Published:Updated:

கொரோனாவால் வெளிநாடு செல்லாத மோடி - நாட்டுக்கு லாபம் என்ன, நஷ்டம் என்ன?

மோடி
மோடி

கடந்த ஐந்து ஆண்டுகளாக இடைவிடாமல் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுவந்த பிரதமர் மோடி, கொரோனா அச்சம் காரணமாக 2020-ம் ஆண்டில் வெளிநாட்டுப் பயணமே மேற்கொள்ளவில்லை. இதனால், இந்தியாவுக்கு லாபம் என்ன, நஷ்டம் என்ன?

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவ ஆரம்பித்த பிறகு, வெளிநாட்டுப் பயணங்களைப் பிரதமர் மோடி நிறுத்திவிட்டார். கொரோனா காரணமாக இந்தியாவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, பிரதமர் மோடி பொது இடங்களுக்கும் செல்வதில்லை. தொலைக்காட்சி வாயிலாகவே கொரோனா தொடர்பான அறிவிப்புகளை அவர் வெளியிட்டுவந்தார்.

மோடி
மோடி

சில மாதங்களாக வெளியே வராமல் இருந்த பிரதமர், புயலால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கத்தைப் பார்வையிடுவதற்காக முதன்முறையாக வெளியே வந்தார். அதன் பிறகு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் தொடக்க நிகழ்ச்சிக்கும், சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற பீகாருக்கும் சென்றார். ஆனால், எந்த வெளிநாட்டுக்கும் அவர் செல்லவில்லை. 2014-ல் பிரதமராக மோடி பொறுப்பேற்றதிலிருந்து அவர் எந்த வெளிநாட்டுக்கும் செல்லாத ஆண்டாக 2020 அமைந்துவிட்டது.

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அங்கு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை, அவருக்கு ஏற்பட்டது. 2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைக் காரணம் காட்டி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மோடிக்கு அனுமதி மறுத்திருந்தன. 2014-ம் ஆண்டு மோடி பிரதமரான பிறகு அவருக்கான தடை விலகியது.

மோடி
மோடி

அவர், வெளிநாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தார். 2014-ம் ஆண்டு மே மாதம் பிரதமராகப் பதவியேற்ற அவரின் முதல் வெளிநாட்டுப் பயணமாக பூடான் பயணம் அமைந்தது. ஐ.நா பொதுச்சபை மாநாட்டில் பங்கேற்பதற்காக 2014-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு மோடி பயணம் சென்றார். கடந்த ஆறு ஆண்டுகளில், மோடி அதிக முறை பயணம் செய்த நாடும் அமெரிக்காதான்.

பிரதமர் ஆன முதல் ஆண்டிலேயே அவர் தொடர்ந்து பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அது சர்ச்சையானது. பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்தனர். சமூக வலைளதங்களில் கேலிக்கும் விமர்சனங்களுக்கும் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் உள்ளாகின. ``பல நாடுகள் மோடிக்குத் தடைவிதித்திருந்த காரணத்தால், கடந்த பத்து ஆண்டுகளில் அவரால் வெளிநாடுகளுக்குப் போக முடியவில்லை. இப்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே, வெளிநாடுகளுக்கு அவர் செல்கிறார். இவர் செல்லட்டும். அதனால் இந்தியா முன்னேறினால் நல்லதுதான்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அப்போது கூறினார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``ஒன்பது மாதங்களில் 11 நாடுகளுக்கு பிரதமர் சென்ரிருக்கிறார். அவரது வெளிநாட்டுப் பயணத்தால், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஒரு பிரதமர் பெரும்பாலான நாள்கள் வெளிநாடுகளுக்குப் போய்விட்டால், இந்த நாட்டை யார் கவனிப்பது? முதலில் அவர் இந்த தேசத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதில் அவருக்கு ஆர்வம் இல்லை’’ என்றார்.

விமர்சனங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குத் தொடர்ந்து பயணம் மேற்கொண்டார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று இரண்டாவது முறையாக மோடி பிரதமரான பிறகும் பல்வேறு நாடுகளுக்கு அவர் சென்றுவந்தார். 2019-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா, தென் கொரியா, பிரான்ஸ், ரஷ்யா, சௌதி அரேபியா உள்பட சுமார் 15 நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பிறகு, வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் தவிர்த்துவருகிறார். 2014-ம் ஆண்டு அவர் பிரதமர் ஆனதிலிருந்து வெளிநாடு செல்லாத ஆண்டாக 2020 அமையப்போகிறது.

மோடி
மோடி

இந்த ஆண்டில் நவம்பர் 22-ம் தேதி வரை ஒரு வெளிநாட்டுப் பயணம்கூட பிரதமர் மேற்கொள்ளவில்லை என்றும், இந்த ஆண்டின் இறுதியிலும் அவர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் பிரதமர் அலுவலக இணையதளம் தெரிவிக்கிறது. கடைசியாக அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரேசில் சென்றுவந்தார். 2014-ம் ஆண்டு, ஜூன் 15-ம் தேதி முதல் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம்வரை 96 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்திருப்பதாக பிரதமர் அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2014-ல் எட்டு நாடுகள், 2015-ல் 23 நாடுகள், 2016-ல் 17 நாடுகள், 2017-ல் 14 நாடுகள், 2018-ல் 20 நாடுகள், 2019-ல் 14 நாடுகள் என மோடி பயணம் மேற்கொண்டதாகவும் பிரதமர் அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2020-ல் பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்லாததால் என்ன லாபம், என்ன நஷ்டம் என்ற கேள்வியை மோடிக்கு ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடுகளைக்கொண்ட அரசியல் கட்சியினரிடம் எழுப்பினோம்.

முதலில், பா.ஜ.க-வின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யாவிடம் பேசினோம். ``கொரோனா சூழலில் உலக நாடுகளின் தலைவர்கள் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்துவருகிறார்கள். தவிர்க்க முடியாத சூழலில், ஒரு சில தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனர். இந்தியப் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் வரவேற்கத்தக்கவை. காரணம், மோடியின் பெரும்பாலான வெளிநாட்டுப் பயணங்கள் இரு நாட்டு உறவுகள் சம்பந்தப்பட்டவையாகவும், சர்வதேச அளவிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் அமைந்தவை. சர்வதேச நாடுகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் காணொலியில் நடைபெற்றுவருகின்றன. அவற்றில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மோடியின் இதுவரையிலான வெளிநாட்டுப் பயணங்களால் இந்தியாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவடைந்திருக்கிறது. எனவே, இந்த ஆண்டு அவர் வெளிநாட்டுப் பயணம் செல்லவில்லை என்பதால், ராஜாங்கரீதியில் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

சூர்யா
சூர்யா

பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான எதிர்க்கட்சியினரின் விமர்சனம் நியாயமானதல்ல. அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் விமர்சிக்கிறார்கள். மோடி அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லாததால், அவரது வெளிநாட்டுப் பயணங்களை அவர்கள் பெரிதுபடுத்திப் பேசுகிறார்கள். பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தால், சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு வந்திருக்கிறது” என்றார் எஸ்.ஜி.சூர்யா.

வலுப்பெறும் `நிவர்' புயல்... மின்னணு, மின்சார சாதனங்களை   கையாள்வது எப்படி?

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரான திருமலையிடம் பேசினோம். ``இந்த ஆண்டு வெளிநாடுகளுக்குப் பிரதமர் செல்லாததால், இந்திய மக்களின் பல கோடி ரூபாய் வரிப் பணம் மிச்சமாகியிருக்கிறது. அந்த வகையில் நமக்கு லாபம்தான். அண்டை நாடுகளுடனான உறவு மிகவும் முக்கியமானது. ஆனால், அண்டை நாடுகளுடன் இந்தியாவுக்கு நல்ல உறவு இல்லை. நேபாளம் என்பது இந்தியாவுடன் நீண்டகாலமாக மிகவும் நெருங்கிய நாடாக இருந்துவந்தது. அந்த நாட்டுடனான நல்லுறவு பிரதமர் மோடி ஆட்சியில் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், உலகம் முழுவதும் அவர் விமானத்தில் பறந்து என்ன பயன்?

திருமலை
திருமலை

பாரம்பர்யமாக இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை என்பது உலகம் முழுவதும் நிறவெறிக்கு எதிரானதாக இருந்துவந்திருக்கிறது. சின்னஞ் சிறிய நாடுகளில் ஏகாதிபத்திய நாடுகள் அத்துமீறி ஆதிக்கம் செலுத்தினால், இந்தியா அதைக் கண்டிக்கும். அணிசேராக் கொள்கையை இந்தியா கடைப்பிடித்தது. ஆனால், பிரதமர் மோடியில் ஆட்சியில் ஏகாதிபத்திய அமெரிக்காவுடனும், இனவெறி இஸ்ரேலுடனும் நெருக்கமான உறவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது, சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையைச் சீர்குலைத்திருக்கிறது. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின்போது அதானி போன்றவர்கள்தாம் உடன் செல்கிறார்கள். மோடியின் வெளிநாட்டுப் பயணம் தடைப்பட்டிருப்பதால் ஏழை, எளிய இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை... அதானி, அம்பானி போன்றவர்களுக்குத்தான் இழப்பு” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு