அலசல்
Published:Updated:

ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்... பாதுகாப்புக் குறைபாடுதான் காரணமா?

மோடி, ரௌடி ‘ஃபைட்டர்’ ரவி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி, ரௌடி ‘ஃபைட்டர்’ ரவி

பிரதமர் அன்று யாரையெல்லாம் சந்திக்கிறார் என்ற முழுமையான பெயர்ப் பட்டியல் போலீஸாரிடம் தெரிவிக்கப் படவில்லை.

கர்நாடகாவில் வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கடந்த இரண்டு மாதங்களில் ஆறாவது முறையாக பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு ‘விசிட்’ அடித்திருக்கிறார். ஆறாவது விசிட்டின்போது, நிதி மோசடி, கிரிக்கெட் பெட்டிங் எனப் பல வழக்குகளில் தொடர்புடைய ‘ஃபைட்டர்’ ரவி எனும் பிரபல ரௌடியை, பிரதமர் சந்தித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த மார்ச் 12-ம் தேதி மாண்டியாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, தன் கட்சியினரைச் சந்தித்தார். அப்போது பிரபல ரௌடியான ‘ஃபைட்டர்’ ரவியை, பிரதமர் நரேந்திர மோடி கையெடுத்துக் கும்பிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனால், ‘நாட்டின் பிரதமரே ஒரு ரெளடியைக் கையெடுத்துக் கும்பிடுகிறார். ரெளடிகளின் புகலிடமாக பா.ஜ.க இருப்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்...’ என காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சியினர் பா.ஜ.க-வை வறுத்தெடுக்கத் தொடங்கினர்.

மோடி, ரௌடி ‘ஃபைட்டர்’ ரவி
மோடி, ரௌடி ‘ஃபைட்டர்’ ரவி

மேலும், ‘‘கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பிரபல ரெளடி ‘சைலன்ட்’ சுனில், பா.ஜ.க எம்.பி-க்கள் தேஜஸ்வி சூர்யா, பி.சி.மோகன், எம்.எல்.ஏ உதய் கருடாச்சர் ஆகியோருடன் மேடையைப் பகிர்ந்திருந்தார். இப்போது `ஃபைட்டர்’ ரவி... ரெளடிகளின் புகலிடம்தான் பா.ஜ.க” என முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோரும் விமர்சித்திருக்கின்றனர்.

கணேஷ் கார்னிக்
கணேஷ் கார்னிக்

இது குறித்து கர்நாடக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கணேஷ் கார்னிக்கிடம் பேசினோம். ‘‘பிரதமர் அன்று யாரையெல்லாம் சந்திக்கிறார் என்ற முழுமையான பெயர்ப் பட்டியல் போலீஸாரிடம் தெரிவிக்கப் படவில்லை. பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில், சில பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதால் இது நிகழ்ந்துவிட்டது’’ என்றார் சமாளிப்பாக.

இது குறித்துப் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தள செய்தித் தொடர்பாளர்கள், “கர்நாடகாவை பா.ஜ.க ஆளும் லட்சணத்துக்கு, இதைவிட மோசமான உதாரணம் வேண்டுமா... இதுவே வேறு கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலத்தில் இது போன்று பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டிருந்தால், பா.ஜ.க-வினர் சும்மா விடுவார்களா?” என்றனர் காட்டமாக.

எது எப்படியோ, ‘ரெளடிகளின் புகலிடம் பா.ஜ.க’ என்ற சொல் கர்நாடகாவில் டிரெண்டாகியிருக்கிறது!