Published:Updated:

``மோடி அரசின் பொருளாதாரப் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள்!" - குற்றம்சாட்டும் காங்கிரஸ்

ராகுல் காந்தி

``மோடி அரசின் `தவறான பொருளாதாரப் தொற்றுநோயால்’ ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிக துன்பங்களைச் சந்தித்து வருகிறார்கள்.’’ - ராகுல் காந்தி.

``மோடி அரசின் பொருளாதாரப் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள்!" - குற்றம்சாட்டும் காங்கிரஸ்

``மோடி அரசின் `தவறான பொருளாதாரப் தொற்றுநோயால்’ ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிக துன்பங்களைச் சந்தித்து வருகிறார்கள்.’’ - ராகுல் காந்தி.

Published:Updated:
ராகுல் காந்தி

கடந்த 24-ம் தேதி, ``கொரோனா காலத்தில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகியும்விட்டனர்" என ஓர் ஆய்வறிக்கை வெளியானது. இதை மேற்கோளிட்டு காங்கிரஸ் கட்சி, ``மத்திய மோடி அரசு பணக்காரர்களுக்கானது" எனக் குற்றம்சாட்டிவருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இது தொடர்பாக, ``கொரோனா பெருந்தொற்றினால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழை - பணக்காரர்களுக்கு இடையேயான பொருளாதாரரீதியான இடைவெளி அதிகரித்துவருகிறது. மோடி அரசின் தவறான பொருளாதாரத் தொற்றுநோயால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிக துன்பங்களைச் சந்தித்துவருகின்றனர். மேலும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிகரித்துவரும் இந்தப் பொருளாதார இடைவெளியை அதிகரித்த பெருமை மத்திய அரசையே சேரும்" என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மோடி
மோடி

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ```கொரோனா காலங்களில் ஏழைகளின் வருமானம் 53 சதவிகிதம் குறைந்துள்ளது. அதே சமயம், பணக்காரர்களின் வருமானம் அதிகரித்துள்ளது' என்ற பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையைச் சுட்டிக் காண்பித்துள்ளார்.

அந்த ஆய்வு அறிக்கையில். "20 சதவிகித ஏழை இந்தியக் குடும்பங்களின் ஆண்டு வருமானம் 2015-16-ல் இருந்ததைவிட 2020-21-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பின் காரணமாக 52.6 சதவிகிதம் குறைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் 20 சதவிகித பணக்காரர்களின் ஆண்டு வருமானம் சராசரியாக 39 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

மேலும், கீழ்மட்ட நடுத்தர வர்க்கத்தின் ஆண்டு வருமானம் 32.4 சதவிகிதமும், நடுத்தர வர்க்கத்தினரின் ஆண்டு வருமானம் 8.9 சதவிகிதமும் சரிந்துள்ளது. அதாவது நாட்டின் 60 சதவிகித மக்கள் 5 ஆண்டுக்கு முன்பு ஈட்டிய வருமானத்தைவிட தற்போது மிகக் குறைவான வருமானம் ஈட்டுகிறார்கள். அதேசமயம் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிக்கொண்டிருக்கிறார்கள்" என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

குடிசை வீடுகள்
குடிசை வீடுகள்

இது தொடர்பாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் செய்தியாளர்களிடம், ``மோடி அரசு பணக்காரர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது , 20 சதவிகித ஏழை மக்களின் வருமானம் பாதியாகக் குறைந்துள்ளது. மோடி ஆட்சியில் 60 சதவிகித மக்களின் வருமானம் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றுவிட்டது. எனவே, இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் மத்தியில் உள்ள இடைவெளியைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் திட்டவட்டமாகவும் உறுதியாகவும் வலியுறுத்துகிறோம். இந்த மத்திய பட்ஜெட் ஏழைகளின் கைகளில் பணத்தை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நகர்ப்புறத்திலும் கிராமப்புறத்திலும் வறுமை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, இதில் பட்ஜெட் தயாரிப்பின்போது கவனம் செலுத்த வேண்டும், மேலும், இந்தியப் பொருளாதாரம் எவ்வளவு மோசமாக நிர்வகிக்கப்படுகிறது என்பதை அறிய, மொத்தப் பொருளாதாரத் தவறான நிர்வாகக் குறியீட்டை அரசாங்கம் நிறுவ வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.