Election bannerElection banner
Published:Updated:

`திரிணாமுல் சர்வே... பாஜக வெற்றி?! ; மோடி மிக பிரபலம்’ - பரபரப்பைக் கிளப்பும் பிரஷாந்த் கிஷோர் ஆடியோ

பிரஷாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோர்

பா.ஜ.க தலைவர் ராஜிப் பானர்ஜி, ``பிரஷாந்த் கிஷோர் வியூகங்களெல்லாம் மேற்கு வங்கத்தில் எடுபடாது. திரிணாமுல் காங்கிரஸ் கதை முடிந்தது. இங்கு மோடியின் வியூகம் மட்டுமே எடுபடும்” என்றார்.

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. அஸ்ஸாமில் மூன்று கட்டங்களாகவும், தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கும் இந்த நேரத்தில், மேற்கு வங்கத்தில் எட்டுக் கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுவருகிறது. இன்று அங்கு நான்காவது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

மேற்கு வங்கத் தேர்தலைப் பொறுத்தவரை, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடனேயே பா.ஜ.க முழுவீச்சில் களபணிகளைத் தொடங்கியது. பா.ஜ.க-வை வீழ்த்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர், முதல்வர் மம்தா பானர்ஜியும் உடனடியாகக் களத்தில் இறங்கினார். பா.ஜ.க-வின் வியூகங்களை வீழ்த்த பிரபல தேர்தல் வியூக வித்தகரான பிரஷாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்தார். பிரஷாந்த் கிஷோரும் மேற்கு வங்கத்தில் முகாமிட்டு தேர்தல் பணிகளைக் கடந்த ஓராண்டுக்கும் மேலாகச் செய்துவந்தார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

தற்போது தமிழகத்திலும் தேர்தல் முடிவடைந்த நிலையில் பிரஷாந்த் கிஷோரின் முழு கவனமும் மேற்கு வங்கம் பக்கம் திரும்பியது. இந்தநிலையில், பத்திரிகையாளர்களுடனான ஓர் உரையாடலில் பிரஷாந்த் கிஷோர் உதிர்த்த வார்த்தைகளை, பா.ஜ.க வியூகமாக்கித் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இந்த விவகாரம்தான் தற்போது மேற்கு வங்க அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.

என்ன நடந்தது..?

பா.ஜ.க மூத்த தலைவர்களின் ஒருவரான அமித் மால்வியா, சில ஆடியோ பதிவுகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், நடப்பு மேற்கு வங்கத் தேர்தல் குறித்து பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரஷாந்த் கிஷோர். அந்த ஆடியோ பதிவைப் பகிர்ந்திருக்கும் அமித் மால்வியா, ``ஒரு பொது கலந்துரையாடலில், மம்தா பானர்ஜியின் தேர்தல் வியூக அமைப்பாளர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கணிப்பில்கூட பா.ஜ.க வெற்றிபெறும் என்றுதான் கூறப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டார். மோடிக்குத்தான் வாக்களிக்கப்போகிறார்கள். மேற்கு வங்கத்தில் 27% உள்ள எஸ்.சி பிரிவினர் உள்ளிட்டவர்கள் பா.ஜ.க-வுக்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள்” எனப் பதிவிட மேற்கு வங்க அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியது.

அமித் மால்வியா பகிர்ந்த ஆடியோ பதிவில் பிரஷாந்த் கிஷோர், மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி மம்தா அளவுக்குப் பிரபலமானவர். நாடு முழுவதும் பல இடங்களில் அவரைச் சுற்றி வழிபாடு நடக்கும் அளவுக்குப் பிரபலம். ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு இருக்கிறது. எஸ்.சி பிரிவினரின் வாக்குகள். பா.ஜ.க-வுக்குச் சாதகமாக இருக்கிறது என்கிறார். இந்த ஆடியோ பதிவைத்தான் பா.ஜ.க-வினர் வேகமாகப் பரப்பிவருகின்றனர்.

``நரேந்திர மோடி உலகம் முழுவதும் பிரபலமானவர். திரிணாமூல் கட்சியின் கதையை முடிக்கும் பணியைத்தான் பிரஷாந்த் கிஷோர் செய்திருக்கிறார்” என்கிறார் பா.ஜ.க எம்.பி நிஷித் பிரமானிக். பா.ஜ.க தலைவர் ராஜிப் பானர்ஜி, ``பிரஷாந்த் கிஷோர் வியூகங்கலெல்லாம் மேற்கு வங்கத்தில் எடுபடாது. திரிணாமூல் காங்கிரஸ் கதை முடிந்தது. இங்கு மோடியின் வியூகம் மட்டுமே எடுபடும்” என்றார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக பிரஷாந்த் கிஷோர் பேசுகையில், ``எனது உரையை பா.ஜ.க-வினர், அவர்களின் சொந்தக் கட்சித் தலைவர்களின் உரையைவிட முக்கியமானதாகக் கருதியது மகிழ்ச்சி. எனது உரையாடலின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டவர்களிடம் ஒன்றைச் சொல்கிறேன். முழுமையான ஆடியோவை வெளியிடுங்கள்” என்றார். மேலும் தான் பேசியது ஒரு கேள்வியின் பதிலாக இருக்கலாம். அந்தக் கேள்வி, `பா.ஜ.க சுமார் 40% வாக்குகளைப் பெறும். பா.ஜ.க வெற்றி பெறுகிறது என்ற கருத்து ஏன் இருக்கிறது என்பதாகக்கூட இருக்கலாம்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

எது எப்படியோ, தேர்தல் நேரத்தில் இந்த ஆடியோ விவகாரம் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது.

15 வயதில் தொடங்கிய அரசியல், தகர்க்கப்பட்ட இடதுசாரிகளின் கோட்டை... காவிகளையும் சமாளிப்பாரா மம்தா?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு