Published:Updated:

மோடி மாடல் Vs கெஜ்ரிவால் மாடல்! - கவுன்ட்டவுன் 2024

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

சோனியா, ராகுல், பிரியங்கா என நேரு குடும்பத்தின் மூன்று பேரை நம்பியே அந்தக் கட்சி இருக்கிறது. அதுதான் அந்தக் கட்சியின் பலமும் பலவீனமும்!

மோடி மாடல் Vs கெஜ்ரிவால் மாடல்! - கவுன்ட்டவுன் 2024

சோனியா, ராகுல், பிரியங்கா என நேரு குடும்பத்தின் மூன்று பேரை நம்பியே அந்தக் கட்சி இருக்கிறது. அதுதான் அந்தக் கட்சியின் பலமும் பலவீனமும்!

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் என நான்கு மாநிலத் தேர்தல்களில் கிடைத்த மகத்தான வெற்றியை அடுத்த நாளே குஜராத்தில் போய்க் கொண்டாடினார் பிரதமர் நரேந்திர மோடி. `நியாயமாக உத்தரப் பிரதேசத்தில் போய்த்தானே கொண்டாடியிருக்க வேண்டும்' என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அங்குதான் தேர்தல் முடிந்துவிட்டதே, பிறகு எதற்கு அங்கே போக வேண்டும்? இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் தேர்தல் வரப்போகிறது. அதற்கான தேர்தல் பிரசாரத்தை இந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியில் தொடங்கிவிட்டார் மோடி.

குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. `குஜராத் மாடல்' என்ற பிம்பத்தைக் கட்டமைக்க பா.ஜ.க-வுக்கு உதவிய மாநிலம். மோடியின் தாய்நிலம். `எல்லா மாநிலங்களிலும் எனக்கு மக்கள் வெற்றியைத் தருகிறார்கள். என் தாய்மண் என்னைக் கைவிட்டுவிடக்கூடாது' என்பதை இந்தக் கொண்டாட்டங்கள் மூலம் உணர்த்திவிட்டார் மோடி.

இன்னும் எட்டு மாதங்கள் கழித்து நடைபெறவுள்ள குஜராத் மற்றும் இமாசலப்பிரதேசத் தேர்தல்களுக்கு இப்போதே பிரசாரத்தில் இறங்கிவிட்டது பா.ஜ.க.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி, அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அகலக்கால் வைக்கத் தூண்டியிருக்கிறது. ``இது ஒரு புரட்சி. இந்தப் புரட்சியை இந்தியா முழுக்கப் பரவ வைப்போம். 75 ஆண்டுகளை வீணடித்துவிட்டோம். இனி புதிய இந்தியாவை உருவாக்குவோம்'' என்றார் கெஜ்ரிவால்.

மோடி மாடல் Vs கெஜ்ரிவால் மாடல்! - கவுன்ட்டவுன் 2024

ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ், ``கெஜ்ரிவால் மாடல் ஆட்சியை அடுத்து இமாசலப்பிரதேசம், குஜராத், ஹரியானா மற்றும் கர்நாடகாவில் ஏற்படுத்துவோம்'' என்கிறார். கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சத்தா, “இனி தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி கட்சியே மாற்றாக இருக்கும். ஆம் ஆத்மி இனி மாநிலக் கட்சி அல்ல, தேசியக் கட்சி. அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவைப் பிரதமராக வழிநடத்தும் நாள் விரைவில் வரும்” என்கிறார் அதிரடியாக.

குஜராத் மற்றும் இமாசலப்பிரதேசத்தில் பல மாதங்களாகவே தேர்தல் வேலைகளைப் பார்த்துவருகிறது ஆம் ஆத்மி கட்சி. குஜராத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸைவிட ஆம் ஆத்மி பெற்ற வெற்றி அதிகம்.

பஞ்சாப்பில் ஆட்சியை இழந்து, கோவா மற்றும் உத்தரகாண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து பரிதாபத்தில் இருக்கிறது காங்கிரஸ். தேர்தல் முடிவுகள் வெளியான நாளில், ``அடுத்த தேர்தலுக்கு இப்போது முதலே வேலையை ஆரம்பிப்போம்'' என்றார் மூத்த தலைவர் ப.சிதம்பரம். `நெட்பிளிக்ஸில் என்ன படம் பார்க்கலாம் என எனக்குப் பரிந்துரை செய்யுங்கள்' என்று கேட்டார், அவர் மகனும் காங்கிரஸ் எம்.பி-யுமான கார்த்தி சிதம்பரம். ``மூத்த தலைவர்கள் பலர் தங்கள் வாழ்க்கையையே கொடுத்து உருவாக்கிய கட்சி, எங்கள் கண்ணெதிரே இப்படி மடிவதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது'' என்றார் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். தோல்வியை சுயபரிசோதனை செய்வதற்காக நடத்தப்பட்ட காரியக் கமிட்டி கூட்டம் எந்த அதிரடி முடிவையும் எடுக்கவில்லை.

சோனியா, ராகுல், பிரியங்கா என நேரு குடும்பத்தின் மூன்று பேரை நம்பியே அந்தக் கட்சி இருக்கிறது. அதுதான் அந்தக் கட்சியின் பலமும் பலவீனமும்! பஞ்சாப் மாநிலத்தில் சித்துவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததே அங்கு காங்கிரஸின் மோசமான தோல்விக்குக் காரணமானது. அந்த முடிவை எடுத்தவர் பிரியங்கா. உ.பி மாநிலத் தேர்தலுக்கும் அவர்தான் பொறுப்பாளர். டெல்லிக்கு அருகிலேயே இருக்கும் உ.பி மாநிலத்துக்குக்கூட அவர் அதிகமுறை போய் கட்சியை வளர்க்க முயற்சி செய்யவில்லை. போட்டியிட்ட 399 தொகுதிகளில் 387 இடங்களில் டெபாசிட் இழந்திருக்கிறது காங்கிரஸ். சமாஜ்வாடி கூட்டணியில் வெறும் 33 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய லோக் தளம் வாங்கிய வாக்குகளைவிட, இத்தனை தொகுதிகளில் போட்டியிட்டு காங்கிரஸ் வாங்கியது குறைவு. ஆனால், காரியக் கமிட்டியில் யாரும் பிரியங்காவை நோக்கி விரலை நீட்டவில்லை.

மோடி மாடல் Vs கெஜ்ரிவால் மாடல்! - கவுன்ட்டவுன் 2024

நான்கே முக்கால் ஆண்டுகள் தூக்கத்தில் இருந்துவிட்டு, கடைசி மூன்று மாதங்களில் பிரசாரம் செய்து தேர்தலில் வெல்லும் காலங்கள் போய்விட்டன. உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் செய்த தவறு இதுதான். ஐந்து ஆண்டுகளும் 24X7 அரசியல் செய்யும் பா.ஜ.க தலைவர்கள், இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளையே மாற்றி விட்டார்கள். கிடைக்கும் ஒவ்வொரு தருணத்தையும் பிரசாரக் களமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களுக்கும் மோடியும் அமித் ஷாவும் எத்தனை முறை போனார்கள், ராகுல் காந்தி எத்தனை முறை போனார் என்பதை எண்ணிப் பார்த்தாலே, `இந்தத் தேர்தல்களை யார் சீரியஸாக எடுத்துக் கொண்டார்கள்' என்பது புரியும். பஞ்சாப்பில் காங்கிரஸின் தேர்தல் பிரசாரம், ராகுலின் தாமதத்தால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

பா.ஜ.க தேர்தல் பிரசாரத்தின் அச்சாணியாக அமித் ஷா இருக்கிறார். 2019-ம் ஆண்டு உள்துறை அமைச்சரானது முதல் அவர் வெளிநாட்டுப் பயணமே மேற்கொள்ளவில்லை. எந்த மாநிலத்தில் அடுத்து தேர்தல் வருகிறதோ, அங்குதான் அவர் முழுக் கவனமும் இருக்கும். இதுதவிர ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் தனித்தனித் தலைவர்களைக் களமிறக்கி விடுவார்கள். வடகிழக்கு மாநிலங்களில் எங்கு தேர்தல் நடந்தாலும், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அங்கு முகாம் அடிப்பார். எங்கே எப்படி பிரசாரம் செய்தால் எடுபடும் என்ற நுட்பம் தெரிந்தவர் அவர். இப்படி ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாகத் திட்டமிடுகிறார்கள். அங்கு என்ன பேச வேண்டுமோ, அதை மட்டுமே பேசுகிறார்கள். மற்ற கட்சிகளுக்குத்தான் பிரசாந்த் கிஷோர் தேவை. பா.ஜ.க-வில் பல பிரசாந்த் கிஷோர்கள் உருவாகிவிட்டார்கள்.

பார்ட் டைம் அரசியல்வாதிகள் இந்தத் தேர்தல் யுகத்துக்கு சரிவர மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். காங்கிரஸின் பலவீனமே இதுதான். “காங்கிரஸ் இல்லாத பாரதத்தை நான் உருவாக்க நினைக்கிறேன்” என்று சூளுரைத்தார் மோடி. இன்று ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட அதற்குக் கட்டியம் கூறுவதுபோல் நடந்துள்ளது. அடுத்த ஆண்டு ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல்களில் ஆட்சி மாறினால், அது நிஜமாகிவிடக்கூடும். காங்கிரஸ் ஆட்சி இருப்பது அந்த இரண்டு மாநிலங்களில் மட்டும்தான்!

மோடி மாடல் Vs கெஜ்ரிவால் மாடல்! - கவுன்ட்டவுன் 2024

`இந்துத்துவ பிரசாரம் மட்டுமே பா.ஜ.க-வுக்கு வெற்றியைத் தருகிறது' என்று சொல்பவர்கள், தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்றே அர்த்தம். உ.பி தேர்தல் முடிவை அலசுபவர்கள், `ராமும் ரேஷனும்தான் வெற்றி தேடித் தந்தன' என்கிறார்கள். கொரோனா ஆரம்பித்த நாள்களிலிருந்து உ.பி மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் கிடைத்தன. தேர்தல் முடிவைத் தீர்மானிக்க இதுவே முக்கிய காரணமாக இருந்தது. கூடவே, `மத்திய, மாநில அரசுகள்மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தது' என உ.பி., கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் கூறின. இரண்டு அரசுகள் மீதும் நம்பிக்கை இழந்திருந்த பஞ்சாப் மக்கள், புதிய கட்சிக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டார்கள்.

ஆம் ஆத்மியின் பஞ்சாப் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், இவ்வளவு பெரிய வெற்றியை கெஜ்ரிவாலே எதிர்பார்த்திருக்க மாட்டார். 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து அதிகமான வெற்றிகளைப் பெற்ற கட்சியாக ஆம் ஆத்மி உருவாகியிருந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சறுக்கினாலும், இப்போது ஆட்சியைப் பிடித்துவிட்டது.

சரத்பவார், மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் என காங்கிரஸுக்கு மாற்று அணியின் தலைவர் பதவிக்குச் சொந்தம் கொண்டாட நினைக்கும் மற்ற தலைவர்களைத் தாண்டி இந்த ரேஸில் முன்னிலை பெற்றுவிட்டார் கெஜ்ரிவால்.

இத்தனைக்கும் கெஜ்ரிவாலின் தேசிய அரசியல் கனவு மிக மோசமாக ஆரம்பித்தது. 2014 தேர்தலில் மோடியை எதிர்த்து வாரணாசியில் போய் நின்றார் கெஜ்ரிவால். அங்கு மட்டுமல்ல, அவர் மிகவும் எதிர்பார்த்த டெல்லியிலும் கட்சிக்குத் தோல்வியே கிடைத்தது. துளிர் விடும்போதே அகலக்கால் வைக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டு டெல்லியில் கவனம் செலுத்தினார். அங்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்தது. இரண்டாவது மாநிலமாக இப்போது பஞ்சாப் வசமாகியிருக்கிறது. கோவாவில் கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்களில் இப்போது கட்சி கவனம் செலுத்துகிறது.

மாநிலக் கட்சிகள் வலுவாக இல்லாத, பா.ஜ.க.-வுக்கும் காங்கிரஸுக்கும் மட்டுமே மோதல் இருக்கும் ராஜஸ்தான், இமாசலப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் ஆம் ஆத்மிக்கு எதிர்காலம் இருப்பதாக அவர் கணக்குப் போடுகிறார். ஊழல் குற்றச்சாட்டு உள்ள, மக்களின் அதிருப்திக்கு ஆளான மற்ற கட்சியினரை அவர் ஆம் ஆத்மியில் சேர்ப்பதில்லை. ஆனால், வெற்றிபெறும் அளவுக்கு செல்வாக்கு உள்ளவர்களைச் சேர்த்துக்கொள்கிறார். அரசியலுக்கே தொடர்பில்லாத பலரைப் புதிதாக உருவாக்குகிறார். ஒவ்வொரு தொகுதியையும் குறிவைத்து இப்படி வேட்பாளர்களைத் தயார் செய்கிறார். இந்த மாடல்தான் பஞ்சாப்பில் வெற்றியைக் கொடுத்திருக்கிறது.

நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் வாக்குவங்கியைக் குறிவைத்தே அந்தக் கட்சி தேர்தல் களத்தில் களமாடுகிறது. இந்திய வாக்காளர்களில் பெரும்பகுதியாக உள்ள இந்த இரண்டு தரப்பின் வாக்குகளையே தங்களுக்கான பலமாக கணக்குப் போட்டு வாக்குறுதி தருகிறார் கெஜ்ரிவால்.

மோடி மாடல் Vs கெஜ்ரிவால் மாடல்! - கவுன்ட்டவுன் 2024

பா.ஜ.க-வின் `குஜராத் மாடல்' போல `டெல்லி மாடல்' என்ற ஒன்றை ஆம் ஆத்மி முன்னிலைப்படுத்துகிறது. “இந்தியாவிலேயே கடனே இல்லாத மாநிலமாக டெல்லி இருக்கிறது. மின்சாரம், குடிநீர் இலவசம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த கெஜ்ரிவால் அதை சாத்தியப்படுத்தினார். எளியவர்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம் இரண்டுமே இன்று டெல்லியில் எளிதாகக் கிடைக்கின்றன. இதனாலே கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் படையே டெல்லியை முற்றுகையிட்டும் கெஜ்ரிவாலை வீழ்த்த முடியவில்லை'' என்பது ஆம் ஆத்மியின் பிரசாரம். “ஒவ்வொரு மாநிலத்திலும் முதலில் ஓட்டுக்கான பேஸை ரெடி பண்ணுங்க. அதன்பிறகு ரேஸுக்குப் போகலாம்” என்பதே கெஜ்ரிவால் சூத்திரம். ஒரே நாளில் வாக்குகளை அறுவடை செய்ய முடியாது என்பதை அரசியல்வாதியாக மாறிய இந்த அதிகாரி நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்.

பா.ஜ.க-வைப் போல இல்லாமல் மென்மையான இந்துத்துவ அணுகுமுறையை கெஜ்ரிவால் பின்பற்றுகிறார். இந்துக்களுக்கு ஆதரவு, அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரி இல்லை என கழுவிய மீனில் நழுவிய மீன்போல அரசியல் செய்கிறார். 2024 தேர்தலில் மோடியை எதிர்க்கும் வல்லமையை இவர் பெறுவாரா என்பதை காங்கிரஸின் வீழ்ச்சியே தீர்மானிக்கும்.

*****

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழகத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பா.ஜ.க-வின் வெற்றி குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினேன்.

“பிரதமர் மோடியின் மக்கள்நலன் சார்ந்த திட்டங்கள் இதுவரை இல்லாத பலனை நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தந்தன. அதன்மூலம் பா.ஜ.க மீதான மக்களின் நம்பிக்கை உயர்ந்தது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.பி-யில் ஆட்சியைத் தக்கவைக்க, பிரதமர் மோடியின் தேசிய அளவிலான சாதனையும், உ.பி-யில் முதல்வர் யோகியின் மாநில அளவிலான சாதனையும்தான் காரணம். கடின உழைப்பு, திட்டமிட்ட பணிபுரிதல் இரண்டும் பா.ஜ.க-வின் அடிநாதம். இந்தத் தேர்தல் வெற்றியின் தாக்கம் மத்தியில் மட்டுமன்றி, தென்பகுதியிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் விரைவில் வெளிப்படும்” என்கிறார் நம்பிக்கையோடு.

``காங்கிரஸ் கட்சி தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது. தலைமை அதைச் செய்யும் என்று நம்புகிறேன்'' என்கிறார் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம். “ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளையும் ஒவ்வொரு விதமாகவே நாங்கள் பார்க்கிறோம். பஞ்சாப், கோவா மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என்று எதிர்பார்த்தோம். உத்தரப்பிரதேசத்தில் வாக்கு வங்கியை அதிகரிக்கும் திட்டமே இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகளில் எங்களுக்கு வருத்தம்தான். காங்கிரஸ் கட்சி மீது மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என்றார் அவர்.

தமிழக ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் வசீகரன், “ஊழலுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட எங்கள் கட்சி அந்த நிலைப்பாட்டில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை. காங்கிரஸ் கலகலத்துப்போயிருக்கும் இந்த நேரத்தில் மாற்றத்திற்கான தீர்வாக ஆம் ஆத்மியை மக்கள் பார்க்கிறார்கள். மக்கள் எதிர்பார்க்கும் மாற்று அரசியலை யாருடனும் அணி அமைக்காமல் தனித்துக் கொண்டுவருவோம். ஒவ்வொரு மாநிலமாகவே எங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். நாங்கள் பெரிய பாரம்பரியம் கொண்ட கட்சியோ, பணபலம் கொண்ட கட்சியோ இல்லை. ஆனால், இந்தியா முழுவதும் உள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக ஒரு நாள் நிச்சயம் வருவோம்” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism