Published:Updated:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை: ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பாக கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்திட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்தனர்.

கொரோனா 2வது அலையில் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 1,000 மெட்ரிக் டன் மருத்து பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து இலவசமாக வழங்கிடவும், அதற்கான அனுமதி கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத்தாக்கல் செய்திருந்தது. அத்துடன் மத்திய, மாநில அரசுகளிடமும் அனுமதி கேட்டிருந்தது. அனைக்கட்சிக் கூட்டத்தினருடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அனுமதி அளித்தது தமிழக அரசு. தமிழக அரசின் அறிக்கையின்படி, உச்ச நீதிமன்றமும் 4 மாதத்திற்கு ஆக்ஸிஜன் தயாரிப்பதற்காக மட்டும் அனுமதி அளித்தது.

ஆய்வு செய்ய வந்த கண்காணிப்புக்குழு
ஆய்வு செய்ய வந்த கண்காணிப்புக்குழு

கடந்த 29-ம் தேதி ஆக்ஸிஜன் உற்பத்திக்கான அனுமதியின் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்கக்கூடாது என, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள மக்கள், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராளிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

ஆக்ஸிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியும் தற்போது வரையிலும் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தில் தேனையான அனைத்து முன் இயக்க சோதனைகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மின் இணைப்பு கொடுக்கப்பட்டதும், உடனடியாக ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகளை தொடங்க தயாராக இருக்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் தயாரிப்பு கூடத்தில் உறுதித்தன்மையை ஆய்வு செய்வதற்காக, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் மெட்டீரியல் கேட் வழியாக ஆய்வு செய்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன்  உற்பத்தி நிலையம்
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்

இக்குழுவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் , வேதியியல் துறையின் உதவி பேராசிரியர் கனகவேல், ஓய்வு பெற்ற அதிகாரி அமர்நாத், தூத்துக்குடி அனல்மின் நிலைய அதிகாரி பெல்லார்மின் மற்றும் சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறை, மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், பொறியாளர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் ஆலையின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அளிக்கும் பரிந்துரையை தொடர்ந்து ஆலைக்கு மின் இணைப்பு வழங்கபட்டு ஆக்ஸிஜன் உற்பத்திக்கான நடவடிக்கை தொடங்கும் என தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு