Published:Updated:

மோடியைக் கவர்ந்த மூன்று தமிழர்கள்! #ModiXiSummit

முதல்நாள் உச்சிமாநாட்டை முடித்துவிட்டு பிரதமர் மோடி ஓய்வெடுக்க கிளம்பும் போது, மதுசூதனை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்

மோடி - ஜி ஜின்பிங்
மோடி - ஜி ஜின்பிங்

பிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும் இடையேயான, முறைசாரா உச்சிமாநாடு மாமல்லபுரத்தில் வெற்றிக்கரமாக நிறைவடைந்துள்ளது. மாமல்லபுரத்தில் மோடி தங்கியிருந்த இரண்டு நாள்களுக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பில் இருந்த சென்னை மாநகரம், தற்போது இறுக்கத்தை சற்று தளர்த்தியுள்ளது.

கவிதா ராமு ஐ.ஏ.எஸ்
கவிதா ராமு ஐ.ஏ.எஸ்

மோடியின் வருகை குறித்து சுவாரஸ்யமான சில தகவல்களை வெளியுறவுத்துறை அதிகாரிகள் நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். ``சீன அதிபர் சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியபோது, அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கரகாட்டம், மானாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம், பறையிசை என மொத்தம் 5 வகையான நடனங்களை ஆடி ஜி ஜின்பிங்கை தமிழகம் வரவேற்றது. இதற்கான ஏற்பாட்டை முன்நின்று கவனித்தவர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு சேவையின் இயக்குநரான இவர், பரதநாட்டிய கலையில் 35 வருடங்கள் அனுபவம் வாய்ந்தவர். `யார் வரவேற்பு ஏற்பாடுகளுக்கு பொறுப்பேற்பது?’ என தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆலோசித்தபோது, கவிதா ராமுவின் பெயரை தலைமைச் செயலாளரே பரிந்துரைத்தாராம்.

கவிதா ராமு ஐ.ஏ.எஸ்
கவிதா ராமு ஐ.ஏ.எஸ்

`இப்படி ஒரு வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. விமானநிலையத்தில் இருந்து ஹோட்டல் வரையில் பள்ளி மாணவர்களும், மக்களும் உற்சாகமாக வரவேற்பளித்தனர். குறிப்பாக, விமானநிலையத்தில் அளிக்கப்பட்ட கலைநிகழ்ச்சிகள் வரவேற்பில் மனம் நெகிழ்ந்துவிட்டது’ எனப் பிரதமர் மோடியிடம், சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். இதனால், குஷியான மோடி தனது பாராட்டை கவிதா ராமுவிடம் தெரிவிக்கச் சொல்லி இந்திய வெளியுறவு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

`சென்னையில் படிப்பு; முதன்மை செயலாளர் பணி!’ - மோடி, ஜின்பிங் சந்திப்பில் இருந்த தமிழர் மதுசூதன்

மோடிக்கும், ஜி ஜின்பிங்குக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் தமிழரான மதுசூதன். வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னைதான். 2007 பேட்ச் இந்திய அயல்பணி அதிகாரியான இவர், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முடித்தவர். இந்திய வெளியுறவுத்துறையில் துணைச் செயலாளராக பணிபுரிகிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி, மாண்டரின் மொழியில் நிபுணத்துவம் பெற்றவர் மதுசூதன். கடந்த 2018-ல் வூ ஹானில் நடைபெற்ற முதலாவது முறைசாரா உச்சிமாநாட்டில், பிரதமரின் மொழிபெயர்ப்பாளராக அங்கம் வகித்தார்.

மதுசூதன் ரவீந்திரன் ஐ.எப்.எஸ்
மதுசூதன் ரவீந்திரன் ஐ.எப்.எஸ்

மாமல்லபுரத்தின் அழகை மோடி விவரிக்க, அதை அச்சுப்பிசகமாமல் மாண்டரின் மொழியில் சீன அதிபருக்கு மதுசூதன் விளக்கிய விதம் பிரதமரை மிகவும் கவர்ந்துவிட்டது. முதல்நாள் உச்சிமாநாட்டை முடித்துவிட்டு பிரதமர் ஓய்வெடுக்க கிளம்பும் போது, மதுசூதனை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்” என்றனர்.

நரேந்திர மோடி - ஜி ஜின்பிங்... வந்தது முதல் சென்றது வரை!

பிரதமர் தங்கியிருந்த மாமல்லபுரம் `பிஷ்ஷர் மேன் கவ்’ நட்சத்திர விடுதி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யான அரவிந்தன் ஐ.பி.எஸ்.-ன் கட்டுப்பாட்டில் தான் இரண்டு நாள்களும் இருந்தது. நேற்று காலை, கடற்கரையில் பிரதமர் வாக்கிங் சென்றபோது, எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அதிகாரிகளைவிட அதிகமாக பதற்றப்பட்டது அரவிந்தன்தான். தனது பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் கிளம்பும்போது, அரவிந்தனை அழைத்து `இரண்டு நாள்களும் தூங்காமல் பாதுகாப்பு அளித்தீர்கள். விஷ் யூ குட் சக்சஸ்’ எனப் பாராட்டினாராம்.

அரவிந்தன் ஐ.பி.எஸ்
அரவிந்தன் ஐ.பி.எஸ்

பிரதமரிடம் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று உயரதிகாரிகள் நேரடியாக பாராட்டை பெற்றிருப்பது, தமிழக அதிகாரிகள் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.