Published:Updated:

மாமியார் Vs மருமகள்; தந்தை Vs மகள்! - உள்ளாட்சித் தேர்தலில் மோதும் உறவுகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உள்ளாட்சித் தேர்தலில் மோதும் உறவுகள்
உள்ளாட்சித் தேர்தலில் மோதும் உறவுகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார்-மருமகள், தந்தை-மகள் போன்றோர் எதிரெதிர் வேட்பாளர்களாகக் களமிறங்கியிருப்பதால் ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் சுவாரஸ்யமாகியிருக்கிறது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உட்பட ஒன்பது மாவட்ட கிராமங்களில் தேர்தல் திருவிழா களைகட்டியிருக்கிறது. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, சட்டமன்றத் தேர்தல் கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. தற்போது தொற்றுப் பரவல் குறைந்திருப்பதால், பல கிராமங்கள் கொண்டாட்ட களமாகியிருக்கின்றன. அதேசமயம், உள்ளாட்சிப் பதவிகள் ஏலம்விடப்படுவதாகவும் சர்ச்சைகள் சுழன்றடிக்கின்றன. பொதுவாகவே, கிராம ஊராட்சிகளிலுள்ள மக்கள் தேர்தல் வாக்குறுதிகளை நம்புவதில்லை. இதன் காரணமாகவே முன்கூட்டியே பஞ்சாயத்தைக் கூட்டி ஊராட்சித் தலைவர் பதவியில் போட்டியிடுபவர்களுக்கு இடையே ஏலம் நடத்துகிறார்கள்.

மாமியார் ஜெயலட்சுமி - மருமகள் சாவித்திரி
மாமியார் ஜெயலட்சுமி - மருமகள் சாவித்திரி

இந்த மாதிரியான ஏல நடைமுறை அரசியலமைப்புச் சட்டம், மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது மட்டுமின்றி தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகிறது. இதைத் தடுக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இன்னொருபுறம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார்-மருமகள், தந்தை-மகள் என எதிரெதிர் வேட்பாளர்களாகக் களமிறங்கியிருப்பதாலும் தேர்தல் களம் சுவாரஸ்யமாகியிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சித் தலைவர் பதவிக்கு சாவித்திரி என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். சாவித்திரி மனுத்தாக்கல் செய்த அதேநேரத்தில், அவரின் மாமியார் ஜெயலட்சுமியும் ஊத்துக்காடு ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.

மாமியாரும் மருமகளும் ஒரே பதவிக்கு மல்லுக்கட்டுவது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களைப் போன்றே வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்திலுள்ள ஏரந்தாங்கல் ஊராட்சித் தலைவர் பதவிக்கும் தந்தை, மகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏரந்தாங்கல் கிராமத்தில் வசித்துவரும் சாது முத்துகிருஷ்ண ராஜேந்திரன் என்பவர் கூலி வேலை செய்கிறார். இவர், கடந்த காலங்களில் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட்டை இழந்தவர். கடந்த உள்ளாட்சித் தேர்தல்களின்போதும், ஏரந்தாங்கல் ஊராட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்திருக்கிறார்.

செந்தமிழ்ச்செல்வி
செந்தமிழ்ச்செல்வி

இந்த முறையும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியைக் குறிவைத்து களமிறங்கியிருக்கும் சாது முத்துகிருஷ்ண ராஜேந்திரனை எதிர்த்து அவரின் மகள் செந்தமிழ்ச்செல்வியே களமிறங்கியிருக்கிறார். அரசியல் பின்னணியில்லாத இருவரும் வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டனர்.

இது குறித்து, செந்தமிழ்ச்செல்வியிடம் கேட்டபோது, ``ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பின்னணியுடைய வேட்பாளர்கள் இரண்டு பேர் ஏற்கெனவே களத்தில் இருக்கிறார்கள். மூன்றாவதாக அப்பா களமிறங்கியிருக்கிறார். இவர்கள் மூவரை எதிர்த்துத்தான் பிரசாரம் செய்யப்போகிறேன். எனக்கு 23 வயது ஆகிறது. கடந்த கல்வியாண்டில்தான் பி.ஏ தமிழ் பட்டப்படிப்பை முடித்திருக்கிறேன். வீட்டுக்கு மூத்த மகள் நான். எனக்கொரு தங்கை, தம்பி இருக்கிறார்கள். ஊரக உள்ளாட்சித் தேர்தல் பற்றிய புரிதல் எனக்கு இருக்கிறது. என் ஊராட்சியைச் சார்ந்துள்ள மக்கள் எனக்கு வாய்ப்பளிப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறேன்’’ என்றார் தன்னம்பிக்கையோடு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு