Published:Updated:

மகாராஷ்டிராவில் மோடி வித்தை பலிக்கவில்லை!

இந்திராவை விஞ்சிய பா.ஜ.க
பிரீமியம் ஸ்டோரி
இந்திராவை விஞ்சிய பா.ஜ.க

இந்திராவை விஞ்சிய பா.ஜ.க

மகாராஷ்டிராவில் மோடி வித்தை பலிக்கவில்லை!

இந்திராவை விஞ்சிய பா.ஜ.க

Published:Updated:
இந்திராவை விஞ்சிய பா.ஜ.க
பிரீமியம் ஸ்டோரி
இந்திராவை விஞ்சிய பா.ஜ.க

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசை அமைப்பதில் ஏற்பட்ட குழப்பங்கள், பல்வேறு சட்டப் பிரச்னைகளை எழுப்பியுள்ளன. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டது. ஒரே நாள் இரவு நடந்த கூத்தில் பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், என்.சி.பி கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். மீண்டும் காட்சிகள் மாறின. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்காமலேயே முதல்வரும் துணை முதல்வரும் பதவியை ராஜினாமா செய்தனர். பா.ஜ.க ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் கூட்டணியில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே நவம்பர் 28-ம் தேதி மாலை முதல்வராக பதவி ஏற்றார்.

கே.சந்துரு, 
மேனாள் நீதிபதி, சென்னை 
உயர் நீதிமன்றம்
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

இதற்கிடையே அங்கு நடந்தவற்றை, வரலாற்றில் அசிங்கமான பக்கங்களில் எழுத வேண்டியிருக்கும். ஒவ்வொரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள் கட்சி மாறிவிடாமல் இருக்க,

24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டனர். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரே உறுப்பினர் வினோத் நிகோலே மட்டும் தன் குடிசையிலேயே தங்கிக்கொள்வதாகக் கூறிவிட்டார். கோடிக்கணக்கான ரூபாயை விடுதிகளுக்கு யார் செலுத்தினார்கள் என்பது சிதம்பர ரகசியம்.

இதற்கிடையில் டெல்லிக்கு விமானம் ஏறச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், டெல்லிக்கு அருகில் குருகிராமத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் மூன்று உறுப்பினர்கள் அழைத்துவரப்பட்டார்கள் என்றும் நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்தன. ‘குதிரை பேரம்’ என்று இந்த நிகழ்வுகளுக்குப் பெயரிட்டிருப்பது குதிரைகளை அசிங்கப்படுத்துவதாகும். பச்சையாகச் சொன்னால், இந்த நிகழ்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை ஏலத்தில் எடுப்பது போன்றதே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், தேர்தலுக்கு முன்னால் இருந்த கூட்டணிக் கட்சிகள் ஒன்றுபட்டு அமைச்சரவை அமைக்கக் கோர முன்வரவில்லை. இதனால் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைக்கலாமா, அப்படி அமைத்தால் அந்தக் கூட்டுத்தொகையின் அடிப்படையில் ஆளுநர் புதிய கூட்டணியின் தலைவரை அமைச்சரவைக்கு அழைக்க அனுப்பலாமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இதற்கு முன் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் இரண்டுவிதமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று, ஆளுநர் மாளிகையின் முன்பு உள்ள புல் தரையில் உலவவிடுவது. இரண்டு, சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் தலை கணக்கெடுப்பது (அ) ரகசிய ஓட்டுக்கு விடுவது.

இந்திராவை விஞ்சிய பா.ஜ.க
இந்திராவை விஞ்சிய பா.ஜ.க

ஆனால், மும்பை நகரத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் மூன்றாவதாக ஒரு முறையையும் வெளிக்கொண்டுவந்தது. அதுதான், நட்சத்திர விடுதிகளில் கணக்கெடுப்பது. பா.ஜ.க-வும் சிவசேனாவும் சேர்ந்து போட்டியிட்டதில் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்திருந்தாலும், அதிகாரப் பங்கீட்டில் அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டது. கர்நாடக மாதிரியை (நீ பாதி; நான் பாதி) ஏற்றுக்கொள்ள பா.ஜ.க தயாரில்லை. சிவசேனாவுடன் கூட்டுசேருவதா என்ற கேள்வி காங்கிரஸுக்கு ஏற்பட்டது. இடையில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிலை, கடிகாரத்தின் தண்டுவலம் ஊசலாடுவதுபோல் ஆனது. பிறகு நடந்தவைதான் அனைவரும் அறிவோமே!

இந்திராவை மிஞ்சிய மோடி, ஷா!

இந்த அரசியல் விளையாட்டில் மோடி, அமித் ஷா தீட்டிய பேர ரகசியத் திட்டங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. அதைப் பார்க்கும்போது 1975-ம் ஆண்டில் இந்திரா காந்தி அறிவித்த உள்நாட்டு நெருக்கடிநிலை பிரகடனத்துக்கான பின்னணியைவிட அதிபயங்கரமாக இருந்ததுடன், அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டையே கேள்விக் குள்ளாக்கிவிட்டது. 1975, ஜூன் 24 அன்று நள்ளிரவில் அன்றைய குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தொடர்பு கொள்கிறார். ‘நாட்டில் நிலைமை மோசமாக இருக்கிறது. உடனடியாக நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த வேண்டும்’ என்கிறார்.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 74-ன்படி, குடியரசுத் தலைவர் மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவர். எனவே, குடியரசுத் தலைவர் அதற்கான ஆவணங்களான அமைச்சவைக் கூட்டத்தின் தீர்மானத்தைக் கேட்டபோது, அதை பிறகு அனுப்புவதாக உறுதியளிக்கிறார். அன்று அமைச்சரவைக் கூட்டத்தின் ஆலோசனை இல்லாமலேயே நெருக்கடிநிலையை குடியரசுத் தலைவர் பிரகடனப்படுத்துகிறார். இன்றைக்கு பா.ஜ.க-வில் உள்ள பலரும் அன்றைய நாள்களில் மிசா சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படுகின்றனர். அடிப்படை உரிமைகள் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்படுகின்றன. கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றங் களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஊடகங்கள் தீவிர தணிக்கைக்குப் பிறகே வெளியிட முடியும் என்ற சூழ்நிலை.

21 மாதங்களுக்குப் பிறகு நெருக்கடிநிலை நீங்கி, பதவிக்குப் புதிதாக வந்த ஜனதா கட்சி, நீதிபதி ஷா தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை நியமனம் செய்கிறது. ஷா கமிஷன் விசாரணை அறிக்கையில், ‘நெருக்கடிநிலை பிரகடனத்துக்கான தீர்மானத்துக்கு இந்திரா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை’ என்ற அதிர்ச்சிகரமான தகவலைப் பதிவு செய்கிறது. நெருக்கடிநிலை சட்டவிரோதமாகப் பிரகடனப்படுத்தப் பட்டு மனித உரிமைகளைப் பறிக்கக்கூடிய அரசு 21 மாதங்கள் கோலோச்சியது. இப்படி பாதிக்கப்பட்டவர் களில் அன்றைய ஜனசங்க பிரமுகர்களும் அடக்கம் (இன்றைய பா.ஜ.க-வினர்). ஆனால், அவர்களும் நெருக்கடிநிலையின் அத்துமீறல்களிலிருந்து பாடங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் மகாராஷ்டிரா நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

அதிகாரத்தைக் கைப்பற்றுதலுக்கான நெருக்கடி!

அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரின் சகோதரரின் மகன். அவர், தான் சார்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் பா.ஜ.க கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியவுடன் பா.ஜ.க-வின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற கட்சித் தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சரவை அமைப்பதற்கு ஆளுநரை இரவில் சந்திக்கிறார்.இதையொட்டி ஆளுநர், மத்திய அரசிடம் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்துசெய்த பிறகுதான் அமைச்சரவை அமைக்க முடியும் என்று அமித் ஷாவிடம் கூறுகிறார். குடியரசுத் தலைவருக்கு, மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற் கான ஆலோசனை வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மகாராஷ்டிராவில் மோடி வித்தை பலிக்கவில்லை!

பிரதமர், தனது சிறப்பு அதிகாரத்தின்மூலம் குடியரசுத் தலைவருக்கு அமைச்சரவை ஒப்புதல் இல்லாமலேயே ஆலோசனை வழங்குகிறார். தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட குடியரசுத் தலைவர் சூரிய உதயத்துக்கு முன் கூவிடும் சேவல்போல் உத்தரவில் கையெழுத்திடுகிறார். அதை வெளியிடு வதற்கான அரசாணை அச்சடிப்பதற்கு நேரமில்லை. மின்பதிப்பின்மூலம் மத்திய அரசாணை வெளியிடப்படுகிறது. நெருக்கடி காலத்தில் இருந்த ஒரு நிலைமையைத்தான் இந்தச் செயல் நமக்கு மீண்டும் நினைவூட்டியது. இந்திரா காலத்திலாவது உள்நாட்டு நெருக்கடி என்று சொன்னார்கள். ஆனால் இப்போது நள்ளிரவு முடிவுகளுக்கு நெருக்கடி என்னவென்று பார்த்தால், அது அதிகாரத்தைக் கைப்பற்றுதலுக்கான போட்டி என்பதைத் தவிர வேறு காரணமில்லை.

மகாராஷ்டிர ஆளுநரும் நித்திரையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்துசெய்யப்பட்டதால் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி நட்சத்திர விடுதிகளில் சிறைவைக்கப் பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தைக் கூட அறிந்துகொள்ளாமல் பா.ஜ.க தலைமையிலான தேவேந்திர பட்னாவிஸுக்கும் அவருக்கு ஆதரவுகொடுத்த அஜித் பவாருக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். அப்போது நேரம் காலை 7:50 மணி. ஊடகங்களுக்கு தகவல் அளிக்கப்படவில்லை. அரசு செய்தி இலாகா மட்டும் ஊடகங்களுக்கு பத்திரிகை குறிப்பை வழங்குகிறது. அமைச்சரவை அமைத்ததற்கான முடிவு வருவதற்கு முன் காலை பத்திரிகைகள் `சிவசேனா தலைமையில் உத்தவ் தாக்கரே முதலமைச்சர்’ என்று முதல் பக்கத்தில் எட்டுகால செய்தியை வெளியிட்டு, அதை வாசகர்கள் படிக்கின்ற அதே நேரத்தில் தொலைக்காட்சிகள் `மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப் பட்டுள்ளார்’ என்ற செய்தியை ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. இப்படி ஒரே நேரத்தில் இரு வேறு செய்திகளை வெளியிடுவதற்குக் காரணமாக இருந்த மோடி, ஷாவின் ரகசிய நடவடிக்கைகள் ஒரு ராணுவ ஆட்சியின் நடவடிக்கையைவிட மிகவும் மோசமாக இருந்ததை நாம் காண நேர்ந்தது.

ஆளுநர் பதவி தேவைதானா?

சட்டமன்ற பெரும்பான்மை பற்றி முடிவெடுப்பதற்கு ஆளுநர் முழுமையான அதிகாரம் பெற்றிருப்பினும், இதுவரை நடைபெற்ற எந்தவித முன்மாதிரியையும் கணக்கிலெடுக்காமல் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று அவர் எடுத்த முடிவு `ஆளுநர் பதவியே தேவைதானா?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவும்கூட, நாட்டுக்கு கவர்னர் தேவையில்லை என்று பேசிவந்தார். பிறகு, தமிழக அரசு அமைத்த நீதிபதி ராஜமன்னார் கமிஷனும் ஆளுநர் பதவியை மாநில தேர்தலின் மூலம் நியமிக்க வேண்டும் என்று பரிந்துரையும் செய்தது.

ஒரேநேரத்தில் இரு வேறு செய்திகளை வெளியிடுவதற்கு காரணமாக இருந்த மோடி, ஷாவின் ரகசிய நடவடிக்கைகள் ஒரு ராணுவ ஆட்சியின் நடவடிக்கையைவிட மிகவும் மோசமாக இருந்ததை நாம் காண நேர்ந்தது.
கே.சந்துரு , மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

மோடி - அமித் ஷாவும், மகாராஷ்டிர ஆளுநரும் சேர்ந்து செய்த முடிவுகளை யாரும் கேட்க முடியாது என்ற நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் தகர்த்திருக்கிறது. இருப்பினும் மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்வுகளில் அரசியல் சட்டத்தைத் தகர்ப்பதற்கான அனைத்து அம்சங்களும் பொருந்தியிருந்தன என்பதை யாரும் மறந்துவிட முடியாது. அதிகாரப் பசி, மத்தியில் பதவி வகிக்கும் பா.ஜ.க அரசை எந்த அளவுக்கு சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் என்பதையும், தாங்கள் நியமித்த குடியரசுத் தலைவரையும் ஆளுநரையும் ரப்பர் ஸ்டாம்புகளாக மாற்றியிருப்பதையும், மக்களின் விருப்பத்துக்கு எதிராக எந்தவித அதிகாரத் தையும் பயன்படுத்த தயங்க மாட்டார்கள் என்பதையும் வெளிக்கொணர்ந்துள்ளது. மீண்டும் ஜனநாயகத் தேர்தல் முறையையே கேள்விக்குள்ளாக்கியிருப்பது பா.ஜ.க-வே என்பதை மக்கள் உணர்ந்துகொண்டுள் ளார்கள்.