Published:Updated:

மோடி - ஜின்பிங் சந்தித்த சனிக்கிழமை கோவளம் எப்படி இருந்தது? #SpotVisit

கேளம்பாக்கம் - கோவளம் சாலையில் ஏராளமான மக்கள் நடந்து போய்க்கொண்டிருந்தனர். திடீரென்று முதியவர் ஒருவர் நம்மை நிறுத்தினார்.

இரண்டு நாள் விஜயமாக சென்னைக்கு சீன அதிபர் ஜின்பிங் வருகை தந்திருந்தார். முதல் நாள் மாமல்லபுரத்தில் அவருக்கு, பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பு கொடுத்தார். பிரதமர் மோடி தமிழரின் பாரம்பர்ய உடையான வேஷ்டி அணிந்திருக்க, சீன அதிபர் கறுப்பு பேன்ட், வெள்ளைச் சட்டை அணிந்து மாமல்லபுரம் வந்திருந்தார். இரு தலைவர்களும் மாமல்லபுரத்தைச் சுற்றிப் பார்த்தனர். வானிறைக் கல் அருகே, ஜின்பிங்கின் கரத்துடன் தன் கரத்தையும் கோத்து இந்தியா - சீனா உறவை உலக நாடுகளுக்கு உணர்த்தும் வகையில், மேலே உயர்த்திக்காட்டினார் பிரதமர் மோடி.

வானிறைக் கல் அருகே மோடியுடன் ஜின்பிங்
வானிறைக் கல் அருகே மோடியுடன் ஜின்பிங்

பின்னர், கலாசேத்ரா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியை இரு தலைவர்களும் கண்டுகளித்தனர். பிரதமர் மோடி உற்சாகமாகக் கைகளைத் தட்டியும், சொடக்குப் போட்டும் நாட்டியத்தை ரசித்தார். சீன அதிபருக்கு நாட்டியம் குறித்து அவ்வப்போது, விளக்கிக் கூறியவாறு இருந்தார். நாட்டியம் முடிந்ததும், இரு தலைவர்களும் மேடை ஏறி, நாட்டியக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டபோது, நடனக் கலைஞர்களுக்கு, சீன அதிபரை அருகில் பார்த்த பிரமிப்பு அகல நீண்டநேரம் ஆனது. முதல் நாள் இரவு விருந்துக்குப் பிறகு, சீன அதிபர் தாம் தங்கியிருந்த ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலுக்குத் திரும்பினார்.

இரண்டாவது நாள், கோவளத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் இரு தலைவர்களும் மீண்டும் சந்தித்தனர். இதுவரை செய்தியைச் செவிவழி மட்டும் கேட்டுக் கொண்டிருந்த நான் “எட்ரா வண்டிய கோவளத்துக்கு” என்று கிளம்பினேன். நாளிதழ்களுக்கும் குறிப்பிட்ட சில மீடியாக்களுக்கு மட்டும் அனுமதி இருந்தது. நான் ஒரு பொதுமக்களின் பிரதிநிதியாகவே சென்றேன்.

சென்னை மெரினா சாலையில் மருந்துக்குக்கூட போலீஸ் தலைகள் தென்படவில்லை. சிக்னல் சொல் கேட்டு, வாகன ஓட்டிகள் சமர்த்தாக நடந்துகொண்டனர். பல இடங்களில் பலத்த பாதுகாப்பு. ஜின்பிங் கான்வாய் கோவளத்துக்குச் சென்ற பிறகே, ஓல்டு மகாபலிபுரம் சாலையில் நுழைய முடிந்தது. எல்லாப் பேருந்து நிலையங்களிலும் பெண் போலீஸார் பரிதாபமாக அமர்ந்திருந்தனர்.பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கோவளம் செல்லும் வழியில் பாதுகாப்பு
கோவளம் செல்லும் வழியில் பாதுகாப்பு

ஓல்டு மகாபலிபுரம் சாலையில் இருந்து ஈ.சி.ஆர் சாலைக்குச் செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. விசாரித்தபோது, ’கேளம்பாக்கம் சென்று அங்கிருந்து கோவளம் போகலாம்’ என்றனர். கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் மொத்தம் 6 இடங்களில் பாதுகாப்புக்கு போலீஸார் இருந்தனர். முதல், இரண்டு தடுப்பைத் தாண்டினால் மூன்றாவது செக் போஸ்டில் இருந்த இன்ஸ்பெக்டர் நம்மை மடக்கினார். அவரிடத்தில் ’சார்... கோவளம் மட்டும்தான் போகணும்... மோடி நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ப்ளீஸ் அனுமதிங்க’ என்றோம். ’இங்க நான் விட்டாலும் அங்கே டி.எஸ்.பி. இருக்கார்; அவர், உங்களைவிட வாய்ப்பில்லை' என்று சொன்னவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை..., ’சரி... போங்க’ என்று அனுமதித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேளம்பாக்கம் - கோவளம் சாலையில் ஏராளமான மக்கள் நடந்து போய்க்கொண்டிருந்தனர். திடீரென்று முதியவர் ஒருவர் நம்மை நிறுத்தினார். 'தம்பி... நான் கோவளத்தில் உள்ள முதியவர்கள் இல்லத்தில் இருக்கிறேன். பஸ், ஆட்டோ எதுவும் விட மாட்டுறாங்க. உங்க வண்டில நானும் வர்றேன்' என்றார். 'வாங்க தாத்தா' என்று அவரை ஏற்றிக் கொண்டோம். அவர் பெயர் ஆல்ட்ரின்.

கோவளம்
கோவளம்

அதற்கு பிறகு, கோவளம் வரும் வரை 3 செக்போஸ்ட்கள் இருந்தன. 'சாரைக் கொண்டு போய் விடப்போறேன்' என்று சொல்லியே தப்பித்தேன். அவர் 'கோவளம் சிட்டிஷன் 'என்பதால், போலீஸாரால் தடுக்க முடியவில்லை. கோவளம் உள்ளே நுழையும்போது, ஆல்ட்ரின் சார் என்னிடத்தில்,' ஆதார் அட்டை இருக்கிறதா' என்று கேட்டார். ஆமா என்றேன்... அப்போதான் கோவளத்துக்குள்ள விடுவாங்க என்றார். கடந்த சில நாள்களாகவே ஆதார் போன்ற அடையாள அட்டை இல்லாமல் கோவளம் மக்கள் வெளியே வருவதில்லையாம்.

கோவளம்  ஆல்ட்ரின்
கோவளம் ஆல்ட்ரின்

கோவளத்தின் மேலே ஆங்காங்கே ட்ரோன்கள் பறந்துகொண்டிருந்தன. போலீஸாரைத் தவிர இரு பெரும் நாட்டின் தலைவர்கள் அங்கே இருப்பதற்கான எந்த அடையாளமும் ஊரில் தெரியவில்லை. மக்கள் சாதாரணமாகக் கிணறுகளில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தனர். அமைதியாக இருந்தது ஊர். அவர் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கி விட்டபோது, “First Let me give you something...” என்றவாறே அருகில் இருந்த கடையில், கூல் ட்ரிங்ஸ் வாங்கித் தந்தார்.

பாத்துக்க யாரும் இல்லய்யா... இந்த முதியவர் இல்லம்தான் சாப்பாடு போடுது.
முதியவர் ஆல்ட்ரின்

'நான் ஒரு ஆங்கிலோ இந்தியன், என் பெயர் ஆல்ட்ரின், மனைவி 17 வருஷத்துக்கு முந்தி போய் சேர்ந்துட்டா. அதுக்கப்புறம் இங்க உள்ள முதியோர் இல்லத்துல இருக்குறேன். சாப்பாடு எல்லாமே ஃப்ரீதான். என்ன வேலையா நீங்க இங்க வந்துருக்கீங்க' என்று கேட்டார். நான் விஷயத்தைச் சொன்னேன். “மன்னிச்சுக்கங்கய்யா... உங்க பேரைச் சொல்லி இவ்ளோ தூரம் வந்துட்டேன்” என்றேன். “கமான் மேன்... ரிப்போர்ட்டர்னா அப்படித்தான் இருக்கணும்” என்று வழியனுப்பினார்.

கோவளம் நெருங்கும்போது ஒரு கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கினேன். கடையில் சானியா என்ற 9-ம் வகுப்பு மாணவிதான் இருந்தார். “ஃபோட்டோ எடுத்துக்கவா” என்ற என் கேள்விக்கு “ஓகேண்ணா... புக்ல வருதா... நெட்ல வருதா” என்று பதில் கேள்வி கேட்டு ஷாக் கொடுத்தார். சானியாவிடம், 'உங்க ஊருக்கு யார் வந்துக்காங்கனு தெரியுமா' என்று கேட்டால், ஜிங்கிங் என்று பதிலளித்தார். என்னது ஜின்கிங்கா... என்றால் ஆமா... என்று கடையின் பின்னால் இருந்த வீட்டுக்குள் ஓடிவிட்டார். சிரித்துக் கொண்டே அங்கேயிருந்து அகன்றோம். மேற்கொண்டு, கோவளத்துக்குள் போலீஸார் அனுமதிக்காத காரணத்தால் ஊரை விட்டு வெளியேற வேண்டிய நிலை. மீண்டும் இ.சி.ஆர். ரோட்டை நெருங்கியபோது, அங்கே புதிதாகக் கட்டப்பட்டிருந்த, பெட்ரோல் பங்கில் போலீஸார் பரிதாபமாக உறங்கிக்கொண்டிருந்தனர்.

கோவளம் மாணவி சானியா
கோவளம் மாணவி சானியா

அங்கே காவலுக்கு இருந்த போலீஸ் ஒருவரிடத்தில் பேசியபோது, 'சிவகங்கையிலிருந்து வந்திருக்கோம். நாலு நாளா இங்க இருக்குறோம். அந்த வீட்டோட மொட்டை மாடிலதான் தங்கிருக்கிறோம்' என்று ஒரு வீட்டின் மொட்டை மாடியைக்காட்டினார். அவரிடத்தில் குடிக்க தண்ணீர் கேட்டபோது, வாகனத்தின் பின்புற கதவைத் திறந்தார்.

கோவளம் பெட்ரோல் பங்கில் உறங்கும் போலீஸ்
கோவளம் பெட்ரோல் பங்கில் உறங்கும் போலீஸ்

உள்ளே, போலீஸாரின் உடைமைகள், தண்ணீர் கேன் போன்றவை இருந்தன. அது பற்றிக் கேட்டால், 'படுக்க மட்டும்தான் மொட்டை மாடிக்குப் போவோம். மற்றபடி எல்லாமே இந்த வண்டிலதான் இருக்கும். எங்க பொழப்பு நாய் பொழப்புப்பா' என்று அலுத்துக் கொண்டார். சில வாண்டுகள் அங்கே வந்தன. அவர்களிடத்தில், 'உங்க ஊருக்கு யார் வந்துருக்கானு' கேட்டா,' வெள்ளை முடி தாத்தா' என்று பதில் வந்துது. 'என்னது... வெள்ள முடி தாத்தாவா... யார் அவர்' என்று திருப்பிக் கேட்டபோது, 'மோடி தாத்தா... நாங்க அவரை வெள்ளை முடித் தாத்தானுதான் 'சொல்லுவோம் என்று கோரஸாகச் சொன்னார்கள். சிறுவர்கள் வரை, மோடியின் தாக்கம் ஊடுருவியிருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

கோவளத்தில் இருந்து சீன அதிபர் புறப்படும் நேரம் நெருங்கியதால், அங்கிருந்து மீண்டும் பழைய மாமல்லபுரம் சாலைக்கு வண்டியை விரட்டினோம். ஜின்பிங், கோவளம் செல்லும்போது அவரை காண முடியவில்லை என்பதால் இந்த முறை, கண்டிப்பாகப் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வண்டி சிட்டாகப் பறந்தது. சோழிங்கநல்லூரை நெருங்க நெருங்க பல இடங்களில் போலீஸ் தடைகள். தடுக்கப்பட்ட இடங்களில் மெயின் ரோட்டில் இருந்து விலகி, சந்து பொந்துக்குள் புகுந்து ஒரு வழியாக சோழிங்கநல்லூர் வந்து சேர்ந்தோம்.

கோவளத்தில்  ஆட்டம் போடும்
வாண்டுகள்
கோவளத்தில் ஆட்டம் போடும் வாண்டுகள்

அங்கே, தொன்னை பிரியாணிக்கடை ஒன்றின் அருகே ஒதுங்கினோம். பிரியாணிக்கடை உரிமையாளர் ஜெய் என்பவரை சந்தித்து விகடன் என்றதும்... 'அவள் விகடன் எங்க கடைக்கு விருது கொடுத்துருக்காங்க' என்றவாறே உற்சாகம் அடைந்தார். 'நாங்க நேற்றே அவர் போனதைப் பார்த்தோம். அப்பப்பா... கப்பல் மாதிரி காருங்க... வீடியோ எடுத்து வாட்ஸப்ல டி.பியா ஏத்திட்டோம்” என்று என்னிடம் காட்டினார். அவரின் வாட்ஸப் டி.பியை பார்த்தால் 'முதல்வன்' பட தீம் மியூஸிக் பின்னணியில் ஒலிக்க, ஜின்பிங்கின் கான்வாய் சூப்பராக போய்க்கொண்டிருந்தது. 'போலீஸார் காட்டிய கெடுபிடியால், கடையில 2, 3 நாளா விற்பனை கம்மிதான். ஆனாலும் நாட்டுக்கு நல்ல விஷயம் நடக்குது. அதனால இந்த இழப்பை நாங்க பெரிசா எடுத்துக்கல 'என்ற ஜெய்யிடம் பொறுப்புணர்வு தெரிந்தது.

சற்று நேரத்தில், சாலையில் மயான அமைதி. போலீஸார் அங்கே இங்கே என்று ஓடி ஓடி கூட்டத்தினரை விரட்டிக்கொண்டிருந்தனர். கூடியிருந்த இளைஞர்கள் சிலர், ஒரே நாளில் ஜின்பிங்கின் ரசிகர்களாக மாறியிருந்தனர். திடீரென,' இந்தா தல வந்துட்டாருனு...' ஒரே கூச்சல்! சில விநாடிகளில், ஜின்பிங்கின் ஹாங்கி கார் அந்த இடத்தைக் கடந்துசென்றது.

இருட்டான கண்ணாடிக்குள், உலகின் சர்வ வல்லமை பொருந்திய அதிபரின் முகத்தை லேஸாக நேரில் பார்த்த பிரமிப்பு நமக்குள் ஏற்பட்டது. கான்வாய் கடந்து சென்ற பின்னரும், சில நிமிடங்கள் வரை நம்மிடத்தில் இருந்து அந்த பிரமிப்பு விலகவில்லை. ஜின்பிங்கின், கான்வாய் கடந்ததையடுத்து, ஓஎம்ஆர் சாலை மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பியது. கல்லூரி முடிந்து, வீடு திரும்பும் மாணவிகள்போல, பெண் போலீஸார் கூட்டம் கூட்டமாக நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்... ஸ்பாட் விசிட்! (படங்கள்)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு