Published:Updated:

``பிரதமர் மோடியின் பணி நியமன ஆணை, தேர்தல் விளம்பர யுக்தி” - கார்கே குற்றச்சாட்டும், பாஜக பதிலும்!

பிரதமர் மோடி - கார்கே

பிரதமர் மோடி 71 ஆயிரம் பேருக்கு வழங்கிய பணி நியமன ஆணையை, 'தேர்தல் விளம்பர யுக்தி' என காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

``பிரதமர் மோடியின் பணி நியமன ஆணை, தேர்தல் விளம்பர யுக்தி” - கார்கே குற்றச்சாட்டும், பாஜக பதிலும்!

பிரதமர் மோடி 71 ஆயிரம் பேருக்கு வழங்கிய பணி நியமன ஆணையை, 'தேர்தல் விளம்பர யுக்தி' என காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

Published:Updated:
பிரதமர் மோடி - கார்கே

அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். இதன்படி ‘ரோஜ்கார் மேளா’ என்ற பெயரில் 10 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் ஓர் அங்கமாக, கடந்த அக்டோபரில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 2-ம் கட்டமாக, கடந்த 22-ம் தேதி 71 ஆயிரம் பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டெல்லியிலிருந்தபடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் 71,056 பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணையை வழங்கினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அப்போது பேசிய பிரதமர் மோடி, ``இது இரட்டை இயந்திர அரசின் இரட்டை நன்மையாகும். இளைஞர்களுக்குப் பணி நியமனம் வழங்குவது தொடரும். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் யூனியன் பிரதேசங்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் ‘ரோஜ்கார் மேளா’ முகாம் நடத்தப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இளைஞர்கள் இந்த நாட்டின் பலம். அவர்களின் திறமை, நாட்டைத் தட்டியெழுப்புவதில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது" என்றார்.

தேர்தல் நேரத்தில் இவ்வாறு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. குறிப்பாக, இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, "பிரதமர் 71 ஆயிரம் பேருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கியிருக்கிறார். இது (குஜராத்) வாக்காளர்களைத் தவறாக வழிநடத்துவதாகும். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 30 லட்சம் காலியிடங்கள் உள்ளன. வருடத்துக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவோம் என்றார்கள். அப்படியென்றால் 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலை தந்திருக்க வேண்டும். ஆயிரங்களில் மட்டுமே தேர்தல் விளம்பரத் தந்திரத்தை அரங்கேற்றியுள்ளனர்" என தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, "2014-ம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். எட்டு ஆண்டுகளில் 16 கோடிப் பேருக்கு வேலை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடிவருகிறது. வேலைவாய்ப்பு கிடைப்பதைவிட வேலையிழப்பு அதிகமாக இருக்கிறது.

கோபண்ணா
கோபண்ணா

கொரோனா தொற்று, பண மதிப்பிழப்பு, பொருளாதார தேக்கநிலை இவற்றின் காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலிந்திருக்கின்றன. இதனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். புதிய வேலை வாய்ப்பு இல்லை. தெளிவான தொழில் கொள்கை இல்லை. புள்ளிவிவரமாக வேண்டுமானால் வேலை கொடுத்ததாகச் சொல்லலாம். ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை" என்றார்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "பணி நியமன ஆணை வழங்கியது எப்படி விளம்பர யுக்தியாகும்... 8 ஆண்டுகளில் 16 கோடிப் பேருக்கு வேலை வழங்கியிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஓர் அரசு எப்படி அரசுத்துறைகளில் மட்டும் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்... தொழில்துறையை முன்னேற்றியிருக்கிறோம். பல உற்பத்திகளைப் பெருக்கிவருகிறோம்.

``பிரதமர் மோடியின் பணி நியமன ஆணை, தேர்தல் விளம்பர யுக்தி” - கார்கே குற்றச்சாட்டும், பாஜக பதிலும்!

இதன் மூலமாகத்தான் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினோம். அதை நாம் ஏற்கெனவே செய்து முடித்திருக்கிறோம். இந்த நாட்டில் வேலைவாய்ப்பின்மை என்பது இல்லை. காங்கிரஸ் கட்சியினர் என்ன சொல்வது என்று தெரியாமல் பேசிவருகிறார்கள். அரசு வேலைகளை எல்லோருக்கும் கொடுப்போம் என்று சொன்னால் பிறகு எப்படி தொழில்துறை முன்னேறும். தனியாருடைய பங்களிப்பு இல்லாமல் ஒரு நாடு முன்னேறாது. அரசு மற்றும் தனியார் துறை இரண்டிலும் வேலைவாய்ப்பை பெருக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை" என்றார்.