Published:Updated:

"எனக்கு தலைவர் போல் பேசவோ, எழுதவோ தெரியாது; ஆனால்?!"- பொதுக்குழுவில் தகித்த ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இணையதளம் வாயிலாக தி.மு.க உறுப்பினர்களைச் சேர்க்கும் வகையில் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க பொதுக்குழு கூட்டம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ``மாநில அரசின் சில அதிகாரங்களை மத்திய அரசு தன் கைவசம் வைத்துள்ளது. மாநில சுயாட்சி தொடர்பாக ராசமன்னார் குழு பரிந்துரையை மத்திய அரசு நினைவில்கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கு தரப்பட்டிருக்கும் 18 அதிகாரங்களின் இன்றைய நிலை மிகக் கவலையாக இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு எண்ணிக்கையின் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறையைக் கொண்டுவர வேண்டும்.

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு... தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு!

பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர வகுப்பினர் என்று புதிதாக ஒரு வரையறையை ஏற்படுத்தி, இடஒதுக்கீட்டுக் கொள்கையையே நீர்த்துப்போகச் செய்கின்ற செயலை, மத்திய அரசு அரசியல் சட்டத்திருத்தம் வாயிலாக மேற்கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அந்தத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்.

தி.மு.க பொதுக்குழு கூட்டம்
தி.மு.க பொதுக்குழு கூட்டம்

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அளித்திடும் வேலைவாய்ப்புகள், இன்றைய நிலையில் வெகுவாகக் குறைந்துவிட்டன. பொதுத்துறை நிறுவனங்களும் படிப்படியாகத் தனியார் மயமாக்கப்பட்டுவரும் நிலையில், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு செய்திடவேண்டியது கட்டாயமாகிறது. இதுபோன்ற உறுதியான செயல்திட்டம் ஏற்கெனவே அமெரிக்காவில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும். எனவே, தனியார் துறையிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த ஏதுவாக, அரசியல் சட்டப் பிரிவுகளில் உரிய திருத்தங்களைக் கொண்டுவந்து, சமூக நீதியைக் காப்பாற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்” எனக் கூறினார்.

மேலும், “முரசொலியை மூடுவோம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார்; அதை பூட்டுப்போட விடுவோமா. முரசொலி இருக்கும் நிலம் பஞ்சமி நிலம் என அரசு கண்டுபிடித்திருந்தால், அதை வெளியிடாமல் இருப்பார்களா? என்னுடைய சக்தியையும் தாண்டி நான் உழைத்துவருகிறேன். எனக்கு கலைஞர் போல் பேசவோ, எழுதவோ தெரியாது; எதையும் முயற்சி செய்யும் துணிவு உண்டு. வெற்றி சாதாரணமாகக் கிடைக்காது; கிடைக்கவும் விட மாட்டார்கள். ஒற்றுமையின்றி உழைத்தால் வெற்றி கிடைக்காது; மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் ” என்று தெரிவித்தார்.

தி.மு.க பொதுக்குழு கூட்டம்
தி.மு.க பொதுக்குழு கூட்டம்

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண நடவடிக்கை, உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்பின் மீதான அய்யப்பாட்டை மத்திய அரசு தெளிவுபடுத்திட வேண்டும். மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவிகிதம் தமிழக இளைஞர்களை நியமிக்க வேண்டும். கீழடி அகழாய்வுப் பணியைத் தொய்வின்றி மத்திய மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும். புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தல் உள்ளிட்ட 20 தீர்மானங்களை தி.மு.க நிறைவேற்றியுள்ளது. தி.மு.க-வில் நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும் தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் இருந்த அதிகாரம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு