Published:Updated:

2011-ல் 31 இடங்கள்; 2019-ல் 95..! -உள்ளாட்சியில் பி.ஜே.பி தனித்துப் போட்டியிட்டிருந்தால்?

2011 உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 31 இடங்கள் வென்ற பி.ஜே.பி. இப்போது அ.தி.மு.க கூட்டணியில் 95 இடங்கள் கைப்பற்றியிருக்கிறது.

தாமரை, இரட்டை இலை
தாமரை, இரட்டை இலை

``தனித்துப் போட்டியிட்டு இருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்'' எனப் பேசியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்து உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டு, கணிசமான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது பி.ஜே.பி. இதற்குப் பிறகுதான் ``தனித்துப் போட்டியிட்டிருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்'' என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.

எடப்பாடியுடன் பொன்னார்
எடப்பாடியுடன் பொன்னார்

பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னபடி பி.ஜே.பி தனித்துப் போட்டியிட்டிருந்தால் அதிக இடங்களைப் பிடித்திருக்க முடியுமா? அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் கடந்தகால வரலாறு. 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துத்தான் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் பெற்ற இடங்களையும் இப்போது அ.தி.மு.க கூட்டணியில் பெற்ற இடங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பி.ஜே.பி-க்குப் பெரிய செல்வாக்கு இல்லை என்பது தெரிய வரும்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு நடந்த தேர்தலில் பி.ஜே.பி-க்கு இப்போது கிடைத்த இடங்கள் ஏழு. ஆனால், 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு இரண்டு இடங்களைத்தான் பெற்றது. இதேபோல ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு நடந்த தேர்தலில் தற்போது 88 இடங்களைக் கைப்பற்றியுள்ளது பி.ஜே.பி. ஆனால், 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 29 இடங்களை மட்டுமே பெற்றது.

அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி
அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஆகிய இரண்டு பதவிகளுக்கும் சேர்த்து மொத்தமாகக் கணக்கிட்டால் இப்போது 95 இடங்களை பி.ஜே.பி கைப்பற்றியிருக்கிறது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இந்த இரண்டு பதவிகளுக்கும் சேர்த்து 31 இடங்களை மட்டுமே பிடித்தது.

2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சித் தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சித் தலைவர், பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும் சேர்த்துத்தான் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆனால், இப்போது மேற்குறிப்பிட்ட பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறவில்லை. மேலும், இந்த மொத்தப் பதவிகளையும் சேர்த்து 2011 உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி-க்கு ஒட்டுமொத்தமாக கிடைத்த இடங்கள் வெறும் 272-தான்.

அன்வர் ராஜா
அன்வர் ராஜா

``குடியுரிமை திருத்தச் சட்டத்தை அ.தி.மு.க ஆதரித்ததால் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது'' எனப் பேசியிருக்கிறார் அன்வர் ராஜா. உள்ளாட்சித் தேர்தலில் அவருடைய மகனும் மகளும்கூட வெற்றி பெறவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அ.தி.மு.க ஆதரித்த நிலையிலும் தி.மு.க கூட்டணிக்கு நெருக்கமான இடங்களை அ.தி.மு.க கூட்டணி பெற்றிருக்கிறது. அதனால்தான் பி.ஜே.பி-க்கு இந்த அளவுக்காவது இடங்கள் கிடைத்திருக்கின்றன. பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வது போலத் தனித்துப் போட்டியிட்டிருந்தால் 2011-ம் ஆண்டு பெற்ற இடங்களைக்கூட இந்தத் தேர்தலில் பி.ஜே.பி-யால் பெற்றிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.