகழ் மங்காமலிருக்க, அதை மீட்டெடுக்க இங்கே போட்டியிடுகிறேன்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கோவையில் விமான நிலைய விரிவாக்கம், சாலை விரிவாக்கம் பணிகள் முடிக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றையெல்லாம் செய்து, இதை இந்தியாவின் முன்மாதிரிப் பகுதியாகச் செய்துகாட்ட முடியும். என்னை வெளி ஆளாக மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இனி முடிந்தவரை இங்கு மையம்கொண்டுதான், மற்ற இடங்களுக்கு பிரசாரம் செய்யப் போகிறேன். டாக்டர் பணி செய்துகொண்டிருப்பவர், மே 2-க்கு பிறகு அந்தப் பணியை செய்யக் கூடாதா... எங்களுக்கு வேறு தொழில் இருக்கிறது. அரசியல் எங்கள் தொழில் இல்லை. அரசியல் எங்கள் கடமை. அதையும் செய்வோம். மற்றதையும் செய்வோம்” என்று வானதிக்கு பதிலடி கொடுத்தார்.

கமல்
கமல்

கமல் தனது வேட்புமனுவில் அளித்துள்ள விவரங்கள்படி அவருக்கு ரூ.131.8 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளும், ரூ.45 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும் என மொத்தம் ரூ.176.9 கோடி சொத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும். ரூ.49.5 கோடிக்கு கடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு