Election bannerElection banner
Published:Updated:

``என்.ஆர்.சி என்ற வார்த்தையை நாங்கள் விவாதித்ததே இல்லை!"... மோடி சொல்வது உண்மைதானா?

மோடி
மோடி

டெல்லியில் பிரதமர் மோடி, ``என்.ஆர்.சி கணக்கெடுப்பு நடைபெறாது; யாரும் அஞ்ச வேண்டாம்"என்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ என்.ஆர்.சி நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனக் கடந்த காலங்களில் ஏறத்தாழ 6 முறை, பொதுவெளியில் அறிவித்துள்ளார்.

குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஜார்க்கண்டில் தோற்ற கையோடு, டெல்லித் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி. டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது உரையை வழங்கிய மோடி, ``குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும் (CAA) தேசிய குடியுரிமைப் பதிவேட்டிற்கும் (NRC) எந்தத் தொடர்பும் இல்லை" என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைப் புரிந்துகொள்ள இரண்டையும் முதலில் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

மோடி மற்றும் அமித் ஷா
மோடி மற்றும் அமித் ஷா

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன?

இந்து, கிறிஸ்தவம், புத்தம், ஜெயின், சீக்கியம், பார்ஸி மதத்தைச் சேர்ந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து விசா இல்லாமல் டிசம்பர் 31, 2014-க்கு முன் இந்தியாவில் குடியேறியவர்கள், ஐந்து வருடங்களுக்கு மேலாக இங்கு வசிப்பவர்கள், இந்திய குடியுரிமையைப் பெறலாம் என்பதுதான் அந்தச் சட்டம். இதில் இஸ்லாமியர்களும், இலங்கைத் தமிழர்களும், மியான்மரின் ரோஹிங்கியாக்களும் தவிர்க்கப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. பல இடங்களில் எதிர்க்கட்சிகளும் மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். இப்படி குறிப்பிட்டு ஒரு சமூகத்தினரை தவிர்ப்பது அவர்கள் விரும்பும் நாட்டில் வாழ்வதை தடுப்பணை போட்டுக் கட்டுப்படுத்துதலிலேயே அடங்கும் என விமர்சனங்கள் எழுந்தன.

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்றால் என்ன?

இந்தியா குடிமக்களின் அதிகாரபூர்வ பதிவுதான் என்.ஆர்.சி. இந்தப் பதிவானது மக்கள்தொகை கணக்குடன் கூடிய தனிமனித குடியுரிமை அங்கீகாரத்தையும் உள்ளடக்கியது. 1951-ல் முதன்முதலில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் உருவாக்கப்பட்ட இந்தப் பதிவு இதுவரையில் மறுஆக்கம் செய்யப்படவில்லை. குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகும் இத்தனை வருடம் விட்டுப்போனதாலும் இப்போது அந்தக் கணக்கெடுப்பை இந்தியா முழுவதும் நடத்த முயல்வது எவ்வளவு பாதிப்பையும் இழப்பையும் உண்டு செய்யும் என்பதற்கு அஸ்ஸாமே சாட்சி.

இதுகுறித்து டெல்லி பிரசார மேடையில் பிரதமர் மோடி பேசிய பல விவகாரங்கள் முரண்பட்டவையாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது வெளியிடப்பட்ட பி.ஜே.பியின் தேர்தல் அறிக்கையில், ``சட்டவிரோதக் குடியேற்றம் காரணமாக சில பகுதிகளின் கலாசார மற்றும் மொழியியல் அடையாளத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது, இதன் விளைவாக உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மோசமான தாக்கம் ஏற்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் இந்தப் பகுதிகளில் உள்ள குடிமக்களின் தேசியப் பதிவேட்டை விரைவாக முடிப்போம். எதிர்காலத்தில் நாட்டின் பிற பகுதிகளில் என்.ஆர்.சி.யை ஒரு கட்டமாகச் செயல்படுத்துவோம்" என்ற திட்டம் அடங்கியுள்ளது. ``என்.ஆர்சி என்ற வார்த்தையை நாங்கள் விவாதித்ததே இல்லை!" என்று டெல்லி மேடையில் தற்போது கூறியவர், பிரதமர் வேட்பாளராக நின்ற கட்சியின் தேர்தல் அறிக்கைதான் இது.

``இந்தியாவில் தடுப்புக்காவல் முகாம்கள் அமைக்கப்படவில்லை" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மாநிலங்களவையில் எம்.பி சந்தானு சென் அஸ்ஸாமில் போதுமான தடுப்புக்காவல்கள் இருக்கின்றனவா, அவற்றில் போதுமான வசதிகள் இருக்கின்றனவா என்ற கேள்விக்கு அமைச்சர் நிதியானந்த் ராய் கொடுத்த பதில், ``22/11/2019 அன்று அஸ்ஸாம் மாநில அரசு அளித்த தகவலின்படி வெளிநாட்டு அகதிகளை அடைக்க ஆறு தடுப்புக்காவல் முகாம்கள் உள்ளன" என்பது. அதிகப் பேரை அடைக்க ஏதுவாக இன்னும் பெரிய தடுப்புக்காவல்களை அம்மாநில அரசு கட்டமைத்து வருவதாக அஸ்ஸாம் மாநில அரசின் அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் விவரங்கள் இருக்கின்றன.

அமித் ஷா
அமித் ஷா

தன் பிரசாரத் தொடக்கக் கூட்டத்திலேயே சர்ச்சைக்குரியவற்றைப் பேசியுள்ள பிரதமர் மோடியின் மொத்த உரையில் மிகவும் விவாதிக்கப்பட்டது இந்தக் கூற்றுதான் - ``என்.ஆர்.சி கணக்கெடுப்பு நடைபெறாது; யாரும் அஞ்ச வேண்டாம்". பிரதமர் ஒருபுறம் இப்படி கூறிக்கொண்டிருக்க உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ வெகு காலங்களாக என்.ஆர்.சியைப் பற்றிக் கூறிக்கொண்டிருக்கிறார்.

இதில் முதன்மையாக மே 1 அன்று அமித் ஷா பதிவிட்ட ட்வீட்டைச் சொல்லலாம். அந்த ட்வீட்டில் ``முதலில் நாம் குடியுரிமை சட்ட மசோதாவை இயற்றுவோம். அதன்மூலம் நம் அண்டைநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவோம். அதன் பிறகு என்.ஆர்.சியை அமல்படுத்தி நம் தாய்நாட்டிற்குள் ஊடுருவியவர்களைக் கண்டுபிடித்து வெளியேற்றுவோம்" என்று கூறி தெளிவாக அவர்களது திட்டத்தை வெளியில் கூறியிருந்தார் அமித் ஷா.

அதற்கு சில நாள்களுக்கு முன்பு ஏப்ரல் 23-ம் தேதி பி.ஜே.பியின் அதிகாரபூர்வ யூ டியூப் பக்கத்தில் வந்திருந்த வீடியோவில் அகதிகளுக்கு ஆறுதல் கூறுகையில், ``என்.ஆர்.சி வருவதற்கு முன்பு குடியுரிமைத் திருத்தச் சட்டம் வந்து உங்களுக்குக் குடியுரிமை வாங்கிக் கொடுத்துவிடும். அதனால் அகதிகள் யாரும் கவலை படவேண்டாம்; ஊடுருவியவர்கள் மட்டும் அஞ்சுவார்கள். நீங்கள் இந்த வரிசையைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

அதற்கு சில நாள்கள் முன்பு, ஏப்ரல் 11-ம் தேதியன்று மேற்கு வங்கத்தில் ரைகாஞ்சின் தேர்தல் பரப்புரையில் அமித் ஷா ``ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் என்.ஆர்.சி செயல்படுத்தப்படும்; இந்து, புத்தம், சீக்கிய மதங்களைத் தவிர்த்து நாட்டுக்குள் ஊடுருவியிருக்கும் ஒவ்வொருவரையும் வெளியேற்றுவோம்!" என்று தெரிவித்ததாக பி.ஜே.பியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. அந்த ட்வீட் தற்போது ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

பிஜேபியால் நீக்கப்பட்ட ட்வீட்!
பிஜேபியால் நீக்கப்பட்ட ட்வீட்!

நவம்பர் 20-ம் தேதி மாநிலங்களவையில் இதுகுறித்து பேசிய அமித் ஷா ``அஸ்ஸாமில் எடுத்த என்.ஆர்.சி கணக்கெடுப்பு சுப்ரீம் கோர்ட்டின் ஆணைக்கிணங்கவே செயல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் நடத்தப்போகிற என்.ஆர்.சி கணக்கெடுப்பு மீண்டும் அஸ்ஸாமில் நடத்தப்படும். எந்த மதத்தைச் சேர்ந்த மக்களும் அஞ்சவேண்டாம். என்.ஆர்.சிக்குள்ளேயே எல்லா மக்களையும் பிரித்தெடுக்கும் வசதிகள் உள்ளன" என்று கூறியிருந்தது இன்னும் பி.ஜே.பியின் ட்விட்டர் பக்கத்தில் உள்ளது.

`என் வாழ்க்கையில் இதுவரை இப்படிச் செய்ததில்லை!'- ரஜினிக்கு `ஸாரி நோட்' எழுதிய பிரித்விராஜ்

டிசம்பர் 18-ல் ஒரு நேர்காணலில் ``இந்து, சீக்கிய, புத்த, கிறிஸ்தவ மதங்களைச் சார்ந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்; யாரும் அஞ்சவேண்டாம்" என்று கூறியிருந்தார். அப்படியே பின்னோக்கிச் சென்று பார்த்தால் ஏப்ரல் 11-ம் தேதி பிரசாரத்தில் கிறிஸ்தவர்களைத் தவிர்த்து கூறியிருந்திருப்பார்.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரையிலும் இதைக் கூற தவறவில்லை அமித்ஷா, ``2024 தேர்தல் தொடங்குவதற்குள் நாட்டில் ஊடுருவிய அனைவரையும் வெளியேற்றுவோம்!" என்று உறுதியாகக் கூறியிருந்தார். அதற்கு மக்களிடையே எழுந்த எதிர்வினைகளையும் புரிந்திருப்பார். அந்தப் புரிதல் கூட டெல்லி தேர்தல் பரப்புரையில் மோடி என்.ஆர்.சி இயற்றப்படாது என்று கூற காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், பல இடங்களில் என்.ஆர்.சியை அமல்படுத்துவதற்கான எண்ணங்களிலேயே பேசியிருக்கும் அமித் ஷாவின் பேச்சும், மோடியின் பேச்சும் முரண்படுவதை டெல்லி மக்களும் கவனித்து வருகிறார்கள்.

-ஜான் ஜே ஆகாஷ்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு