Published:Updated:

புதுச்சேரி: `ராகுலிடமே பொய் சொன்னவர் நாராயணசாமி!’ பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் விளாசிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

``புயல் மற்றும் வெள்ளத்தின்போது, புதுச்சேரி அரசு தங்களைக் கண்டுகொள்ளவில்லை என்று வலியுடனும் வேதனையுடன் அந்தப் பெண் அதைக் கூறினார். ஆனால், அந்தப் பெண் கூறியதைத் தவறாக மொழிபெயர்த்து, கட்சித் தலைவரான ராகுல் காந்தியிடமே பொய் சொன்னவர் நாராயணசாமி.” –பிரதமர் மோடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பா.ஜ.க தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி வந்த பிரதமர் மோடி முதலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி விழா அரங்கத்தில் நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பேசினார். தொடர்ந்து லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட் அவர், ``புதுச்சேரியில் தற்போது மிகப்பெரிய மகிழ்ச்சியைப் பார்க்கிறேன். இரண்டு காரணங்களுக்காக நான் புதுச்சேரி மாநிலத்துக்கு வந்திருக்கிறேன். ஒன்று, இன்று தொடங்கிவைக்கப்பட்ட மக்கள்நலத் திட்டங்கள்; மற்றொன்று, புதுச்சேரி மக்கள் காங்கிரஸின் மோசமான ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள். புதுச்சேரி மக்கள் அதைக் கொண்டாடுகின்றனர்.

புதுச்சேரி பா.ஜ.க பொதுக்கூட்டம்
புதுச்சேரி பா.ஜ.க பொதுக்கூட்டம்

கடந்த 2016-ம் ஆண்டு புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் அரசுக்கு மிகப்பெரிய நம்பிக்கையுடன் வாக்களித்தனர். ஆனால், இந்த ஐந்து ஆண்டுகளில் வாக்களித்த மக்களின் நம்பிக்கை நிறைவேறாமல் போய்விட்டது. புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அனைத்து நிர்வாகங்களையும் சீரழித்துவிட்டது. உள்ளூர் தொழிலாளர்கள் சிரமத்துக்குள்ளாகியிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு மக்களுக்காக வேலை செய்வதில் விருப்பமில்லை. மற்றவர்களுடன் இணைந்து மக்களுக்காகப் பணியாற்றுவதை காங்கிரஸ் அரசு ஏன் விரும்பவில்லை என்று தெரியவில்லை. மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காங்கிரஸ் அரசு ஒத்துழைக்கவில்லை. நிதியை உபயோகப்படுத்தாமல், கடல்சார் மீனவநலத் திட்டங்களை காங்கிரஸ் அரசு செயல்படுத்தாமல் இருந்தது.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக நாடு முழுவதும் வீடியோ காட்சி ஒன்று வைரலானது. அதில் பேசும் ஒரு பெண், புயல், வெள்ளத்தின்போது புதுச்சேரி அரசு தங்களை கண்டுகொள்ளவில்லை என்றதுடன், முதல்வர் நாராயணசாமிகூட வந்து பார்க்கவில்லை என்று ராகுல் காந்தியிடம் புகாரளித்தார்.‌ வலியுடனும் வேதனையுடன் அந்தப் பெண் அதைக் கூறினார். ஆனால் அந்தப் பெண் கூறியதை தவறாக மொழிபெயர்த்து, நாட்டு மக்களிடமும், கட்சித் தலைவரான ராகுல் காந்தியிடமுமே பொய் சொன்னவர் நாராயணசாமி. மக்கள் பிரச்னையைத் தவறாகக் கூறும் இவர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியுமா?

உச்ச நீதிமன்றம் பஞ்சாயத்துத் தேர்தலை நடத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால் புதுச்சேரி காங்கிரஸ் அரசு, அதைச் செய்யவில்லை. ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்துத் தேர்தல் நடத்தப்பட்டது. மக்களும் பெரிய அளவில் வாக்களித்தனர். அதே போன்று குஜராத்தின் நகரப் பகுதியிலும் தேர்தல் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீர், லடாக், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடத்த முடிகிறது. ஆனால், புதுச்சேரியில் நடத்த முடியவில்லை. கண்டிப்பாக அதற்காக மக்கள் தண்டிப்பார்கள்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி
பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி

காலனி ஆதிக்கத்தின் ஆட்சியைப்போல, பிரித்தாளும் கொள்கையை காங்கிரஸ் அரசு பின்பற்றிவருகின்றது. மக்களைப் பிரித்து, அவர்களிடம் பொய்களைக் கூறி ஆட்சி செய்வதை காங்கிரஸ் விரும்புகிறது. ஒரு மாநில மக்களை இன்னொரு மாநில மக்களுக்கு எதிராகவும், ஒரு சமுதாயத்தை மற்றொரு சமுதாயத்துக்கு எதிராகவும் சித்திரித்து அரசியல் செய்துவருகின்றனர். பொய் சொல்வதில் காங்கிரஸ் கட்சிக்கு நிறைய விருதுகளைக் கொடுக்கலாம். மீனவநலத்துறைக்காக ஓர் அமைச்சகம் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது. ஆனால், 2019-ம் ஆண்டு மீன்வளத்துறைக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியைவிட 80% அதிகமாக மீனவர்களுக்கு நிதி ஒதுக்கியிருக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்துவருகிறனர். இந்திய வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அரசு 100-க்கும் குறைவான இடங்களைப் பெற்றிருக்கிறது. மன்னர் ஆதிக்க குடும்ப தலைமுறை ஆட்சிக் கொள்கையை பாரம்பர்யமாகக்கொண்டிருக்கிறது. புதுச்சேரி அரசைச் சிறந்த மாநிலமாக மாற்ற விரும்புகிறேன். வர்த்தகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா மையங்களில் புதுச்சேரி சிறந்து விளங்கும் என்பதே புதுச்சேரிக்கான எனது தேர்தல் அறிக்கை. புதுச்சேரி இளைஞர்களுக்குச் சரியான ஆதரவு தேவை.

புதுச்சேரி பா.ஜ.க தேர்தல் பொதுக்கூட்டம்
புதுச்சேரி பா.ஜ.க தேர்தல் பொதுக்கூட்டம்

அவர்கள் தகவல் தொழில்நுட்பத்துறை, மருந்துத்துறை, நெசவு உள்ளிட்ட துறைகளில் மேம்பட வேலைவாய்ப்பு ஏற்படவிருக்கிறது. கல்வியில் மொழி இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆகவே மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் உள்ளூர் மொழியில் கற்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறோம். இதனால் மாணவர்கள் பயன்பெறுவார்கள். புதுச்சேரி பல்வேறு கலாசாரங்கள் சங்கமாகும் இடமாக இருக்கிறது. குறிப்பாக ஆன்மிகம், சுற்றுலாவுக்கான இடமாக இருக்கிறது.

புதுச்சேரியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திவருகிறோம். சுற்றுலாப் பயணிகள் இங்கு இன்னும் அதிக அளவில் வர இயலும். சுற்றுலாத்துறையில் உலக அளவில் 65-வது இடத்திலிருந்து 34-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறோம். கடல் சார்ந்த துறையை மேம்படுத்துவது, அதில் கூட்டுறவுத்துறையை பலப்படுத்துவது உள்ளிட்டவற்றில் நாம் கவனம் செலுத்தவிருக்கிறோம். இப்படிப் பொருளாதாரத்தை பலப்படுத்தாமல் சுயசார்பு இந்தியா வலுப்பெறாது. சாகர்மாலா உள்ளிட்ட திட்டங்கள் மூலம் கடற்கரை மற்றும் மீனவ சமுதாயத்தினர் இடையே மாற்றத்தைக் கொண்டுவர முடியும் .

புதுச்சேரி: `யாரோ எழுதிக் கொடுத்ததைப் பேசியிருக்கிறார்!’ ஜெ.பி.நட்டாவை விளாசிய முதல்வர் நாராயணசாமி

சென்ற ஆண்டு மீனவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்‌ திட்டங்களைக் கொடுத்திருக்கிறோம். மீனவர்களுக்கு கடனுதவி வழங்குவது, மீனவர்களை விவசாயக் கடன் அட்டை திட்டத்தில் இணைப்பது. புதிய தொழிலில் அவர்களை ஈடுபடுத்துவது எனப் பல்வேறு திட்டங்களை கடந்த ஆண்டு வழங்கியிருக்கிறோம். 2014-ம் ஆண்டைவிட 50% அதிகமாக நிதி ஒதுக்கியிருக்கிறோம். கூட்டுறவுத்துறை துடிப்புமிக்க துறையாக மாற்றப்படும். இது, புதுச்சேரி மகளிருக்கு பயனுள்ளதாக அமையும். வருங்காலங்களில் செய்வதற்கு நிறைய காரியங்கள் இருக்கின்றன. எனவே, முன்னேற்றத்தின் விரோதிகளான காங்கிரஸ் அரசை மக்கள் தேர்தலில் தூக்கி எறிய வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு