Published:Updated:

வேளாண் சட்டங்கள் : `எங்களுக்கு எதிராக இருப்பவர்களுடன் பேசத் தயார்!’ - பிரதமர் மோடி

மோடி
மோடி

``விவசாயிகளின் பிரச்னையில் எங்களுக்கு எதிராக இருப்பவர்களுடன் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் விவாதம், பிரச்னைகள் மற்றும் தரவுகள் அடிப்படையில் இருக்க வேண்டும்” - பிரதமர் மோடி

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ரூ.18,000 கோடி நிதி வழங்கும் நிகழ்வில் இன்று பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது ஆறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்கள் குறித்தும் பேசினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
ANi

மோடி தனது உரையில், ``இதற்கு முன்னர் இந்த விவசாயச் சட்டங்களை ஆதரித்த கட்சிகள் இருக்கின்றன. அதற்கான எழுத்துபூர்வ அறிக்கை எங்களிடம் இருக்கிறது. ஆனால், இப்போது அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறார்கள். ஓர் அரசியல் தலைவர் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார். அவர் ஜனநாயகத்தைக்கூட நம்பவில்லை.

ஆனால் இவை அனைத்தையும் மீறி, விவசாயிகளின் பிரச்னையில் எங்களுக்கு எதிராக இருப்பவர்களுடன் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் விவாதம், பிரச்னைகள் மற்றும் தரவுகள் அடிப்படையில் இருக்க வேண்டும். எங்களிடம் எல்லா அறிவும் இருப்பதாக நாங்கள் கூறவில்லை. எந்த விஷயமாக இருந்தாலும் விவாதம் இருக்க வேண்டும். ஜனநாயகம் அப்படித்தான் செயல்படுகிறது. அனைத்துப் பிரச்னைகளையும் திறந்த மனதோடு அணுக நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

 பிரதமர் மோடி
பிரதமர் மோடி
ANI

தொடர்ந்து பேசிய மோடி, ``ஒருமுறை வாஜ்பாய், தனது முந்தைய அரசின் உதவிகள் பயனாளிகளை அடைவதற்கு முன்பு அரசின் பணம் எவ்வாறு தொலைந்துபோகிறது என்று விமர்சித்தார். இன்று நேரடிப் பரிமாற்றத்தை நம்மால் உறுதிப்படுத்த முடிந்தது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அரசாங்கத்துக்கும் பயனாளிகளுக்கும் இடையில் எந்த இடைத்தரகரும் இல்லை.

சமீபத்தில் அஸ்ஸாம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். அவர்கள், விவசாயிகளைத் தவறாக வழிநடத்தும் அனைத்துக் கட்சிகளையும் நிராகரித்திருக்கிறார்கள். விவசாயிகள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள்” என்றார்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு... ஆலோசனையில் விவசாய சங்கங்கள்?! - முக்கியக் கட்டத்தில் டெல்லி போராட்டம்
அடுத்த கட்டுரைக்கு