Published:Updated:

`எதிரிகளால் முடியாததை மோடி முயற்சி செய்கிறார்!' - டெல்லி சத்தியாகிரகத்தில் ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

வேலைவாய்ப்பின்மை குறித்து இந்திய இளைஞர்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் `ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையை சோனியா, மன்மோகன், ராகுல் ஆகியோர் வாசிக்க மற்றவர்கள் அதை வழிமொழிந்தனர்.

காங்கிரஸ் தலைவர்கள்
காங்கிரஸ் தலைவர்கள்

அப்போது பேசிய ராகுல் காந்தி, ``இந்த நாட்டுக்கு என்று ஒரு குரல் உள்ளது. நாம் வாசிக்கும் இந்த முன்னுரை, நம் மக்களின் குரலாகும். அந்தக் குரலானது பிரிட்டிஷாருக்கு எதிராக அன்புடனுடன் அமைதியுடனும் பின்வாங்காமல் போராடியது. எதிரிகளால் செய்ய முடியாததை மோடி முயற்சி செய்கிறார். மோடி, நீங்கள் நீதித்துறையை அடக்கும்போதும், மாணவர்களை துப்பாக்கித் தோட்டாக்களால் சுடும்போதும், ​​அவர்கள் மீது தடியடி நடத்தும்போதும், பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் போதும் நாட்டின் குரலை அடக்க முயற்சி செய்கிறீர்கள்.

`குடியுரிமை கேட்டு மக்கள் வரிசையில் நிற்க வேண்டுமா?’ - டெல்லியில் கொதித்த பிரியங்கா காந்தி

உங்களால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியவில்லை. ஆனால், இந்தியப் பொருளாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் நீங்கள் வெறுப்புக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறீர்கள். அரசியலமைப்பைத் தாக்குவதற்கு இந்த நாடு உங்களை அனுமதிக்காது. இந்த நாட்டின் வளர்ச்சி விகிதம் ஏன் 4 சதவிதமாக இருக்கிறது? இளைஞர்களுக்கு ஏன் உங்களால் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர முடியவில்லை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

வேலைவாய்ப்பின்மை குறித்து இந்திய இளைஞர்களுக்கு, நீங்கள் பதில் சொல்ல வேண்டும். ஏன் பகைமையை விதைக்க முயற்சி செய்கிறீர்கள். ஒட்டுமொத்த இந்திய தேசம் உங்கள் ஆடையை வைத்து அடையாளம் காணும். நீங்கள்தான் 2 கோடி ரூபாய்க்கு ஆடை அணிந்துள்ளீர்கள்; நாட்டு மக்கள் அல்ல. இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரின் குரல் அரசியலமைப்பில் உள்ளது. அதை நீங்கள் ஒடுக்க முடியாது. அப்படி முயன்றால் இந்தியா உங்களைத் தடுக்கும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு