Published:Updated:

தென்னகத்தைக் குறிவைக்கும் மோடி, அமித் ஷா & கோ... தடம் பதிப்பது சாத்தியமா?

மோடி, அமித் ஷா

``தென்பூமியில் பெரும்பாலும் கல்வி அறிவு உண்டு. சிந்தனையாளர்கள் பல பேர் இருந்த பூமி. அதனால் மக்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தென்னகத்தைக் குறிவைக்கும் மோடி, அமித் ஷா & கோ... தடம் பதிப்பது சாத்தியமா?

``தென்பூமியில் பெரும்பாலும் கல்வி அறிவு உண்டு. சிந்தனையாளர்கள் பல பேர் இருந்த பூமி. அதனால் மக்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

Published:Updated:
மோடி, அமித் ஷா

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சர்வதேச மாநாடு மையத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ஜூலை 2 தொடங்கி இரண்டு நாள்களாக நடைபெற்றது. 2014-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக டெல்லிக்கு வெளியே கட்சியின் முக்கிய தேசிய கூட்டத்தை நடத்துவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன் 2015-ல் பெங்களூரிலும், 2016-ல் கேரளாவிலும், 2017-ல் ஒடிசாவிலும் நடத்தியது. தற்போது தெலங்கானாவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்தார். ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்த அவரை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 19 மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.

பாஜக தேசிய செயற்குழு
பாஜக தேசிய செயற்குழு

முதல் நாள் கூட்டத்தில் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பொருளாதாரம் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில் கட்சித் தலைவர் நட்டா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்றினர். கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, வாழ்நாள் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்ட திரவுபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என வர்ணித்தார். அவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது நாட்டிற்கே கவுரவமாக அமையும் என்றும் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, `நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைப் பார்த்து கேலி செய்யாமல் அவர்கள் செய்த தவறுகளைப் பார்த்து அதிலிருந்து பாடம் கற்க வேண்டும்’ என வலியுறுத்தினார். தெலங்கானாவில் பாஜக-வின் இரட்டை என்ஜின் ஆட்சி அமையும் போது வளர்ச்சி பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும், தெலங்கானாவின் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். கடந்த 8 ஆண்டுகளில், தெலங்கானா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் தொலைவு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அமித் ஷா
அமித் ஷா

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “நாட்டில் உள்ள எதிர்க் கட்சிகளை மக்கள் மூலையில் உட்கார வைத்துவிட்டனர். அடுத்து வரும் 30 முதல் 40 ஆண்டுகள் வரை மத்தியில் பாஜக கூட்டணியே ஆட்சி நடத்தும். சாதி அரசியல், வாரிசு அரசியல், வாக்குவங்கி அரசியலுக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தெலங்கானா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு பா.ஜ.க. முடிவுரை எழுதும். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான். இந்தியா உலகுக்கு தலைமை தாங்கும் நிலை உருவாகும். பா.ஜ.க.வின் அடுத்த சுற்று வளர்ச்சி என்பது தென்மாநிலங்களிலிருந்து வரும் என்று அனைவரிடத்திலும் ஒரு நம்பிக்கையும், கண்டுபிடிப்பும் உருவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதை ஆளுகிற குடும்பம் அதன் நிலைப்பாட்டில் ஒட்டிக்கொண்டதால், அதன் அமைப்பிற்குள் ஜனநாயகத்துக்குப் போராடுகிற நிலை உள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு வெறுப்படைந்துள்ளன. பாஜக-வில் உள்கட்சி ஜனநாயகம் பின்பற்றப்படுகிறது. ஆனால், காங்கிரஸில் கட்சித் தலைவர் தேர்தலை நடத்தக்கூட அஞ்சுகின்றனர். ‘மோடி போபியா’ (அச்சம்) என்ற நோயால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறது” என்று பேசியுள்ளார்.

இதில் “பா.ஜ.க.வின் அடுத்த சுற்று வளர்ச்சி என்பது தென்மாநிலங்களிலிருந்து வரும்” என்று அமித் ஷா பேசியது, வட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜக-வின் வியூகம் தென் மாநிலங்களில் எடுபடுமா? அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா? போன்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தி.மு.க தலைமைக் கழகச் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “தென் இந்தியாவைப் பொறுத்தவரைக் கர்நாடக ஒரு மாநிலம் மட்டும் தான் பா.ஜ.க வசம் இருக்கிறது. இது தவிர கேரளா, தமிழ்நடு, ஆந்திரா போன்ற மற்ற எந்த மாநிலத்திலும் பாஜக-விற்கு வாய்ப்பு கிடையாது. தெலங்கானாவில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால் இப்படி சொல்கிறார்கள். எனினும் அங்கும் சாத்தியம் இல்லை. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் உரிமை உண்டு. அதன் அடிப்படையில் அமித் ஷா அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால், தென் இந்திய மக்களுக்காக ஏதும் செய்யாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு மதவாத, சாதிவாரியான அரசியல் பேசுவது இங்கு எடுபடாது. அப்படி தமிழ்நாட்டிலும் பாஜக செய்து கொண்டிருப்பது கொஞ்ச நாட்களில் வெளியே வந்துவிடும்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

வடநாட்டில் பாஜக கால் ஊன்றியது என்றால் அங்குக் கல்வி அறிவு, அரசியல் சித்தாந்தங்கள் குறைவு. ஆனால், தென்பூமியில் பெரும்பாலும் கல்வி அறிவு உண்டு. சிந்தனையாளர்கள் பல பேர் இருந்த பூமி. அதனால் மக்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதே நேரத்தில் இந்த நிமிடம் வரை பாஜக-வின் செயல்பாடுகள் எல்லாம் வட இந்திய வளர்ச்சியை நோக்கியே இருக்கிறது. அங்கு உள்ள தொழிலதிபர்களை வளர்த்திருக்கிறார்களே ஒழியத் தென் இந்தியாவிற்கோ, தென் இந்திய மக்களுக்கோ அவர்கள் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லை. இந்தியா முழுவதும் இடம் பிடிப்போம் என்பது பாஜக-வின் ஆசை. ஆனால் அதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்பதே நிதர்சனம்” என்கிறார்.

“தென் இந்தியா, வட இந்தியா என்றில்லை. இந்தியாவை ஆள்வதுதான் பாஜக சித்தாந்தம்” என்கிறார் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன்.

``வட இந்தியாவில் ராமர் சித்தாந்தம், ராமர் கோயில் பிரச்னை, காஷ்மீர் மக்கள் அவலநிலை போன்ற விஷயங்களினால் பாஜக மாற்று அரசியலுக்கு உடனே கதவு திறந்துவிட்டது. குறிப்பாக இந்தி பேச கூடிய மாநிலங்கள். அங்கு மொழியாலும் கலாசாரத்தாலும் தென் இந்தியாவை விட வட இந்தியாவில் ஒன்று பட்டு நிற்பார்கள். அதனால் எளிமையாகச் செல்ல முடிந்தது. அந்த வெற்றியைப் பயன்படுத்தி மொழியாலும், கலாசாரத்தாலும் வட இந்தியாவிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு நிற்கிற மக்களை நோக்கி பாஜக தங்கள் திட்டத்தை, கவனத்தை நோக்கி இருக்கிறது. அதுதான் அமித் ஷா அவர்களின் தேசிய செயற்குழு கூட்டத்தின் அறைகூவலாக இருந்தது. இதுவரை பாஜக பகிரங்கமாக சொல்லமாட்டார்கள். அப்படி சொல்லி இருக்கிறார்கள் என்றால் பேஸ் உருவாகிவிட்டது என்று அர்த்தம். மேற்குவங்கத்தில் ஒன்றுமே இல்லாமல் இருந்தவர்கள் இரண்டாவது பெரிய கட்சியாக இப்போது இருக்கிறது. தென் இந்தியாவில் பாஜக-வின் திறவுகோலாகக் கர்நாடக இருக்கிறது. கிட்டத்தட்டப் பெங்களூர் தென் இந்தியாவின் மைய புள்ளி. அங்கு பாஜக வின் ஆட்சி அமைத்து நிரூபித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தெலங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று அடுத்தடுத்த ஆட்சி அமைக்கப் போகிறது.

புரட்சி கவிதாசன்
புரட்சி கவிதாசன்

ஆட்சியில் ஒரு குடும்பம் மட்டுமே இருந்து கொண்டிருந்தால் ஜனநாயகம் கிடையாது. அது முடியாட்சி. அதை முறியடித்து காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகத்தான் பாஜக மேலே வந்தது. கிட்டத்தட்டத் தமிழ்நாடும் அதே நிலைக்கு வந்துவிட்டது. கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி கொண்டு வந்துவிட்டார்கள். அடுத்து பெரியார், அம்பேத்கர் பற்றி அதிகம் பேசுகிற தமிழ்நாடு இன்னும் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்குவதற்குத் திராணி இல்லாமல் இருக்கிறது. சமூக நீதி பேசுகின்ற இயக்கங்கள் எல்லாம் திமுக-வின் பஜனை கோஷ்டியாக மாறியிருக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் சித்தாந்த எதிரி பாஜக தான். அதனால் திமுக ‘திராவிட மாடல்’ எடுத்ததன் விளைவாக அதற்கு எதிர்வினையாகத் தேசிய மாடல் வந்துவிடுகிறது.

திராவிட மாடலை முன்மொழியாமல் இருந்திருந்தால் கூட பெரிய விளைவுகளை உருவாக்கி இருக்காது. இப்போது ஒரு குடும்பம் ஆட்சிதான் திராவிட மாடலா? என்று ஆரம்பித்து ஊழல், வாரிசு அரசியல், பட்டியல் இனத்தவரை பொது வெளியில் அமைச்சர்களும், தலைவர்களும் திட்டுவது, அம்பேத்கர், பெரியார் கொள்கைக்கு எதிராக வேலை செய்வதுதான் திராவிட மாடலா என்று அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. அதனால் தேசிய மாடலுக்கான தேவை தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. அதை அண்ணாமலை புரிகிற மொழியில் பேசுகிறார். முதல் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் அண்ணாமலை இருக்கக் கூடிய செல்வாக்கு இன்று கூடி வருகிறது. எனவே தான் பாஜக தன் அடுத்த நகர்வைத் தமிழ்நாட்டில் வைத்திருக்கிறது.

பாஜக தேசிய செயற்குழு
பாஜக தேசிய செயற்குழு

வாரிசு அரசில் கொண்டு வந்த தெலுங்கு தேசம், சிவசேனா-வின் வீழ்ச்சி கிட்டத்தட்ட திமுக-விற்கும் வருங்காலத்தில் பொருந்தும். சந்திரசேகர் ராவும் அதற்குள் மாட்டி கொண்டிருக்கிறார். வாரிசு அரசியலை இந்திய சமூகம் ஏற்று கொள்ளவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. பாஜக மாற்று சக்தியாக பிரகாசமாக வருவதற்கான சூழலையும் இது உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக திராவிட பூமி, பெரியார் பூமி என்று சொல்லும் இங்கேயே அடித்தளம் அமைத்து வருகிறது. இதனால் தான் தென் இந்தியாவில் பாஜக வெற்றி புள்ளிகளைக் குவிக்கும். இந்த அனுமானத்தின் அடிப்படையில் தன் அமித் ஷா மிகச்சரியா முன்கூட்டியே சொல்லி அடிக்கிறார்” என்றார்.