100 நாள்களைக் கடந்து தொடரும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில், இன்று மாலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். டெல்லிக்குள் நுழைந்த யாத்திரையில் கமல்ஹாசன் கலந்துகொண்டு, உரையாற்றினார். ஆங்கிலத்தில் தன் உரையைத் தொடங்கிய கமல்ஹாசனை, தமிழில் பேச ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். அதையடுத்து சிறிது நேரம் தமிழில் உரையாற்றினார் கமல்ஹாசன்.
அப்போது கமல் பேசுகையில், "பலர் என்னை, ஏன் இந்த பாதயாத்திரையில் கலந்துகொள்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சொல்கிறேன், ஏனென்றால் நான் ஓர் இந்தியன். என் தந்தை ஒரு காங்கிரஸ் கட்சிக்காரர். எனக்கு கொள்கையில் பல முரண்பாடுகள், வேறுபாடுகள் இருக்கின்றன. நான் எனது சொந்தக் கட்சியை தொடங்கியுள்ளேன்.
ஆனால், தேசத்திற்காக என வரும்போது, கட்சி முன் இருக்கும் பெயர்களை மறந்து விடுங்கள். நான் இங்கு கமல்ஹாசனாக வந்துள்ளேன். ராகுல் காந்தி தன்னை ஒரு தமிழராக அடையாளப்படுத்திக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இது இரண்டு கொள்ளுப்பேரன்மார்கள் கலந்துகொள்ளும் யாத்திரை. ராகுல், நேருவின் கொள்ளுப்பேரன்... நான் காந்தியின் கொள்ளுப்பேரன். அரசியல் அமைப்பிற்கு எந்த நெருக்கடி ஏற்பட்டாலும் நான் தெருவில் வந்து நிற்பேன், எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. நான் ஆங்கிலத்தில் பேசுவதாகத்தான் இருந்தேன், சகோதரர் ராகுல் கேட்டுக் கொண்டதால் தமிழில் பேசினேன்.

தேசத்திற்காகவே, எனது அரசியல் பயணம் தொடங்கப்பட்டது, எனக்காக தொடங்கவில்லை. தேசத்திற்கு நான் தேவைப்படும் நேரம் இதுதான் என்று எண்ணுகிறேன். என்னைப் பொறுத்தவரை, இந்த யாத்திரையின் தொடக்கமே இதுதான், இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது. சாலை வழியாக அல்ல. தேர்தல் கூட்டணியா என்றெல்லாம் பலர் கேட்கிறார்கள், அது வேறு... நான் ஐந்தாண்டுகள் திட்டத்திற்காக இங்கு வரவில்லை. இது பல தலைமுறைகளுக்கான திட்டம். அதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். தேசத்துக்கென வரும்போது கட்சிக் கொடிகளை விட்டுவிடுங்கள். இருக்கும் ஒரே கொடி மூவர்ண கொடிதான். இப்படி ஒரு துணிச்சலான முயற்சியை எடுத்ததற்கு ராகுலை நான் பாராட்டுகிறேன்" என்று கூறினார்.