Published:Updated:

`அரசுக்கு எதிராகப் பேசினால் தேசத் துரோகி!’ - மக்களவையில் தகித்த மஹூவா மொய்த்ரா

மஹூவா மொய்த்ரா
மஹூவா மொய்த்ரா ( Lok Sabha TV )

எம்.பி மஹூவா மொய்த்ரா தன் பேச்சால் மீண்டும் ஒருமுறை ஆளும் கட்சியினரையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையிலான என்.ஐ.ஏ சட்டம் 2008-ல் திருத்தம் கொண்டுவருதற்கான, என்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா 2019-யை கடந்த 15-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மஹூவா மொய்த்ரா
மஹூவா மொய்த்ரா

என்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. சட்டத்துக்கு ஆதரவாக 287 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் பதிவாகின. இந்தச் சட்டத்தில் செய்த பல மாற்றங்கள் குறித்து எதிர்க்கட்சியின் நேற்றைய கூட்டத்தில் பல்வேறு ஆட்சேபங்களைத் தெரிவித்தனர்.

முன்னதாக பாசிசத்தின் 7 அறிகுறிகள் இந்தியாவில் இருப்பதாகப் பேசினார் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா. அதுதான் அவரது முதல் மக்களவை பேச்சு. அன்று அவர் பேசிய வார்த்தைகளை யாராலும் எப்போதும் மறந்துவிட முடியாது. அவரது கேள்விக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த எவராலும் பதில் அளிக்க முடியாதபடி இருந்தது. முதல் பேச்சிலேயே கவனம் ஈர்த்த மஹூவா இரண்டாவது முறையாக நேற்று மீண்டும் மக்களவையை அதிரவைத்துள்ளார்.

மஹூவா மொய்த்ரா
மஹூவா மொய்த்ரா
Lok Sabha TV

என்.ஐ.ஏ சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய மஹூவா, ``என்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா இந்தியாவுக்கு ஏற்றதல்ல. மாநில காவல் துறையின் அனுமதியின்றி எந்த மாநிலத்துக்கும் என்.ஐ.ஏ அதிகாரிகள் செல்ல அனுமதிக்கும் இந்த விதி நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இந்த மசோதா மக்களுக்கு எதிராகவும், அரசியலமைப்புக்கு எதிராகவும் உள்ளது.

ஒரு சாதாரண மனிதர் அரசாங்கத்தை எதிர்த்தால், அவரை இந்த சட்டத் திருத்தம் மூலம் `தேசத் துரோகி, தீவிரவாதி’ என முத்திரை குத்தமுடியும். ஒவ்வொரு முறையும் இந்த அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும்போது நாம் ஏன் (எதிர்க்கட்சி) தேச விரோதி என்று அழைக்கப்படும் அபாயத்தில் இருக்கிறோம்? அரசாங்கத்துடன் உடன்படாத எதிர்க்கட்சிகளை, எதிர்க்கட்சியினரை, ஆளும் கட்சியின் ட்ரோல் (troll ) படையினர் `தேச விரோதி’ என அழைக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இன்னும் மோசமான பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” எனக் கூறினார்.

மஹூவா மொய்த்ரா
மஹூவா மொய்த்ரா
Lok Sabha TV

மஹூவா மொய்த்ரா இவ்வாறு பேசியதற்கு பா.ஜ.க-வின் எஸ்.எஸ். அலுவாலியா கண்டனம் தெரிவித்தார். ``குற்றச்சாட்டை உறுதிப்படுத்தாமல் அரசுக்கு எதிராக இப்படிப் பேசுவது சரியில்லை” எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட எம்.பி மீனாட்சி லோகி, `எந்த ஓர் உறுப்பினரும், அறிவிக்காமல் மற்றொருவருக்கு எதிராக அவதூறான அறிக்கையைக் கூறமுடியாது’ எனக் கூறினார். அதற்கு விளக்கமளித்த மஹூவா, ``நான் தனி மனிதருக்கு எதிராகப் பேசவில்லை, தவறான பிரசாரத்துக்கு எதிராகப் பேசுகிறேன்’ எனக் குறிப்பிட்டார்.

திரிணாமுல் காங். எம்.பி மஹூவா மொய்த்ராவின் மரணமாஸ் பேச்சு...உணர்த்துவது என்ன?

தொடர்ந்து, ``என்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதாவால் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஆபத்து. அரசியல் பழிவாங்கலுக்காகவும், மக்களை அச்சுறுத்துவதற்காகவும் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏன்? நாளை நான் கூட கைது செய்யப்படலாம். யாராலும் எதுவும் கேட்க முடியாது ” என ஆவேசமாக தன் உரையைப் பேசினார் மஹூவா.

நானும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுதான் இங்கு வந்துள்ளேன். எனவே, நான் விரும்பியதை முழுமையாகப் பேசுவேன், என்னை இடையூறு செய்த நேரத்தையும் சேர்த்து முழுமையாக என் உரையை முடிக்காமல் நகர மாட்டேன்
எம்.பி மஹூவா மொய்த்ரா

ஆனால் அவரின் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லாத ஆளும் கட்சியினர், தொடர்ந்து இடையூறு செய்துகொண்டே இருந்துள்ளனர். அதைச் சற்றும் பொருட்படுத்தாத மஹூவா தான் பேச நினைத்ததை அழுத்தமாக மக்களவையில் முன்வைத்தார். தொடர்ந்து கூச்சல் நீடித்ததால், அவையைக் கட்டுப்படுத்துமாறு சபாநாயகருக்கு அறிவுரை கூறினார். அவரும் மஹூவாவின் பேச்சை உதாசினப்படுத்தினார். அதற்கு அவர், `` நீங்கள் வேண்டுமானால் இங்கு மெஜாரிட்டியாக இருக்கலாம். ஆனால், நான் முழுமையாக பேசிவிட்டுதான் செல்வேன்” எனக் கூறி தன் பேச்சைத் தொடர்ந்தார்.

அடுத்த கட்டுரைக்கு