தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை, பாஜக-வினர் மாட்டிவருவதும், அதையொட்டி எழும் சலசலப்புகளும் நாளுக்கு நாள் அதிகமாகிவருகின்றன. அந்த வகையில், திருச்சி பொன்னகரிலுள்ள அமராவதி கூட்டுறவு நியாய விலைக்கடையில், பாஜக மண்டலத் தலைவர் பரமசிவம் தலைமையில் வந்த பாஜக-வினர் பிரதமர் மோடியின் படத்தை மாட்டியுள்ளனர். இதற்கு அங்கிருந்த திமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே 55-வது வார்டு திமுக கவுன்சிலர் ராமதாஸ் சம்பவ இடத்துக்கு வந்து, ``அனுமதி வாங்காம மோடி படத்தை எப்படி ரேஷன் கடையில மாட்டலாம்!” எனக் கேள்வியெழுப்ப, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.

ஒருகட்டத்தில் பாஜக-வினர் திமுக கவுன்சிலர் ராமதாஸ் மீது கைவைக்க, கொதித்துப்போன திமுக-வினர் கைகலப்பில் ஈடுபட்டதோடு, ரேஷன் கடையில் மாட்டியிருந்த மோடி படத்தை எடுத்து உடைத்து கீழே வீசியெறிந்தனர். மேலும், ``ரேஷன் கடையில் மோடியின் படத்தை வைக்கக் கூடாது” என்று வலியுறுத்தி திமுக-வினர் ரேஷன் கடை முன் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த ரேஷன் கடை மூடப்பட்டது. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கன்டோண்மென்ட் போலீஸார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இருந்தபோதிலும், இருதரப்பினரும் கன்டோண்மென்ட் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது தொடர்பாக 55-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ராமதாஸிடம் பேசினோம். ``சம்பந்தப்பட்ட ரேஷன் கடை இருக்கும் இடம் மாநகராட்சியினுடையது. தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அந்த இடத்தை திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மீட்டெடுத்து திமுக எம்.எல்.ஏ நிதியில் இந்த ரேஷன் கடை கட்டப்பட்டது. அந்த ரேஷன் கடையில் அனுமதியின்றி அத்துமீறி பாஜக-வினர் நுழைந்து மோடியின் படத்தை மாட்டியிருப்பதாக எனக்கு போன் வந்தது. நான் உடனே சம்பவ இடத்துக்குப் போய், ``யார்கிட்ட அனுமதி வாங்கிட்டு வந்து போட்டோவை மாட்டுனீங்க?” என பாஜக-வினரிடம் கேட்க, என்மீது கைவெச்சு கீழே தள்ளிவிட்டுட்டாங்க. அதனால எங்க கட்சிக்காரங்க அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோட, மாட்டியிருந்த மோடி படத்தையும் உடைச்சுட்டாங்க. வந்தவங்க யாருமே ரேஷன் கடை இருக்கும் பகுதியைச் சேர்ந்தவங்க இல்லை.

திருச்சியில் தன்னோட இருப்பைக் காட்டிக்க இப்படித் திட்டமிட்டு வந்து பிரச்னை செஞ்சுருக்காங்க. திருச்சியில இருக்குற மத்திய அரசுக்குச் சொந்தமான ரயில்வே ஸ்டேஷன், போஸ்ட் ஆபீஸ்ல போய் எங்களோட தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை மாட்டுனா விட்டுடுவாங்களா?’’ எனக் கொதித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக இரு கட்சித் தரப்பிலும் கன்டோண்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸார் இது தொடர்பாக விசாரித்துவருகின்றனர்.