Published:Updated:

எடப்பாடிக்கு முக்கியத்துவம்... ஓரங்கட்டப்பட்ட ஓ.பி.எஸ்... பா.ஜ.க கணக்கு என்ன?

ஆலோசனைக் கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலோசனைக் கூட்டம்

ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. எங்கள் பக்கத்திலிருந்து ஒரு மாவட்டச் செயலாளரைக்கூட பன்னீரால் தன் பக்கம் இழுக்க முடியவில்லை.

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்த முறை இந்தியா ஏற்றிருக்கிறது. அடுத்த ஆண்டு, செப்டம்பரில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டைச் சிறப்பாக நடத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 5-ம் தேதி அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டு, ஒற்றைத் தலைமையாக அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறார். ‘அனைவரும் ஒன்றுசேருங்கள்' எனச் சொல்லிவந்த டெல்லி, திடீரென அடித்த ‘ட்விஸ்ட்', யாரும் எதிர்பாராத ஒன்று. பா.ஜ.க கணக்கு என்ன?

‘‘இந்த அங்கீகாரம் ஏன் அளிக்கப்பட்டது?’’ என எடப்பாடிக்கு நெருக்கமான சில முன்னாள் அமைச்சர்களிடம் பேசினோம்.

எடப்பாடிக்கு முக்கியத்துவம்... ஓரங்கட்டப்பட்ட ஓ.பி.எஸ்... பா.ஜ.க கணக்கு என்ன?

‘‘2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்களில், தான் முடிவு செய்த எண்ணிக்கையில்தான் பா.ஜ.க-வுக்குக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு செய்தார் எடப்பாடி. இதனால்தான் டெல்லி தலைமைக்கும், எடப்பாடிக்கும் இடையே பனிப்போர் தொடங்கியது. கட்சியில், ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்து சர்ச்சையான பிறகு, பனிப்போர் பூதாகரமாக ஆகிவிட்டது. ‘கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்' என தமிழகத்

திலுள்ள சில அரசியல் பார்வையாளர்கள், மயிலாப்பூர் பத்திரிகையாளர் ஒருவர் ஆகியோர் அளித்த ரிப்போர்ட்டுகளை நம்பி, எடப்பாடித் தரப்பைத் தாக்கியது டெல்லி. முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்களைக் குறிவைத்து வருமான வரித்துறை ரெய்டுகள் நடந்தன. எடப்பாடியின் சம்பந்திகூட இந்த ரெய்டுகளில் சிக்கினார். வேறு வழியில்லாமல், கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார் எடப்பாடி. அவர் எதிர்பார்த்த பச்சை சிக்னல் கிடைக்கவில்லை. அதோடு நிற்காமல், ‘கட்சியில் சசிகலா, பன்னீர் ஆகியோரையும் இணைத்துக்கொள்ள வேண்டும்' என்ற அறிவுறுத்தலை அளித்து எடப்பாடியை அப்செட்டில் ஆழ்த்தியது டெல்லி. ஆனால், தன் முடிவிலிருந்து எடப்பாடி பின்வாங்கவில்லை.

ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. எங்கள் பக்கத்திலிருந்து ஒரு மாவட்டச் செயலாளரைக்கூட பன்னீரால் தன் பக்கம் இழுக்க முடியவில்லை. ‘போட்டிப் பொதுக்குழு கூட்டுவேன், சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்' எனப் பூச்சாண்டி காட்டுகிறாரே ஒழிய, எதையுமே அவர் செய்யவில்லை. அதேபோலத்தான் சசிகலாவும் இருக்கிறார். ஆனால் பொதுக்கூட்டம், சுற்றுப்பயணம், போராட்டம் என அதிதீவிரமாகச் செயல்படுகிறார் எடப்பாடி. தன் பக்கம் பெருமளவு நிர்வாகிகள் இருப்பதையும், பலமான கட்சியாகத் தன்னுடைய அணி இருப்பதையும், வழக்கமான ரூட்டைவிட்டு, வேறு வழியாக டெல்லி பா.ஜ.க மேலிடத்திடம் புரியவைத்தார் எடப்பாடி. நாமக்கல்லில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ‘அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி’ எனச் சூளுரைத்தார். இந்த சிக்னலை டெல்லி புரிந்துகொண்டது. ஏற்கெனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணி யிலிருந்து சிவசேனா கட்சி கழன்று கொண்டு விட்டது. அந்தக் கட்சியிலிருந்து பிரிந்து வந்திருக்கும் ஏக்நாத் ஷிண்டே மட்டும்தான் பா.ஜ.க-வுடன் உறவிலிருக்கிறார். இப்போது எடப்பாடி கழன்றுகொண்டால், ‘மெகா கூட்டணி' என்கிற அடையாளமே கூட்டணிக்கு இருக்காது. இதையெல்லாம் கணக்கு போட்டுத்தான், எடப்பாடிக்கு நேசக்கரம் நீட்டியிருக்கிறது டெல்லி’’ என்றனர் குஷியாக.

எடப்பாடிக்கு முக்கியத்துவம்... ஓரங்கட்டப்பட்ட ஓ.பி.எஸ்... பா.ஜ.க கணக்கு என்ன?

டெல்லியின் நேசக்கரத்தை பன்னீர் துளியும் எதிர்க்கவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ‘‘பா.ஜ.க-வுக்காக எங்கள் அண்ணன் எவ்வளவு கெட்ட பெயர் வாங்கியிருப்பார்?’’ என ஆதங்கத்துடன் பேசினார் பன்னீர் முகாமின் சீனியர் ஒருவர். ‘‘ஆந்திரப் பிரமுகர் ஒருவர் வழியாகத்தான் டெல்லியை நாங்கள் தொடர்புகொண்டு வந்தோம்.

ஜி20 ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள எடப்பாடிக்கு கடிதம் வந்ததும், அந்தப் பிரமுகரும் எங்களுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்டு விட்டார். தேர்தல் கூட்டணியின்போது, ‘பா.ஜ.க-வுக்கு அதிக இடங்களைக் கொடுக்க வேண்டும்' என வாதிட்டது பன்னீர்தான். உறுதியாக இருந்து அதைப் பெற்றும் கொடுத்தார். அவர் இல்லையென்றால், இன்று 4 எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தமிழகத்தில் பெற்றிருக்க முடியுமா... ஒற்றைத் தலைமை விவகாரத்தில் டெல்லி சொன்னபடிதான் நாங்கள் இதுவரை நடந்து வந்தோம். அதனால்தான், இவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்திருக்கிறோம். இதையெல்லாம் டெல்லி தலைமை மறந்து, அவர்களின் சுயநலத்துக்காக எங்களை ஓரங்கட்டிவிட்டது’’ என்றார் ஆதங்கத்துடன்.

எடப்பாடிக்கு முக்கியத்துவம்... ஓரங்கட்டப்பட்ட ஓ.பி.எஸ்... பா.ஜ.க கணக்கு என்ன?

நவம்பர் 15-ம் தேதியே, எடப்பாடிக்கு ஜி20 ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் பின்னர்தான், குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதேபோல, அ.தி.மு.க ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜைக் குறிவைத்து, பல பருப்பு, பாமாயில் சப்ளை நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை ரெய்டுகள் நடந்தன. ‘‘எடப்பாடியை ஆதரிக்கவேண்டிய சூழல் வந்தாலும், அ.தி.மு.க தங்களின் பிடியிலிருந்து விலகக் கூடாது என்பதில் டெல்லி உறுதியாக இருக்கிறது’’ என்கிறார்கள் முன்னாள் அமைச்சர்கள் சிலர். ‘டெல்லியின் sdfsdfldflபுதுக்கணக்கு எடுபடுமா’ என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.