Published:Updated:

`கால்நடைத்துறையில் அரசு வேலை... ரூ.1.5 கோடி மோசடி' - உடுமலை ராதாகிருஷ்ணன் மீது புகார்!

உடுமலை ராதாகிருஷ்ணன்
உடுமலை ராதாகிருஷ்ணன்

முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த அதிமுக ஆட்சியில் துறைவாரியாக நடந்த ஊழல்கள், முறைகேடுகளைத் தற்போதைய ஆளும் திமுக அரசு கிளறத் தொடங்கியிருக்கிறது. முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என அதிமுக புள்ளிகள் மீதான ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைகள் தீவிரமடையத் தொடங்கியிருக்கின்றன. இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த ஏ.ஆர்.பாளையத்தை சேர்ந்த டி.எஸ்.தேவேந்திரன் என்பவர் அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில்,

``கடந்த ஆட்சியில் கால்நடைத்துறை அமைச்சராக இருந்த உடுமலை கே.ராதாகிருஷ்ணனிடம் 20 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராகப் பணியாற்றிவந்தேன். கடந்த 2018-ல் கால்நடைத்துறையில் அலுவலக உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு அறிவிப்பு வந்தது. அப்போது ராதாகிருஷ்ணன் என்னிடம், ``உனக்குத் தெரிந்த யாருக்காவது அரசுப் பணி வேண்டுமானால் என்னிடம் அழைத்து வா. வாங்கித் தருகிறேன்" என்றார். அவர் கூறியதைத் தொடர்ந்து, நான் எனக்குத் தெரிந்த பலரிடம் கால்நடைத்துறையில் அரசுப் பணி குறித்துக் கூறினேன்.

உடுமலை ராதாகிருஷ்ணன்
உடுமலை ராதாகிருஷ்ணன்

அரசு வேலை வாங்கித் தருமாறு கூறி பலரும் ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை என்னிடம் கொடுத்து, அமைச்சரிடம் சிபாரிசு செய்யச் சொல்லிக் கேட்டார்கள். அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட நானும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியபடி , அவர்கள் கொடுத்த பணத்தையெல்லாம் அவரது பினாமியான ரமேஷ் என்பவரிடம் மொத்தத் தொகையாக ரூபாய் 1.5 கோடி கொடுத்தேன். ஆனால், அறிவிக்கப்பட்ட கால்நடைத்துறை அரசுப் பணிக்கான அறிவிப்பு நீதிமன்றத்தால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், திமுக ஆட்சிக்கு வந்தது. என்னை நம்பி அரசு வேலைக்காக சுமார் 1.5 கோடி ரூபாய் பணம் கொடுத்தவர்கள் என்னைக் கேட்கவே, நான் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டேன். அப்போது, அவர் பணத்தைத் தர முடியாது என்று கூறி வெளியே அனுப்பிவிட்டார்.

நான் மீண்டும் அவரையும், அவரது பினாமி ரமேஷையும் தொடர்புகொண்டபோது, அவர்கள் இருவரும் ``பணத்தைத் தரமுடியாது, மேற்கொண்டு தகராறு செய்தால் கொன்று விடுவோம்!’’ என்று மிரட்டினார்கள். என்னிடம் பணத்தைக் கொடுத்தவர்கள், ``ஒன்று வேலையை வாங்கிக் கொடு... இல்லையென்றால் பணத்தைத் திருப்பிக் கொடு’’ என்று பிரச்னை செய்கிறார்கள். இந்தப் பண மோசடிச் சம்பவத்தில் எனக்கு எந்தவிதப் பங்கும் இல்லை. இருதரப்புக்கும் இடையே பணத்தைக் கைமாற்றிவிட்டேன் அவ்வளவுதான். எனவே, எனது புகார் மனுவை ஏற்றுக்கொண்டு முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அவரது பினாமி ரமேஷ் இருவர் மீதும் கொலை மிரட்டல் விடுத்தமைக்காகச் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, பண மோசடி செய்த 1.5 கோடி ரூபாயைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும்" என்று தேவேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தேவேந்திரனின் புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட போலீஸார் அவரை நேற்று நேரில் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். புகாரின் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்னர், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு