Published:Updated:

நெருக்கிய தொழில் அதிபர்கள்; எச்சரித்த சுகாதார நிறுவனம் - மோடியை முடக்கிய மூன்று நாள்கள்

Indian Prime Minister Narendra Modi
Indian Prime Minister Narendra Modi ( AP / Anupam Nath )

இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவை நிறைவேற்ற மத்திய அரசு தரப்பில் பெரும் குழப்பம் நிலவியுள்ளது. இன்னும் சில நாள்கள் இந்த ஊரடங்கை நீங்கள் நீடித்தால் இந்தியாவில் தொழில்துறை இன்னும் 20 ஆண்டுகள் பின்னோக்கிய நிலைக்குச் சென்றுவிடும் என ஒருபுறம் எச்சரிக்கை செய்தார்கள்.

``எந்த முடிவையும் துணிச்சலோடு எடுக்கும் மோடியை உலுக்கிவிட்டது கொரோனா விவகாரம். முடிவுகள் எடுப்பதற்குப் பிரதமரே பலமுறை திணறிவிட்டார்” என்கிறார்கள் மத்திய அரசுக்கு நெருக்கமான அதிகாரிகள். ஆம். 14-ம் தேதி மோடி நாட்டு மக்களுக்கு இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டபோது, அவர் முகத்திலிருந்த கவலை ரேகையை அதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மோடி
மோடி

மோடி நினைப்பதுபோல ஊரடங்கின் அடுத்த 19 நாள்கள் எளிதாகக் கடந்துவிடாது. இனிதான் அரசுக்கு எதிரான சவால்கள் ஆரம்பிக்கப் போகிறது. ''அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்று உலகின் பணக்கார நாடுகளே கொரோனா பாதிப்பில் விழிபிதுங்கி நிற்கின்றன. அந்த நாடுகளில் கொரோனா பரவும் வேகத்தைப் பார்க்கும்போது 130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் குறைவுதான். அதற்கு மோடி எடுத்த துணிச்சலான சில நடவடிக்கைகளும் காரணம்” என்று ஆரம்பத்தில் ஆகா ஓஹோவென்று புகழ்ந்தவர்கள், இப்போது மௌனமாக இதையும் கடந்துதான் ஆக வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இனி, அடுத்த இருபது நாள்கள் இந்தியாவிற்கு பல்வேறு சிக்கல்கள் எழப்போகிறது என்கிற அச்சம் அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.

கொரோனா தாக்கம் இந்தியாவில் தென்பட ஆரம்பித்த பிறகு, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு ஆரம்பத்தில் எடுத்தது. ஆனால், 21 நாள் ஊரடங்கு என்கிற முடிவை எடுப்பதற்கு அரசுத் தரப்பில் பல்வேறு ஆலோசனைகள் நடந்தேறின. குறிப்பாக, சரியும் பொருளாதாரம், பாதிக்கப்படும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்று போன்ற பல ஆலோசனைகள் நடந்தேறியது. அதற்குப் பிறகுதான் ஊரடங்கு உத்தரவும்1,70,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவை நிறைவேற்ற மத்திய அரசு தரப்பில் பெரும் குழப்பம் நிலவியுள்ளது.

வர்த்தகத்துறை அமைச்சரிடம் சில முன்னணி தொழிலதிபர்கள், ''இன்னும் சில நாளகள் இந்த ஊரடங்கை நீங்கள் நீட்டித்தால் இந்தியாவில் தொழில்துறை இன்னும் 20 ஆண்டுகள் பின்னோக்கிய நிலைக்குச் சென்றுவிடும்'' என எச்சரிக்கை செய்தார்கள். அதற்குப் பிறகு மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியபோது பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனச் சொல்லி, அதனால் மாநிலத்திற்கு ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள். இதனால், முடிவெடுக்க முடியாமல் பிரதமர் தவித்துள்ளார்.

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

அதற்குப் பிறகு உலக சுகாதார நிறுவனம், “இன்னும் சில நாள்கள் இந்த ஊரடங்கை நீங்கள் நீட்டிக்காவிட்டால், கொரோனாவின் தாக்கத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியாது” என்று அறிவுறுத்தியது. இதனால், பிரதமர் ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவை அறிவித்தபோது எந்தவித திட்டங்களையும் அறிவிக்காமல் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு, சில முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாக மட்டும் சொன்னார்.

இதுகுறித்து மத்திய அரசுக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது கவலையோடு சில விவரங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

“உண்மையில் இந்தியாவின் நிலை நெருக்கடியாக உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில்தான் சில முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள். இதுவரை பிரதமர் மோடி ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதைத் துணிச்சலோடு அறிவித்து விடுவார். ஆனால், இந்த முறை அதற்கு வாய்ப்பு இல்லை. குறிப்பாக, வட இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் இப்போதுதான் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அதே நேரம் தென்னிந்தியாவில் கேரளா மாநிலம் சிறப்பாக கொரோனாவை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கடைசி 10 நாள்கள் கொரனோவின் தாக்கம் அதிகரித்தாலும், மூன்றாம் கட்டத்திற்கு அது நகரவில்லை. யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்கள் சார்ந்த நபர்களுக்கு மட்டுமே தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் படிப்படியாக சோதனையும் நடைபெற்று வருவதால் விரைவில் தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும் நிலை இருக்கிறது.

தமிழகத்தின் நிலைதான் டெல்லியிலும். ஆனால், மத்திய அரசின் கவலையே உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் மீதுதான் இருக்கிறது. அந்த மாநிலங்களில் முழுமையான சோதனைகளே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. அங்கே எந்த மாதிரியான தாக்கம் ஏற்படும் என்கிற அச்சம் மத்திய அரசுக்கு இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் முதலில் குறைந்த எண்ணிக்கையிலிருந்த கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, ஊரடங்கு அறிவித்த பிறகு டெல்லி உள்ளிட்ட நகரங்களிலிருந்து கூட்டம், கூட்டமாக மக்கள் வெளியேறினார்கள். அவர்களால் எந்தெந்தப் பகுதிகளில் இந்த நோய் பரவியிருக்கும் என்கிற அச்சமும் மத்திய அரசிடம் உள்ளது.

டெல்லி
டெல்லி

பிரதமரிடம் உள்துறை அமைச்சகமும் வர்த்தகத்துறை அமைச்சகமும் சில அறிக்கைகள் அளித்தன. அதில், பாதிப்பு குறைவான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யலாம் என்ற கோரிக்கை வைத்தது. அதனை அவர் செயல்படுத்த நினைத்த நேரத்தில் உலக சுகாதார நிறுவனம் கொடுத்த அறிவிக்கையும் அதன்பின் இரண்டு நாள்களில் இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்ததும் பிரதமர் முடிவில் மாற்றம் ஏற்பட்டது. 20-ம் தேதி வரை சமூகப் பரவலாக இந்தத் தொற்று மாறாமல் இருந்தால், அதற்குப் பிறகு சில விதிகளில் மாற்றம் கொண்டுவரலாம் என்று பிரதமருக்கு ஆலோசனை சொன்னார்கள் அதிகாரிகள். அதனாலேயே பிரதமர் எந்த நிதி உதவி திட்டங்களையும் அறிவிக்காமல் ஏப்ரல் 20-க்கு பிறகு சில முடிவுகள் எடுக்க முடிவு செய்தார்.

அதே நேரம் இனி எதிர்கொள்ளப்போகும் சிக்கல்களும் அதிகம். வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் கூலித் தொழிலுக்கு வந்தவர்கள் சிக்கியுள்ளார்கள். அவர்கள் தினமும் உணவிற்கே திண்டாடும் நிலை. அதன் வெளிப்பாடுதான் மும்பை அருகே பந்தரா பகுதியில் தொழிலாளர் போராட்டம் நடத்தியது. அதே நிலை விரைவில் டெல்லியிலும் ஏற்படும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. மற்றொருபுறம் வட மாநிலங்களில் இது அறுவடைக் காலம் என்பதால் விவசாயிகளும் ஊரடங்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள. பல மாநிலங்கள் தமிழகம்போல எந்த நிதி அறிவிப்பும் கொடுக்கவில்லை. அந்த மாநிலங்களில் உள்ள கீழ்நிலை மக்கள் கடும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளார்கள். இவர்கள் வீதிக்கு இறங்கிப் போராட ஆரம்பித்தால் நிலைமை மோசமாகிவிடும்.

கொரனோ வைரஸ்
கொரனோ வைரஸ்

பிரதமர் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியிட்ட பிறகு மூத்த தொழில் துறையினர் நிதித்துறை அதிகாரிகளுடன் பேசியிருக்கிறார்கள். இந்த ஒருமாதம் தொழில் நிறுவனங்களை நிறுத்துவதால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட வங்கிகள் மூலம் நிவாரணத் தொகையைக் கடனாக வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அதற்கு உடனடியாக நிதித்துறை அமைச்சர் பதில் அளிக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடியோ ஊதியத்தை நிறுத்துவதோ, தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்குவதோ கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

'தொழிலே நடக்காமல் ஊதியத்தை எப்படி வழங்க முடியும். வங்கிகள் மூலம் அரசும் எங்களுக்கு உதவி செய்யாவிட்டால் என்ன செய்ய முடியும்' என்று பிரதமருக்கு தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள். இதை அமைச்சரவை கூட்டத்தில் பேசி முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று பிரதமர் அலுவலகம் சொல்லியுள்ளது.

மத்திய அமைச்சர்கள் ஆலோசனை
மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

பிரதமர் தலைமையில் நடக்க உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், ஊரடங்கினால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்டுவதும், எந்த பகுதியில் எப்படித் தளர்வு கொடுப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்படும். முழுமையான ஊரடங்கு தொடர்ந்தால் பல சிக்கல்கள் சந்திக்க நேரும் என்பதை மத்திய அரசும் உணர்ந்துள்ளது. எனவே, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவகாரங்களை ஆலோசித்து, ஏப்ரல் 20-க்கு மேல் சில அறிவிப்புகளைப் பிரதமர் வெளியிடுவார்” என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு