அலசல்
Published:Updated:

மோடி பல்டிக்குக் காரணம் யார்?

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

எல்லோருக்கும் தடுப்பூசி போடும் பொறுப்பை மத்திய அரசு தட்டிக் கழித்து, மாநிலங்களின் தலையில் சுமையை ஏற்றுவதாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில முதல்வர்கள் குற்றம் சாட்டினர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து முதல் வேளாண் சட்டங்கள் வரை, எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதே நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தன்மையாக இருக்கிறது. எப்படிப்பட்ட போராட்டங்களுக்கும் அசைந்து கொடுப்பதில்லை. முதன்முறையாக மோடி பல்டி அடித்தது கொரோனா தடுப்பூசி விவகாரத்தில்தான்! இதற்குக் காரணம் உச்ச நீதிமன்றமா அல்லது எதிர்க்கட்சிகளா என்ற விவாதம் இப்போது சூடுபிடித்தி ருக்கிறது.

கடந்த ஜனவரியில் ஆரம்பித்து முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிறகு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி கிடைத்தது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதும், ‘18 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் தடுப்பூசி போட வேண்டும்’ எனப் பல மாநிலங்கள் விரும்பின. அதிக தடுப்பூசிகள் கேட்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தன.

இதனால் மத்திய அரசு ஏப்ரல் 19 அன்று ஓர் அதிரடி முடிவெடுத்தது. ‘இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளில் 50 சதவிகிதத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு வழங்கும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இவற்றைச் செலுத்தலாம். 25 சதவிகிதத்தை மாநில அரசுகளே நேரடியாக வாங்கி 18-44 வயதில் இருப்பவர்களுக்கு அளிக்கலாம். 25 சதவிகிதம் தனியார் மருத்துவ மனைகளுக்கு’ என்றது. மத்திய அரசு, மாநில அரசு, தனியார் மருத்துவ மனைகள் ஆகிய மூவருக்கும் தனித்தனி விலை. மே முதல் தேதியில் இது அமலுக்கு வந்தது.

அப்போதே இதற்குப் பெரும் எதிர்ப்பு எழுந்தது. எல்லோருக்கும் தடுப்பூசி போடும் பொறுப்பை மத்திய அரசு தட்டிக் கழித்து, மாநிலங்களின் தலையில் சுமையை ஏற்றுவதாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில முதல்வர்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையே, தடுப்பூசிகளை வாங்க, பல மாநிலங்கள் முட்டிமோதின. குளோபல் டெண்டர் விட்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் வாங்க தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் முயன்றன. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களோ ‘மத்திய அரசுக்கு மட்டுமே நேரடியாக விற்க முடியும்’ என்றன.

இந்நிலையில் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் இணைந்து, ‘தடுப்பூசி விநியோகத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்’ என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘நாம் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களுக்குக் கடிதம் எழுதினார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் ஆகியோரும் இதேபோலக் கடிதம் எழுதினர். இது மத்திய அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறியது.

சரியாக இதே நேரத்தில் உச்ச நீதிமன்றமும் களத்தில் இறங்கியது. நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வரராவ், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, தடுப்பூசி விவகாரத்தைத் தானாகவே முன்வந்து பொதுநல வழக்காக எடுத்துக்கொண்டது. வழக்கு விசாரணையின்போது பல்வேறு கேள்விக்கணைகளை நீதிபதிகள் தொடுத்தனர். “ஒரே தடுப்பூசியை மருந்து நிறுவனங்கள் மத்திய அரசு, மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள் என மூன்று தரப்பினருக்கும் வெவ்வேறு விலைக்கு ஏன் விற்கின்றன?’’ என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் கேட்டனர். ‘`நாங்கள் நிறைய தடுப்பூசிகள் வாங்குவதால் எங்களுக்கு விலை குறைவாகத் தருகிறார்கள்’’ என்றார் அவர். ‘`அப்படியென்றால் எல்லாத் தடுப்பூசிகளையும் நீங்களே குறைந்த விலைக்கு வாங்கி மாநிலங்களுக்குப் பிரித்துத் தரலாமே?’’ என்று நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.

நீதிபதிகள் கேட்ட இன்னொரு கேள்வியும் முக்கியமானது. “45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக மத்திய அரசு தடுப்பூசி தருகிறது. 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு அப்படித் தர மறுக்கிறது. அவர்கள் பணம் கொடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா... எல்லோருக்கும் சம உரிமையை உறுதிசெய்யும் அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறும் செயல் அல்லவா இது?’’ என்று நீதிபதிகள் கேட்டனர்.

மோடி பல்டிக்குக் காரணம் யார்?

ஒரு கட்டத்தில், “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது’’ என்று மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. ஆனால், “மக்களின் அடிப்படை உரிமைகளை அரசின் கொள்கை முடிவுகள் பறிக்கும்போது, நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது’’ என்று சொன்ன நீதிபதிகள், “மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை நியாயமற்றது, பொருத்த மில்லாதது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

அத்துடன் நீதிமன்றம் நின்றுவிடவில்லை. “பட்ஜெட்டில் தடுப்பூசி வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட 35,000 கோடி ரூபாயை எப்படிச் செலவு செய்தீர்கள், எத்தனை பேருக்குத் தடுப்பூசி போட்டீர்கள், மீதிப் பேருக்கு எப்போது போடவிருக்கிறீர்கள், எவ்வளவு தடுப்பூசிகள் வாங்கினீர்கள், எந்தெந்தத் தேதிகளில் வாங்கினீர்கள், மாநிலங்களுக்கு எவ்வளவு கொடுத்தீர்கள், இன்னும் எவ்வளவு தடுப்பூசி வாங்குவீர்கள், அவை எப்போது வரும்... எல்லாவற்றுக்கும் உரிய ஆவணங்களுடன் இரண்டு வாரங்களுக்குள் பதில் கொடுங்கள்’’ என்று மே 31-ம் தேதி உத்தரவிட்டனர். இந்த உத்தரவு ஜூன் 2-ம் தேதி வெளியானது.

ஒரு பக்கம் மாநில முதல்வர்கள், இன்னொரு பக்கம் உச்ச நீதிமன்றம் என இரட்டை நெருக்கடிகளால் வேறு வழியின்றி பணிந்தது மத்திய அரசு. ஜூன் 7-ம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, ‘இனி மாநிலங்கள் தடுப்பூசி வாங்க வேண்டியதில்லை. மத்திய அரசு மொத்தமாக வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்’ என அறிவித்தார்.

இதைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மாநில முதல்வர்கள் பார்க்கிறார்கள். ஒரு வெற்றியை ருசித்தவுடன் அடுத்தடுத்த போர்களில் இறங்கத் தயாராகிறார்கள். ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன்களைத் திருப்பித் தருவதில் சலுகை அளிக்க வேண்டும்’ என பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் ஸ்டாலின். இதே விஷயத்தை எதிர்க்கட்சிகளின் 12 முதல்வர்களுக்கும் கடிதமாக எழுதி, ‘தடுப்பூசி விஷயத்தில் இணைந்து வெற்றி கண்டதுபோல இதற்கும் வற்புறுத்த வேண்டும்’ எனக் கூட்டம் சேர்க்கிறார். இன்னொரு பக்கம் மம்தா பானர்ஜி, ‘வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்குமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்’ என மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து ஆயுதம் ஏந்துகிறார்.

காங்கிரஸை எந்தச் சிரமமும் இல்லாமல் எதிர்கொண்ட மோடிக்கு இனி சவால்கள் காத்திருக்கின்றன.