Published:Updated:

சாத்தான்குளம்: `வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியது தந்திரமானது!’ -கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

”சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு குறித்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது தந்திரமான செயல்” எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலால் உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் உயிரிழப்புச் சம்பவம் தேசிய அளவில் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளைத் தாண்டி, கிரிக்கெட் வீரர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல தரப்பிலும் இச்சம்பவத்திற்கு எதிரான கண்டனக் குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையைத் தமிழக அரசு சி.பி.ஐயிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

நிதி வழங்கிய கே.எஸ்.அழகிரி
நிதி வழங்கிய கே.எஸ்.அழகிரி

இந்நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன், தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த இரட்டைக்கொலை போலீஸாரால் நடத்தப்பட்டது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. கொல்லப்பட்ட இருவருமே எந்தவிதமான குற்றப்பின்னணியும் இல்லாதவர்கள். எனவே அவர்களுடைய மரணத்திற்கு நீதி வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை.

இதில் சம்பந்தப்பட்ட எஸ்.ஐக்கள், ஆய்வாளரைக் கண்துடைப்பாக தமிழக அரசு பணிநீக்கம் செய்துள்ளதே தவிர, அவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தச் சம்பவத்தில் அந்த எஸ்.ஐக்களை ஒட்டுமொத்தச் சமூகமே அவர்கள்தான் குற்றவாளிகள் எனச் சொல்கின்றபோது, சம்பந்தப்பட்ட போலீஸாரை தமிழகஅரசு ஏன் இன்னும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை? தந்தை, மகன் இருவரையுமே காவலர்கள் மிருகத்தனமாக தாக்கியிருக்கிறார்கள்.

பென்னிக்ஸ் - ஜெயராஜ்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

அவர்களின் ஆசனவாயிலிருந்து அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களை அருகிலுள்ள சிறைக்கு அழைத்துச் செல்லாமல் சுமார் 100 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள கோவில்பட்டி கிளைச்சிறைக்கு அழைத்துச் சென்றதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. இந்தச் சம்பவத்தில் இருவரது கைது, மருத்துவப் பரிசோதனை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துதல் என எல்லாமே அவசர அவசரமாக திட்டமிட்டு நடந்திருக்கிறது.

சி.பி.ஐ-க்கு மாற்றியது தந்திரமானது!

இச்சம்பவம் குறித்த வழக்கினை சி.பி.ஐ-க்கு மாற்றும் தமிழக அரசின் முடிவு என்பது தந்திரமானது. இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டாலும் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும். உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்குடன், சர்ச்சைக்குரிய இதே இரண்டு எஸ்.ஐக்கள், பேய்க்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மகேந்திரன் என்பவர் உயிரிழந்தது தொடர்பாகவும் விசாரணை செய்ய வேண்டும்.

ஆறுதல் கூறிய கே.எஸ்.அழகிரி
ஆறுதல் கூறிய கே.எஸ்.அழகிரி

குற்றச்செயல்புரிந்த காவலர்களுக்கு அரசும் காவல்துறையும் துணையாகப் போகக்கூடாது. தமிழகக் காவல்துறை கண்ணியமிக்கது. அதில் உள்ள சில கறுப்பு ஆடுகளைப் பாதுகாக்க நினைத்தால் காவல்துறை மேல் சந்தேகக்கண் எழும். தவறு செய்த காவல்துறையினர் கைது செய்யப்பட வேண்டும். தென்மாவட்டத்தில் 4 இடங்களில் காவல்துறையினர் தாக்குதலால் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வருகிறது. இது குறித்தும் அரசு விசாரணை செய்யவேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு