Published:Updated:

`மோடி விருப்பப்படி மக்கள் பணியாற்றுவேன்!’ - பிரதமரின் பிறந்தநாள் வாழ்த்தும் ப.சிதம்பரத்தின் பதிலும்!

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்று போல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசீர்வதிக்கட்டும்

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யபட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். `வயதாகிவிட்டது; ஜாமீன் வேண்டும்; ஜாமீன் கொடுத்தால் எங்கும் தப்பிச்செல்லமாட்டார்’ என்று நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தும், ஜாமீன் கிடைக்கவில்லை.

மோடி வாழ்த்து
மோடி வாழ்த்து

வழக்கு விசாரணை முடித்து நீதிமன்றத்துக்கு வெளியேவரும்போது, ப.சிதம்பரத்திடம் செய்தியாளர்கள், சி.பி.ஐ விசாரணை குறித்து கேள்வி எழுப்ப, சிதம்பரமோ,`5 என்று தன் கைவிரல்களைக்காட்டி பொருளாதாரச்சரிவை சுட்டிக்காட்டி மோடி அரசை கலாய்த்தார். அண்மையில் தனது 74-வது வயதை சிறையில் கழித்தார். இந்நிலையில் தனது பிறந்தாள் அன்று, மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

``உங்கள் பிறந்த நாள் அன்று என் இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்று போல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று பிரதமர் மோடி, செப்.16ம் தேதி எழுதிய கடிதத்தை ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

இதுதொடர்பாக ட்வீட்டியுள்ள ப.சிதம்பரம்,``என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி” என்று கூறியதோடு, அடுத்தடுத்த ட்வீட்களில், ``பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம். துரதிர்ஷ்டவசமாக, திரு.மோடி அரசின் விசாரணைத் துறைகள் தடையாக இருக்கின்றனவே? தற்பொழுது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.