Election bannerElection banner
Published:Updated:

`புதுச்சேரி முன்னேற்றத்துக்கு அரசு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும்!’ - பிரதமர் மோடி

புதுச்சேரியில் பிரதமர் மோடி
புதுச்சேரியில் பிரதமர் மோடி

`கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை’ என்ற திருக்குறளுக்கேற்ப கற்றலும் கல்வியும் விலை மதிப்பில்லாதவை. மற்றவை நிலையற்றவை.

புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக இன்று பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வந்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவர், அங்கிருந்து தனி விமானத்தில் புதுச்சேரிக்கு வந்தார். தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அவர், ரூ.3,100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு டிஜிட்டல் திரை மூலம் அடிக்கல் நாட்டி, திறந்தும்வைத்தார்.  

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தொடர்ந்து அவர் நிகழ்த்திய உரையில், ``புதுச்சேரியின் புனிதத்தன்மை மீண்டுமொருமுறை என்னை இந்தப் புண்ணிய பூமிக்கு அழைத்துவந்திருக்கிறது.

மிகச் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் இதே புதுச்சேரியில் இருந்தேன். இந்தப் புதுவை மாமனிதர்களின் மகத்தான மண்ணாக இருந்திருக்கிறது. கல்வியாளர்கள் மற்றும் கவிஞர்களின் தாய்வீடாக இருந்திருக்கிறது. இந்தியத் தாய்த் திருநாட்டின் புரட்சியாளர்களின் புகலிடமாகவும் இந்தப் புண்ணிய பூமி இருந்திருகிறது. அவ்வளவு ஏன்... மகாகவி சுப்பிரமணிய பாரதி, இங்குதான் இருந்தார். ஸ்ரீஅரவிந்தர்கூட இந்தக் கடற்கரையில்தான் கால்பதித்தார்.

இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் புதுவையின் பங்களிப்பு இருக்கிறது. இந்த மண் பன்முகத்தன்மையின் அடையாளம். இங்குள்ள மக்களின் மொழிகள் பல. நம்பிக்கைள் நூறு. ஆனால், வாழ்க்கை ஒன்று. அது ஒற்றுமை மிகுந்த வாழ்வு. நண்பர்களே... இன்று நாம் புதுவை மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் பல மேம்பாட்டுப் பணிகளின் தொடக்கத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இந்தப் பணிகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவை. அதை ஓர் அங்கமாக, புதுப்பிக்கப்பட்ட மேரி கட்டடத்தைத் திறந்துவைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கட்டடம் பழைமை மாறாமல் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கடற்கரை அழகுக்கு மேலும் அழகு சேர்த்து, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.

இந்தியாவின் வளர்ச்சியை உத்தரவாதப்படுத்த நமக்கு உலத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு தேவைப்படுகிறது. அதற்காக சட்டநாதபுரம் முதல் நாகை வரை காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கி 56 கிலோமீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டியிருப்பது உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். இதன் மூலம் தொடர்புகளும், பொருளாதாரமும் மேம்படும். திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்கும், அண்டை மாநிலத்திலுள்ள நாகூர் தர்கா, வேளாங்கண்ணி போன்ற தேவாலயங்களுக்கும் எளிதாகச் செல்ல முடியும். கடலோரத் தொடர்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறோம். வேளாண் உற்பத்திப் பொருள்களுக்காக நல்ல சந்தையை உத்தரவாதப்படுத்துவது நமது கடமை. அதை நல்ல சாலைகளும் உறுதி செய்யும்.

மோடி
மோடி

நண்பர்களே... ஆஸ்தி என்பது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. அதற்காக, கடந்த ஏழு ஆண்டுகளாக அரசு ஏகப்பட்ட முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறது. தற்போது சிந்தெடிக் ஒடுதளம் அடிக்கல் நாட்டியிருக்கிறோம். இது விளையாட்டுத்திறனை வளர்க்கும். விட்டுக்கொடுத்தலைக் கற்றுத்தரும். விடாமுயற்சியை விளையாட்டே விதைக்கும். மிக முக்கியமாக, சுகாதாரத்துறையில் முதலீடு செய்யும் நாடுகளே முன்னேறும். சுகாதாரத்தை அனைவருக்கும் தரும் முயற்சியில் ரூ.28 கோடியில் புதிய திட்டத்தை ஜிப்மரில் தொடங்குகிறோம். ஜிப்மரில் ரத்த நாளங்களை நீண்ட நாள்களுக்கு இனிப் பாதுகாக்க முடியும். மத்திய நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத்துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.

கைகோத்த மோடி! - கைவிடப்பட்டாரா சசி?

’கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை’

என்ற திருக்குறளுக்கேற்ப கற்றலும் கல்வியும் விலை மதிப்பில்லாதவை. மற்றவை நிலையற்றவை. அதன் ஒரு படியாகத்தான் காரைக்கால் ஜிப்மர் வளாகம். அங்கு கட்டப்படவிருக்கும் நவீன வசதியைக்கொண்டிருக்கும். கடற்கரை புதுச்சேரியின் உயிர்நாடி. கடல் சார்ந்த பொருளாதாரத்தில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சாகர்மாலா திட்டத்தின் மூலம் புனரமைக்கப்படவிருக்கும் துறைமுகம் பெரிய உதவியாக இருக்கும். சென்னையுடன் கடல்வழித் தொடர்பை ஏற்படுத்தும். சென்னை துறைமுகத்தின் சுமையும் குறையும். கடற்கரை நகரங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து சாத்தியத்தைத் திறந்துவைக்கும். நேரடி பணப் பரிமாற்ற முறையால் சுய முடிவு எடுக்கும் வசதி புதுச்சேரி மக்களுக்கு இருக்கிறது. புதுச்சேரி முன்னேற்றத்துக்கு என் அரசு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும் என்பதை உத்திரவாதப்படுத்தவே நேரடியாக வந்திருக்கிறேன்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு