Published:Updated:

“சிறப்பு... மகிழ்ச்சி...” - உளறும் பா.ஜ.க தலைவர்கள்... அதிர்ச்சியில் மக்கள்!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

இப்போதும்கூட விபரீதத்தை உணராத மத்திய ஆட்சியாளர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து, விதவிதமாகத் தற்பெருமை பேசிவருகிறார்கள்.

“சிறப்பு... மகிழ்ச்சி...” - உளறும் பா.ஜ.க தலைவர்கள்... அதிர்ச்சியில் மக்கள்!

இப்போதும்கூட விபரீதத்தை உணராத மத்திய ஆட்சியாளர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து, விதவிதமாகத் தற்பெருமை பேசிவருகிறார்கள்.

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

கொரோனா இரண்டாம் அலையில் மத்திய அரசின் செயலற்ற போக்கை சர்வதேச ஊடகங்கள் வறுத்தெடுக்கின்றன. ஆனால், இந்தியாவிலோ பா.ஜ.க-வினர், “பிரதமர் மோடி, கொரோனா பரவலை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்திவருகிறார்”, “தடுப்பூசி செலுத்துவதில் அமெரிக்காவை விஞ்சிவிட்டது இந்தியா” என்றெல்லாம் உளறிக்கொட்டி மக்களை அதிர்ச்சி ஆழ்த்திவருகிறார்கள்!

“சிறப்பு... மகிழ்ச்சி...” - உளறும் பா.ஜ.க தலைவர்கள்... அதிர்ச்சியில் மக்கள்!

கொரோனா முதல் அலையைக் கைதட்டி, அகல் விளக்குகள் ஏற்றி பிரதமர் மோடி விரட்டிவிட்டதாக பா.ஜ.க-வைச் சார்ந்தவர்கள் பெருமை பேசிக்கொண்டிருந்த அதேநேரத்தில் தான் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் கொரோனா இரண்டாவது அலையைத் தடுக்கும் வகையில் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் விஷயங்களில் ஈடுபட்டிருந்தன. அதன் பிறகும் சுதாரிக்கவில்லை மத்திய அரசு... மே மாதம் வரை கும்பமேளா, தேர்தல் பிரசார கூட்டங்கள் அலட்சியத்தின் உச்சம் தொட்டன. இதன் விளைவாகவே இன்று மொத்த நாடும் இரண்டாம் அலையில் சிக்கி, கொத்துக் கொத்தாக மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போதும்கூட விபரீதத்தை உணராத மத்திய ஆட்சியாளர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து, விதவிதமாகத் தற்பெருமை பேசிவருகிறார்கள். பிரதமர் மோடி சமீபத்தில் தனது, ‘மன் கி பாத்’ உரையில், “எனது ஆட்சியில் கோடிக்கணக்கான குடும்பங்களில் மகிழ்ச்சி நிலவுகிறது’’ என்று சொன்னபோது மக்கள் அதிர்ந்துபோனார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மோடி தலைமையிலான அரசு, மற்ற நாடுகளைவிட மிக விரைவாக இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தியுள்ளது” என்று வார்த்தை ஜாலம் காட்டினார். இவர்களை ஒருபடி தாண்டிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், “இந்தியா 17.2 கோடி பேருக்கு தடுப்பூசி முதல் தவணையை செலுத்திவிட்டது. இதன் மூலம் 16.9 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்திய அமெரிக்காவை நாம் விஞ்சிவிட்டோம்’ என்று சொன்னார். இன்னொரு பக்கம் பா.ஜ.க-வினர் சிலர், ‘கோமியம் கொரோனாவைக் கட்டுப்படுத்தும்’ என்றெல்லாம் சொல்லிவருகிறார்கள்.

“சிறப்பு... மகிழ்ச்சி...” - உளறும் பா.ஜ.க தலைவர்கள்... அதிர்ச்சியில் மக்கள்!

இவற்றையெல்லாம் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் முருகானந்தத்திடம் பேசினோம். “கொரோனா முதல் அலையில் மக்களை நடு ரோட்டில் தவிக்கவிட்டவர்கள், இரண்டாவது அலையில் அந்த மக்களை பிணங்களாகக் குவித்துவைத்திருக் கிறார்கள். இந்த வருட தொடக்கத்திலேயே ராகுல் காந்தி, ‘இரண்டாவது அலையை எதிர்கொள்ள உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ள நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசி கொள்முதல் செய்யுங்கள்’ என்று எச்சரித்தார். ஆனால், ‘வெளிநாட்டு நிறுவனங்களுக்காக ராகுல் லாபி செய்கிறார்’ என்று ஆட்சியாளர்கள் கிண்டல் செய்தனர். மேலும், ‘வெளிநாடுகளுக்கு அதிகமான தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்த நாடு இந்தியா’ என்று ஐ.நா சபையிலும் இந்தியப் பிரதிநிதி பெருமை பேசினார்.

இதோ, இப்போது தடுப்பூசி கிடைக்காமல், நம் மக்கள் செத்து மடிகின்றனர். இப்போது அமெரிக்காவிடம், ‘தடுப்பூசி தயாரிப்புக்கான மூலப்பொருள்களை வழங்குங்கள்’ என்று கெஞ்சுகிறார்கள். ரஷ்யாவிடமிருந்து ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்கிறார்கள். ஆக, உள்நாட்டில் தயாரான தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டு, இப்போது அதே நாடுகளிடம் கையேந்தி நிற்கிறது இந்தியா. அதிலும் வி.கே.பால் சொன்ன புள்ளிவிவரம் கொடுமையிலும் கொடுமை... சுமார் 33 கோடி மக்கள்தொகை உள்ள அமெரிக்காவில் 16 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது அவர்களின் மக்கள் தொகையில் 51 சதவிகித மாகும். இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 139 கோடி. ஆனால், நம் மத்திய அரசோ 17.2 கோடி பேருக்கு மட்டும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளது. இது நம் மக்கள் தொகையில் 13 சதவிகிதம் மட்டுமே. இந்தக் கணக்குகூட தெரியாமல் பேசுகிறார் நிதி ஆயோக் தலைவர்.

உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசியைத் தங்கள் குடிமக்களுக்கு இலவசமாக வழங்கிவருகின்றன. இந்தியாவில் மட்டும்தான் மாநில அரசுக்கு ஒரு விலை, மத்திய அரசுக்கு ஒரு விலை, தனியாருக்கு ஒரு விலை என மக்களின் உயிரைக் காக்க விலை பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்தத் தடுப்பூசியும்கூட கிடைக்காமல் மாநில அரசுகள் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கின்றன.

கொரோனா பாதிப்பைக் காரணம் காட்டி எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியைக்கூட நிறுத்திவிட்ட பா.ஜ.க அரசு, பிஎம் கேர்ஸ் நிதி பற்றி மட்டும் வாய் திறப்பதே இல்லை. இப்படியோர் அரசை வைத்துக் கொண்டு கொரோனா மூன்றாவது அலையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று அச்சமாக இருக்கிறது’’ என்றார்.

முருகானந்தம், எல்.முருகன்
முருகானந்தம், எல்.முருகன்

ஆனால், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மேற்கண்ட கூற்றுகளை மறுத்துப் பேசுகிறார்... “மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்ததால்தான், முதல் அலையை வெற்றிகரமாக முறியடித்தோம். அதேபோல இரண்டாம் அலையைச் சுட்டிக்காட்டி மாநில அரசுகளை முன்கூட்டியே எச்சரித்தோம். ஆனால், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் அலட்சியம் செய்துவிட்டன. கொரோனா இரண்டாம் அலைக்கு கும்பமேளாவைக் காரணம் சொல்கிறார்கள்... ஆனால், பிரதமர் கேட்டுக்கொண்டதால், கும்பமேளா பாதியில் நிறுத்தப்பட்டது. தேர்தல் நடைபெறாத மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில்தான் தொற்று பாதிப்பு அதிகம். எனவே, இதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. பிஎம் கேர்ஸ் நிதியில்தான் அனைத்து மாநிலங்களுக்கும் வென்டிலேட்டர் வசதி செய்து தரப்படுகிறது.

“சிறப்பு... மகிழ்ச்சி...” - உளறும் பா.ஜ.க தலைவர்கள்... அதிர்ச்சியில் மக்கள்!

தடுப்பூசி குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் செய்த பொய் பிரசாரத்தால், மக்களிடம் தயக்கம் நிலவியது. எனவே, அன்றைய சூழலில், வெளிநாடுகளுக்கும் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இப்போது தேவையைக் கருதி இறக்குமதி செய்கிறோம். மக்கள் அனைவருக்கும் மத்திய, மாநில அரசுகள் இலவசமாகத்தான் தடுப்பூசி செலுத்திவருகின்றன. தற்போதே இரண்டாம் அலையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம். மூன்றாவது அலையையும் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism