Published:Updated:

`25 அடி வெண்கலச் சிலை; பிரமாண்ட விழா!’- உத்தரப்பிரதேசத்தில் வாஜ்பாய் சிலையைத் திறக்கும் மோடி

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு வாஜ்பாய்க்கு தன்னுடைய மாநிலத்திலும் சிலை நிறுவப்படும் என அறிவித்திருந்தார். மோடி இந்தச் சிலையை நாளை திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

மோடி
மோடி

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள லக்னோவின் லோக் பவனில், இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை இந்தச் சிலையை திறந்துவைக்க உள்ளார்.

வாஜ்பாய்
வாஜ்பாய்

வாஜ்பாய், உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி காலமானார். இவரின் நினைவைப் போற்றும் வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் `புதிய ராய்ப்பூரின் பெயரை `அடல் நகர்’ எனப் பெயர் மாற்றம் செய்து அம்மாநில அரசு அறிவித்தது. மத்தியப் பிரதேச அரசு, வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்போவதாகவும் தங்கள் மாநிலத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்போவதாகவும் அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு வாஜ்பாய்க்கு தன்னுடைய மாநிலத்திலும் சிலை நிறுவப்படும் என அறிவித்திருந்தார். ஜெய்ப்பூரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலைக்கு சுமார் 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லோக் பவனில் நிறுவப்பட்டுள்ள 25 அடி வெண்கலச் சிலையை பிரதமர் மோடி, வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை திறந்து வைக்க இருக்கிறார். உத்தரப் பிரதேச அரசு பிரமாண்டமாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெண்கல சிலை
வெண்கல சிலை
liveuttarpradesh.com

சிலை திறப்பைத் தொடர்ந்து வாஜ்பாயின் பெயரில் அமையவுள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும், 25 நிமிட உரையையும் நிகழ்த்த உள்ளார். இவ்விழாவில் அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநிலத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடந்துவரும் நிலையில் இந்த விழா நடக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.