Published:Updated:

‘உங்களின் பொய்களை இளைஞர்கள் கூகுளில் தேடமாட்டார்களா?’ - மோடிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்!

அஸ்ஸாமில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு மையத்தின் பணிகள் வேகமெடுத்துள்ளதாக கடந்த செப்டம்பர் மாதமே செய்திகள் வெளியானது.

மோடி
மோடி

“இஸ்லாமியர்கள் யாரும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்படுவதில்லை. இந்தியாவில் எந்த தடுப்பு மையங்களும் இல்லை. வதந்திகளை பரப்புவது எனக்கு மனவேதனை அளிக்கிறது. காங்கிரஸ் கட்சியும் அவரது கூட்டணி கட்சியினரும் பொய்களை பரப்புகின்றனர்” என டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார். மேலும், `குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல, மக்களுக்கு குடியுரிமையை வழங்குவதாகும்' என விளக்கமளித்தார் மோடி.

மோடி
மோடி

மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி தன் ட்விட்டர் பக்கம் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. தடுப்பு மையங்கள் குறித்து மோடி பொய் சொல்வதாக பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், “அவரது பொய்களை இந்திய இளைஞர்கள் அப்படியே நம்புவார்கள். அதன் உண்மை தன்மையை கூகுளில்கூட தேட மாட்டார்கள் என பிரதமர் மோடி நம்புகிறார். தடுப்பு மையங்கள் இருப்பது உண்மை. இவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரை தொடர்ந்து வளர்ந்துக்கொண்டே தான் இருக்கும்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

`மம்தா உங்களுக்கு என்ன ஆனது... வெறுப்பை என்னிடம் காட்டுங்கள்!' - டெல்லியில் நீண்ட உரை கொடுத்த மோடி

மேலும் அந்த பதிவில், அஸ்ஸாமில் தடுப்பு மையத்தில் 28 பேர் இறந்துள்ளதாக மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகள். மாநில அரசுக்கு தடுப்பு மையங்கள் தொடர்பாக மத்திய அரசின் சுற்றறிக்கை, அஸ்ஸாமில் 7 கால்பந்து மைதானம் அளவில் கட்டப்படும் தடுப்பு மையம் தொடர்பான செய்திகளின் தலைப்புகளை பதிவிட்டுள்ளனர்.

ஏழு கால்பந்து மைதான அளவில் தடுப்புக் காவல் முகாம்! - அஸ்ஸாமில் வேகமெடுக்கும் மத்திய அரசு

அஸ்ஸாமின் கோல்பாரா மாவட்டத்தின் மத்தியா பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு மையத்தின் பணிகள் வேகமெடுத்துள்ளதாக கடந்த செப்டம்பர் மாதமே செய்திகள் வெளியானது. ஏழு கால்பந்து மைதான அளவில்... அதாவது 2.5 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்பட்டுவரும் இந்தத் தடுப்பு மையத்தில், மொத்தம் 15 நான்கு மாடிக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளதாகவும். தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் இறுதிப் பதிப்பு வருவதற்கு முன்பாகவே இந்த கட்டடப்பணி தொடங்கப்பட்டதாகக் அப்போது கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.