Published:Updated:

``சமூக வலைதளங்களை மட்டுப்படுத்துவதற்கே  கண்காணிப்புக்குழு!” - விளாசும் வேல்முருகன்

வேல்முருகன்

பன்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான வேல்முருகனிடம் சமீபகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நமது கேள்விகளை முன்வைத்தோம்...

``சமூக வலைதளங்களை மட்டுப்படுத்துவதற்கே  கண்காணிப்புக்குழு!” - விளாசும் வேல்முருகன்

பன்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான வேல்முருகனிடம் சமீபகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நமது கேள்விகளை முன்வைத்தோம்...

Published:Updated:
வேல்முருகன்

``சமூக வலைதளங்களைக் கண்காணிக்க டி.ஜி.பி ஒரு குழுவை அமைத்திருக்கிறாரே... அது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?”

``பாசிசம், ஜனநாயகப் படுகொலை இப்படியான சில சொற்களை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என்று ஒன்றிய அரசு தடை விதித்தது. சில யூடியூப் சேனல்களை முடக்கியது. அதேபோன்றுதான், இங்கு குரலற்றவர்களின் குரலாக இருக்கும் சமூக வலைதளங்களை மட்டுப்படுத்துவதற்கு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. மோடி அரசின் உத்தரவு எப்படி ஏற்புடையதாக இல்லையோ, அதுபோல தமிழக காவல்துறை அமைத்திருக்கும் இக்குழுவும் ஏற்புடையதல்ல!”

டி.ஜி.பி சைலேந்திர பாபு
டி.ஜி.பி சைலேந்திர பாபு
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ராகுல் காந்தி தேசிய பாதயாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை எதிர்க்கும் சக்தியை இந்த யாத்திரை காங்கிரஸுக்குக் கொடுக்குமா?”

ராகுல் காந்தி நடை பயணம்
ராகுல் காந்தி நடை பயணம்

``ராகுல் காந்தி நடத்தும் யாத்திரை எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால், சர்வாதிகார அரசாக மாறிவரும் பொது எதிரியான பா.ஜ.க-வை வீழ்த்த, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் தேசிய அளவில் ஒன்றிணைய வேண்டும்”

``சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஏன் தி.மு.க அரசு தயங்குகிறது?”

வேல்முருகன் - ஸ்டாலின்
வேல்முருகன் - ஸ்டாலின்

``மைனாரிட்டியாக இருக்கக்கூடிய முன்னேறிய வகுப்பினர்தான் முட்டுக்கட்டையாக உள்ளனர். அகில இந்திய இடஒதுக்கீட்டில்கூட 50 சதவிகிதத்தை அவ்வகுப்பினர்தான் அனுபவிக்கிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் அரசு உயர் பதவிகளில் அவர்கள்தான் ஆக்கிரமித்துள்ளனர். சாதிவாரிக் கணக்கெடுப்பு மூலம் அனைத்து சாதியினர் குறித்தும் ஆராய்ந்து, அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொடுத்தால் அவர்களுக்கு வாய்ப்புகள் பறிபோகும் என்கிற அச்சமுள்ளது. அதனால்தான் தடுக்கிறார்கள். பிரதமர் மோடி வேறு பிரிவை சேர்ந்தவராக இருந்தாலும், அவரை இயக்குவது குறிப்பிட்ட சாதியினர் அடங்கிய ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தானே! அதனால், பிகாரில் நிதிஷ்குமார் அறிவித்திருப்பதுபோல, ஒன்றிய அரசிடம் ஒப்புதல் பெற்று முதல்வர் ஸ்டாலின் தன்னிச்சையாக தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.”

``சுங்கச்சாவடிகளுக்கு எதிராகப் போராடினீர்கள், சில சுங்கச்சாவடிகளை தாக்கவும் செய்தீர்கள். இருந்தபோதும் மேலும் மேலும் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே செல்கிறார்களே?”

பள்ளிகொண்டா சுங்கச்சாவடி
பள்ளிகொண்டா சுங்கச்சாவடி

``தனிப்பட்ட வேல்முருகனால், தமிழக வாழ்வுரிமைக் கட்சியால் இதனைத் தடுக்க முடியாது. எல்லாக் கட்சிகளும் இவ்விஷயத்தில் ஒருமித்தக் கருத்தோடு குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஒன்றிய அரசு பின்வாங்கும்”

``தி.மு.க-வின் திராவிட மாடலை ஆதரிக்கிறீர்களா... அல்லது தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கிறீர்களா?”

 முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

``திராவிடமா, தமிழ்த்தேசியமா என்கிற விவாதத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. மொழிக்காகவும், தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும் போராடும் கட்சியின் தலைவன் மட்டுமே நான். தி.மு.க தனது ஆட்சிக்கு திராவிட மாடல் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அதனைக் குறைகூற விரும்பவில்லை”

``நீர் நிலைகள் பாதுகாப்பு என்கிற கோஷத்துடன் பா.ம.க தலைவர் அன்புமணி திடீரென களமிறங்கியிருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும்?”

அன்புமணி - பாமக
அன்புமணி - பாமக

``குறைந்தபட்சம் கட்சியில் எஞ்சியிருக்கும் நிர்வாகிகளையும், வாக்கு வங்கியையும் தக்கவைத்துக் கொள்வதற்குத்தான் இந்த ஸ்டன்ட்! சமீப காலமாக இளைஞர்கள், குறிப்பாக வட தமிழக வன்னிய மக்கள் பா.ம.க மீதுகொண்ட வெறுப்புக் காரணமாக எங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். மேலும், பா.ம.க-விலிருந்து வெளியேறிய வாழப்பாடி ராமமூர்த்தியில் தொடங்கி பலரும் கட்சி தொடங்கி ஓராண்டுகூட நடத்த முடியாமல் கைவிட்டனர். சிலர் மீண்டும் பா.ம.க-விலேயே இணைந்தனர். ஆனால், வேல்முருகன் மட்டும்தான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனிக்கட்சி நடத்தி வருகிறேன். என் மீது கொண்ட அச்சமும் அன்புமணியின் இந்தத் திடீர் பயணத்துக்குக் காரணமாக இருக்கலாம்”

``அ.தி.மு.க-வுக்குள் நடந்துவரும் குழப்பங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்
அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்

``அ.தி.மு.க-வில் நடக்கும் குழப்பங்கள், எந்தவிதத்திலும் மதத்தின் பெயரால் ஆள நினைக்கிற பா.ஜ.க-வுக்குச் சாதமாகிவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க தலைவர்கள் செயலாற்ற வேண்டும்.”