Published:Updated:

ஆளும் தரப்பை அதிர்ச்சியடைய வைத்த மய்யத்தின் `மூவ்’ -டாஸ்மாக் வழக்கில் நடந்தது என்ன?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

டாஸ்மாக் வழக்கில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் ஆஜராகி இருந்தார். பிற வழக்கறிஞர்கள், அட்வேகேட் ஜெனரல் உட்பட பலர் சட்ட பிரச்னைகள் குறித்து ஏ.ஆர்.எல் சுந்தரேசனிடம் ஆலோசனை கேட்பார்கள்.

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக டாஸ்மாக் திறப்பு குறித்த பேச்சுதான். சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும் களைகட்டின. சில தளர்வுகளுடன் மே 4 முதல் 17-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுபாடுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாநில அரசுகள் மதுபானக் கடைகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டன. பல மாநிலங்களில் மதுபானப் பொருள்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கப்பட்டன. குறிப்பாக டெல்லியில் கொரோனா சிறப்புக் கட்டணம் என்ற பெயரில் மதுபானங்கள் கடுமையாக விலையேற்றப்பட்டன என்றாலும் விற்பனையில் மட்டும் குறைவு இல்லை.

டாஸ்மாக் மது
டாஸ்மாக் மது

தமிழகத்திலும் 7 -ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது எனச் சில பொதுநல வழக்குகள் பதியப்பட்டன. இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், `டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது. டோர் டெலிவரியும் செய்ய முடியாது. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நபருக்குக் குறிப்பிட்ட அளவே மதுபானம் வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்த நீதிமன்றம் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியது. நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றால் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டி வரும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இதன் காரணமாகவே ஒரு நபருக்குக் குறிப்பிட்ட அளவுதான் மது விற்பனை என்றும் வயது வாரியாக நேரக் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டன.

டாஸ்மாக்
டாஸ்மாக்

இதையடுத்து தமிழகத்தில் நேற்று முந்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. காலை முதலே மதுப்பிரியர்கள் மதுக்கடைகள் முன்பு குவிந்ததால் சமூக இடைவெளி எல்லாம் காற்றில் பறந்தது. டாஸ்மாக் முதல்நாள் கலெக்‌ஷனும் ரூ.170 கோடி என்ற அளவில் இருந்தது. இரண்டு நாள்களில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு வசூல் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறியதாகவும், அதனால் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில அமைப்புகளும் வழக்கறிஞர்களும் மீண்டும் நீதிமன்றத்தை நாடினர்.

இதில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி வாதாடியுள்ளார். இவர் ஆஜரானது ஆளும் தரப்பை அதிர்ச்சிடைய வைத்தது என்கிறார்கள் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள். இது தொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு பேசினோம், ``டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நேற்று சிறப்பு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு நேற்று மதியம் வீடியோ விசாரணைக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அடங்கிய சிறப்பு அமர்வு முன் எடுத்துக்கொள்ளப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக அரசு சார்பில் உதவி அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டே வழக்காட வந்திருந்தார். மக்கள் நீதி மய்யம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி இருந்தார். பிற வழக்கறிஞர்கள், அட்வேகேட் ஜெனரல் உட்பட பலர் சட்ட பிரச்னைகள் குறித்து ஏ.ஆர்.எல்.சுந்தரேசனிடம் ஆலோசனை கேட்பார்கள். அவரே மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொண்டதற்கு சம்மதித்து மக்கள் நலம் சார்ந்த இந்த வழக்கில் ஆஜரானது அரசு தரப்புக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணியது” என்றனர்.

வழக்கு விசாரணையில் ம.நீ.ம தரப்பு தமிழகத்தில் நீதிமன்றம் முன்னர் தெரிவித்த நிபந்தனைகள் அரசால் டாஸ்மாக் விஷயத்தில் பின்பற்றபடவில்லை என ஆதாரங்களோடு வாதாடியது. தமிழக அரசு தரப்பு, 40 நாள்கள் இடைவெளி காரணமாக கூட்டம் அதிக அளவில் வந்தது. இனி அப்படி இருக்காது எனத் தெரிவித்தது. எனினும் அரசின் செயல்பாட்டால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், தமிழகத்தில் ஊடரங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ஆன்லைனில் மட்டும் மது விற்பனை செய்யவேண்டுமென அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`மே17 வரை திறக்கக் கூடாது; ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி!’- #Tasmac விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்

இதனால் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் குஷியில் இருக்கிறார்கள். கட்சி ஆரம்பித்து தேர்தலையும் சந்தித்து விட்ட பிறகு, அக்கட்சிக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம், ``நிச்சயமாக இது கட்சிக்கு மட்டும் கிடைத்த வெற்றி கிடையாது. மக்களுக்குக் கிடைத்த வெற்றி. நாங்க களத்துக்கு வருவதே கிடையாது எனத் தொடர்ச்சியாக குற்றம்சாட்டுகிறார்கள். சும்மா கறுப்புச் சட்டையைப் போட்டுக்கிட்டு எதிர்ப்பைப் பதிவு பண்ணணுமேனு பண்றதுக்கு நாங்க வரலை. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை பதிவு பண்ணுறாங்க. ஆனா அரசு அதற்கு பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை. பதில் சொல்லவும் இல்லை.

தீர்ப்புக்கு கமலின் ட்வீட்....!

ஆனால் நாங்க வழக்கு தொடுத்ததுனால அவங்க நீதிமன்றம் வந்து பதில் சொன்னாங்க. சிஏஏ விஷயத்திலும், ஆக்கபூர்வமாக வழக்கு தொடுத்தோம். எனவே இந்தத் தீர்ப்பின் மூலம் நாங்கள் களத்துக்கு வரவில்லை என்பவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டோம். நாங்க களத்தில்தான் இருக்கிறோம் என்று. இது எங்களின் அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றி. காரணம், நாங்கள் சரியான நேரத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றிருக்கிறோம். `நீங்கள் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினீர்கள். நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை’ என வாதங்கள் முன்வைத்தோம். வெற்றி கிடைத்தது. இனி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல் வருகிறது. நாங்க அங்கும் செல்வோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு