Published:Updated:

`கட்சிக்காக உழைத்த எனக்கே இந்த நிலைமை!’ - கொந்தளிக்கும் வேலூர் ம.நீ.ம முன்னாள் நிர்வாகி

வேலூர் சுரேஷ்
வேலூர் சுரேஷ்

``மக்கள் நீதி மய்யம் வளர்ச்சிக்காகச் சொந்த பணத்தை வாரி இறைத்துள்ளேன். என்னிடம் விளக்கம் கேட்காமலேயே அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது’’ என்கிறார் வேலூர் சுரேஷ்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேலூர் மத்திய வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஆர்.சுரேஷை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அக்கட்சித் தலைமை அதிரடியாக நீக்கியிருக்கிறது. `அவருடன் மக்கள் நீதி மய்யத்தினர் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்றும் தலைமை அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், சுரேஷ் மீது `என்ன காரணத்துக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’ என்ற விவரத்தை மக்கள் நீதி மய்யம் வெளியிடவில்லை.

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை
மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, வேலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர்தான் இந்த சுரேஷ். தொழிலதிபரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மரக்கன்றுகளை நடுவது, ஏழை மக்களுக்குப் பட்டா பெற்றுத் தருவது போன்ற சமூக சேவைகளைச் செய்துவருகிறார். இந்த ஊரடங்கு காலத்திலும், மக்கள் நீதி மய்யம் சார்பில் தனது சொந்த பணத்தில் ஏழை எளியோருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிவருகிறார்.

இதனிடையே, சுரேஷ் விரைவில் அ.தி.மு.க-வில் இணையப் போவதாக செய்தி வெளியானது. 500-க்கும் மேற்பட்டோரைத் திரட்டி முதலமைச்சர் முன்னிலையில் இணையவிருப்பதாகவும் ஊரடங்கால் இணைப்பு விழா தள்ளிப்போவதாகவும் சொல்கிறார்கள். சுரேஷின் தந்தை அ.தி.மு.க-வின் மாவட்ட பிரதியாகக் காட்பாடியில் வலம் வருகிறார். தந்தையின் சொல்பேச்சைக் கேட்டுத்தான் அவர் அ.தி.மு.க-வுக்குச் செல்வதாகவும், அமைச்சர் வீரமணியை இரண்டு முறை வீட்டுக்கே சென்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்துவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

சுரேஷ் குறித்து ம.நீ.ம முன்பு வெளியிட்ட டேட்டா
சுரேஷ் குறித்து ம.நீ.ம முன்பு வெளியிட்ட டேட்டா

இணைப்பு விழாவுக்கு முன்னதாகவே சுரேஷ் உட்பட மேலும் சில மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் வீரமணி, முன்னாள் மாவட்டச் செயலாளர் ஒருவரது ஏற்பாட்டில் அ.தி.மு.க-வின் உறுப்பினர் அட்டையை வழங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள். ``மக்கள் நீதி மய்யத்தில் இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. எதிர்காலம் குறித்தும் கேள்வி எழுகிறது. சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கிறது’’ என்பது போன்ற காரணங்களால்தான் சுரேஷ் அ.தி.மு.க-வுக்கு தாவும் முடிவை எடுத்துள்ளதாக மக்கள் நீதி மய்ய வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

சுரேஷிடமே, இதுதொடர்பாகப் பேசினோம். ``மக்கள் நீதி மய்யத்தில் எனக்கு நல்ல பெயர் உள்ளது. ஆனாலும், என்னை நீக்கியதற்கான காரணத்தை கட்சித் தலைமை சொல்லவில்லை. என்னிடம் எந்த விதமான விளக்கத்தையும் கேட்காமல் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளனர். நான், இரண்டு மூன்று காரணங்களுக்காக அமைச்சர் வீரமணியை சந்தித்தேன். என்னவென்றே விசாரிக்காமல் என்னை நீக்கியிருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தல் நேரத்தில் வேலூரில் பேசிய கமல்ஹாசன்
தேர்தல் நேரத்தில் வேலூரில் பேசிய கமல்ஹாசன்

இத்தனை வருஷமாகக் கமல்ஹாசனின் ரசிகனாக இருந்துவருகிறேன். கட்சி தொடங்கிய பிறகு, எனக்குப் பொறுப்பு வழங்கி வேட்பாளராகவும் நிற்க வைத்தார். தேர்தலின்போது, என் சொந்தப் பணத்திலிருந்து ரூ.25 லட்சம் செலவு செய்தேன். அதைத்தாண்டி, கட்சியை இந்த மாவட்டத்தில் வளர்த்தெடுப்பதற்காக லட்சக்கணக்கான ரூபாயைச் செலவழித்துள்ளேன். முதலமைச்சரைச் சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டுள்ளேன். விரைவில் அ.தி.மு.க-வில் இணைகிறேன்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு